தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம் 
சிறப்புக்கட்டுரைகள்

தி.மு.க.வுக்கு வி.சி.க. அடுத்த குடைச்சல் ? 25 தொகுதிகள் கேட்டு இந்த முறை பிரச்னை!

Staff Writer

தி.மு.க. கூட்டணியில் இருந்துவரும் வி.சி.க. மீண்டும் அந்த அணியின் தலைமைக்கு குடைச்சலைக் கொடுத்துள்ளது. 

வி.சி.க.வின் துணைப்பொதுச்செயலாளராக மிகக் குறுகிய காலமே இருந்து கட்சியைவிட்டு விலகிய ஆதவ் அர்ஜூனா, துணை முதலமைச்சர் பதவியைப் பற்றிப் பேசி சர்ச்சையைக் கிளப்பினார். அதனால் ஆளும் கட்சி தலைமையிலான கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. 

ஆதவ் அர்ஜூனா மீது இடைநீக்கம், அதையடுத்து அவர் கட்சியை விட்டு தானாகவே விலக ஒருவழியாக பிரச்னை முடிந்தது என கூட்டணியில் நிம்மதி அடைந்தனர். 

ஆனால், மீண்டும் பிரச்னை வெடித்துள்ளது. நேற்று தொடங்கி இன்றுவரை வி.சி.க.வின் இன்னொரு துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு, அடுத்தகட்ட சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இன்று வெளியான தமிழ் இந்து நாளேட்டில் அவர் அளித்த பேட்டியில், தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.வுக்கு 25 தொகுதிகளாவது கிடைக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

அதையடுத்து, இன்று காலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியிலும் வன்னி அரசு தங்களுக்கு 25 தொகுதிகள் அளிக்கவேண்டும் என அடிமட்டத் தொண்டர்கள் விரும்புவதாக மீண்டும் வலியுறுத்தினார். 

அவரின் கருத்தையொட்டி தி.மு.க.வுக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம், வி.சி.க. மீண்டும் மிரட்டுகிறதா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு புன்முறுவலுடன் பதிலளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ளன; அப்போது உரிய முடிவு எடுக்கப்படும் என்றார். 

பின்னர், இதுகுறித்து கடலூரில் இன்று திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”வன்னி அரசு தனிப்பட்ட சுதந்திரத்தின் அடிப்படையில் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்துகிறபோதுதான் அதை முடிவுசெய்வோம். முன்கூட்டியே எங்களுக்கு இவ்வளவுதான் என வரம்பாக, நிபந்தனையாக நாங்கள் முன்வைக்க வாய்ப்பில்லை. எப்போதும் அப்படி வைப்பதுமில்லை. ஏற்கெனவே எங்களுக்கு 10 தொகுதிகள் கொடுத்திருக்கிறார்கள். அது இரட்டை இலக்கம்தான். 2011இல் 12 தொகுதிகள்வரை பேசி தவிர்க்கமுடியாத காரணங்களால் 10 என இறுதிசெய்தோம். ஆகவே எங்கள் எண்ணிக்கையைப் பெருக்குவது, கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என விரும்புவது இயல்பானதுதான். கூட்டணிக் கட்சிகள் இருக்கும்போது அதை அனுசரித்து முடிவுசெய்வோம்.” என்று கூறினார்.    

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram