சிறப்புப்பகுதி

இந்தியர்களின் பெருமையா?

இரா. கௌதமன்

இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக். சமீப காலத்தில் இந்தியர்கள் மட்டுமல்ல உலகமே அதிகம் உச்சரித்த பெயர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், பகவத் கீதை மேல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்று நாமும், ரிஷியின் முன்னோர்கள் வாழ்ந்த பஞ்சாப் பகுதி இப்போதைய பாகிஸ்தானில் உள்ளது அதனால் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இந்து என்று பாகிஸ்தானும் சொந்தம் கொண்டாடுகிறது.

முதன் முதலாக கிறிஸ்தவர் அல்லாத குடியேறி ஒருவர் அதுவும் இங்கிலாந்தின் காலனி நாட்டிலிருந்து வந்தவர் இன்று வெள்ளையர்களை ஆளப் போகிறார் என்று ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஆராதிக்கின்றன. இதில் எவ்வளவு உண்மை உள்ளது, உண்மையிலேயே ரிஷியை இங்கிலாந்தில் ஏற்றுக் கொண்டுள்ளார்களா அல்லது கடினமான பணி என்பதால் இவருக்கு கொஞ்சகாலம் ‘அவுட்சோர்ஸ்' செய்துள்ளார்களா எனப்பார்க்கலாம்.

ரிஷியின் தந்தை வழி பாட்டனார் ராம்தாஸ் சுனக் 1935 இல் சுதந்திரத்திற்கு முன்பு அதாவது இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பான இந்தியாவிலிருந்த குஜ்ரன்வாலா பகுதியிலிருந்து கென்யாவின் நைரோபிக்கு குடி பெயர்கிறார். ஏறக்குறைய அதே சமயத்தில் அவரின் தாய் வழி பாட்டனார் தான்சானியாவிற்கு வருகிறார். ஆனால் குஜ்ரன்வாலா பகுதி தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது. அதனால் இந்தியா - பாகிஸ்தான் இருவரும் ரிஷியை சொந்தம் கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை. அதன் பிறகு ரிஷியின் பெற்றோர் யஷ்வீர், உஷா இருவரும் 1966 இல் இங்கிலாந்தில் குடியேறுகிறார்கள். 1980 மே 12 ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத் ஹாம்டன் நகரில் ரிஷி பிறக்கிறார். அதனால் இந்தியா - பாகிஸ்தான் போல ஆப்பிரிக்காவின் கென்யா, தான்சானியா நாட்டினரும் பெருமை கொள்ளலாம்.

அடுத்ததாக ரிஷி சுனக் எப்படி இங்கிலாந்தின் பிரதமர் பதவியை அடைந்தார் என்று பார்ப்போம். போரிஸ் ஜான்சன் பதவி விலகலுக்கு அடுத்தபடியாக லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். இதில் வெற்றிபெற்ற லிஸ் ட்ரஸ் செப்டம்பரில் இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்கிறார். ஆனால் பதவி ஏற்று முழுதாக இரண்டு மாதங்கள் கூட அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதற்கு சொல்லப்படும் காரணங்கள், தேர்தலில் தனக்காக வேலை செய்தவர்களை மட்டுமே அவர் அரசாங்கத்தில் வைத்துக் கொள்ள விரும்பியதும், பதவியில் அமர்ந்தவுடன் திறமையான ஆளுநர் மற்றும் உள்துறை செயலரை நீக்கியதும், மோசமான பொருளாதார கொள்கைகளும்தான் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். லிஸ் ட்ரஸ் பதவி விலகியவுடன் சொந்த கட்சியினரின் தேர்வாக வருகிறார் ரிஷி சுனக். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இங்கிலாந்தை அந்த சவாலை சமாளிக்க வைக்க ரிஷியால் முடியுமா என்பது தான் அனைவரின் கேள்வியாகவும் இருக்கிறது.

