தன் 97வது வயதில் கடந்த வாரம் டாக்டர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார். வாட்சன் என்று வெறுமனே சொன்னால் ஞாபகம் வராமல் இருக்கலாம். டிஎன்ஏ மூலக்கூறுவின் இரட்டைச் சுருள் அமைப்பை அதாவது டபுள் ஹெலிக்ஸ் (Double Helix) அமைப்பைக் கண்டுபிடித்தவர் என்றால் ஞாபகத்துக்கு வந்துவிடும்.
இவர் சக அறிவியலாளர் க்ரிக் உடன் இணைந்து இந்த அமைப்பைக் கண்டுபிடித்ததால் இந்த அமைப்புக்கு வாட்சன் – கிரிக் மாடல் என்றே பெயர் வைத்து பள்ளியில் இருந்து கல்லூரி வரை அறிவியல் மாணவர்கள் படித்து வருகிறோம்.
இந்த கண்டுபிடிப்பு மனித குலத்தின் மூலக்கூறு அறிவியலில் மிக முக்கியமானது. 1953-இல் இது நிகழ்த்தப்பட்டு நேச்சர் இதழில் கட்டுரையாக வெளியானது. அன்று தொடங்கிய பாய்ச்சல், மரபியலில் பல முன்னேற்றங்களை உருவாக்கி இன்று மனித மரபணு வரிசைகள் கண்டுபிடிக்கப்பட்டு, மரபணு திருத்தங்கள் வரை வந்துவிட்டோம்.
வாட்சனுக்கு வருவோம்.
மூலக்கூறு உயிரியலின் காதல் இளவரசனாக (Playboy) அழைக்கப்பட்டவர் டாக்டர் ஜேம்ஸ் டியூவி வாட்சன் (ஏப்ரல் 6, 1928 சிகாகோ– நவம்பர் 6, 2025 நியூயார்க்; வயது 97). இவர் ஒரு அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர், மரபியலாளர் மற்றும் விலங்கியலாளர் . வாட்சன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம் (1947) பெற்று, இண்டியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (1950) பெற்றவர். கொபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் ஒரு வருட ஆய்வாளராக இருந்த பிறகு, இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே கேம்பிரிட்ஜ் காவெண்டிஷ் ஆய்வகத்தில் பணியாற்றினார். அங்குதான் அவரது சக அறிவியலாளர் பிரான்சிஸ் கிரிக்கை சந்தித்தார். இருவரும் இணைந்து டிஎன் ஏவின் அமைப்பைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர்.
வாட்சன் 1953-இல், பிரான்சிஸ் கிரிக் உடன் இணைந்து ‘நேச்சர்’ இதழில் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். அதில் டி.என்.ஏ மூலக்கூறின் இரட்டை சுழல் அமைப்பை முன்மொழிந்து இருந்தார். டிஎன் ஏவின் இரட்டைச் சுருளை அமைப்பை வெளியிட்டபோது வாட்சனுக்கு வயது 24 மட்டுமே.
1962-இல், வாட்சன், கிரிக், மற்றும் மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோர் "நியூக்ளிக் அமிலங்களின் மூலக்கூறு அமைப்பு பற்றிய கண்டுபிடிப்புகளுக்கும், உயிருள்ள பொருளில் தகவல் பரிமாற்றத்தில் அதன் முக்கியத்துவத்திற்கும்" மருத்துவ நோபல் பரிசு பெற்றனர்.
வாட்சன் இந்த கண்டுபிடிப்புக்குப் பின்னர் 1956 முதல் 1976 வரை ஹார்வர்ட் பல்கலைக்கழக உயிரியல் துறையில் பேராசிரியராக இருந்தார். மூலக்கூறு உயிரியல் ஆய்வுகளை ஊக்குவித்தார்.1968 முதல் நியூயார்க்கின் கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் (CSHL) இயக்குநராக இருந்தார். அதன் வளர்ச்சிக்குப் பங்காற்றி, சான்சலர் என்ற நிலைக்கு உயர்ந்தார். 2007-இல் இனம் மற்றும் புத்திக்கூர்மைக்கு இடையே மரபணு தொடர்பு உண்டு என்ற கருத்துகளால் ராஜினாமா செய்தார். 2019-இல் ஒரு ஆவணப்படத்தில் இதே கருத்துகளை மீண்டும் கூறியதால், அந்த ஆய்வகம் அவரது கௌரவ பட்டங்களை ரத்து செய்து அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது. வாட்சன் பல அறிவியல் புத்தகங்கள் எழுதினார். *மாலிக்யூலர் பயாலஜி ஆஃப் தி ஜீன்* (1965) என்ற பாடப்புத்தகமும், *தி டபுள் ஹீலிக்ஸ்* (1968) என்ற சிறந்த விற்பனை புத்தகமும் அதில் அடங்கும். 1988 முதல் 1992 வரை தேசிய சுகாதார நிறுவனத்தில் பணியாற்றி, மனித மரபணு திட்டத்தை தொடங்க உதவினார். அது 2003-இல் மனித மரபணுவை முழுமையாக வரைபடமாக்கியது.
சர்ச்சைகள்
வாட்சனுக்கு அஞ்சலிக்கட்டுரை எழுதுகையில் ரோஸ்லின் பற்றி எழுதாமல் இருக்கமுடியாது. இந்த பெண் அறிவியலாளரின் கண்டுபிடிப்பை அவருக்குத் தெரியாமலேயே திருட்டுத்தனமாகப் பயன்படுத்தித்தான் இந்த இரட்டைச் சுருள் அமைப்பையே வாட்சனும் கிரிக்கும் உறுதிப்படுத்தினார்கள். இதைப் பின்னால் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அச்சமயம் ரோஸ்லின் உயிரோடு இல்லை.
ரோசலின் உயிரியலின் "தவறிழைக்கப்பட்ட நாயகி” (Wronged Heroine) என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில், டிஎன்ஏ-வின் இரட்டைச்சுருள் அமைப்பைக் கண்டுபிடிப்பதில் முக்கியமாகப் பங்களித்தவர் ரோசலின் தான். அவரது முக்கிய பங்களிப்புகள் ரோசலின் உயிரோடிருந்த போது மற்ற விஞ்ஞானிகளால் பெரிதும் அங்கீகரிக்கப்படவில்லை.
வாட்சன், கிரிக் உடன் இணைந்து நோபல் பரிசுபெற்ற இன்னொருவர் மாரிஸ் வில்கின்ஸ். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் இவர் பயோபிசிசிஸ்ட் ஆகப் பணிபுரிந்தார். அங்கே டி என் ஏவை எக்ஸ் கதிர் படிகவியல் மூலம் ஆராய்ந்துவந்தார். டிஎன் ஏவின் அமைப்பு இரட்டை சுருளாக இருக்கலாம் என அவர் ஊகித்திருந்தார்.
இந்த வில்கின்ஸின் குழுவில் ஆய்வாளராக 1951இல் சேர்ந்தவர் ரோசலின். இவர் வேதியியலாளரும் படிகவியலாளரும் ஆவார். இவர் டி என் ஏவின் எக்ஸ் கதிர் படங்களை உருவாக்குவதில் வல்லமை பெற்றிருந்தார். இவர்கள் இருவரும் ஒரே குழுவில் இருந்தாலும் முறையான ஒத்துழைப்பு இல்லை. வில்கின்ஸ், ரோசலினைத் தனது உதவியாளராக (assistant) கருதினார். ஆனால் ரோசலின் தன்னை ஒரு முழுமையான ஆராய்ச்சியாளராகவே பார்த்தார். இதனால் இருவருக்கும் இடையே தொடக்கத்திலிருந்தே புரிதல் பிழை இருந்தது.
