தொடர்கள்

பொது சமூகத்தைச் சீண்டிப் பார்க்கும் BAD GIRL

திசையாற்றுப்படை - 29

இரா.பிரபாகர்

 இந்தக் காளி ரொம்பக் கெட்ட பையன் சார்’ என்று முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினி பேசும் வசனம் ரொம்பவும் பிரபலம். வெகுவாக ரசிக்கப்பட்ட வசனமும் கூட.  நாயகர்கள் அப்படி தங்களை விளித்துக்கொள்வதை பார்வையாளர்கள் யாரும் ஆட்சேபித்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக ‘கெட்ட பையன்’ என்பதற்கான பொருள் என்னவாக இருக்கக்கூடும் என்பதையும் பார்வையாளர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் ஒரு பெண் ‘கெட்ட பெண் (Bad girl)’ என்று சொல்லப்பட்டவுடன் அது என்னவாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதையே பேட் கேர்ள் திரைப்படத்தின் வணிகத் தோல்வியாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

சென்ற மாதம் வெளியான பேட் கேர்ள் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே சலசலப்பை உண்டாக்கியது. தணிக்கைக் குழுவின் கெடுபிடிகள் பற்றிய செய்திகளால் முதலில் சிறிய கவனம் உண்டானது. தொடர்ந்து அந்தப்படத்தின் முன்னோட்ட வீடியோவே (டிரைலர்) யூ டியூப்பர்களையும், இன்னபிற கலாச்சாரக் காவலர்களையும் கொந்தளிக்கச் செய்தது. டிரைலர் நீக்கப்படும் அளவுக்கான நிர்பந்தம் இருந்தது. படம் வெளியானபின் கூடுதலான பொறுப்புணர்ச்சியுடன் விமர்சகர்கள் நேரடி வசைபாடல்களில் இறங்கினர். படத்தயாரிப்பாளர் வெற்றிமாறன், படத்தோடு தொடர்புடைய பலர் வீட்டுப்பெண்களும் இந்த ஆபாச வசையாடல்களிலிருந்து தப்பவில்லை. இந்த பன்முக நெருக்கடிகள் காரணமாகவோ என்னவோ, வெற்றிமாறன் இனி நான் படத்தயாரிப்புகள் செய்யப்போவதில்லை என்று அறிவித்ததும் நடந்தது.

இத்தனை களேபரங்கள் நிகழ்வதற்கு இந்தத் திரைப்படம், என்ன விதமான சமூகவிரோதக் கருத்துக்களை முன்வைத்தது? வேறொன்றுமில்லை, 21ஆம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்த, பள்ளியில் படிக்கும் பதின் வயதுப் பெண்ணொருத்தியின் அகவுலகை மேற்பூச்சுகள் இல்லாமல் வெளிப்படுத்த இந்தப் படம் முயன்றிருக்கிறது. அவ்வளவுதான். இதுவரை தமிழ்த் திரையுலகில் நூற்றுக்கணக்கான படங்களில் பதின்வயது ஆண்கள் மையப்பாத்திரங்களாக இருந்திருக்கிறார்கள். அலைகள் ஓய்வதில்லை, பன்னீர் புஷ்பங்கள் தொடங்கி, செல்வராகவன், தனுஷ் வகையறா படங்கள் வரை பெரும்பாலும் நாயகர்கள் பெண்கள் பின்னால் அலைவது, வற்புறுத்துவது, எமோசனல் பிளாக்மெயில் பண்ணுவது என்று ஏதாவது செய்து அதை அமர காதலாகக் காட்டுவதற்கு எவ்வித எதிர்ப்புகளும் எழுந்ததில்லை. தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை பாலியல் வன்முறை செய்து அதன் பின் வேறுவழியில்லாமல் அந்தப் பெண் அவனையே திருமணம் செய்து கொள்வதான ‘புதிய பாதைகளை’ அறிமுகம் செய்த இயக்குநர் ஒருவருக்கு தேசிய விருதுகூட வழங்கப்பட்ட வேடிக்கைகளும் உண்டு. ஆனால் ஒரு எளிமையான நடுத்தரவர்க்க நகரத்துப் பெண் தன் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துவது பெரும் கலாச்சார  சீர்கேடாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

முதலில் இந்தப்படத்தின் இயக்குநர் ஒரு பெண் என்பது பொதுப்புத்தியில் பெரும் தொந்தரவை உண்டாக்குகிறது. அவர் ஆண்களுக்கு பெண்கள்பால் ஏற்படும் ஈர்ப்பைப் போலவே பெண்களுக்கும் ஆண்கள் மேல் இயல்பான ஈர்ப்பு இருக்கிறது. அதுபோலவே பதின்பருவ காதலைக் கடந்த வாழ்க்கைப் போக்கில் மேலும் சில காதல்களுக்கும் பிரிவுகளுக்கும் இடமிருக்கிறது என்பதை பாசாங்கில்லாமல் பேசும்போது அதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது. இதுநாள்வரை பெண்ணுணர்வுகளை ஆண் கதாசிரியர்களே அவர்களின் புரிதலின் அடிப்படையிலும், விருப்பத்தின் அடிப்படையிலும் வெளிப்படுத்தி வந்துள்ளனர். ஆனால் முதல் முறையாக ஒரு பெண்ணின் குரலாக வெளிப்படுவதை அக்கறையோடு கவனிப்பதற்குப் பதிலாக விமர்சனம் என்பதைக் கடந்த வன்மத்தையே வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.

இதில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால் பெண்களைப் பற்றி தமிழ் சினிமா கதாசிரியர்கள்  காலம்காலமாகக் கற்பிதம் செய்து வைத்திருந்த பிம்பத்தை இந்தப் படம் தகர்த்துவிட்டது என்பதுதான். அதாவது பெண் ஆசைகளை வெளிப்படுத்தமாட்டாள். பாலியல் ஈர்ப்பு என்பது பெண்களுக்கு இருக்காது. இருக்கக்கூடாது. என்ன இருந்தாலும் பெண் புனிதமானவள். தாய்மையைத் தனக்குள் கொண்டிருப்பவள் எனபதுபோன்ற பழகிப்போன, தொடர்ந்து ஆண்களால்  சொல்லப்பட்ட இனிய பொய்களை ஒருவர் தகர்த்துவிடும்போது அப்படித் தகர்ப்பவர் ஒரு பெண்ணாக இருக்கும்போது ஆண் மைய ஊடக உலகம் எப்படி அதைப் பொறுத்துக்கொள்ளும்?

குறிப்பாக ஆண்கள் விரும்பும் மென்மையான, ஒருவனுக்காகவே காத்திருக்கும் அந்தப்பெண்ணாக நூற்றாண்டுகளாக இருந்து அலுத்துவிட்டது தம்பிகளா… நாங்கள் இதுவரை எங்கள் விருப்பங்களை மனதுக்குள் வைத்துப் புழுங்கிக்கொண்டிருந்தோம், இனி எங்கள் காதல்களை சொல்லத்தான் போகிறோம் என்று சொல்வதே இந்தப்படத்தில் இயக்குநரின் மனக்குரலாக இருக்கிறது. தீராதவிளையாட்டுப் பிள்ளையாகவும், மன்மதன்களாகவும் நீங்கள் இருந்ததுபோல் நல்ல குடும்பப்பெண் எனும் பூச்சைக் கலைத்துவிட்டு கொஞ்சம் ‘கெட்ட பெண்களாக’ நாங்களும் இருந்துவிட்டுப் போகிறோமே என்கிறார். ஒரு வகையில் இயக்குநர் பொது ஆண் சமூகத்தைச் சீண்டுவதையே தன் படைப்பின் நோக்கமாகக் கொண்டிருக்கிறார் என்றால் இந்தப்படம் ஒரு வெற்றிகரமான படம்தான்.

இந்த நேரத்தில் ’96’ படம் வெகுவாகக் கொண்டாடப்பட்டது நினைவுக்கு வருகிறது. குறிப்பாக ஆண்கள் அதிலும் நடுத்தரவயது ஆண்கள் அந்தப்படத்தை கொண்டாடினார்கள். காரணம் தீவிரமாகக் காதலித்த இருவர் நீண்ட நாட்களுக்குப்பின் சந்திக்கின்றனர். ஓர் இரவு முழுவதும் தனிமையில் உரையாடியபடி இருக்கின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளக்கூட இல்லை என்பதால் அந்தக் காதல் அமரத்துவம் பெற்றதாகிறது. அவ்வப்போது இத்தகைய தொட்டுக்கொள்ளாத காதல் கதைகள் சிலாகிக்கப்படுவதை தமிழ்சினிமாவில் காணமுடியும்.

