சிறப்புப்பகுதி

யாண்டு பலவாக...

அசோகன்

விருகம்பாக்கத்தில்  சில அறைகள் கொண்ட பழைய வீட்டின் முதல் மாடிக்கு குறுகிய படிகள் வழியாக அழைத்துச் சென்றார் நண்பர் கௌதமன். ‘அண்ணே, இதுதான் இன்னிலேர்ந்து நம்ம அந்திமழைக்கு அலுவலகம்.‘ பழைய சரவிளக்கு ஒன்று சிலந்திவலைகளுடன் தொங்கிக்கொண்டிருந்தது.

‘மத்த எல்லாம் சரி... இந்த விளக்கு மட்டும் கொஞ்சம் ஓவர்ப்பா‘ என்று கவுண்டமணி பாணியில் சொல்லிவிட்டு பணியைத் தொடங்கினோம். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரேயொரு அலுவலக உதவியாளர், மாதக்கடைசியில் வரும் வடிவமைப்பாளர், ஒரு பத்திரிகை விநியோக நிர்வாகி, வாசலில் பூ கட்டி விற்றுக்கொண்டிருக்கும் பெண்மணி, எதிர் முனை ஆட்டோ ஸ்டாண்டில் சில ஓட்டுநர்கள், வாசலிலிருந்த வேப்ப மரத்துப் பறவைகள் இவர்களுடன் சேர்ந்துதான் அந்திமழையை மாதம் தோறும் சில ஆண்டுகள் உருவாக்கிக் கொண்டிருந்தோம்.

பின்னர் மெல்ல சற்றுவசதியான அலுவலகங்கள் மாறி, இப்போது அந்திமழை குழு சற்று பெரிதாகி விட்டது. அச்சுப்பத்திரிகையுடன் யூட்யூப் சானலாகவும் உருவாகி இருக்கிறோம். ஸ்டூடியோ, எடிட்டர், ஒளிப்பதிவாளர், உதவி ஆசிரியர்கள்... என்று இன்று கலகலப்பாக இருக்கும் அலுவலகத்தை, அன்று பல நாட்கள் ஒரே ஆளாக கணினித் திரையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த நாட்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் திகைப்பாக இருக்கிறது.

இந்த பத்தாண்டு பயணத்தில் ஏராளமானவர்களின் வாழ்க்கையை சிறு அளவிலாவது தொட்டு இருக்கிறோம். பல படைப்பாளிகளின் முதல் படைப்புகள் இங்கே வெளியாகி இருக்கின்றன. நாம் இடம் கொடுத்துப் பாராட்டிய இளம் ஆளுமைகள் இதே பத்தாண்டுகளில் வேகமாக வளர்ந்திருப்பதைப் பார்க்கையில் பெரும் மகிழ்ச்சி இருக்கிறது.

சில பக்கங்களைப் படிக்க முடியவில்லை என்று சொன்னவர்களிடம் இருந்து, எல்லா பக்கங்களும் படித்துவிடுகிறோம் எனக் காத்திருப்பவர்கள் வரை தமிழ் வாசகப்பரப்பின் எல்லா முகங்களையும் பார்த்துத்தான் வளர்ந்திருக்கிறோம். ‘நீங்கள் ஏன்  இப்படிச் செய்யக்கூடாது? ஏன் இதைப்பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்கள்?' என்று தொடங்கிய விமர்சனங்கள், உங்களுக்கென்று ஓர் அடையாளம் உருவாகி விட்டது எனச் சொல்வதாக இந்த ஆண்டுகளில் மாறி இருக்கின்றன.

இன்று தமிழின் மிக அதிக வாசகப்பரப்பு கொண்ட மாத இதழாக இது வளர்ந்து இருக்கலாம். ஆனால் பத்தாண்டுகள் என்பது ஒரு தலைமுறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடிய கால இடைவெளி. நாங்கள் தொடங்கியபோதிருந்த அச்சு ஊடகச் சூழல் அல்ல இப்போதிருப்பது. அதே வாசகப்பரப்பு அல்ல இப்போதிருப்பது. ஆனால் அச்சு ஊடக விழுமியங்கள் அதேதான் என்பதை உணர்ந்துள்ளோம்.

எல்லோரையும்போல் கொரோனாவுக்கு அந்திமழையும் தப்பவில்லை. ஆனால் எத்தனை கொரோனா வந்தாலும் விடாமல் நடத்துவோம் என பிடிஎப் கோப்புகளாக வடிவம் எடுத்தோம். அந்த காலகட்டத்தில் லட்சக்கணக்கான உலக தமிழ் வாசகர்களை வாட்ஸப் மூலமாகச் சென்றடைந்தோம். இன்னொரு கதவு திறந்துகொண்டது.

எத்தனை இடர்ப்பாடுகளிலும் வாய்ப்பு-களைக்  கண்டறிபவர் எம் நிறுவனத் தலைவரும் அந்திமழையின் நிறுவிய ஆசிரியருமான இளங்கோவன். கடந்த பத்தாண்டு-களில் பல அச்சு ஊடகங்கள் துரதிருஷ்டவசமாக மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து போராடுவதற்கான உந்துசக்தியை அவர் தருவதால்தான் இதன் சக்கரங்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன.

அரசியலில் பெரிய பதவியொன்றை உழைப்பால் பெற்ற ஓர் இளம் அரசியல்வாதிக்கு வாழ்த்துச் சொல்ல அழைத்திருந்தேன். ‘அந்திமழையில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே என்னை அடையாளப்படுத்தி எழுதி இருந்தீர்கள். அந்த இதழைப் படம்பிடித்துப் போட்டு பலர் இப்போது வாழ்த்தியிருக்கிறார்கள். தெரியுமா உங்களுக்கு?‘ என்று அவர் சொன்னபோது, கிடைத்த மகிழ்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் அளவே இல்லை.

மாதந்தோறும் பெருகுகின்ற புதிய சந்தாதாரர்களும், ஆயுள் சந்தா அனுப்பி வைக்கிற முகம் தெரியாத மனிதர்களும்தான் இந்த இதழுக்கு ஆக்சிஜன். இதழைப் பார்த்தவுடன் வந்துவிழும் வாட்ஸப் ஸ்மைலியும் இதழ் கடைகளில் வெளியான ஒரே வாரத்தில் அஞ்சலில் வரும் கடிதங்களும் மின்னஞ்சல் மூலமாகப் பொழியும் சொற்களும்தான் இதன் சோம்பலை அகற்றும் சூரிய ஒளிக்கதிர்கள்.

                                        - என். அசோகன்

செப்டம்பர், 2022