வில்கின்ஸ் டிஎன்ஏவின் நீரேறிய (hydrated) வடிவத்தையும், ரோசலின் உலர்ந்த (dry) வடிவத்தையும் ஆராய்ந்தார்கள். ஆனால் இது தெளிவாக தொடர்புபடுத்தப்படவில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் முடிவுகளைத் திறந்த மனதுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ரோசலின் தனது படங்களை ரகசியமாக வைத்திருந்தார். 1952 மே மாதம், ரோசலின் எடுத்த எக்ஸ் கதிர் படம்- 51 டிஎன்ஏ வின் வடிவத்தைத் (B-form) தெளிவாகக் காட்டியது. இது இரட்டை சுழல் அமைப்புக்கு முக்கிய சான்றாக அமைந்தது.
இந்நிலையில் 1953 ஆம் ஆண்டு ஜனவரியில், வில்கின்ஸ், ரோசலினின் அனுமதியின்றி இந்தப் படத்தை வாட்சன், கிரிக் ஆகியோருக்குக் காட்டினார். (வில்கின்ஸும் கிரிக்கும் நண்பர்கள். இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த போட்டியாளர்களாக இருந்தாலும்) அதை அடிப்படையாக வைத்து வாட்சன் மற்றும் கிரிக் ஆகிய இருவரும் டிஎன்ஏ மாதிரியை உருவாக்கினர். இது ஆராய்ச்சி நெறிமுறை மீறல் (Breach of research ethics) என்று பலராலும் கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து 1953-இல் வாட்சன்-கிரிக் கட்டுரை நேச்சர் இதழில் வெளியானபோது, ரோசலினின் பெயர் மூன்றாவது கட்டுரையில் மட்டும் இடம்பெற்றது (வில்கின்சுடன் இணைந்து). ரோசலினின் எடுத்த எக்ஸ் கதிர் படம் எண்- 51 இல்லாவிட்டால், டிஎன்ஏ மாதிரி உருவாகியிருக்காது என்று வாட்சன் பின்னர் ஒப்புக் கொண்டார்.
1953-இல் ரோசலின் கிங்ஸ் கல்லூரியை விட்டு பிர்க்பெக் கல்லூரிக்கு (Birkbeck College) சென்றார். அங்கு வைரஸ் ஆராய்ச்சியில் சிறப்பாக பணியாற்றினார். ஆனால் 1958-இல், 37 வயதில் கருப்பைப் புற்றுநோயால் இறந்தார்.
பிறகு 1962-இல் வாட்சன், கிரிக், வில்கின்ஸ் மூவரும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றனர். ரோசலின் இறந்துவிட்டதால் பரிசில் பங்கு பெறவில்லை (நோபல் பரிசு இறந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை).
ஆனால் ரோசலினின் பங்களிப்பு போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை என்ற கடும் விமர்சனம் விஞ்ஞானிகளிடையே இன்றும் உள்ளது. ரோசலின் இன்று டிஎன்ஏ அமைப்பைக் கண்டறிவதில் மறுக்க முடியாத பங்களிப்பாளர் என்று அங்கீகரிக்கப்படுகிறார். அவரது எக்ஸ்ரே படம் இல்லாவிட்டால், வரலாறு வேறு விதமாக இருந்திருக்கும்.
குறிப்பு: இந்த சர்ச்சைக்கு வாட்சனின் The Double Helix புத்தகமும், ரோசலினின் சுயசரிதையாளர் பிரெண்டா மேடாக்ஸின் எழுதிய Rosalind Franklin: The Dark Lady of DNA என்ற நூலும்ஹோரேஸ் ஜட்சன் எழுதிய The Eighth Day of Creation ஆகிய மூன்று நூல்களும் ஆதாரமாக இருக்கின்றன.
பாடப்புத்தகத்தில் வாட்சன்–கிரிக் மாடல் என்று கடந்துபோகும் கண்டுபிடிப்புக்குப் பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் அவர்கள் யாரும் பொய்சொல்லவில்லை. தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை அப்படியே முன்வைத்தனர் என்பது முக்கியமானது. இந்திய அறிவியல் ஆராய்ச்சி சூழலுடன் இதை ஒப்பிடவே முடியாது!
(கட்டுரையாளர்: பேராசிரியர் பொ. பாலசுப்ரமணியன், மேனாள் இயக்குநர், தாவர மூலக்கூறு உயிரியல் மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை )