பொது

நாய்கள் மனிதருக்கு தோழனில்லையடி பாப்பா

Karthikeyan

தியடோர் பாஸ்கரன்

தெரு நாய்களைப்பற்றி அந்திமழை செப்டம்பர் இதழில் வெளியான மு.இராமனாதனின் கட்டுரை சிறப்பாக இருந்தது. இங்கு நாம் மனங்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாய்க்கடிபடுபவர்கள், அதனால் உயிரிழப்பவர்கள் இவர்களின் எண்ணிக்கை உண்மையில் மிக அதிகம்.

உலக வெறிநாய்க்கடி மரணங்களில் 81 % நம் நாட்டில்தான். இதில் பெருவாரியானவர்கள் ஏழை மக்கள். அதிலும் 42% சிறுவர்கள். தெரு நாய்களால் பரப்பப்படும், நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ரேபிஸ் (Rabies) நோய்க்கு மருந்தே கிடையாது. காய்ச்சல் வந்தால், மரணம் நிச்சயம். தெரு நாய்களில்லாத நாடுகளில் இந்த நோய் இல்லை. நம்நாட்டிலேயே லட்சத்தீவில் தெரு நாய்களில்லாததால் இந்நோய் அங்கு கிடையாது.

நாய்களுக்குக் கருத்தடை ஆப்பரேஷன் செய்து இந்த பிரச்னையைத் தீர்க்க முடியுமா?

இதற்காகும் செலவைப் பார்ப்போம். லட்சக்கணக்கான நாய்களுக்குச் செய்ய எவ்வளவு நாள், பணம் ஆகும்?

பெட்டை நாய் ஒன்றின் கருத்தடை சிகிச்சைக்கு 1000 ரூபாய் ஆகின்றது. அதைப் பிடித்த இடத்திலேயே கொண்டு போய் விட்டு விடுகின்றார்கள். ஆபரேஷன் முடிந்து நாயை யார் பார்த்துக்கொள்வது?

வெறிநாய்க்கடி ஊசி ஆண்டுக்கு ஒரு முறை போடப்பட வேண்டும். லட்சக்கணக்கான நாய்களுக்கு இதைச் செய்வது யார்? இது போகாத ஊருக்கு வழிகாட்டுவது போலத்தான்.

கருத்தடை செய்யப்படாத மற்ற நாய்கள் பல்கிப்பெருகிக் கொண்டிருக்கும் வரையில் கருத்தடையால் நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே முடியாது. செம்பரம்பாக்கம் ஏரியை ஓட்டை பக்கெட் ஒன்றை வைத்து காலிசெய்யும் முயற்சி போன்றது இது. ஆகவே நாம் முற்றிலும் வேற்று வழிகளை ஆராய வேண்டும்.

இங்கு ஆபத்து வெறிக்கடி நோய் மட்டுமல்ல. பல சாலை விபத்துகளுக்கு தெரு நாய்கள்தான் காரணம். இவற்றின் எச்சத்தின் மூலம் பல நோய்கள் பரவுகின்றன. நம் நாட்டில் பல காட்டுயிர்களுக்கு தெருநாய்கள் மூலம் ஆபத்து. சென்னையில் கிண்டி மான் பூங்காவிலிருந்த நூற்றுக்கணக்கான வெளிமான்கள் அழிந்துபட்டது தெரு நாய்களால்தான்.

இந்த நாய்களுக்காகப் பரிந்து பேசுபவர்கள், இவைகளால் பாதிக்கப்படுபவர்கள் அல்ல. பங்களாக்களில் வாழ்ந்து, காரில் செல்லும் நகரவாசிகள் தான் இவர்கள். ஜல்லிக்கட்டையும் எதிர்த்தும் இதே கூடாரத்தில் இருப்பவர்கள்தான்.

யாருக்கும் சொந்தமில்லாத நாய்கள், மனிதருடன் அன்றாடம் உறவாடாமல், தன்னிச்சையாகத் திரியும் நாய்கள் மனிதருக்கு தோழனில்லையடி பாப்பா.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram