சிறப்புப்பகுதி

பாடியவர் ஸ்ரீவித்யா

ஷாஜி சென்

1990 களின் ஆரம்ப ஆண்டுகள். எங்கள் இசை நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சினிமாப் பிரபலங்கள் வந்து செல்வது அன்றாட நிகழ்வாக இருந்தது.

அந்த காலத்தில் கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி போன்ற பெருவெற்றித் திரைப்படங்களில் வித்தியாசமான வில்லனாக நடித்துப் புகழுடனிருந்த மன்சூர் அலி கான் ஒருநாள் உதவியாளர்களுடன் எங்கள் அலுவலகத்திற்கு வந்தார். அவர் நாயகனாக நடித்துப் பாடல்கள் எழுதி இசையமைத்து, சில பாடல்களையும் பாடிய ‘ராஜாதி ராஜா ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்' எனும் படத்தின் பாடல் ஒலிநாடாவை எங்களது நிறுவனம் வெளியிடவேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. பணிவுடன் அவரை வரவேற்றாலும் படத்தின் மிகவும் நீண்ட வினோதமான பெயரையும் பாடல்களின் தரத்தையும் கருத்தில்கொண்டு அவ்வொலிநாடாவை வெளியிடமுடியாது என்று எங்கள் நிர்வாகம் மறுத்ததை மன்சூர் அலி கானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கடும் சினத்துடன் வெளியே போகும் வழியில் வாசல் கதவை அவர் வேகமாக ஓங்கி இழுத்து அடைத்ததில் அதன் தாழ்ப்பாளும் கொண்டியும் அலங்காரக் கண்ணாடியும் உடைந்து சிதிலமாகிக் கீழே விழுந்தன. அவரோ சென்றுவிட்டார். யாராலும் எதுவுமே செய்ய முடியவில்லை. ‘என்போன்ற சினிமாப் பிரபலங்களைப் பகைத்தால் உங்கள் கதி இதுதான்டா‘ என்று அவர் சொல்லாமல்  சொன்னார் என்றே நினைத்தேன். ஆனால் அந்தச் சம்பவம் எனக்குள் ஒரு புதிய சிந்தனையைத் தூண்டியது. ஓரளவுக்காவது பாடும் திறமையிருக்கும் திரை நடிகர்களைப் பாடவைத்து தனியார் இசைத் தொகுப்புகளை ஏன் வெளியிடக்கூடாது?

முதலில் என் நினைவுக்கு வந்தவர் ஸ்ரீவித்யா. ஏனெனில் எனது பயிற்சிக் காலத்தில் ஒருநாள் அவர் எங்கள் அலுவலகத்திற்கு வந்து செல்வதை மின்னிமாய்வதுபோல் ஒரு கணம் பார்த்திருக்கிறேன். தமிழிலும் மலையாளத்திலும் தெலுங்கிலும் மின்னும் தாரகையாகச் சோபித்த பேரழகியான திரைநடிகை மட்டுமல்ல ஸ்ரீவித்யா. பெயர்பெற்ற கர்நாடக இசைப்பாடகி எம் எல் வசந்தகுமாரியின் மகளான அவருக்குப் பாட்டிலும் பெரும் நாட்டமிருப்பது எனக்குத் தெரிந்த விஷயம். முன்பு ஓரிரு மலையாளத்திரைப்பாடல்கள் பாடியிருக்கும் அவர் அமரன் எனும் தமிழ் படத்தில் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்று ஒரு டப்பாங்குத்து நடனப்பாடலையும் பாடிய காலமது. அனைத்துப் பாடல்களையும் அவரே பாடும் ஓர் ஒலிநாடாவைத் தமிழிலும் மலையாளத்திலும் கொண்டுவரத் திட்டமிட்டேன். இரண்டு மொழிகளிலும் பெரும்புகழ் பெற்ற ஒரு நடிகை பாடிய இசைத் தொகுப்பு வெளிவந்தால் அதற்கு நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று எண்ணினேன். அத்துடன் இளவயதில் நான் மனதார ஆராதித்த ஸ்ரீவித்யாவுடன் பணியாற்ற எனக்குக் கிடைக்கும் வாய்ப்பாகவும் அது அமையுமே.

