பாரீஸ்ல நான் கிளாஸ் சொல்லிக் கொடுக்கும் ஸ்டூடன்ட்ஸ், இலங்கை குடும்பங்கள்ல பிறந்தவங்க. சோ, சில பேர் வீட்ல பிரெஞ்சு பேசுவாங்க, சில பேர் வீட்ல தமிழ் பேசுவாங்க. ஆனா மிகச் சில பேருக்குத் தமிழ் படிக்கத் தெரியும். அவங்க அந்த கிளாஸ்க்கு வந்து முதல் தடவையா இலக்கியப் படைப்புகளைப் படிப்பாங்க. சோ, எல்லாமே அவங்களுக்குப் புதுசா இருக்கும்." கொஞ்சு தமிழில் லெட்டீசியா இபானஸ். தமிழ் நவீன இலக்கியப் படைப்புகளை பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்திருப்பவர்.
பிரெஞ்சு குடும்பத்துல இருந்து வந்த நீங்க, எந்தச் சூழ்நிலையில தமிழ் கத்துக்கணும்னு ஆர்வம் வந்து கத்துக்கிட்டீங்க?
நான் ஒரு 20-22 வயசுல லியோன் (Lyon) நகரில் சில தமிழ் குடும்பங்களைச் சந்திச்சேன். அவங்க என்கிட்ட நீங்க கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அன்பு காட்டினாங்க. அப்போ அந்த அன்புக்கு நன்றி சொல்ல ரெண்டு மூணு வார்த்தை கத்துக்க ஆசைப்பட்டேன். நன்றி, வணக்கம்னு ஆரம்பிச்ச அந்தப் பயணம், இப்போ பி.எச்.டி (PhD) வரைக்கும் போயிருக்கு. நான் என் பி.எச்.டி-யை 'இனால்கோ' (INALCO)-ல பண்ணினேன். அது ஒரு பிரெஞ்சு பல்கலைக்கழகம், அங்கே தமிழ், ஹிந்தி, பெங்காலி, மலையாளம்னு பல இந்திய மொழிகளைக் கத்துக்கலாம்.
பெருமாள் முருகன், ஷோபா சக்தி இவங்களோட படைப்புகளை மொழிபெயர்த்திருக்கீங்க. பிரான்ஸ் நாட்டு மக்களிடையே தமிழ் இலக்கியங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கு?
'கலிமார்ட்' (Gallimard) பிரான்ஸ்ல பெரிய பதிப்பகம். அவர்கள் தான் இந்த படைப்புகளை மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள். இந்த படைப்புகளுக்கு ப்ரெஞ்சு வாசகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கு.ஆனால் இன்னும் பரவலாக்க முயற்சிகள் தேவை என நினைக்கிறேன்.
தமிழ் நல்லா கத்துக்க நீங்க படிச்ச புத்தகங்கள் எவை?
என் டீச்சர் எலிசபெத் சேதுபதி எழுதின டெக்ஸ்ட் புக் படிச்சேன். அப்புறம் 'Tamil Prose Reader'னு ஒரு புக். அதுல ஒரு பக்கம் தமிழ், ஒரு பக்கம் இங்கிலீஷ் இருக்கும். அதுல அம்பையோட 'மஞ்சள் மீன்' கதை இருந்தது, அது எனக்கு ரொம்ப உதவியா இருந்தது. நான் முதலில் மொழிபெயர்த்தது மௌனியின் சிறுகதைகளைத் தான். எனக்கு லா.சா.ரா.வோட எழுத்து நடையும் மிகவும் பிடிக்கும். புதுமைப்பித்ததனின் புதிய நந்தன் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது.
தற்கால பிரெஞ்சு, தமிழ் எழுத்துகளை ஒப்பிட முடியுமா?
பிரெஞ்சு எழுத்தாளர்களும் தற்கால தமிழ் எழுத்தாளர்களும் ஏறக்குறைய ஒரேமாதிரி எண்ணப்போக்கு உடையவர்களாக இருப்பதாக நினைக்கிறேன். சமூகம் தொடர்பான முற்போக்கு எண்ணம் கொண்ட எழுத்துகள் தமிழில் அதிகமாக உள்ளதாக நினைக்கிறேன். எனது வகுப்புகளில் புதுமைப்பித்தனில் இருந்து ஜெயகாந்தன், ஜி நாகராஜன், இமையம் வரைக்குமான எதார்த்தவாத தமிழ் இலக்கியங்களைக் கற்றுக்கொடுக்கிறேன். அங்கிருக்கும் மாணவர்களுக்கு இவை மிகப் புதுமையாக இருக்கின்றன. இந்த வகுப்பு முடிந்ததும் அவற்றில் இருந்து சிலவற்றை மொழிபெயர்க்க பயிற்சி அளிப்போம். அப்படித்தான் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க முடியும்.
நேர்காணலை Andhimazhai TV யூட்யூப் சானலில் காண: