சிறப்புக்கட்டுரைகள்

சென்னைக்கு வந்து விட்டார்.. சீரகச்சம்பா பிரியாணியின் பிதாமகன்!

சித்தார்த் சாய்

மதுரையில் ஆரம்பிக்கப்பட இரண்டாவது அசைவ உணவகம்.. அம்சவல்லி பவன். முதல் உணவகம் கால வெள்ளத்தில் காணாமல் போய்விட்டது. இந்தத் தலைமுறைக்கும் ஈடுகொடுத்து அசத்திக் கொண்டிருப்பது அம்சவல்லி பவன் மட்டுமே.

1950 - ல் சிறிய அளவில் உணவகம் ஒன்றினை ஆரம்பித்தார் கோபால் பிள்ளை. பெயரெல்லாம் இல்லை, ஜஸ்ட் கோபால் பிள்ளை க்ளப் கடை. அவரது கைமணத்துக்கு சப்புக்கொட்டிக்கொண்டு வரிசை கட்டி நின்றார்கள் வாடிக்கையாளர்கள். அமோக வரவேற்பால் இரண்டே வருடங்களில் 'அம்சவல்லி உணவு விடுதி'யாக உருமாறியது.

வழக்கமான அயிட்டங்கள் தவிர, வேறென்ன புதுமையாக கொடுக்கலாம் என யோசித்தார் கோபால் பிள்ளை. பிறந்தது.. சீரகச் சம்பா பிரியாணி! ஆம்.. சீரகச் சம்பா அரிசியில் பிரியாணி சமைத்து, புதிய சுவையை உலக சமையல் வரலாற்றில் முதன் முறையாக அறிமுகம் செய்து வைத்தது அவரேதான்! கூட்டம் அலைமோதியது. அடுத்தடுத்து ஒவ்வொரு அயிட்டமாக அறிமுகம் செய்ய ஆரம்பித்தார் அந்த சமையல் தாதா! சிக்கன் வெண்டுலா, ஜிஞ்சர்
சிக்கன், மெஜுரா சிக்கன், வெங்காயக்கறி.. இப்படி அவர் சமைத்துப் படைத்த ஒவ்வொரு உணவுப் பதார்த்தமும் சூப்பர் ஹிட் அடித்தன. மதுரையின் நிரந்தர அடையாளங்களில் ஒன்றாகி, 'அம்சவல்லி பவன்' ஆக பெயர் மாறியது!

அம்சவல்லி பவனில் சாப்பிடுவது மகானுபவம்! அங்கே கிடைக்கும் பரோட்டாவுக்கும், தொட்டுக் கொள்ளக் கொடுக்கும் வெங்காயக்கறிக்கும் பாதி மதுரை என்றைக்கோ அடிமை! மிச்சமிருக்கும் மீதிப்பேரைத்தான் அதற்கு முன்பே மயக்கிப் போட்டுவிட்டதே சீரகச் சம்பா பிரியாணியின் சுவை!

ஆகப்பெரும் ஜாம்பவான்களும் அம்சவல்லி பவனின் வாடிக்கையாளர்கள்தான். தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மூவரும் கோபால் பிள்ளையின் கைமணத்துக்கு ரசிகர்களே. ஹோட்டலுக்கே சென்று ரசித்துச் சாப்பிட்டு அம்சவல்லி பவனுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் பலமுறை. விஜயகாந்த், வடிவேலு.. என நீளும் அம்சவல்லி ப்ரியர்களின் லிஸ்ட் பெரிதினும் பெரிது.

இனி அவர்களது பதார்தப் பட்டாளத்தின் அறிமுக பவனி. பிரியாணியில் பல ரகம். சிக்கன் லெக் பிஸை எடுத்து, மேலிருந்து கீழாக, ஸ்பைரல் போல வரிவரியாகக் கீறி, கீறல்களுக்குள் சிறப்பான மசாலா தடவி, அரைமணி நேரம் ஊறவைத்து, அதன் பின்னர் சுத்தமான எண்ணெயில் பொரித்தெடுத்து.. பொன்னிற மொறுவலுடன் இலையில் வைத்தால்.. அதுதான் மெஜூரா சிக்கன். அம்சவல்லிக்காரர்கள் உணவுலகத்துக்கு அறிமுகப்படுத்திய சூப்பர் ஸ்டார்களில் இதுவும் ஒன்று.

ஜிஞ்சர் சிக்கன்.. எளிமையாகச் சொன்னால் இஞ்சி மணம் தூக்கலாக இருக்கும் சிக்கன். ஆனால் வாய்க்குள் எடுத்து வைக்கும்போது சுவையில் செம ரிச்! காலை வேளைகளில் கிடைக்கும் மருத்துவ மட்டன் சூப்பை வாங்கிக் குடிக்க க்யூ நிற்கும். மதிய வேளையில் சிக்கன் சூப் ராஜ்ஜியம்.

பரோட்டா, வீச்சு பரோட்டா, ஊறவைத்த பரோட்டா, தலைக்கறி, சுக்கா, கோலா உருண்டை, சுவரொட்டி, ஈரல்.. என ஒவ்வொரு அயிட்டமும் இவர்களிடம் ஸ்பெஷல்தான்.

அக்டோபர், 2019.