காணொளி

“சவுண்டுக்கும் மைண்டுக்கும்தான் வேலை!’’

தா.பிரகாஷ்

 கர்நாடக இசைக் கலைஞர் சிக்கல் குருசரண், இந்த தலைமுறையின் தரமான இசைக்கலைஞர்களில் ஒருவர். 20 ஆண்டுகள் இசைக் கற்றுக்கொண்டு கல்லூரிப் படிப்பு முடித்தபின்னரே கர்நாடக இசையையே தன் வாழ்க்கையாகக் கொள்ள முடிவுசெய்தவர். சிக்கல் சகோதரிகள் என்கிற புகழ்பெற்ற குழலிசைக் கலைஞர்கள் இவரது பாட்டிகள் ஆவர். இவருடன் ஷாஜி சென் andhimazhai tv யுட்யூப் சானலுக்காக நிகழ்த்திய உரையாடலில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதில் அவர் பகிர்ந்த ஒரு சம்பவம்:

’’ஜப்பான் போவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதற்கான ஏற்பாட்டை அந்நாட்டு இசைரசிகர்கள் செய்தார்கள். அவர்களுடன் என்னால் ஆங்கிலத்தில் கூட உரையாட முடியாது. அங்கு ஆங்கிலம் தெரிந்த ஒருவர்”இந்த ரசிகர்கள் டிசம்பர் சீசன் கச்சேரிக் கேட்க சென்னைக்கும் வந்திருப்பதாகவும் சிலர் பரதநாட்டியம், இன்னும் சிலர் தமிழ் மொழி கற்றுக் கொள்வதாகவும்” கூறினார்.

நாங்களே அதிர்ச்சி அடையும் அளவுக்கு கூட்டம் வந்திருந்தது. அவர்கள் ஒவ்வொரு பாடலையும் ரசிக்கும் விதத்தைப் பார்த்து வியந்தேன்.

மார்கழி ஜப்பான் நிகழ்வை ஒருங்கிணைத்தவரிடம் கேட்டேன். ஜப்பானிய மொழியில் பிரபலமான ஒரு பாடலை சொல்லுங்கள் என்று. அவர் ஒரு மலர் தொடர்பான பாடலை சொன்னார். அந்தப் பாடல் ஒரு முக்கியமான பாடல். 2011 இல் நிலநடுக்கம் வந்தபோது, ஜப்பானில் உள்ள ஒரு தீவு அழிந்து போகிற நிலையிலிருந்தது. அங்கிருந்து வந்த இசையமைப்பாளர் யோகோ ஓனோ  என்பவர் தன்னுடைய மக்களை ஆறுதல் படுத்த பாடல் ஒன்றை இசையமைத்திருந்தார். இந்த பாடலை நான் பாடலாமா சரியா வருமா? என கேட்டேன். இது கர்நாடக இசைக்கு பொருந்தும், நீங்கள் பாடுங்கள் என்று ஒரு ட்யூன் அளித்தார்.

அந்த பாடலை வைத்து, உடுப்பியில் உள்ள நண்பர் சுதர்ஷன் என்பவரிடம் மலர் தொடர்பாகக் கவிதை வரிகளை எழுதி தரச்சொல்லிக் கேட்டு, குறிஞ்சி மெட்டில் கலந்து கட்டி பாடினேன். பாடி முடித்ததும் யாரும் கை தட்டவில்லை. எல்லோர் கண்ணிலும் கண்ணீர். மலர்கள் மீண்டும் மலரும் என்றுதான் பாடினேன். கர்நாடக இசையில் சவுண்டுக்கும் மைண்டுக்கும்தான் வேலை!’’