எஸ் பி வெங்கடேஷ் அப்போது மலையாளத்தில் முதல் இடத்திலிருந்த இசையமைப்பாளர். தமிழரான அவர் சங்கீதராஜன் எனும் பெயரில் பூவுக்குள் பூகம்பம் போன்ற படங்கள் வழியாகத் தமிழிலும் ஓரளவுக்குப் புகழ் பெற்றிருந்தவர். தமிழில் பிறைசூடனையும் மலையாளத்தில் புத்தஞ்சேரி கிரீஷையும் பாடல்கள் எழுதவைக்கலாம் என்று திட்டமிட்டேன். அத்தொகுப்பைப் பற்றிப் பேசும்பொருட்டு முதன்முதலில் ஸ்ரீவித்யாவைத் தொலைபேசியில் அழைத்தபோது மறுமுனையில் ‘ஹலோ ஹூ ஈஸ் திஸ்?‘ என்று அவரது குரல் கேட்டதும் எனக்கு பேச்சுத் திணறியது. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழப்பமாகவே சில நிமிடங்கள் கடந்தன. பின்னர் ஒருவழியாக விஷயத்தைச் சொன்னேன். ‘பண்ணலாமே‘ என்றுதான் சொன்னார். ஆனால் ஊதியம், ஒலிப்பதிவுக்கான தேதி என எதையும் அவர் உறுதி செய்யவில்லை. சில நாள்களுக்குப் பிறகு அனைத்தையும் நேரடியாகப் பேசி உறுதி செய்வோம் என்று அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார்.

அபிராமபுரம் பகுதியிலுள்ள அவ்வீட்டின் ஒளிமங்கிய வரவேற்பறையில் இனம்புரியாத பதற்றத்துடன் அமர்ந்திருந்தேன். நான் நினைத்ததைவிடக் குறைவான உயரமும் சற்று அதிகமாகவே தடித்த உடலும் கொண்ட ஸ்ரீவித்யா எதிரே வந்து அமர்ந்தபோது ‘அப்பாடா.. இந்த அம்மாவின் முகத்திற்கு இப்போதும் என்னவொரு அழகு!‘ என்றுதான் உள்ளுக்குள் நினைத்தேன். ‘என்ன வச்சி இப்டி ஒரு ஆல்பம் பண்ணணும் அப்டீன்னு உங்களுக்கு என்ன ‘இவ்வ்வ்ளொ' ஆர்வம்?' திடீரென்று நக்கலான தொனியில் ஸ்ரீவித்யா கேட்டார்! நான் சற்றுமே எதிர்பாராத கேள்வி. எனக்கு ஏதோ உள்நோக்கு இருக்கிறது என்றல்லவா இவர்

சொல்கிறார்! இடிந்துபோனேன். மனம் சோர்வுற்றது. அந்த கணமே திரைநடிகர்களை வைத்து வெளியிடும் இசைத்தொகுப்பு எனும் திட்டத்தின்மேலேயே எனக்கு ஆர்வமிழந்தது. ‘இது என்னோட வேலை மேடம். ஒவ்வொரு மாதமும் அஞ்சு ஆல்பங்கள் நான் கொண்டுவந்தே ஆகணும். அதுல ஒண்ணுதா இது. உங்கள சிரமப்பட வெச்சதுக்கு சாரி' ஸ்ரீவித்யா எனும் மகாநடிகையை முதலும் முடிவுமாக நேரில் சந்தித்து வேகமாக அங்கிருந்து வெளியேறினேன். (வளரும்)

ஆகஸ்ட், 2022