சிறப்புக்கட்டுரைகள்

மென்பொருளை உருவாக்க கைப்பொருளை இழக்கிறார்கள்

பி. என். எஸ். பாண்டியன்

இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழ்மொழி, இருபது ஆண்டுகள் வரலாறு கொண்ட இணையம் விடுக்கும் சவால்களுக்காக தன்னைக் கட்டமைக்கும் கட்டாயத்தில் உள்ளது. தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்ளும் மொழி மட்டுமே வளர்ச்சியடைய முடியும் என்கிற சூழலில்தான் புதுச்சேரியில் நடந்த உத்தமம் அமைப்பின் 13-வது தமிழ் இணைய மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. உலகம் தழுவிய இவ்வமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கடந்த 12 ஆண்டுகளாக பல நாடுகளில் உலக இணையத்தமிழ் மாநாட்டினை நடத்தி வருகிறது.

புதுவை பல்கலைக்கழக பண்பாட்டு வளாக அரங்கில் தொடங்கிய இந்த மாநாட்டுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்க உத்தமம் அமைப்பின் தலைவரும், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான வாசு. அரங்கநாதன் வரவேற்றார். சுவிட்சர்லாந்து பல்கலைக்கழக பேராசிரியரும், ஆய்வரங்க குழு தலைவருமான கல்யாணசுந்தரம் நோக்க உரையாற்றினார்.

மாநாட்டில், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் அனந்தகிருஷ்ணன், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன பேராசிரியர் ராமமூர்த்தி உள்பட பலர் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டில் அறிஞர்கள் 130 பேர் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.  தமிழ் இணையத்தில் ஏற்பட வேண்டிய மாறுதல்கள் குறித்த கருத்தாடல்களுக்கு நடுவே, கணினி, மடிக்கணினி, அலைபேசி, போன்றவற்றில் பேச்சுத்தமிழை எழுத்துத்தமிழாகவும், எழுத்துத்தமிழை பேச்சுத்தமிழாகவும் மாற்றுவது எப்படி என்பது பற்றி முக்கியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகவும் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டில் பேசிய பாரத் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ,  “சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. ஆனால் இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியாக இல்லை. தமிழ்நாட்டில், தமிழர்கள் தமிழைத் தமிழாக பேசுவதில்லை. ஆங்கிலம் கலந்து பேசுகின்றனர். இப்படி பேசினால், தமிழ் மொழியை எப்படி வளர்க்க முடியும்? தமிழ்நாட்டில் பெயரளவில் ஆட்சி மொழியாக மட்டும் தமிழ் இருந்தால் எந்த பயனும் இல்லை. அரசு அலுவலகங்களில் தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும். பொது இடங்களிலும், வீடுகளிலும் தமிழ் மொழி பயன்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு அரசின் பங்களிப்பு அவசியம் தேவை. தமிழ் மென்பொருள்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் செல்வந்தர்களாக உள்ள தமிழர்கள், தமிழ் இணைய மென்பொருள் புழக்கத்தில் கொண்டு செல்ல உதவலாம்” என்றார்.

மாநாட்டில் பேசிய பல அறிஞர்கள் இணையத்தில் தமிழ்மொழிக்கான வளர்ச்சிக்கு ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுக்கு போதிய பொருளாதார சூழல் இல்லை என்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டனர். மென்பொருளை உருவாக்க கைப்பொருளை இழக்க வேண்டிய சூழல்தான் தமிழ் இணையம் தொடர்பான ஆய்வுகளில் தேக்க நிலையை ஏற்படுத்துகிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டனர்.

உத்தமத்தின் பொதுக்குழு உறுப்பினர் சிங்கப்பூரைச் சேர்ந்த சுப்ரமணியம், “இம்மாநாட்டில், அறிஞர்களின் கட்டுரைகள் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக டெக்ஸ்ட் டூ ஸ்பீச், ஸ்பீச் டூ டெக்ஸ்ட் என்கிற விஷயம். மற்றபடி தமிழ் ஓசிஆர் போன்றவற்றில் முன்னேற்றம் வந்துள்ளது. ஆய்வுக்கட்டுரைகள் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டுமானால், தமிழ் ஆய்வாளர் தன்னுடைய பணத்தை செலவு செய்யும் நிலை உள்ளது. உதாரணமாக தமிழ் சொல் திருத்தி போன்றவற்றை ஒருவர் பத்தாண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். இதற்காக சொந்த பணத்தை செலவிட்டு வருகிறார். இதற்கு நிறுவனங்கள் நிதியுதவி வழங்கவேண்டும். ஒரு மென்பொருள் முழுமையாக வந்துவிட்டால் அதனை வணிகரீதியாக கொண்டு செல்ல முதலீடு செய்ய ஆட்கள் முன்வரவேண்டும். தமிழ் இணையத்தில் வரக்கூடிய மென்பொருட்களை தமிழ் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் இணைய செயல்பாட்டில் அரசின் பங்கு முக்கியம்.” என்றார்.

மேலும்,  “தமிழ்நாட்டில் அரசு கொடுக்கும் மடிக்கணினியை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். தமிழ்ச் செயலிகள் நிறைய வந்துள்ளன. கையடக்க செல்பேசிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்கிலீஷ் என்பதை தவிர்க்க வேண்டும். தமிழில் தட்டச்சு செய்யவேண்டும்” என்பதையும் வேண்டுகோளாக வைக்கிறார்.

தமிழ் இணையத்தில் யூனிகோடு பயன்பாடு குறித்து சென்னையைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் ராமகிருஷ்ணன் அந்திமழையிடம் பேசுகையில் “2009ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட ஆணைப்படி எந்தவிதமான வலைத்தள பரிமாற்றத்திற்கும் ஒருங்குறி என்கிற யூனிகோட் எழுத்துருவை பயன்படுத்த வேண்டும் என்றும், அச்சுக்கு பல்வேறு வகையான எழுத்துருக்களை பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால், யாரோ சிலருடைய தனியார் குறியேற்றங்களை பயன்படுத்தும் நிலை உள்ளது. பல அரசின் வலைத்தளங்கள் ஒருங்குறி பயன்படுத்தாமல் உள்ளன. பல வலைத்தளங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. தமிழில் இல்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் தங்கள் வலைத்தளங்களில் யூனிகோடு எழுத்துருக்களை பயன்படுத்திட வேண்டும். இதுதான் கணிணி தமிழை வளர்க்கும்.” என்றார்.

தமிழ் இணைய ஆய்வுகளின் அடுத்தக்கட்டம் என்ன?

உத்தமம் அமைப்பின் மலேசிய தலைவர் சி.மா.இளந்தமிழ், 56 பேர் கொண்ட குழுவுடன் மலேசியாவில் இருந்த வந்திருந்தார். அவரிடம் பேசினோம்.

“உலகம் முழுவதும் தமிழுணர்வு இருந்தாலும் நாம் பயன்படுத்தும் கருவிகளில் தமிழ்மொழி பயன்பாடு அவசியம். மலேசிய தமிழர்கள் திறன்பேசி(குட்ச்ணூt ணீடணிணஞு) வாங்கும் போது, தமிழ்ச் செயலி இருக்கிறதா? அதனை பயன்படுத்தமுடியுமா? என்று கேட்டுத்தான் வாங்குகிறார்கள். நாங்கள் வீடுகளில் தமிழில்தான் பேசுகிறோம். கையடக்க கருவிகளில் தமிழை இலகுவாக பயன்படுத்துவது குறித்து எதிர்கால தலைமுறை சிந்திக்க தொடங்கியுள்ளது. இது முக்கியமானது” என்றார்.

இளங்கோ தமிழ் மென்பொருள்களை உருவாகியிருக்கும் கேட்க்ராப் நிறுவனத்தைச் சேர்ந்த இளங்கோவன், “ ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரிய ஊடகமாக  உருவாகிவருகின்றன.    இன்னும் கொஞ்சநாளில் கிராமங்கள் முழுவதும் அவை போய்ச்சேர்ந்துவிடும். இதில் தமிழைக் கொண்டுவருவதில் சில சிக்கல்கள் உள்ளன. அதனை ஆராய்ந்து தீர்க்கும் முயற்சியில் உள்ளோம். பேசினாலே தமிழை தட்டச்சு செய்யும் நிலை வரப்போகிறது. ஆங்கிலத்திற்கு இணையாக எல்லாவித செயலிகளும் உருவாகும். அப்படி உருவானால்தான் நாம் தமிழை தொழில்நுட்பரீதியாகவும் வளர்க்க முடியும்” என்கிறார்.

