பாராட்டுவிழா மேடையில் 
சிறப்புக்கட்டுரைகள்

இளையராஜாவுக்கு எப்போது பாரத ரத்னா?

வைகறை வாசகன்

நேற்று நடந்த இளையராஜாவின் பாராட்டு விழாவிற்கு போயிருந்தீர்களா? இளையராஜாவின் இளமைக்காலம் குறித்து ரஜினிகாந்த் கலாய்த்து பேசினாராமே! எஸ்பிபி இல்லாத குறையை எஸ் பி பி சரண் சமன் செய்தாரா? நிகழ்ச்சியில் இளையராஜா ஒரு பாடல் கூட பாடவில்லையா? நிகழ்ச்சியில் 'காதலின் தீபம் ஒன்று' பாடல் இசைக்கப்பட்ட போது சூப்பர் ஸ்டார் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தாராமே! துணை முதலமைச்சர் நடித்த திரைப்படப் பாடல் ஒன்றும் நிகழ்ச்சியில் இடம்பிடித்தாமே! ஹேராம் படப் பாடல் ஒன்றை கமல் பாடினாராமே!

பழந்தமிழ் இலக்கியங்களுக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள் வைத்தாராமே! இப்படி பலப்பல விசாரிப்புகள்.

---

1993-இன் சிம்பொனி முயற்சி

1993-ல் இளையராஜா, லண்டனில் ராயல் பில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவுடன், ஜான் ஸ்காட் இயக்கத்தில், 5 பாகங்களைக் கொண்ட ஒரு சிம்பொனி படைப்பை பதிவு செய்தார். சிலர் அதை “Symphony No.1” என்று குறிப்பிடினும், அது ஒருபோதும் ஆல்பமாக வெளியிடப்படவோ அல்லது பொதுக் கச்சேரியில் இசைக்கப்படவோ இல்லை.

அந்த படைப்புக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் (பிரோக்ராம் குறிப்புகள், நோட்டேஷன் வெளியீடு, கச்சேரி அறிவிப்புகள்) பொதுமக்கள் பதிவுகளில் மிகக் குறைவாகவே உள்ளன.

இளையராஜா அதை "முதல் சிம்பொனி" என்று ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் —

பீந்தோவன், மோசார்ட் போன்றோரின் சிம்பொனிகள் பொதுவில் இசைக்கப்பட்டன.

ஆனால் 1993-இல் பதிவு செய்யப்பட்ட இளையராஜாவின் படைப்பு பார்வையாளர்கள் மத்தியில் அல்லாமல் தனிப்பட்ட ஒலிப்பதிவு கூடத்தில் மட்டுமே நடந்தது.

அதனால் அது உலகளாவிய “சிம்பொனி பாரம்பரியத்தில்” சேரவில்லை.

அது ஒருபோதும் வெளியிடப்படவோ அல்லது பரவலாகப் பகிரப்படவோ இல்லாததால், அதைத் தனது முதல் சிம்பொனியாக அவர் அதிகாரப்பூர்வமாகக் கருத விரும்பவில்லை.

---

Valiant – அதிகாரப்பூர்வ முதல் சிம்பொனி

2025-ல் Valiant வெளியிடப்பட்டபோது, அதனைத் தான் தனது முதல் மேற்கு பாரம்பரிய சிம்பொனி என்று இளையராஜா அறிவித்தார். அதாவது, அவருக்குப் பாரம்பரிய சிம்பொனி என்றால் அது பொதுக் கச்சேரியில் இசைக்கப்பட்டு அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே.

1993-இன் படைப்பு ஒரு சோதனை அல்லது கலப்பு முயற்சி போன்றதாக இருந்திருக்கலாம்.

