சிறப்புக்கட்டுரைகள்

எல்லையில் போர்மேகம்... பொருளாதார இழப்பு எச்சரிக்கை!

தா.பிரகாஷ்

பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொள்வது இது ஆறாவது முறை.

அணு ஆயுதத்தில் பலம் பெற்ற இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டால், இரு நாடுகளும் இழக்க வேண்டியவை ஏராளம். குறிப்பாக மனித உயிர்களை அதிகம் இழக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறார்கள் போருக்கு எதிரான சமாதான இயக்கத்தினர்.

உலக வங்கியின் அறிக்கைப்படி, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி, பாகிஸ்தானைவிட எட்டு மடங்கு அதிகம். தற்போது போர் ஏற்பட்டால் இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார இடைவெளி மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க - சீனா வர்த்தகப்போருக்கு இடையே, பிரதமர் மோடி ஆப்பிள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்னர் கூட இங்கிலாந்துடன் இந்தியா மேற்கொண்ட வரியில்லா வர்த்தக ஒப்பந்தமும் பாசிட்டிவாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகமாக முன்னேறிவருவதோடு ஸ்மார்ட் போன் உற்பத்தி, சோலார் பேனல்கள், ஆட்டோமொபைல் உற்பத்தியில் முக்கிய பங்கை ஆற்றுகிறது.

இதனால்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நடைபெற்ற அன்றுகூட, இந்தியப் பங்குச்சந்தை சரியவில்லை. ஆனால், பாகிஸ்தான் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.

ஆனால், போர் பதற்றம் தொடர்ந்து நீடிப்பதால், வடக்கு, வடமேற்கு பகுதியில் விமான சேவை நிறுத்தப்பட்டிருப்பது பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு இழப்பையே கொண்டு வரும் என்கிறார்கள்.

உலக மக்கள்தொகையில் 20 சதவீதமாக இருக்கும் இரு நாட்டவர்களும், 3200 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொண்டாலும், இரு நாட்டவருக்கும் இடையேயான வர்த்தகம் வெறும் 322 பில்லியன் டாலர்களே.

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த பாகிஸ்தான் இப்போதுதான் மீண்டுவருதாக கூறப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 7 பில்லியன் டாலர் கடன் வாங்கவும் காத்திருக்கிறது. இதுதான் பாகிஸ்தானுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக உள்ளது என்கிறார்கள்.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிப்பதால், சர்வதேச அரங்கில் அந்நாட்டின் முக்கியத்துவம் குறைந்தே காணப்படுகிறது. ஆனால், இந்தியாவின் நிலை அப்படி இல்லை. உலகளாவிய விநியோகச் சங்கிலியின் முக்கிய அங்கமாக இருக்கும் இந்தியா, ஏற்றுமதியில் முக்கியமான நாடாக மாறுவதை இந்த போர் சீர்குலைக்கக் கூடும் என்கின்றனர், பொருளாதார நிபுணர்கள்.

டிரம்பின் வரி விதிப்பால் பீதியடைந்துள்ள முதலீட்டாளர்களுக்கு இந்தியா தொழில் செய்ய உகந்த நாடாக இருக்கும் என கருதப்படுகிறது. இப்போதுள்ள பதற்ற சூழல் தொடர்ந்து நீடித்தால் முதலீட்டாளர்களுக்கு இந்தியா மீதான நம்பிக்கை குறையவே செய்யும் என்கிறார்கள்.

கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா ஒரு நாளுக்கு 14.6 பில்லியனை (1400 ஆயிரம் கோடிக்கு மேல்) செலவிட்டது. பாகிஸ்தான் 3.7 பில்லியன் (370 கோடி) செலவிட்டது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னரே, போருக்கு இவ்வளவு செலவு ஆனதென்றால், இன்று யோசித்துப் பாருங்கள்.

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இராணுவச் செலவினங்களை இந்தியா அதிகரித்தால், மீண்டும் ஒரு முறை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டாக வேண்டும்.

என்ன ஆகுமோ... பார்க்கலாம்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram