சிறப்புப்பகுதி

ஆதாயம் விரும்பாத களப்போராளி!

கவிதாபாரதி

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முனைகிறார்கள்... ‘ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேய நீதிபதிகளை மை லார்டு என்றுதான் வழக்கறிஞர்கள் அழைக்கவேண்டிய நடைமுறை இருந்தது. இன்னும் நாம் நீதிபதிகளை மை லார்டு என்றே அழைக்கிறோம், அது காலனியாதிக்க நடைமுறை, இதை மாற்றுவோம்’ என்பதே முன்மொழியப்பட்ட தீர்மானம்.

ஏறக்குறைய எல்லோரும் அதனை ஏற்றுக்கொண்ட சூழலில், ஒரு குரல் எழுந்தது. ‘வேண்டாம், இன்னும் கொஞ்ச காலத்துக்கு இதே நடைமுறை இருக்கட்டும்..’ இப்படி எதிர்க்குரல் எழுப்பியவரை நம்பமுடியாமல் பார்த்தனர் அங்கிருந்த வழக்கறிஞர்கள். காரணம், அந்தக் குரலை எழுப்பியவர் சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் போராடுகிற பகுத்தறிவாளர் வழக்கறிஞர் அருள்மொழி.

‘ஆங்கிலேய நீதிபதிகளை மைலார்டு என்று அழைத்தோம். நாட்டின் விடுதலைக்குப் பிறகு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே நீதிபதிகளாகத் தொடர்ந்தார்கள். அவர்களையும் மைலார்டு என்றுதான் அழைத்தோம். இப்போதுதான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் நீதிபதிகளாக ஆகியிருக்கிறார்கள்.

மைலார்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். அவர்களும் கொஞ்சநாளைக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மைலார்டு என்று அழைக்கட்டுமே..’ உறுதியாகச் சொன்னார் அருள்மொழி.

இன்றும் அந்த நடைமுறை தொடர்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த நீதிபதிகள் இன்னும் மைலார்டு என்றே விளிக்கப்படுகிறார்கள்.

இவர்தான் அருள்மொழி. திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர். நாடறிந்த பேச்சாளர், இனம், மொழி, சமூகநீதிக்காக அயராது குரல்கொடுக்கும் களப்போராளி.

அருள்மொழியின் தந்தை புலவர் அண்ணாமலை, இப்போதைய அரியலூர் மாவட்டத்திலுள்ள வெள்ளூர் என்னும் ஊரில் பிறந்தவர்.

அண்ணாமலைக்கு ஆசானாக இருந்து பெரியார் கருத்துகளை ஊட்டியவர் தமிழ் மறவர் பொன்னம்பலனார் என்னும் பெரியார் பெரும்தொண்டர். பின் அவர் கரந்தை தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டயப் படிப்புக்குச் சேர்ந்தார். அங்கு துணைமுதல்வராக இருந்த புலவர் நா.இராமநாதன் அவர்களின் வழிகாட்டுதல் கிடைக்கிறது. இராமநாதன் பாரதிதாசனின் நண்பர், அவரின் பாடல்களை காலவரிசையில் தொகுத்தவர். அவர்தான் பெரியாரையும், பாரதிதாசனையும் இரு கண்களாகக் கருத அண்ணாமலைக்குக் கற்றுத்தந்தவர்.

பின்னர் சேலத்தில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த அண்ணாமலை தன் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். மகிழ்நன், தேன்மொழி, இளவழகன், மான்மொழி இந்த வரிசையில் கடைசி மகளுக்கு அருள்மொழி என்னும் பெயரைச் சூட்டினார். தன் குழந்தைகளை மட்டுமன்றி மனைவியையும் பெரியாரின் பேச்சுகளைக் கேட்கச்செய்தும், விடுதலை முதலிய பத்திரிகைகள், சுயமரியாதைப் பிரசுரங்களையும் படிக்கச்செய்தார். அந்தக் குடும்பத்தில் அனைவரும் பகுத்தறிவாளர்களாகத் திகழ்ந்தனர். அவர்களும் பெரியாரோடு, பாரதிதாசனையும் நேசித்தார்கள்

இப்படி வளர்ந்த அருள்மொழி, மழலை மாறாத வயதிலேயே பாரதிதாசன் பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவராகத் திகழ்ந்தார். மூன்று வயதிருக்கும்போதே அவரை சேலத்தில் பெரியார் முன்னிலையில் மேடையேற்றி பாவேந்தர் பாடல்களைச் சொல்ல வைத்தார்கள். அதுதான் அவரது முதல்மேடை. அதன்பிறகு 1979-இல் பெரியார் நூற்றாண்டு விழாவில் அருள்மொழி பேசினார். அதைக்கண்ட ஆசிரியர் அய்யா வீரமணி ஈரோடு, தஞ்சாவூர் எனப் பரவலாக பெரியார் பிஞ்சுகள் என்னும் அமைப்பின்மூலம் பேச்சாளராகக் கலந்துகொள்ள வைத்தார். இப்படியாக அருள்மொழி பேச்சாளராகவும் இயக்கவாதியாகவும் வளர்ந்தார்.

சேலம் கலைஞர் கருணாநிதி மகளிர் கலைக் கல்லூரியில் படித்தபோது மாணவர் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடிநீர்த் தொட்டி, சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகளைக் கோரி பல முறை கோரிக்கைவிடுத்தும் யாரும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. அந்த நிலையில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஏற்காடு செல்வதாகத் தகவல் கிடைத்தது. அருள்மொழி தலைமையிலான மாணவிகள் ஒரு திட்டம் தீட்டினர். கல்லூரி மாணவிகள் சார்பாக அவர் செல்லும் சாலையில் அவருக்கு வரவேற்பு கொடுப்பதாக அனுமதி பெற்றனர்.

திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரை வரவேற்பதுபோல அவரிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் மனுவைக் கொடுத்துவிட்டனர். தங்கள் கல்லூரியின் குறைகளை நேரில் வந்து பார்வையிடும்படி அவரை வற்புறுத்தினர். நேரமின்மை காரணமாக எம்.ஜி.ஆர் அவற்றைப் பார்வையிட வரவில்லை; எனினும் சில நாள்களிலேயே அக்குறைகளை நிவர்த்தி செய்து கொடுத்தார். இதனால் எம்.ஜி.ஆரை வழிமறித்துச் சாதித்தவர் என சேலம் முழுவதும் அருள்மொழியின் பெயர் பரவியது.

தேர்தலில் போட்டியிடும் ஏதாவது கட்சியில் சேர்ந்திருந்தால், ஏதாவது அதிகாரம்மிக்க பொறுப்புகளுக்கு வரும் எல்லா தகுதிகளும், வாய்ப்புகளும் இருந்தாலும் பெரியாரின் சுயமரியாதையையும், சமூகநீதியையும் பரப்பும் திராவிடர் கழகப் போராளியாகவே ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான சொந்த ஆதாயமும் இல்லாத களப்போராளியாகவே செயல்படுகிறார் அருள்மொழி.

நம் அரசியல், பண்பாடுகளைப் பற்றி எதுவும் அறியாத இன்றைய தலைமுறையை எதிர்கொள்வதில் பெரியாரிஸ்ட்டுகளுக்கு இருக்கும் சவால்களைப் பற்றிய உரையாடலில் பின்வருமாறு கூறினார் அருள்மொழி.

“தந்தை பெரியாருடைய உழைப்பு, திராவிட இயக்கங்கள் உருவாக்கிய சமூக மாற்றம், சமூக நீதி அப்படிங்கிற அந்தப் போராட்டம் இதையெல்லாம் வச்சு படிச்சு நல்ல நிலைமைக்கு வந்த, இன்றைக்கும் உயர்ந்த இடங்களில் இருக்கிறவங்கள்ல சிலர் மட்டும் இந்த வரலாற்றை உண்மையாக நன்றியோடு நினைவுகூர்கிறார்கள்.

இதுல முன்னேறிய பலர் அதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். ஆனா அப்படித் தயங்குகிற சமூகம் வரலாற்றை மறுக்கிற சமூகமாக இருக்கும். நாம எப்படி அடிமைப்பட்டோம்? எதனால மாறினோம்? எப்படி முன்னேறினோம்கறத மறந்துட்டோ இல்ல அதை ஒத்துக்க விரும்பாமலோ, இன்னைக்கு இருக்கிற அரசியல் காத்துல ஏதோ ஒன்று நமக்கு சாதகமா அடிக்கும்னு நினைச்சோ இத அடுத்த தலைமுறைக்கு சொல்லாம விட்டா என்ன ஆகும்?

அதுதான் இன்னைக்கு நாம தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த சமூக நீதியால பலனடைந்த பல குடும்பங்கள்ல வளருகிற பிள்ளைகளுக்கு இதைப் பத்தி எதுவுமே தெரியல. ஏன் இன்னைக்கு வரைக்கும் அரசுத் திட்டங்களால் பலன் பெறுகிற கல்வியிலும் சரி, பல வகையான வேலை வாய்ப்புகளும் சரி, முன்னேற்றத் திட்டங்களில் அவ்வளவு பலனடைகிற குடும்பங்கள் எதுக்காக இதைச் செய்யணும்? அரசுப் பள்ளி ஒண்ணு கட்டியிருக்காங்க, கல்லூரி கட்டியிருக்காங்க.. உனக்கு அறிவு இருந்தா நீ படிக்கப் போற இல்லனா நீ வேற வேலை செய்யப் போற. ஆனா இல்ல நீ வா நீ படி உனக்கு அதை கொடுக்கிறோம், இந்த திட்டம் இருக்கு, அந்த திட்டம் இருக்குன்னு அவ்வளவு உதவி மேல உதவிகளைச் செய்து நம்மள எதுக்காகப் படிக்க வைக்கிறாங்க? இதனால அரசுக்கு என்ன லாபம்? அப்படின்னு யோசிக்கணும் இல்லையா?

நம்முடைய முன்னேற்றத்தை இந்த அரசு முன்னெடுக்குதுன்னா என்ன காரணம்? இது அரசினுடைய கொள்கை. அது திராவிடத் தத்துவம், திராவிட இயக்கத்தோட கொள்கை. அதுதான் தந்தை பெரியாரோட கொள்கை. எல்லாரும் படிக்கணும், சாதியினால யாருக்கும் கல்வி மறுக்கப்படக்கூடாது. அப்படி ஒடுக்கப்பட்ட மக்கள், கல்வி மறுக்கப்பட்ட மக்கள் முன்னுரிமை கொடுத்து படிக்க வைக்கப்படணும். அவங்களுக்கு எல்லா இடத்திலும் முன்னுரிமை கொடுக்கணும் அப்படிங்கறது இயக்கத்தினுடைய கொள்கை.

அப்ப இந்த கொள்கையாலதான் நமக்கு இது கிடைச்சது அப்படிங்கறத பத்தி அவங்களுக்கு எந்த உணர்வும் இல்லை.

அதுமட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களில் இருக்கிற பலருக்கு இவங்க இட ஒதுக்கீட்டினால பலன் பெறுவதைப் பற்றிய அறிவே இல்லை. அவங்க என்ன சொல்லுறாங்கன்னா, எல்லா சலுகைகளும், வாய்ப்புகளும் எஸ்சி-க்குப் போயிடுச்சு, அவங்க வந்து எங்களுக்குக் கிடைக்கவேண்டியதை எல்லாம் பறிச்சுக்கிட்டாங்க..அப்படின்னு பேசுவாங்க.

ஏற்கெனவே இதன்மூலம் படிச்சு, வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்க்கைத் தரத்தில் ஓரளவு உயர்ந்த பெற்றோர், பசங்கள உட்காரவச்சுப் பேசணும்.., ‘உன்னுடைய மார்க் என்ன? நீ வந்து ஓபன் காம்பெட்டிஷன்ல வந்தியா? ஓபன் காம்பெட்டிஷன் கட்-ஆஃப் என்ன?' அப்படிலாம் கேட்ட பிறகுதான், 'இல்ல நான் வந்து அடுத்ததுல...' அப்படின்னு சொல்லுவாங்க. 'அடுத்ததுலன்னா அது பிசி கோட்டாதானே (BC Quota), ரிசர்வேஷன்தானே? அப்ப நீயும் ரிசர்வேஷன்லதானே வந்திருக்க? உனக்கு மேல ஓபன் கோட்டாவில இருக்கிறதைவிட உன் மார்க் கம்மிதானே? அப்போ நீயும் வாங்கி இருக்க, நீ வந்து இட ஒதுக்கீடு அவங்களுக்குத்தான் இருக்குங்கிற மாதிரி சொல்றியேப்பா' அப்படின்னு கேட்டு அவங்களுக்கு இந்த உண்மையைப் புரிய வைக்க வேண்டியிருக்கு.

அதே மாதிரி இந்த சமூக நீதி கோட்பாடுகளால் பலன் பெற்ற பலருக்கு வாழ்க்கை வசதிகள் உயர்ந்ததும் அவங்களும் வைதிக உயர்சாதி்களைப் போல சாஸ்திர சம்பிரதாயங்களைப் பின்பற்றும் மோகத்துல அலையறாங்க.

இது அவங்களை மேலும் மேலும் மதத்தின் பக்கம் கொண்டுபோய் தள்ளுது. மதம் மறுபடி அவங்களை எங்க தள்ளும்னா நீ எல்லாம் படிக்காதேங்கிற இடத்துக்குத்தான் கொண்டுவரும். இந்தச் சூழல் புரியாம இப்படி பண்றாங்க. அவங்களுக்கும் அவர்களால் வளர்க்கப்பட்ட இன்றைக்கு அரசியல் தெரியாமல் வளர்ந்திருக்கிற இளைஞர்களுக்கும் இந்த வரலாற்றைக் கொண்டுபோய் சேர்க்கிறது ரொம்ப கடினமான வேலை, ரொம்பப் பெரிய வேலை, ஆனால் செய்தே ஆக வேண்டிய கட்டாயமான வேலை..

அறிவாளிகள் கண்டிப்பாகக் குழுக்களாக அமைந்து செயல்படுத்தணும். ஒவ்வொருவருக்கும் என்னென்ன தொழில்நுட்பம் தெரியும்? என்னென்ன கலைகள் தெரியும்? எப்படியெல்லாம் அவங்க குழந்தைகளோடு உரையாட முடியும்? அதற்கான எளிய வடிவங்களை வடிவமைத்து உருவாக்கி அவற்றை இந்த அறிவியல் கருவிகள் மூலமாக குழந்தைகள்கிட்ட பரப்பணும்.

அவங்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்தணும். அதையெல்லாம் அறிவியல் ஊடகங்கள் மூலமாக முன்னெடுக்கணும். அதுக்கு தனித்தனிக் குழுவாச் செயல்படணும். அப்படியெல்லாம் நாம இப்ப திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கினால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாம் விரும்புகிற மாற்றத்தை உருவாக்க முடியும்...’’. கவனிக்கவேண்டிய கருத்து!