ஆனால் தமிழ்சினிமா, ஏன் இந்திய சினிமா அளவுக்குக் யாரும் காதலை கொச்சைப் படுத்தியிருக்கவில்லை. டூயட் எனும் பெயரில் ஆபாசமான அங்க அசைவுகளோடு, புல்தரைகளில் கட்டி உருளாத நாயகர்கள் யாரேனும் உண்டா? அத்தகைய காட்சிகளை இன்றளவும் குடும்பத்தோடு ரசித்துப் பழகிய தமிழ்ச்சமூகம் இயல்பான யதார்த்தத்தைக் கண்டு அஞ்சுகிறதா? உலகம் முழுமையுமே ஆண்களும் பெண்களும் பதின்பருவம் தொடங்கி சிலர்மேல் ஈர்ப்புக்கொள்வதும் இயல்பானதே. சென்ற நூற்றாண்டில் வெளிப்படுத்த இயலாத பெண் பாலியலை இன்று வெளிப்படுத்துவதற்கான சமூக வெளி உருவாகியுள்ளது. மேற்கத்திய ஊடகங்களிலும்கூட எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று பதின்பருவத்தினர் பற்றிய சினிமாக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வரத்தொடங்கியுள்ளன. நெட்பிளிக்சில் Never have I ever, Sex education ஆகிய தொடர்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய தொடர்களின் வரவை சரியான கோணத்தில் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. பதின்பருவத்தினரின் அந்தரங்கத்தை வேடிக்கைபார்ப்பதாக இல்லாமல், பதின்பருவ உலகத்தைப் பொருட்படுத்தி, அதைப் புரிந்துகொள்ள பொதுச்சமூகத்திற்கான வாய்ப்பாகவே இதைப் பார்க்கவேண்டும்.

இப்போது பதின்பருவ விடலைப்பையன்களின் காதலைச்சொன்ன தமிழ்ப்படங்களை நினைத்துப்பாருங்கள். நான் ஒரு ஆண். நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என்னைக் காதலித்தே ஆகவேண்டும். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்பதுதானே அப்படங்களின் அடிநாதம். இன்று காதலித்தபெண்களைக் கொலை செய்வது, முகத்தில் அமிலம் ஊற்றுவதான செயல்களுக்கான ஊக்கத்தை இத்தகைய திரைப்படங்கள்தானே விதைக்கின்றன. ஆனால் ‘பேட் கேர்ள்’ அப்படியான எந்த பரிந்துரைகளையும் வழங்கவில்லை. மாறாக இன்று கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம் ஒருபுறம். ஆனால் அதற்கு முற்றிலும் பொருந்தாத அரதப்பழசான மதிப்பீடுகளை வலியுறுத்தும் குடும்பம் மற்றுமான பொதுச்சமூகத்தின் நெருக்கடிகள் ஒருபுறம். இவற்றுக்கிடையே குழம்பித்தவிக்கும் ஒரு பெண்ணின் மூன்று காலகட்டம். இந்தப்படம் ஒருவகையில் இந்தக்காலத்தின் தேவையைப் பேசும் படம்தான். இன்று பெரும் சமூகச்சிக்கலாகப் பார்க்கப்படும் பதின்பருவத்தினரின் விருப்பங்கள், நடத்தை முறைகளைப் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல்களுக்கான தீர்வாக இத்தகைய படங்களைக் கவனிக்கவேண்டும். அதிலும் குறிப்பாக அந்தத் தலைமுறையைச் சார்ந்த ஒருவர்பேசும்போது இன்னும் கவனமாக அவற்றைப்புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும்.

அந்தவகையில் இயக்குநர் வர்ஷா பரத் தமிழ் சினிமாவின் முக்கியமான வரவாகக் கருதப்படவேண்டியவர். இந்தப்படம்  தமிழ்க் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறது என்று சொல்வோருக்கு ‘ஒரு கலாச்சாரம் பெண்களைக் காக்கக்கூடியதாக இருக்கவேண்டுமே தவிர கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பது பெண்களின் வேலை மட்டும் அல்ல’ என்று பதிலளிக்கக்கூடிய கருத்தியல் தெளிவும் புரிதலும் அவருக்கு இருக்கிறது. எல்லாவற்றுக்கும்மேல் தொழில்நுட்ப ரீதியாக திரைக்கதை, காட்சியமைப்பு, நடிகர் தேர்வு என ஒரு தேர்ந்த திரைக்கலைஞராகவும் வெளிப்பட்டுள்ளார். வணிகரீதியான வெற்றி தோல்விகளைக் கடந்து தமிழ்த்திரையுலகில் நெடுங்காலம் பேசப்படக்கூடிய ஒரு படைப்பாக இது இருக்கும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram