சிறப்புக்கட்டுரைகள்

பாடநூல் கழகமும் இலக்கிய உலகமும்

முத்துமாறன்

புகழ்பெற்ற ஆங்கிலப்பதிப்பகங்களான பெங்குயின், ஹார்ப்பர் காலின்ஸ், ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி ரெஸ் போன்றவற்றுக்கும் தமிழ்நாடு அரசுப்பாடநூல் கழகத்துக்கும் என்ன தொடர்பு? இலக்கிய வட்டாரங்களிலும் வாசகர்கள் மத்தியிலும் ஆனந்த அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது இந்தக் கேள்விக்கான பதில்.

திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில்  சிறந்ததாகக் கருதப்படுவது பி.எஸ்.சுந்தரம் அவர்களின் மொழிபெயர்ப்பு. தொண்ணூறுகளில் வெளியாகி அச்சில் இல்லாமல் இருந்த இந்நூல் இப்போது தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் தயவில் பெங்குவின் நிறுவனத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டு உயிர்பெற்று உலவுகிறது. அதைப்போலவே கநாசுவின் மொழிபெயர்ப்பில் வெளியான நீல பத்மநாபனின் தலைமுறைகள் நாவலும். இந்த வரிசையில் தி.ஜா.வின் செம்பருத்தி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் கிடைக்கிறது. சிசு செல்லப்பாவின் வாடிவாசலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும்கூட இப்போது ஆக்ஸ்போர்ட் மறுபதிப்பாக வெளிவந்திருக்கிறது.

தமிழில் உள்ள சிறந்த நாவல்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பது, ஏற்கெனவே சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ள நூல்களை மறுபதிப்பு செய்துவருவது ஆகியவற்றில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ‘ தரமான தமிழ் இலக்கியப் படைப்புகள் ஆங்கில வாசகர்களையும் சென்றடையவேண்டும் என்பது ஒரு நோக்கம். அதே சமயம் தற்போதைய தலைமுறையைச்

சேர்ந்த, ஆங்கிலத்தில் வாசிக்கும் தமிழ் இளைஞர்கள் நவீன தமிழின் இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலமாகவாவது அணுகட்டும் என்பதே

அரசின் இன்னொரு நோக்கம்,' என்று சொல்கிறார் இந்நிறுவனத்தின் மொழிபெயர்ப்புகளுக்கான துணை இயக்குநர் சங்கரசரவணன்.

கரிசல் காட்டுப் பிதாமகர் கி.ரா. தொகுத்த கரிசல் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு 1980களில் வெளியானது. இன்றைக்கு சாகித்ய அகாதமி பெற்ற எழுத்தாளர்களான பூமணி, சோ.தருமன் உள்ளிட்ட எழுத்தாளர்கள், பா.செயப்பிரகாசம், ச.தமிழ்ச்

செல்வன், போன்றவர்கள் இளம்பருவத்தில் எழுதிய கதைகளை எல்லாம் கி.ரா.அடையாளம் கண்டு அதில் தொகுத்துள்ளார். இந்த தொகுப்பை பத்மா நாராயணன் மொழிபெயர்ப்பில் ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகம் மூலமாக வெளியிட்டுள்ளனர்.

ராஜம் கிருஷ்ணனின் சுழலில் மிதக்கும் தீபங்கள் Lamps in the whirlpool என்ற பெயரில் அழகிய ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளியாகி இருக்கிறது.

இவையெல்லாம் இப்போதைக்கு வெளியாகி இருக்கின்ற ஆங்கில மொழிபெயர்ப்புகள். மேலும் பல இலக்கியப் படைப்புகள் தயாராகிக் கொண்டுள்ளன.

2017 ஆம் ஆண்டு உதயசந்திரன் ஐஏஎஸ், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராக இருந்தபோது விதை போடப்பட்ட திட்டமே இன்று திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் மேலும் சிறப்பாக விரிவடைந்து வருகிறது. பாடநூல் கழகத்திற்கும் பன்னாட்டு பதிப்பகங்களுக்குமான இணைப்புப்பாலமாக ஆங்கில இலக்கியப் பதிப்புத் துறையில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மினி கிருஷ்ணன் இருப்பது கூடுதல் சிறப்பு.

முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் என்ற பெயரில் கலை அறிவியல் சார்ந்த நூல்கள் அடையாளம் காணப்பட்டு தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் பணி நடக்கிறது. மருத்துவத் துறை சார்ந்த Guyton & Hall எழுதிய முக்கியமான பாடப்புத்தகம் சுமார் 40 பேர் அடங்கிய தமிழார்வம் கொண்ட மருத்துவர்களால் மொழிபெயர்க்கப்படுகிறது என்பதைப் பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறார் சங்கரசரவணன்.

அண்மையில் தமிழக அரசு வெளியிட்ட 14 அறிவிப்புகளுள் ஒன்று, வ.உ.சி.யின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதத்தில் அவரது நூல்களை வெளியீட்டு, மலிவு விலையில் விற்பனை செய்வது என்பதாகும். வ.உ.சி. நினைவு நாளான 2021 நவம்பர் 19ஆம் தேதி அன்று, வ.உ.சி. எழுதிய பன்னூல் திரட்டும், திருக்குறள் உரையும் வெளியிடப்பட்டன.பேராசிரியர் வீ. அரசு தொகுத்த இந்நூலுக்கு ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அட்டைப்படம்.

திசைதோறும் திராவிடம் என்ற திட்டமானது தமிழ் இலக்கியங்களை பிற திராவிட மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதுடன் பிற திராவிட மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்ப்பதும் ஆகும். இதன்படி உவேசா கட்டுரைகள், தலித் கதைகள், தோப்பில் முகமதுமீரான் கதைகள் ஆகியவை ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன. எஸ்.ராவின் கதாவிலாசம் ஆங்கிலத்தில் வந்துள்ளது. இந்த நூல்களையும் கால்டுவெல் எழுதி பா.ரா.சுப்பிரமணியன் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த திராவிட மொழிகள் அல்லது தென்னிந்திய மொழிக் குடும்ப நூல்களின் ஒப்பிலக்கணம் என்ற நூலையும் கடந்த பிப்ரவரியில் நடந்த புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் பெரிய கவனத்தை இந்திய அளவில் பெறும் வகையில் பேரறிஞர் அண்ணா குறித்து தி இந்து தமிழ்திசை வெளியிட்ட மாபெரும் தமிழ்க்கனவு நூல் ஆங்கிலத்தில் தயாராகி வருகிறது.

இளந்தளிர் இலக்கியத் திட்டம் இன்னும் சுவாரசியம். பள்ளியில் பயிலும் இளம் சிறார்களுக்கு அழகிய படங்களுடன் கூடிய பல்வேறுகதைகள் பாடல்கள் கொண்ட நூல்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. தயாரிப்பில் இருந்த சில நூல்களைப் பார்த்தோம். வண்ணமயமான பெரிய படங்கள், வழுவழு தாள்கள், இனிமையான மொழியில் கவர்ந்து இழுக்கின்றன. ‘வாசிப்பில்

சிறார்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவதற்காக செய்யப்படும் முயற்சி இது. ச.தமிழ்ச் செல்வன், பாலபாரதி, உதயசங்கர், விழியன் உள்ளிட்ட முக்கியமான சிறார் எழுத்தாளர்களைக் கொண்ட குழு இதற்காக உழைத்து, நூற்றுக்கணக்கான கதைகளை பரிசீலித்து அதில் குறைவான கதைகளை மட்டுமே தேர்வு செய்துள்ளது,' எனக்கூறுகிறார் இந்நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அப்பணசாமி.

கலைஞரின் திருக்குறள் உரை, சுந்தரராம சாமியின் புளியமரத்தின் கதை ஆகியவை தெலுங்கு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளன. கல்கியின் பொன்னியின் செல்வன் மலையாளத்தில் டிசி புக்ஸ் சார்பில் வெளியாக உள்ளதும் இந்நிறுவனத்தின் ஏற்பாடே.

இந்நிறுவனம் புத்தகக்கண்காட்சிகளிலும் கலந்துகொண்டு நூல்விற்பனையில் ஈடுபட்டுவருகிறது. லாபநோக்கமற்ற அரசு நிறுவனம் என்பதால் விலை மலிவு. சமீபத்திய சென்னை புத்தககாட்சியில் மட்டும் பதினோரு லட்சரூபாயைக்கடந்து விற்பனை ஆகியிருக்கிறது. இத்தனைக்கும் பள்ளிப் பாடநூல்களை விற்பனைக்கு வைக்காமல், மற்ற வெளியீடுகளின் மூலமே இது நிகழ்ந்துள்ளது.

ஏப்ரல், 2022