சிறப்புக்கட்டுரைகள்

பிரிவோம் சந்திப்போம்

அந்திமழை இளங்கோவன்

ஏடிஎம்மி-ல் செருகிய கார்டில்

பணமில்லையென்று

துண்டுச் சீட்டு வந்த பொழுது

கையில் இல்லை

வங்கியில் இல்லை

உண்டியலில் கூட இல்லையென

பணமில்லாத தருணங்கள்

அநேகர் வாழ்வில் வந்து போகும்...

இவனது பிரச்னை விநோதமானது

மென்மையான முத்தங்கள் தந்த

உதடுகளில் விஷம் தோய்ந்திருந்ததென்ற

பொய்க்குற்றச்சாட்டின் போது...

ரகசியமாக நம்பிப் பகிர்ந்த

அந்தரங்கங்களை

பொது வெளியில் போட்டு

அசிங்கப்படுத்திய போது

செய்யாத குற்றத்திற்கு

தண்டனை வழங்கப்படும் போது...

நன்மையை பரிசாக பெற்றவர்கள்

அதை தீமையென்று

பிரகடனப்படுத்தும் போது

சொல்லாத சொற்களைச்

சொன்னேன் என்ற பொழுது...

அக்னி வார்த்தைகளைப்

பிரியமானவர்கள் அள்ளி வீசும் போது...

நீரில் மூழ்கிக் கொண்டிருந்தவர்களை

அபாயத்தை யோசிக்காமல்

காப்பாற்றிய பின்

கரையேறியவர்கள் கல்லெறியும் போது...

பிரிவதற்கான ஆயத்தங்களில்

இணைந்திருந்த எல்லா பொழுதுகளிலும்

நீ

தவறிழைத்தாய் என்று

அம்புகள் வீசப்படும் போது

இவனது பிரச்னை விநோதமானது.

இவன்

வார்த்தைகளின்றி

நிராயுதபாணியாக நிற்கும் தருணங்கள்.

பிரிவின் மனோநிலையைச் சொல்லும் மேற்காணும் எனது கவிதையோடு முன்னுரையை முடித்துவிட நினைத்தேன். ஆசிரியர் குழு ஒப்புக் கொள்ளாததால் தொடர்கிறேன்.

பிரபல நடிகர் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி கசிந்தவுடன் தமிழகம் உயிர் போற பிரச்னைகளை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, நடிகரது விவாகரத்து பற்றி விவாதித்தனர். அப்போது தமிழகத்தின் பிரபல வார இதழ் நடிகர் ஏற்கெனவே பத்தாண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்திருந்த முதல் மனைவியைப் பேட்டி காண ஒரு சீனியர் பெண் பத்திரிகையாளரை அனுப்பியது. நான் அப்போது குடியிருந்த நகரில் தான் அந்த பெண் இருந்தார். நண்பரான பெண் பத்திரிகையாளரை பேட்டிக்கு அழைத்துச் சென்று உடனிருந்தேன், “நடிகரைப் பற்றி கோபமாக பேச ஆரம்பித்த முதல் மனைவி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்'. சுமார் மூன்று மணிநேரம் நீண்ட பேட்டியை முடித்துவிட்டு நண்பரை எனது வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

மதிய உணவை முடித்து விட்டுப் பேச அமர்ந்த போது நடிகரின் முன்னாள் மனைவி பேசியது பற்றி எனது பார்வையை கேட்டனர், நடிகரின் மேல் முன்னாள் மனைவிக்கு இன்னும் இதயத்தின் ஆழத்தில் காதலிருக்கிறது. அவரை விரும்பும் பெண்கள் மீது பொறாமை இருக்கிறது. நான் பிரிந்தது சரிதான் என்பதை தொடர்ந்து நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் என்று நான் சொன்னதும் எனது மனைவியும், நண்பரும் எனது கருத்தை விவாதப் பொருளாக்கினர்.

பிரியத்துடன் அன்பைக் கொட்டும் ஆணோ/ பெண்ணோ தனது இணையோடு மட்டும் தான் அன்போடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. பிரியம் என்பது ஓர் இயல்பு, அதைத் தான் எதிர்ப்படும் எல்லோர் மீது இல்லாவிட்டாலும், பலர் மீது தெளிப்பது அன்பு நிறைந்தவர்களின் சுபாவமாக இருக்கும். இதை சந்தேகக் கண்ணோடு பார்த்தால் சிக்கல்.

சந்தேகம், பொறாமை, Excessive Possesiveness, நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் நீ என்னை அனுசரித்துப் போக வேண்டும், Abuse ஆகிய ஐந்து காரணங்களால் தான் அநேக காதல்கள் அல்லது திருமண வாழ்வு முறிகிறது. பெற்றோர்களையும் ஸ்மார்ட் போனையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம்.

பெற்றோரிடமிருந்து பிரிந்து போகும் பிள்ளைகளின் மனமாற்றம் மிகவும் பெரிய மன வருத்தத்தைக் கொடுப்பதாகவும், அதுவே பெற்றோரிடன் உடல் / மனநிலையை விஷயமாக மாறுகிறது. பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டும் பெற்றோரும் இந்த பிரிவிற்கு பல நேரங்களில் காரணமாகிவிடுகிறார்கள்.

சிஷ்யனாக, வாரிசாக வார்த்து எடுக்கப்படுபவர்கள் எதிர்பாராமல் பிரிந்து (அ) தன்னை விட உயர்ந்த இடத்திற்குப் போய் தன்னை அசிங்கப்படுத்தியது தான் வாழ்வின் மிகப் பெரிய பிரிவுத் துயர் என்று இந்தியாவின் இரண்டு முக்கிய அரசியல் தலைவர்கள் அந்தரங்கமாகப் பகிர்ந்து கொண்டது எனக்கு தெரியும். இருவரில் ஒருவர் காலமாகிவிட்டார், மற்றவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அநேகருக்கு நட்பின் பிரிவு மிகவும் துயரமானது. மனைவி / காதலியின் கட்டாயம் காவு வாங்கும் நட்புகள் பெருகி வரும் காலமிது. தேவை முடிந்த பின் விட்டுப் போகும் நட்புகளைப் பற்றிக் கவலைப்படுவது அநாவசியமானது.

தேவைக்கு காலைப் பிடித்து, தேவை முடிந்த பின் வாய்க்கு வந்தபடி தூற்றும் நபர்கள் எந்த அதிகார பீடத்தில் அமர்ந்தாலும் அவர்களைப் போற்றுவது தவறானது.

சில உறவுகளை இழக்கக் கூடாது, சில உறவுகளை இழந்தால் பரவாயில்லை.

பிரியும் போது வலி தராமல் பிரிபவர்களை இழக்கக் கூடாது. விலகிப் போனாலும் வலியப் போய் ஒட்டிக் கொள்ளலாம்.

ஏப்ரல், 2023 அந்திமழை இதழ்