சிறப்புக்கட்டுரைகள்

கிளிக் கிளிக்

எஸ்.எஸ். சிவசங்கர்

இந்த ஜல்லிக்கட்டு போராட்டப் புகைப்படங்களில் மனதில் ‘பச்’சென பதிந்தது, கூட்டத்தின் நடுவே ரோஸ் நிற கவுன் அணிந்த சிறுமி  கையை உயர்த்தி கோஷம் போடும் படம் காட்சி. வியட்நாம் போரின் போது ஒரு சிறுமி உடையில்லாமல் ஓடி வரும் காட்சி காலமெல்லாம் மனதில் நிலைத்திருக்கும். ஒரு பக்கம் எழுதி விளக்க வேண்டியதை ஒரு புகைப்படம் விளக்கிவிடும்.

புகைப்படங்களை இப்படி ரசிக்க வைத்தவர் பிரபு. எங்கள் கல்லூரி சீனியர். அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தின் மாணவர்கள் நாங்கள். அவர் மூன்றாம் வருடம், நாங்கள் முதல் வருடம். முதல் வருடத்தில் தான் இந்த கதை, பிறகு ஒரே வகுப்பு நண்பர்கள் போலானோம்.

எங்களை இணைத்தப் புள்ளி, நாட்டு நலப்பணித் திட்டம். முதல் வருடம் விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் முகாம். முகாமிற்கு கிளம்பும் பஸ்ஸில் ஏறும் போது தான், பிரபுவை சந்தித்தேன். ‘ஃபர்ஸ்ட் இயரா?’. ‘ஆமாம் சார்’. ‘எந்த ஊர்?’.

‘ஆண்டிமடம் சார்’. சீனியர்களை ‘சார்’ என்று அழைக்க வேண்டுமென்பது அறிவிக்கப்படாத சட்டம். ‘யோவ், ஆண்டிமடமா? நான் மேலணிக்குழி தான்’, இளகிப் போனார். அது தான் பிரபு.  அப்புறம் சார், பிரபு ஆகிப் போனார். கடைசியா ‘ யோவ்’வும் ஆகிப் போனார்.

பிரபுவின் மூன்றாம் கரம், கேமரா. அவர் சிவில் படித்ததைவிட, கேமரா குறித்து படித்தது தான் அதிகம் இருக்கும். முத்து எழிலனுக்கு பிரபுவுடன் சேர்ந்து கேமரா பைத்தியம். பிரபு, முத்து கேங்கில் ஷங்கர், செந்திலோடு நானும் இணைந்தேன். வகுப்புகள் முடிந்த பிறகான மாலை டியூட்டி அவர்களோடு தான். என்.எஸ்.எஸ், நகர்வலம், ட்ரீட் என ஏதாவது ஒரு பணி  எங்களுக்கு காத்திருக்கும்.

ஆபாவில் பிரபுவுக்கும், முத்துவுக்கும் தீவிர ஈடுபாடு, இதனால் எங்களுக்கும்.  எங்கள் முக்கியப் பணி, டிரைப்பாட் போன்ற உபகரணங்களை தூக்கும் வேலை தான். ஆபா என்றால்  அண்ணாமலைப் பல்கலைக்கழக போட்டோகிராபிக் அஸோசியேஷன் (AUPA). மயிலாடுதுறை ஏ.ஆர்.சி ஜுவல்லரி உரிமையாளர் தான் ஆப்பாவின் புரவலர். அவ்வப்போது புகைப்பட பயிற்சி முகாம் நடக்கும். நாங்களும் அதில் பங்கேற்று, கொஞ்சம் கொஞ்சமாக புகைப்படக் கலை மீது ஈடுபாடு கொண்டோம்.

பிரபு புகைப்படக் கலையில் கை தேர்ந்தவராக தயாரானார். அதே போல ஆபாவிலும் முன்னேறி அதன் தலைவரானார். முத்து எக்ஸிகியூட்டிவ் மெம்பர். இப்படி AUPA  எங்கள் குழு வசம் வந்தது. அதன் நிகழ்ச்சிகள், பயிற்சி முகாம்களை முன்னின்று நடத்தினோம். நாங்களும் புகைப்பட நிபுணராக எண்ணிக் கொள்ள ஆரம்பித்தோம்.

ஒரு புகைப்பட போட்டியில் பங்கேற்ற பிரபு, புகைப்படம் எடுக்கும் போது நாங்களும் உடன் இருந்தோம். ‘பிரபு, இந்தப் பாட்டிய எடுங்களேன்’, என செந்தில் சொல்ல, பிரபுவும் எடுத்தார். ஒரு மரத்தடியில், ஒரு ஏழைப் பாட்டி அமர்ந்து வியாபாரம் செய்த காட்சி.  அந்தப் புகைப்படம் முதல் பரிசை வென்றது. கோணமும், ஒளியும், படம் வெளிப்படுத்திய உணர்வும்  முதல் பரிசை கொண்டு வந்தது. ‘ பிரபு, என்னால தான் பரிசு’ செந்தில் சிரித்தார். பிரபுவும் சிரித்தார். அது தான் பிரபு.

பிரபு, ஜுனியர் மாணவி பத்மாவை புகைப்படம் எடுத்து ‘குங்குமம்’ வார இதழுக்கு அனுப்ப, அட்டைப்படத்தில் இடம் பெற்றது அந்தப் புகைப்படம். அதற்குப் பிறகு, பிரபுவின் புகைப்படத் திறமை பல்கலைக்கழகம் முழுதும் பிரபலமானது. அப்போதைய புகழ்ப்பெற்ற புகைப்பட நிபுணர் கே.வி.ஆனந்தை ஒரு நிகழ்வில் உரையாற்ற அழைத்து வந்தார் பிரபு. அப்போது கே.வி.ஆனந்த் திரைப்படத் துறையில் கேமராமேன் ஆகியிருந்தார். பிரபு, அவரது உதவியாளராக போகப் போகிறார் என்ற பேச்சு வந்தது. ‘நான் படம் எடுத்தா நீ தான் கேமராமேன் பிரபு’ என்போம் நாங்கள் அப்போது.

சிவில் இஞ்சினியரிங்கை விட புகைப்படத் துறையை தான் பிரபு அதிகம் நேசித்தார். அந்தத் துறைக்கு  சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கமான தமிழ் சினிமா போல், ME.Phd  முடித்து  சிவில் துறை பேராசிரியர் ஆகிவிட்டார் பிரபு.

பிரபு இப்போது சிவில் துறைத் தலைவர். கடந்த மாதம் பிறந்தநாள். அழைத்திருந்தார். சென்றோம். வழக்கம் போல டிரீட். பிரபு தன் ‘ஆப்பிள்’ மொபைலை எடுத்து, ‘சங்கர் கொஞ்சம் நவுரு, செந்தில் நீ இப்படி திரும்பு’, என்றார். கிளிக், எங்களை சேர்த்து ஃசெல்பி எடுத்தார். நாங்கள் ஒரே குரலில் சொன்னோம்:

 ‘பிரபு, நம்ம படத்துக்கு நீ தான் கேமரா’.

பிப்ரவரி, 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram