அது என்ன டிரம்பிசம்? நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. அன்று இரவே வாக்குகளை எண்ணத் தொடங்கினார்கள். அதிபர் டிரம்ப் இரவு இரண்டரை மணியளவில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆரம்ப அறிகுறிகள் அவருக்குத்தான் சாதகமாக இருந்தன. லட்சக்கணக்கான வாக்குகள் இன்னும் எண்ணப்படுவதற்குக் காத்துக் கொண்டிருந்தன. ஆனால் டிரம்ப் அறிவித்தார்: 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்'. இதுதான் டிரம்பிசம்.
டிரம்பிசம் என்பது டிரம்பில் தொடங்கி டிரம்பில் முடிவதல்ல. அது அமெரிக்காவில் நெடுங்காலமாக நிலவிவரும் ஒரு மனோபாவம். அது கடந்த நான்காண்டுகளில் மேலெழும்பி நின்றது. அடுத்து வரும் காலங்களில் அது அடங்கிவிடப் போவதுமில்லை.
இந்தத் தேர்தலில் டிரம்புக்கு எதிராகப் பல அம்சங்கள் இயங்கின. முதலாவதாகக் கொரோனாப் பெருந்தொற்றை அவர் கையாண்ட விதம். சுமார் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 2.4 இலட்சம் பேர் உயிரிழந்தார்கள். பொருளாதாரம் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்து, அவர் செல்வந்தர்களின் வரியைக் குறைத்தார். தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியக் கொள்கையை இழுத்தடித்தார். கறுப்பர்களின் மீதான வெறுப்பைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்; அது நாடு தழுவிய போராட்டத்தில் கொண்டு போய்விட்டது. புலம் பெயர்ந்தவர்களுக்குக் குடியுரிமையை மறுத்தார். அகதிகளுக்குக் கதவடைத்தார். மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை நீர்த்துப்போகச் செய்தார். சர்வதேச அரங்கில் சூழலியல் ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு போன்றவற்றிலிருந்து வெளியேறினார். கருச்சிதைவு, ஒருபால் உறவு, துப்பாக்கிக் கலாசாரம் போன்றவற்றில் அவரது கொள்கைகள் யாவரும் அறிந்ததே.
டிரம்பிசம் என்பது டிரம்ப் பிறப்பதற்குப் பன்னெடுங்காலம் முன்னதாகவே அமெரிக்காவில் கால்கொண்டு விட்டது. இந்த அதிபர் தேர்வு முறையைப் பார்க்கலாம். மக்கள் அதிபர் வேட்பாளருக்குத்தான் வாக்களிக்கிறார்கள். ஆனால் மக்கள் அளிக்கிற வாக்குகள் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரிய கட்சிகளால் முன்மொழியப்பட்டிருக்கிற தேர்வர்களுக்குத்தான் போகிறது. இதற்குத் தேர்வர் குழு (electrol college) என்று பெயர். இந்தத் தேர்வர்கள்தான் அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த முறை அமெரிக்க அரசியலமைப்பு எழுதப்பட்ட 18ஆம் நூற்றாண்டிலேயே வந்துவிட்டது. அப்போது பிரதிநிதிகளின் அவையாகிய காங்கிரஸ் தனது அதிகாரங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அதிபரைத் தாங்கள்தான் தேர்ந்தெடுப்போம் என்றது. இன்னொரு சாரர் மக்கள்தான் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றனர். இதில் ஒரு சமரச ஏற்பாடாக உருவாக்கப்பட்டதுதான் தேர்வர் குழு. இந்தத் தேர்வர்கள் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாக இயங்குவார்கள் என்று அப்போது சொல்லப்பட்டது. ஆனால் காலம் மாறிவிட்டது. அமெரிக்கத் தேர்தல் முறை மாறவில்லை. இந்த முறையால் மக்களின் நேரடி வாக்குகளை அதிகம் பெற்ற போதும், குறைவான தேர்வர் வாக்குகளைப் பெற்றதால் வெற்றி வாய்ப்பை சமீப காலத்தில் இழந்தவர்கள் இருவர். 2016இல் ஹிலாரி கிளிண்டன், 2000இல் அல் கோர். இருவரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள். அந்த ஆண்டுகளில் முறையே டிரம்ப், ஜார்ஜ் புஷ் அகிய குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் அதிபரானார்கள். இந்தத் தேர்தல் முறை நீதியன்று என்று பல காலமாக அரசியல் அறிவியாலளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த முறையை விட்டு அரசியல்வாதிகளில் பலர் நீங்கத் தயாராக இல்லை. ஆகவே அது நீடிக்கிறது.
அதைப்போலத்தான் மேலவை என்கிற செனட். அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள்.
சின்னஞ் சிறிய மாநிலங்களும் உண்டு. பென்னம்பெரிய மாநிலங்களும் உண்டு. எல்லா மாநிலங்களுக்கும் தலா இரண்டு செனட்டர்கள். ஆக மேலவையில் மொத்தம் 100 செனட்டர்கள். பல கொள்கை முடிவுகளில் செனட்டர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். ஒரு செனட்டருக்கு ஒரு வாக்கு. இது பாரபட்சமானது. சிறிய மாநிலங்களுக்கு அதன் அளவைவிட கூடுதல் முக்கியத்துவம் நல்குகிறது. இது எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் மாற்ற யாருக்கும் துணிவில்லை.
அரசியலுக்கு வெளியே ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். அறுபதுகளில் இயற்பியல் துறையில் இருந்த அளவை முறை அடி- பவுண்டு- நொடி (FPS System) எனப்பட்டது. நீட்டலளவை அடியில், அங்குலத்தில், மைலில் இருந்தது. முகத்தலளவை கேலனிலும், நிறுத்தலளவை பவுண்டிலும் இருந்தன. காலம் நொடிகளில் நிமிடங்களில் சுழன்றன. எழுபதுகளில் அளவை முறை மீட்டர்- கிலோகிராம்- நொடி (MKS System) என்றாகியது. எண்பதுகளில்
சர்வதேசத் தரநிர்ணயம் (SI - Standard International) வந்தது. இதில் மீட்டர்- கிலோகிராம்- நொடி என்பவற்றுடன் கூடுதலாக மின்சாரம், வெப்பம், அழுத்தம் முதலானவற்றுக்கும் புதிய அலகுகள் உருவாயின. உலகம் முழுமையும் ஏற்றுக்கொண்டது. ஒரு திருத்தம்- அமெரிக்கா நீங்கலாக.
அமெரிக்கர்கள் ஊககு முறையிலேயே நிலை கொண்டிருக்கின்றனர். இப்போதும் அமெரிக்கத் தெருக்களின் தூரங்கள் மைல்களாலும், திரவங்கள் கேலன்களாலும், பாரங்கள் பவுண்டுகளாலுந்தான் அளக்கப்படுகின்றன. ஏனெனில் அமெரிக்கர்கள் பழமைவிரும்பிகள். அவர்கள் மாற்றங்களைச் சுலபமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுதான் டிரம்பிசத்தின் ஊற்றுக்கண்.
எல்லா அமெரிக்கர்களையும் அப்படிப் பொதுமைப்படுத்திவிட முடியுமா? நிச்சயமாக முடியாது. இன்றளவும் அடிக்கணக்கில் அளந்தாலும் உலகின் தலைசிறந்த கண்டுபிடிப்புகள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வரங்கங்களிலும்தான் நடந்தேறுகின்றன. நவம்பர் 5ஆம் தேதி வெள்ளை மாளிகை மேடையில் டிரம்ப் பேசியபோது அவர் பொய்யுரைகளைக் கட்டவிழ்க்கிறார் என்று தெரிந்தபோது Nஆஇ, அஆஇ, இஆகு முதலிய செய்தித் தொலைக்காட்சிகள் தங்கள் நேரலை ஒளிபரப்பை இடையிலேயே நிறுத்திக்கொண்டன. அவரது குடியரசுக் கட்சியிலேயே சிலர் அந்தப் பேச்சைக் கடுமையாகக் கண்டித்தனர். இது அமெரிக்காவில் நிலவும் டிரம்பிசத்திற்கு எதிரான மனநிலை.
கொள்ளை நோயாலும், பொருளாதாரப் பின்னடைவாலும், அரசின் கொள்கைகளாலும் டிரம்பிசம் தன்னைத்தானே அழித்துக் கொண்டுவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் டிரம்பிசத்தை வேரறுப்பது அத்தனை எளிதில்லை என்பதை இப்போது அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். பைடன் வெற்றி பெற்றுவிட்டார். இதனால் டிரம்பிசம் முடிவுக்கு வந்துவிடாது.
(மு இராமனாதன் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர். தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)
டிசம்பர், 2020.