“உலகில் பல கணினி வல்லுநர்கள் பல்வேறு தமிழ் மென்பொருட்களை உருவாக்கி வருகிறார்கள். ஆனால் அவை பெரும்பாலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதில்லை. இதைச் செய்ய அரசும் கல்விநிறுவனங்களும் முன்வரவேண்டும். இன்னொரு முக்கிய விஷயம் இந்த மென்பொருட்களை உருவாக்கும் நிபுணர்கள் கடும் உழைப்புக்குப் பின் உருவாக்குவதால் அதற்கான பொருளீட்டலை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இணைய ஆர்வலர்கள் இந்த மென்பொருட்கள் இலவசமாகத் தரப்படவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த இடத்தில் அரசுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகப் படுகிறது. இத்துடன் உலகெங்கும் இருக்கும் தமிழ் மென்பொருள் வடிவமைப்பு வல்லுநர்களை ஒருங்கிணைக்க ஒரு பன்னாட்டு வல்லுநர் குழுவும் தேவை. அது ஒரு பத்தாண்டு செயல் திட்டத்துடன் இயங்கவேண்டும். அதுவும் ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒருமுறையும் என்ன நடந்திருக்கிறது என்பதை  மீளாய்வு செய்து முன்னோக்கி எடுத்துச் செல்லவேண்டும் என்பதும் இந்த மாநாட்டில் பேசப்பட்டது” என்கிறார் இந்த மாநாட்டின் உள்நாட்டுக் குழுத் தலைவரான மு.இளங்கோவன்.

மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் வெளியான கட்டுரைகள் இணையத்தமிழ் பற்றி உலகெங்கும் நடக்கும் ஆய்வுகள், கருத்தாக்கங்கள் பற்றி விளக்குகின்றன. ஆய்வுமலரின் முன்னுரையில் கான்பூர் ஐஐடி தலைவர் பேரா.அனந்தகிருஷ்ணன்,“வெள்ளம்போல் தொடர்ந்துவரும் எண்ணிம நுட்பங்களின் மாற்றங்களும் ஏற்றங்களும் மலைக்க வைக்கும் கருவிகளின் வேறுபாடுகளும் நாம் இன்னும் செய்யவேண்டியவை எவ்வளவோ என்பதைக் காட்டுகின்றன” என்கிறார். உண்மையான செய்தி!

ஆய்வுக்கட்டுரைகளீல் மேலும் கவனம் செலுத்தப்படும்

உத்தமம் அமைப்பின் செயல் இயக்குநர் தவரூபன் இலங்கையைச் சேர்ந்தவர். அங்கு மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறார். அவரிடம் மாநாடு முடிந்த பின் பேசினோம்.

“இது ஓர் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கும் மாநாடு. இங்கு குறிப்பிட்ட முடிவுகள் எடுக்க இயலாது. அடுத்த மாநாடு சிங்கப்பூரில் நடக்க இருக்கிறது. அத்துடன் மொபைல் செயலிகள்  தொடர்பான தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைக்க இருக்கிறோம். இலங்கையைப் பொறுத்தவரை தற்போது இருக்கும் உள்நாட்டுச் சூழலில், இணையத்தில் தமிழ் வளர்ச்சி பற்றி பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இணையத்தின் மூலமாக பேச்சலர் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பு முழுக்க தமிழில் நடத்தப்படுகிறது. அதற்கு இணைய வழிக் கட்டுப்பாட்டாளராக நான் செயல்படும் வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. இதுபோல பலவிஷயங்கள் அங்கே நடக்கின்றன. இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ஆங்கிலக்கலப்புடன் ஊடகங்களும் மக்களும் தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் காண்கையில் கவலையாகத் தான் இருக்கிறது. இலங்கையில் தமிழ் ஊடகங்கள் பெரும்பாலும் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்துவதைக் காணலாம்.

இது கணினியில் தமிழை உள்ளிடுவதைத் தாண்டி, நாம் இன்னும் அதிகப்படியாக கையடக்க செல்பேசிக் கருவிகளின் செயலிகளில் தமிழை உள்ளிடுவது பற்றிக் கவனம் செலுத்தவேண்டிய நேரம். இது இன்னும் வேகப்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்த மாநாடு கவனப்படுத்தி உள்ளது.

மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் பல கட்டுரைகள் பழைய ஆய்வுகளையே திரும்ப முன்வைப்பதாக இருந்தன. விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக இல்லை என்பதையும் கவனித்தோம். அடுத்த மாநாடுகளில் இதில் மேலும் கவனம் செலுத்தப்படும்.”

அக்டோபர், 2014.