கோவை கு. ராமகிருட்டிணன் 
தொடர்கள்

கோவை கு. ராமகிருட்டிணன் - கருஞ்சட்டை வீரர்!

கவிதாபாரதி

மே 2.

நாளிதழ்களை தாண்டி அரசியலை அறிந்தவர்கள் இந்த நாளை மறந்து இருக்க முடியாது. ஈழத்தில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த நேரம், சிங்கள ராணுவத்திற்கு உதவும் பொருட்டு எழுபது இந்திய ராணுவ ஊர்திகளில் ஆயுதங்கள் கொச்சி துறைமுகம் நோக்கி எடுத்துச் செல்லப்படுவதாக செய்தி பரவியது. அங்கிருந்து கப்பலில் இலங்கைக்கு அனுப்புவதற்காகக் கொண்டுச் செல்லப்பட்ட ஆயுதங்கள் அவை எனக் கருதப்பட்டது.

இந்தத் தகவல் கோவை ராமகிருட்டிணனுக்குச் சென்றது. உடனே பல்வேறு ஈழ ஆதரவு அமைப்புகளையும் தொண்டர்களையும் அழைத்துக்கொண்டு ராணுவ வாகனங்களை வழிமறித்தார். என் இனத்தை அழிக்கச் செல்லும் இந்த ஆயுதங்களைக் கொண்டு கொண்டு செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று வாகனங்கள் மீது தாக்குதலை நடத்தினர். கடைசியில் கோவை மதுக்கரையில் இருந்த துணை ராணுவக்குழு வந்து ராணுவ வண்டிகளை மீட்டது, எனினும் அவை துறைமுகத்திற்கு அனுப்பப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

அவர் செய்தது சட்டவிரோதம் என்றாலும் கோவை ராமகிருஷ்ணனின் இன உணர்வுக்கும் போர்க் குணத்திற்கும் இது ஒரு சான்றாகும்.

ராமகிருஷ்ணன் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கோவையில் பிறந்தார். 1968-இல் கோவை காந்திபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியாரின் பேச்சை தற்செயலாக கேட்டார். அவர் பேசிய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அப்போதே திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். 1970-இல் கோவை மாவட்ட தி.க மாணவர் அணியின் செயலாளரானார். 1972-இல் திராவிடர் கழகத்தின் கோவை மாவட்டச் செயலாளரானார்.

1975-இல் தனது 25-வது வயதில் திராவிடர் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரானார். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை அடக்குமுறைச் சட்டத்தை அமல்படுத்தினார் பிரதமர் இந்திரா காந்தி, அதனை எதிர்த்த எழுச்சிமிக்க அரசியல் செயல்பாட்டாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1977 பிப்ரவரி 1-ம் தேதி மிசா என்னும் அந்த கொடூர ஆள்தூக்கிச் சட்டத்தின் கீழ் கோவை ராமகிருட்டிணனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டு சிறைவாசம் அவரது இன மொழி உணர்வின் தீவிரத்தை குறைத்துவிடவில்லை மாறாக மெருகேற்றியது. சிறைவாசம் முடிந்து வெளியே வந்தவுடன் தமிழ்நாட்டுக்கு வந்த இந்திரா காந்தி அம்மையாருக்கு கருப்புக் கொடி காட்டி மீண்டும் சிறைக்கு சென்றார்.

கோவையில் மட்டுமன்றி மாநிலம் முழுக்கவும் இன உரிமை சார்ந்த பலநூறு போராட்டங்களை நடத்தியவர் ராமகிருட்டிணன். ஈழ ஆதரவுப் பரப்புரைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து இன்றுவரை அதை வீரியம் குறையாமல் நடத்திக்கொண்டிருக்கிறார்.

கருப்பு ஜூலை என்று வேதனையோடு நினைவு கூறப்படும் கொடூரம் 1983 ஜூலை 24-இல் கொழும்பு நகரில் தொடங்கி இலங்கையெங்கும் தொடர்ந்தது. சாலைகளிலும், வீடு புகுந்தும் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

தமிழ்ப்பெண்கள், சிறுமிகள் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். புத்த பிக்குகளும், சிங்கள பேரினவாதிகளும் இதனை முன்னின்று நடத்த காவல்துறையும், ராணுவமும் அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தப் புகைப்படங்களையெல்லாம் திரட்டி தமிழ்நாடு முழுவதும் கண்காட்சி நடத்தினர் ராமகிருட்டிணனும், அவரது கருஞ்சட்டைத் தோழர்களும். இதனால் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னை என்று ஒதுங்கியிருந்த தமிழ்நாட்டு இளைஞர்கள் இதனை இனப்போராக உணர்ந்து ஈழ ஆதரவாளர்களாக மாறினர்.

டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், பிளாட் என பல குழுக்கள் இருந்தாலும், புலிகளை அடையாளங்கண்டு ஆதரித்தவர் ராமகிருட்டிணன். ஆலைத் தொழிலாளிகள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் சந்தித்துப்பேசி நிதி திரட்டி போர்க்களத்துக்கு அனுப்புவதை தீவிரமாகச் செய்து வந்தார். போராடும் புலிகள் நம் பிள்ளைகள் என்னும் உணர்வையும் தமிழ்நாடு முழுக்கவும் கொண்டு சென்றார்.

புலிகளுக்கான கொடிகள், முதல் ஆயுதங்கள் வரை ராமகிருட்டினணும் அவரது தோழர்களும் தயாரித்து அனுப்பினர். காயம்பட்டு வரும் போராளிகளைத் தங்க வைத்து சிகிச்சையளிப்பது மட்டுமன்றி புதிய போராளிகளுக்கு பயிற்சி மையம் அமைத்துப் பாதுகாத்தது வரை ராமகிருட்டிணனும், ஆறுச்சாமியும், கொளத்தூர் மணியும் அர்ப்பணிப்போடு செய்தனர்.

கையெறி குண்டுகளைத் தயாரித்து அவற்றை வேதாரண்யம் வழியாக ஈழத்துக்கு அனுப்பும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு முறை இந்த வெடிகுண்டு மூட்டையினை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வேதாரண்யம் பேருந்தில் ஏற்றும்போது ஒரு குண்டு தவறி விழுந்து வெடித்துவிட்டது.

இதனை அங்கிருந்த ராணுவ வீரனொருவர் பார்த்துவிட்டு காவல்துறையில் புகாரளித்தார். இதனால் ராமகிருஷ்ணனுக்கும், அவரது தோழர் ஆறுச்சாமிக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. இவ்வாறு தொடங்கிய போராட்டம்தான் கடைசியில் ராணுவ வண்டிகளைத் தாக்கியதுவரை சென்றது.

இதனால் ராமகிருட்டிணனோ, அவரது தோழர்களோ தனிப்பட்ட முறையில் எந்த சிறு லாபத்தையும் அடையவில்லை, ஆனால் இழந்தவை ஏராளம். அவருக்கு 75 ஆம் பிறந்த நாள் இப்போது! இந்த எழுபத்தி ஐந்தாவது வயதிலும் நம் மாநிலத்தின் நலன்களுக்காகவும், மதவாத சக்திகளுக்கெதிராகவும் போராடிக் கொண்டே இருக்கிறார் இந்தக் கருஞ்சட்டை வீரர்.

பிரபாகரனின் அழைப்பின் பேரில் வன்னிக்காட்டிற்குச் சென்று பல நாட்கள் தங்கி அவரிடம் பயிற்சி எடுத்த வரலாறு ராமகிருட்டிணனுக்கே சொந்தமானது. ஒரு இனப்போராட்டத்தின் ஆவணமாகக்கருதி அவர் தன் வரலாற்றை எழுதவேண்டும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram