சிறப்புக்கட்டுரைகள்

திருக்குறளின் பதினொன்றாவது அதிகாரம்

பாமரன்

மிக நீண்ட நெடிய காலத்திற்குப் பிற்பாடு ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டிருக்கிறது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில். பிப்ரவரி 18 ல் வழங்கப்பட்ட உச்சநீதி மன்ற தீர்ப்பின் மூலம்.

மரணத்தின் நிழல் துரத்திக் கொண்டிருந்த மூவரும் தண்டனை குறைக்கப்பட்டு தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி இது.

மனித உரிமை வரலாற்றில்  இத்தீர்ப்பு ஒரு மைல் கல். சந்தேகமேயில்லை. ஆனால் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.

அளவிடற்கரிய கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் நாம் பொறுமையோடும் பொறுப்புணர்ச்சியோடும் நடந்து கொள்ள வேண்டிய வேளை இது. ஏறக்குறைய இருபத்தி மூன்றாண்டுகளுக்குப் பிற்பாடு தென்பட்டிருக்கிற இந்த நம்பிக்கை ஒளிக்கீற்று எப்படிச் சாத்தியமாயிற்று என்பதும்.... இது யார் யாரால் எல்லாம்

சாத்தியமாகி இருக்கிறது என்பதும்... கடந்த கால வரலாற்றை அசைபோட்டுப் பார்ப்பதும் அவசியம்தான். ஆனால் அந்த அலசலும் நமக்குள் நாமே ஏற்படுத்திக் கொள்கிற விரிசலாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான் அதிமுக்கியமானது. 

அந்தக் காலகட்டத்தில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாதா?... இவர் அப்போது எங்கே போயிருந்தார் என்பது புரியாதா? என்று ஒருவர் மற்றவர் மீது புழுதி வாரித் தூற்றாமல் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊர் கூடித்தான் இந்தத் தேர் நகர்ந்திருக்கிறது என்கிற உண்மைதான் அது.

1991 தொடங்கி இந்த 2014 ல் வந்திருக்கிற தீர்ப்பு வரைக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் தங்களது பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

நெடுமாறன் அவர்களுக்குப் பங்கிருக்கிறதா? ஆம். ஊரே மிரண்டு விலகி நின்ற காலகட்டத்தில் துணிந்து முன் வந்து நின்று குரல் கொடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது. புதிய அடக்குமுறைச் சட்டங்கள் வரும் வேளையிலெல்லாம் சரியாகச் செல்லுபடியாகுமா என்று பரிசோதித்துப் பார்ப்பதற்கென்றே இருக்கின்ற கொளத்தூர் மணி அவர்களுக்குப் பங்கிருக்கிறதா? ஆம் இருக்கிறது. அவர் சிறைக்குள் போகாத ஒடுக்குமுறைச் சட்டப்பிரிவு என்பது இன்னும் உருவாகாத சட்டப்பிரிவுதான்.  

அதுசரி வைகோ அவர்களுக்குப் பங்கிருக்கிறதா? ஆம் பங்கிருக்கிறது. பிறரைப் போலவே அரசியல் கூட்டணிகள் அவ்வப்போது மாறினாலும் ஜேத்மலானி வரை கொண்டு சென்றதில் அவருக்கும் பங்கிருக்கிறது.

சீமானுக்குப் பங்கிருக்கிறதா. ஆம் அவருக்கும் உண்டு அப்பங்கு. சிறைக்குச் சந்திக்கச் செல்லுவதே சிக்கலுக்குரியதோ என வெகுசனம் விலகி நின்ற பொழுது ‘நாங்க ஒண்ணு ரெண்டு படிச்சதே சிறைக்கம்பிகளை எண்ணிப்பார்க்கத்தான்‘ என்று அவ்வப்போது வெளியில் வந்த வேளையில் எல்லாம் சீறிய சீமானால் இறுகிக் கிடந்த கதவுகள் கொஞ்சம் உருகத் தொடங்கியதில் அவருக்கும் பங்கிருக்கிறது.

தூக்கைத் தூக்கு என்று கேரளத்தின் மூலையில் இருந்து தனது தள்ளாத வயதிலும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்... முகம் தெரியா இம்மூன்று இளைஞர்களுக்காய் முழங்கிய உச்சநீதி மன்ற வழக்குரைஞர்கள் காலின் கன்சல்வாஸ்... மொகித் சௌத்ரி... என இவர்களுக்கும் இத்தீர்ப்பில் பிரதான பங்கிருக்கிறது.

இம்மக்களின் விடிவுக்காய் தன்னைத்தானே தீய்த்துகொண்ட நம் மகள் செங்கொடியையும், தம்பிகள் அப்துல் ரவூப், முத்துக்குமாரையும்... இந்த வேளையில் எந்த வார்த்தைகளால் விளக்கிவிட முடியும்?

90களின் தொடக்கத்தில் அரை டிராயர் அணிந்த பள்ளிச் சிறுவர்களாய் பவனிவந்து இன்று வழக்குரைஞர்களாய் உச்சநீதி மன்றத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அறிந்து வைத்திருக்கிற... மனித உரிமை மீறல்கள் எங்கே எதிர்ப்பட்டாலும் ஓடிச் சென்று குரல்கொடுக்கிற... எளிமையும் அர்ப்பணிப்பும் மிக்க அற்புத இளைஞர்கள் பிரபுவுக்கும், பாரிக்கும் பாரிய பங்கிருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் இயங்காமற்போனாலும் அன்று தனது பங்களிப்பைச் செய்த ஆனா ரூனா அருணாசலம் தொடங்கி முடிவெய்திய அப்துல்லா பெரியார்தாசன் வரையிலும் அநேகருக்கும் அளப்பறிய பங்கிருக்கிறது. அதைப்போலவே பி.யு.சி.எல் போன்ற மனித உரிமை இயக்கங்களுக்கும் ஒருசில மார்க்சீய லெனினிய அமைப்புகளுக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது. அவ்வளவு ஏன் இப்போது சுருதிபேதம் இசைக்கிற சுபவீக்கும்கூட ஒரு காலகட்டத்தில் பங்கிருந்திருக்கிறது.

இங்கு சொன்ன பட்டியலை விட சொல்லாமல் விடுபட்ட பட்டியல் அதிகம். ஆனால் அவர்களெல்லாம் ஏன் எங்கள் பெயர்களைப் பதிவு செய்யவில்லை என்று உரிமை கொண்டாடுபவர்கள் அல்ல. அதைவிடவும்  மனித உரிமைத்தேர் இந்தளவிற்காவது நகர்ந்திருக்கிறதே என்று ஆசுவாசம் கொள்ளுகிறவர்கள்.

இதில் புதிதாக தன்னையும் இணைத்துக் கொண்டிருப்பவர்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

மூவர் மட்டுமல்ல ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என அமைச்சரவையையே கூட்டி தீர்மானித்திருப்பதன் மூலம் கடந்த காலக் களங்கங்களுக்கு ஒரு வடிகால் அமைத்திருக்கிறார்.

முகம் சுழிக்கலாம் நம்மில் சிலர். தடா தொடங்கி பொடா வரைக்கும் ஆதரித்தவராயிற்றே என்று. ஆனால் அவருக்குள்ளும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நம் அனைவரது உழைப்பும் பயன்பட்டிருக்கிறது என்றுதான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“அரசியல் லாபம்தான் இதன் அடிப்படை” என்போரும் உளர். இவர் மட்டுமல்ல இந்த ஓட்டு அரசியலில் எல்லோருமே அரசியல் லாபத்திற்காகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் நஷ்டத்திற்காகச் செயல்படுகிறேன் என்பவர் எவரும் இலர். ஆனால் அப்படி தெரிந்தே... தான் அதல பாதாளத்தில் தூக்கி வீசப்படுவோம் என உணர்ந்தே... தான் பத்திரிகைகளின் பத்தாம் பக்க மூலைக்குக் கொண்டு செல்லப்படுவோம் எனத் தெளிவாகப் புரிந்தே.. மண்டல் கமிஷனைக் கொண்டு வந்த மரியாதைக்குரிய வி.பி.சிங் அவர்கள்தான் ஓட்டு அரசியலிலும் நஷ்டத்திற்காக செயல்பட்ட ஒரே மனிதர்.

ஆக. மனிதர்கள் தவறிழைக்கும்போது தயக்கமின்றி எதிர்த்துக் குரல் கொடுப்போம். சரியாகச் செயல்படும்போது எவ்விதக் கஞ்சத்தனமும் இன்றி மனதார பாராட்டுவோம். ஏனெனில் நம்மைப் போன்றவர்கள் எதிர்கட்சிக்காரர்களல்ல. மனித உரிமையின்பாலும் மனித நேயத்தின்பாலும் அக்கறை கொண்டவர்கள்.

தமிழக அரசு சரியான முடிவுகளை எடுக்கும்போது துணை நிற்போம். தவறான முடிவுகளை எடுக்கும் போது எதிர்த்துக் குரல் கொடுப்போம்.. “தடா”. “பொடா” காலங்களைப் போலவே.

மீண்டும் சொல்வதற்கு மன்னியுங்கள் தோழர்களே... நம்முடைய இப்போதைய தேவை பொறுமையும் பொறுப்புணர்ச்சியும்தான்.

ஏனெனில் நம் அனைவரது ஒருமித்த நோக்கமும் மனித உரிமை மேம்பாடுகளை நோக்கியே.

இந்த வேளையில் உங்களுக்குக் கோபம் வரலாம். இப்படி ஒரு மிக நீண்ட பட்டியலையே வாசித்து விட்டு நம் அற்புதம் அம்மாவை விட்டுவிட எப்படி மனசு வந்தது உனக்கு? என்று.

ஓரிரு வரிகளுக்குள்ளோ... ஓரிரு பத்திகளுக்குள்ளோ அடக்கிவிடக்கூடிய வாழ்வா அவரது வாழ்வு.?

அந்தத் தாயின் குமுறலை... கண்ணீரை..

விடாப்பிடியாய் போராடும் தீரத்தை..

எழுதுவேன் அடுத்த இதழில்.

அதுவரை...

மார்ச், 2014.