சிறப்புப்பகுதி

சாத்தான்குளம்: காவல்துறை கரும்புள்ளி!

Staff Writer

இதுவரை காவல்துறையைப் பெருமைப்-படுத்தி ஐந்து படங்களை எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்றார் சாமி, சிங்கம் படங்களின் இயக்குநர் ஹரி. அகில இந்திய அளவில் ராகுல்காந்தி முதல் தமிழ் நாட்டில் ஜெயம் ரவி, சாந்தனு உள்ளிட்ட பிரபலங்கள் வரை எல்லோரும் கருத்துச் சொல்லி கண்டனம் தெரிவித்துவிட்டனர். ஆங்கிலத்தில் பாடகியும் ஆர்ஜேவுமான சுசித்ரா பதிந்த வீடியோ, இதை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றுவிட்டது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், ஹென்ரிக்ஸ் ஆகிய அப்பா, மகன் சிறுவணிகர்களை ஊரடங்கு நேரக்கட்டுப்பாட்டை மீறி கடையைத் திறந்து வைத்ததற்காக அழைத்துச் சென்ற போலீஸ் அவர்களை அடித்து, சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டு இறந்த சம்பவம் பற்றிதான் சொல்கிறோம்.

கொலை வழக்கை அந்த காவலர்கள் மீது பதிவு செய்யவேண்டும் என்று குரல்கள் ஒலித்த நிலையில் தமிழக அரசு சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றி உள்ளது. ஆனால் அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘இது லாக்கப் மரணம் கிடையாது. கிளைச்சிறையில் தான் இறந்துள்ளனர்’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய பிரச்னை ஆனபிறகும் கூட மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடத்த சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசனை நோக்கி ஒரு காவலர், ‘உன்னால் ஒன்றும் பிடுங்க முடியாது’ என்று சொல்லி இருக்கிறார். இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது மதுரை உயர்நீதிமன்றம்.

நம் சமூகம் காவல்துறையினரிடம் இருந்து உடனடி நீதியை எதிர்பார்க்கிறது. ஒவ்வொரு முறை அவர்கள் குற்றவாளிகள் எனக் கருதுகிறவர்களைத் தாக்கும்போது கைதட்டியது. கற்பழிப்புக் குற்றவாளிகளை என்கவுண்டர் எனச் சுட்டபோது வரவேற்றது. இந்த மனப்போக்குதான் இது போன்ற சம்பவத்துக்கு வித்திட்டுள்ளது.

ஆட்கள் குறைவு, சம்பளம் குறைவு, பணிச்சுமை, மனித உரிமைகள் குறித்த பயிற்சி இன்மை, மன அழுத்தம் குறைக்க வழிகாட்டுதல் இன்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் காவல்துறைக்கு உடனடியாகத் தேவைப்படுவது முறையான சீர்திருத்தங்கள். அரசியல்வாதிகளின் கூலிப்படையாக காவல்துறை பயன்படுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என பல கருத்தாளர்களும் குரல் கொடுக்கிறார்கள்.

அமெரிக்காவில் மே மாதம் மின்னியால்போலிஸ் காவல்துறையால் ஜார்ஜ்ப்ளாயிட் என்ற அமெரிக்க ஆப்பிரிக்கர் கொல்லப்பட்டது அந்நாட்டில் மட்டுமின்றி உலகமே கவனித்த பிரச்னை ஆனது. அதற்குச் சற்றும் குறைவில்லாதது இந்த சம்பவமும்.

2019-ல் மட்டும் 1731 பேர் கஸ்டடியில் இறந்துள்ளனர் என்று இந்தியா-வில் சித்திரவதைகள் குறித்த ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை குறையவேண்டும் என்பதே பொதுவான கருத்து.

ஜூலை, 2020.