பதவிக்கு வரும் முன்பே ரிஷியின் மீது தாக்குதல்களை தொடங்கி விட்டார்கள். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தில் நிர்வாகவியல் படிக்கும்போது ரிஷிக்கு அறிமுகமான அவரின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி, இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள். இவர்களின் சொத்து மதிப்பு சுமார் ஏழாயிரம் கோடி. இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் சொத்து மதிப்பை போல் இரு மடங்கு. அதனால் இவர் சாதாரண மக்களின் பிரச்னைகளை அறியாதவர், பணக்காரர்களின் பிரதமராகத்தான் இருப்பார் என்று எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே தாக்குதல்களை தொடங்கி விட்டார்கள்.

ஆனால் மக்களுக்காக சேவை செய்வதை தன்னுடைய பெற்றோர்களிடமிருந்து கற்று வந்துள்ளதாக சொல்லும் ரிஷி, லிஸ் ட்ரஸ் ஆட்சியிலிருந்த போது அவரின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்தவர். பதவிக்கு வந்தவுடன் ட்ரஸ் பதவி நீக்கம் செய்தவர்களை மீண்டும் பதவியில் அமர்த்தியிருக்கிறார். தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை மக்களின் மீது அதிக வரியை சுமத்தாமல் எப்படி சமாளிக்கப்போகிறார் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிறுவனத்தையோ, அணியையோ, நாட்டையோ நல்ல நிலையில் இருக்கும்போது தலைமையேற்று வழி நடத்த எல்லோரும் முன் வருவார்கள். ஆனால் அதே விஷயம் சிக்கலில் இருக்கும்போது அவ்வளவு எளிதாக தலைமையேற்க யாரும் முன் வர மாட்டார்கள். ரிஷி சுனக் இங்கிலாந்தின் ஏகோபித்த ஆதரவினால் பதவியேற்ற பிரதமரா என்ற கேள்வி எழுவது இதனால் தான். தற்போதைய பிரச்னையில் தலையை கொடுக்க வேண்டாம் என்று பெரிய தலைகள் ஒதுங்கிக் கொள்ள ரிஷி கையில் கிடைத்திருக்கும் பிரதமர் பதவி என்பதை அவருக்கான சோதனையாகத்தான் பார்க்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

முதன் முதலில் ஓர் இந்திய வம்சாவளியினரை அல்லது இங்கிலாந்தின் பூர்வ குடி அல்லாத குடியேறிய ஒருவரை பிரதமராக ஆக்கியதன் மூலம் இங்கிலாந்து மக்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக மாறி விட்டார்கள் என்று சொல்லலாமா? ஒருவகையில் உலகம் முழுக்கவே இந்த மாற்றம் மெதுவாக நடந்து கொண்டுதானிருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ஓர் உதாரணம். கனடாவை எடுத்துக் கொள்ளலாம். கனடாவில் சுமார் 16 இலட்சம் இந்தியர்கள் வசிக் றார்கள். இது அவர்கள் மக்கள் தொகையில் மூன்று சதவீதம். கனடா பாராளுமன்றத்தில் அமைச்சர் களாக உள்ள மூவரையும் சேர்த்து மொத்தம் 19 பேர் இந்தியர்கள். இது பாராளுமன்ற சதவீதத்தில் 5.6%. இந்தியர்களின் எண்ணிக்கையை விட அதிகமான அளவில் பிரதிநிதித்துவம் கனடாவில் கிடைத்துள்ளது. அதே போல இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஏறக்குறைய மக்கள் தொகையில்  2.3% உள்ள இந்தியவம்சாவளியினரில் இருந்து இன்று ரிஷி பிரதமராகவே ஆகிவிட்டார்.

உலகமெங்கும் பூர்வீகம், மதம் சார்ந்த தடைகளைத் தாண்டி திறமையானவர்கள் நாட்டை வழி நடத்தட்டும் என்ற எண்ணத்தால் வந்துள்ளதாகவே ரிஷியின் பதவியை பார்க்கலாம். உலக அளவில் எந்த பெரிய பதவியில் இந்தியர் வரும்போது பெருமைப்படும் நாம், நம்முடைய அரசியலில் மட்டும் இன்னும் தமிழரா, தெலுங்கரா, கன்னடியரா என்று மரபணு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்.

நவம்பர், 2022