ஆனால் Valiant உலகளாவிய அளவில் மேற்கு பாரம்பரிய சிம்பொனி என்ற நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

இசைஞானி பட்டமும் 1993 பாராட்டு விழாவும்

1988- காரைக்குடி பாராட்டுவிழா- சிவகுமாரின் டைரிக்குறிப்பு

நடிகர் சிவகுமார் அவர்கள் தனது நாட்குறிப்பில் “இசைஞானி” என்ற பட்டம் இளையராஜாவிற்கு 1988, மே 25 ஆம் தேதி கலைஞர் எம்.கருணாநிதி அவர்களால் காரைக்குடி நடைபெற்ற ஒரு பாராட்டு விழாவில் வழங்கப்பட்டதுஎன்பதையும் அந்த விழாவில் கலைஞர் மு.கருணாநிதி, இளையராஜா, பஞ்சு அருணாசலம் ஆகியோரோடு தானும் , விஜயகாந்தும் மேலும் பலரும் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா முதன்முதலில் இசையமைப்பாளராக அறிமுகமான அன்னக்கிளி படத்தின் கதாநாயகனான திரையுலக மார்க்கண்டேயர் சிவகுமார், தனது 1993-ம் ஆண்டின் நாட்குறிப்பில் இளையராஜாவின் சிம்பொனி நிகழ்வு குறித்த இன்னொரு குறிப்பையும் பகிர்கிறார்.

1993 அக்டோபர் 8 அன்று காமராஜர் ஹாலில், தமிழ்த் திரை உலகம் சார்பில் சிம்பொனி அமைத்ததற்காக இளையராஜாவிற்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவே அது. அந்த விழாவில் சிவாஜி கணேசன், சிவகுமார், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள், இந்தித் திரையுலக இசை பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1993 பாராட்டுவிழா- சிவகுமாரின் டைரிக்குறிப்பு

---

உலக இசை வரிசையில் இளையராஜா

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஹைடன் சுமார் 150 சிறிய சிம்பொனிகள் எழுதியுள்ளார்.

மோசார்ட் 41 சிம்பொனிகள் எழுதியுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த பீந்தோவன் 9 சிம்பொனிகள் எழுதியுள்ளார்.

Valiant சிம்பொனி முதன்முறையாக 2025 மார்ச் 9 அன்று லண்டனில் உள்ள இவென்டிம் அப்போலோ தியேட்டரில், ராயல் பில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவுடன் இசைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 13, 2025 அன்று சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் அதே 87 லண்டன் இசைக்கலைஞர்களைக் கொண்டு மீண்டும் இசைக்கப்பட்டது.

உலக இசை வரலாற்றில் அதிக முறை வாசிக்கப்பட்ட சிம்பொனிகளாக பீந்தோவனின் 5-ஆம் சிம்பொனி, 9-ஆம் சிம்பொனி, மேலும் மோசார்டின் 40-ஆம் சிம்பொனி ஆகியவை விளங்குகின்றன. இந்தச் சிறந்த படைப்புகளின் வரிசையில், தனது Valiant சிம்பொனியின் மூலம் இளையராஜா உலக இசை மாமன்னர்களின் வரிசையில் இணைந்துள்ளார்.

மேலை செவ்வியல் சிம்பொனி எழுதிய முதல் தமிழர் – முதல் இந்தியர் இளையராஜா என்பதால்தான் தமிழ்நாடு அரசு விழா எடுத்தது. அந்த விழாவில் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிம்பொனி இசை அரங்கேற்றத்தையும் பெரும் பொருட் செலவில் நிகழ்த்தியுள்ளது.

மேலும் விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பேரில் விருது வழங்கப்படும் என்றும், இந்திய அரசு இசைஞானி இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கிப் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

---

பாரத ரத்னா விருது பெறக்கூடிய ஏழாவது இசைஞர்?

ஏற்கனவே இந்தியாவின் ஆறு இசை மாமன்னர்கள் —

எம். எஸ். சுப்புலட்சுமி

ரவி சங்கர்

பிம்சேன் ஜோஷி

லதா மங்கேஷ்கர்

பிஸ்மில்லா கான்

பூபன் ஹசாரிகா

— ஆகியோர் பாரத் ரத்னா விருது பெற்றுள்ளனர்.

விரைவில் இளையராஜாவும் ஏழாவது ஆளுமையாக இந்தப் பட்டியலில் இணைவார் என்று எதிர்பார்ப்போம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram