கோ.சி.மணி அவர்களை தேடி ஆடுதுறை சென்றோம். சொந்த கிராமமான மேக்கிரிமங்கலம் சென்றிருக்கிறார் என்றார்கள். அது 2001 ஆம் ஆண்டு. உட்கட்சி
பிரச்சினைக்கு தீர்வு காண, அவர் உதவி நாடி சென்றிருந்தோம். தனது வயலில் இருந்தார். நெல் அறுவடை நடந்துக் கொண்டிருந்தது. ‘சும்மா உக்காந்துருக்க முடியுமா? வயலுக்கு வந்தா தான் மனசுக்கு திருப்தி’, என்றார்.
ஆறு மாதங்களுக்கு முன் வரை, அவர் பரபரப்பான உள்ளாட்சித்துறை அமைச்சர். ஒரு இடத்தில் பிடிக்க முடியாது. தமிழ்நாடு முழுதும் பம்பரமாக சுழன்று பணியாற்றிக் கொண்டிருப்பார். கொஞ்சம் நேரம் அமர்வார் என்றால் தலைமை செயலகம் மாத்திரம் தான். அவரது அறை பரபரப்பாக இருக்கும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் ஜேஜே என சூழ்ந்திருப்பார்கள். அதே மனிதர் இங்கு வயலில் விவசாய தொழிலாள தோழர்கள் சூழ இருந்தார். அவரிடத்தில் மாற்றம் இல்லை.
அவர் ஒரு துறவி போல, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யமாட்டார். அமைச்சராக இருக்கும் போது, அவர் ஒரு அரசு அதிகாரி போல் செயல்படுவார். அமைச்சர் பதவி இல்லை என்றால் கட்சிப் பணியும், விவசாயப் பணியும். பேரறிஞர் அண்ணா ஒரு முறை அந்த வழியாக செல்லும் போது, இவரைத் தேடி வயலுக்கு சென்று சந்தித்த சம்பவம் இன்றும் கழகத் தோழர்கள் மத்தியில் பிரபலம். தலைவர் தேடி வந்து சந்திக்கும் தொண்டன்.
கடந்த டிசம்பர் 4 அவர் மறைந்த போது, உடல் அடக்கம் அவரது மேக்கிரிமங்கலம் கிராமத்தில் தான் நடந்தது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவரும் தமிழகம் எங்கிருந்தும் திரண்டு வந்தது, அவரது கட்சி பணிக்கு சான்று. பொதுமக்கள் திரண்டது, அவரது பொதுபணிக்கான மரியாதை. அவரது தொகுதியான கும்பகோணம் தான் எப்போதும் அவருக்கு சிந்தனை.
பகுத்தறிவுவாதியான அவரது தொகுதி கும்பகோணம், கோவில்கள் நிறைந்தது. தனது கொள்கை தனக்கானது, பொதுப்பணி வேறு என்பதை தனது வேலைகள் மூலம் நிரூபித்தார். மகாமகக் குளத்தை சீரமைத்து, ஒளி விளக்குகள் அமைத்தார். நீண்ட நாட்கள் ஓடாமல் கிடந்த தேரை ஓட வைத்தார். கோவில்களின் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொடுத்தார். அதே போல கும்பகோணத்தின் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி கொடுத்தார்.
பெரும் நிலச் சுவான்தார்கள் கையில் இருந்த தஞ்சை மாவட்ட அரசியலை, எளியோர் கைக்கு கொண்டு வந்ததில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு. எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து போராடி, போராடி முன்னேறியவர். சோழ மண்டல தளபதி என்று அழைக்கப்பட்டார் என்றால் அதில் மிகை கிடையாது. அந்தப் பகுதியில் இருந்த கழகத் தோழர்கள் அவரை தான் நாடுவர்.
உலக அளவில் அரசியல் தலைவர்களை பேச்சு, நடை, உடை என ஏதோ ஒரு விதத்தில் தொண்டர்கள் தொடர்வது இயல்பு. திராவிட இயக்கத்திலும் இது உண்டு. அண்ணாவின் அடுக்கு மொழி, கலைஞரின் நேர் வகிடு, கரகரத்த குரல். ஆனால் இரண்டாம் கட்டத் தலைவர்களில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவர் என்றால் இவர் தான். தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த பழைய தஞ்சை மாவட்ட திமுக தோழர்களிடம் ஒரு உடை உடுத்தும் பாங்கு, பரவலாக இருக்கும். முழுக்கை சட்டையை முழங்கைக்கு மேல் பட்டையாக மடித்து விட்டிருப்பார்கள். அது கோ.சி.மணி அவர்களுடைய தாக்கம் தான். இவருக்கும் முன்னோடி இருந்திருக்கலாம். ஆனால் இவர் தாக்கமே அதிகம்.
அது அவரது கவர்ச்சியாலோ, உடை அழகாலோ ஏற்பட்ட தாக்கம் அல்ல. அவரது இடையறாத உழைப்பு ஏற்படுத்திய உணர்வு. கொள்கை தீவிரம், கறைபடியாத கரம், தொடர் மக்கள் பணி, உதவும் குணம், அடுத்தக்கட்ட தலைவர்களுக்கான இடம் கொடுத்தது என அவர் ஏற்படுத்திய தாக்கம் தான், அவரை பின்பற்ற வைத்தது. அதனால் தான், தன்னை கோ.சி.மணியாக நினைத்து, சட்டை கை மடித்து விட்டிருக்கிறார்கள்.
கடந்த திமுக ஆட்சிக்காலம். கும்பகோணம் பயணியர் விடுதி. பகல் உணவு முடித்திருந்தார் அமைச்சர். ஒருவர் வந்தார். ஒரு திட்டத்தை சொல்லி, ‘டெண்டர் வந்திருக்கு. கொஞ்சம் சொன்னிங்கன்னா நான் எடுத்துடுவேன்’. அவரை ஒரு பார்வை பார்த்தார். நெருப்பாய் தகித்தது. ‘என்ன பத்தி தெரியும்ல. திட்டம் கொண்டு வர்றது தான் என் வேல, அப்புறம் தலையிட மாட்டேன்னு. அதெல்லாம் அதிகாரி வேல’. அமைச்சர் நகர்ந்த பிறகு உதவியாளர், ‘பழைய மாதிரி அமைச்சர் உடம்பு நல்லாருந்தா உங்க கதை அவ்ளோ தான். கிளம்புங்க’ என்றார். அதனால் தான் இன்றும் அந்தப் பகுதியில் அவர் மாத்திரமே அமைச்சர் என்று நினைவு கூறப்படுகிறார்.
பின்னொரு காலத்தில், இப்படியும் அரசியல்வாதிகள் வாழ்ந்திருக்கிறார்கள் என உதாரணப்படுத்த வாழ்ந்து காட்டி, மறைந்துவிட்டார்.
ஜனவரி, 2017.