தொடர்கள்

"அப்பா நீ நடிக்கவே இல்லை''

இரா.பிரபாகர்

பொதுவாக தொழில்முறை அல்லாத என்னைப் போன்றவர்கள் நடிக்கச் செல்வதற்கு கொஞ்சம் கூடுதல் துணிச்சல் தேவை. அப்படி துணிந்த நண்பர்கள் பலரின் அனுபவங்கள் ரசிக்கத் தக்கனவாக இருந்ததில்லை.

பாரதிராஜா படத்தில் நடித்த பெரும் பேராசிரியர் ஒருவர் உணர்ச்சிகரமான காட்சியில் நடிக்கத் திணறியபோது இயக்குநர் ஓங்கி ஒரு அறைவிட அந்த அதிர்ச்சியில் அவர் முகபாவம் காட்சிக்குத் தேவையானதாக மாறியதாக ஒரு செய்தியைக் கேள்விப் பட்டிருந்தேன். தங்கர்பச்சானின் படத்தில் ஒரு காட்சியில் தமிழகத்தின் பெரும் நாடக ஆளுமை ஒருவர் பூம் பூம் மாட்டுக்காரராக ஒரு ப்ரேமில் வலப்பக்கமிருந்து இடப்பக்கமாக கடந்து சென்றதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறேன். அவருடைய இன்னொரு படத்தில் பல்கலைக்கழக துணைவேந்தராகும் வரிசையிலிருந்த ஒரு பேராசிரியர் மேற்சட்டையில்லாமல்  ஒரு அரைத்துண்டைக் கட்டிக்கொண்டு பலாப்பழத்தைத் தலையில் சுமந்த காட்சியையும் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு நடக்குமிடத்தில் எந்த ரூபத்தி்லும் எந்தவிதமான சவால்களும் வருவதற்கு சாத்தியமுண்டு. நம் இயக்குநர்கள் படப்பிடிப்புத் தளத்தில் அந்த மொத்தச்சூழல் உருவாக்கும் கற்பனைக்குத் தக்கவாறு ‘இம்ப்ரவைஸ்’ செய்வார்கள் அல்லவா? அப்படித்தான் அன்றும் நடந்தது. பச்சையப்பன் கல்லூரியில் காலை ஆறு மணிக்கு வேட்டி சட்டை அணிந்து தயார் நிலையில் இருந்தேன். பதினோரு மணியளவில் அழைக்கப்பட்டேன். பெருங்கூட்டமாக மாணவர்கள். மேலே நாயகன் சிவா. கீழே மாணவர்களோடு கல்லூரி முதல்வர் பக்கத்தில் நான். எங்கள் மூவருக்குமான உரையாடல். இரண்டு மூன்று முறை எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று இயக்குநர் சுதா…  ‘சார், அந்த டயலாக் பேசியவுடன் அவரை அலாக்காகத் தூக்கிவைத்துக்கொள்ளுங்கள். அங்கிருந்தே அடுத்த டயலாக்கைப் பேசட்டும்’ என்றார். ஏற்கனவே வேட்டி அவிழாமலிருக்க பிரயத்தனப் பட்டுக்கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால் நான் வேட்டி கட்டியதேயில்லை. என்னிடம் வேட்டியே இல்லை. இந்த அழகில் வேட்டியோடு மாணவர்கள் கொத்தாகத் தூக்க, வசனத்தையும் வேட்டியையும் சேர்த்துப் பேண பெரும்பாடு படவேண்டியதாகிவிட்டது. அன்றைய சம்பவம் முடிந்த ஆசுவாசத்தில் ஓரமாய் அமர்ந்துகொண்டேன். மதுரை வட்டார வழக்கில் சந்தேகம் வந்தால் அழைப்பதாகச் சொன்னார் உதவி. சினிமா என்றாலே காத்திருத்தல் தான் என்று ஒரு நண்பர் சொல்வார். இன்றைய முன்னணிஇயக்குநர்கள், நடிகர்களெல்லாம் காத்திருந்த கதையைக் கேட்டால் இந்த உண்மை விளங்கும். நான் மிக எளிதில் பொறுமை இழந்துவிடக்கூடியவன். மோட்சத்திற்குச் செல்லும் பேருந்து தாமதமாக வரும் பட்சத்தில் அப்போது கிளம்பவிருக்கும் நரகத்திற்குப் போகும் பேருந்தில் ஏறிவிடக்கூடியவன். மொத்த படப்பிடிப்பு நாட்களிலும் காத்திருத்தலை கையாள்வது எளிதாக இருக்கவில்லை.

மீண்டும் ஒரு நாள் மானேஜர் ஹரி அழைத்தார். ‘சார் பாஸ்போர்ட் இருக்குல்ல…. டிசம்பர் முதல்வாரம் லங்காவில் சூட்டிங் சார்’ என்றார். எனக்கு குழப்பமாக இருந்தது. ஸ்கிரிப்டின்படி இன்னும் ஒரு காட்சிதான் எனக்குரியது. அந்தக் காட்சிக்கு இலங்கைவரை செல்வதற்கு அவசியமில்லையே… ஒரு வேளை மானேஜர் சரியாகக் கேட்டிருக்கமாட்டாராக இருக்கலாம் என்று மட்டுப்படுத்திக்கொண்டேன். மீண்டும் இரண்டு நாளில் தேதி உட்பட பயணத்திட்டத்தை அறிவித்தார். ஒரு வேளை கதையில் பேராசிரியர் பாத்திரத்தை விரித்துவிட்டார்களோ? மதுரைத் தமிழ்ப் பேராசிரியரின் தமிழ்ப்பணியில் மனதைப் பறிகொடுத்த இலங்கைப் பெண் ஒருவர் இருந்து, அதை ஒட்டி ஒரு ‘ப்ளாஷ் பேக்’ கதை இருப்பதாக கதையில் ஒரு இடைச்செருகலைச் செய்துவிட்டார்களோ. ஏன் கூடாது. திரைக்கதையைத்தான் எங்கெங்கோ பின்னிப் பிணைக்கும்போது இப்படி ஏன் இருக்கக்கூடாது…என்று பலவாறு சிந்தித்துக்கொண்டு இலங்கை விமான நிலையத்தில் இறங்கினேன். காத்திருந்த காரில் கொழும்பு கடற்கரை சாலையிலுள்ள விடுதியில் இறக்கிவிட்டு, காலை 6 மணி சார்.. என்று எச்சரித்துச் சென்றார்கள். 

காலை படப்பிடிப்புத் தளத்தில் இறங்கியபோது நூறுக்கும் அதிகமான துணை நடிகர்களுடன் சூழல் பரபரத்துக் கொண்டிருந்தது. சென்னையிலிருந்தே பெருமளவிலான துணை நடிகர்கள் வந்திருந்தார்கள். அது ஒரு பிரிட்டிஷ் கால பழைய மருத்துவமனை வளாகம். நான் எதிர்பார்த்த மாதிரி  ஒப்பனைக்கூடத்தில்  இலங்கைத் தமிழ்ப்பெண் யாரும் தட்டுப்படவில்லை. ஏன் சிங்களப்பெண்ணாக இருந்தாலும் நமக்கு ஆட்சேபனை இருக்கிறதா என்ன? கலைக்குமுன் இனமென்ன? மொழியென்ன? பைலட் பிரேம்நாத்தில் சிவாஜிக்கு சிங்களப்பெண்ணோடு காதல் வரவில்லையா? இப்படியான எண்ணவோட்டங்களிடையே இடைமறித்த உதவி இயக்குநர் ‘சார் காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணிருங்க’ என்று அழைத்துப் போனார். அங்கே ஹேங்கரில் அதே வெள்ளை வேட்டி, கருப்பு சட்டை, வெள்ளைத் துண்டு, காதி செருப்பு  அச்சுப்பிசகாமல் காத்திருந்தது. கருப்புச் சட்டையைப் பார்த்தவுடனே… ம்ம்..ஒரு நல்ல ப்ளாஷ் பேக்கை தமிழ்சினிமா தவறவிட்டுவிட்டது என்பது புரிந்தது. கண்ணியமாக உடையை மாற்றிக்கொண்டு வெளியே வளாகத்தில் உலாத்திக்கொண்டு நேரத்தை கடத்திக்கொண்டிருந்தேன். அது ஒரு அழகான வளாகம். புல்வெளி. பிரம்மாண்டமான மரத்தின் மடியில் வெண்ணிற புத்தர்  அமர்ந்திருந்தார். ஒரு பத்து மணி வாக்கில் உதவி இயக்குநர் ஓடிவந்தார். காமிரா வெளியே இருந்தது. கட்டடத்தின் உள்ளே அழைத்துச் சென்று இங்கே அமர்ந்திருங்கள் என்று சொல்லிக் காணாமல் போனார். அங்கே ஏற்கனவே வெள்ளையும் சொள்ளையுமாக ஒரு பத்துக்கும் குறையாத நடிகர்கள். நடுவகிடு எடுத்திருந்த குருசோமசுந்தரம்  புன்னகைத்தார். பக்கத்தில் சேத்தன், அண்ணா கெட்டப்பில் அட்டகாசமாக அமர்ந்திருந்தார். ஓகோ… அண்ணாவோடும் கலைஞரோடும் உரையாடும் ஒரு விரிவான காட்சியாக இது இருக்கக்கூடும். கண்டிப்பாக வெட்டுப்படாது என்று கணக்குப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். மீண்டும் உதவி ஓடோடி வந்தார். சார் எந்திரிங்க… அண்ணா, கலைஞர் அவங்களுக்குப்பின்னாடி அப்படியே நடந்து வெளியே வாங்க எல்லோரும்… மானிட்டர் பாக்கலாம்… என்றார். ஓ.. அப்ப வெளியே போயி பேச்சு வார்த்தை இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.  ஆக்‌ஷன் என்ற இயக்குநரின் சத்தம் கேட்டவுடன் அண்ணா நடக்கத் தொடங்க அப்படியே பின் தொடர்ந்தோம். வெளியே காத்திருந்தவர்கள் அண்ணாவுக்கு மாலை அணிவித்து அண்ணாதுரை வாழ்க… அண்ணாதுரை வாழ்க… என்று கோஷமிட்டார்கள். மானிட்டர்  முடிந்தது. உதவி இயக்குநரை அழைத்து அண்ணாவை, அண்ணாத்துரை என்று சொல்லமாட்டார்கள். ‘அறிஞர் அண்ணா வாழ்க’ என்பதே சரியாக இருக்கும் என்றேன். இயக்குநரின் ஒப்புதலுடன் திருத்தப்பட்ட கோஷத்துடன் காட்சிக்கு தயாரானோம்.  ‘எல்லோரும் கவனிங்க.. அண்ணாவுக்கு மாலை அணிவித்தபின் அண்ணா நடந்து  கார்ல ஏறுவார்... மற்றவர்கள் அப்படியே நிற்கவேண்டும்..’ என்னைப்பார்த்து, ‘சார் நீங்க அண்ணா காரில் ஏறியவுடன் காரைக் கடந்து அப்படியே சென்றுவிடுங்கள்.’  ‘அப்புறம்?’ என்றேன்.  ‘நீங்க அப்படியே ஹோட்டலுக்குப் போயிரலாம். உங்களுக்கு ஷாட் முடிந்தது,’ என்றார். நாங்கள் பாளையங்கோட்டை சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வரும் காட்சிதான் அது. காட்சி என்று சொல்வதைவிட ‘ஷாட்’ என்றுதான் சொல்லவேண்டும். இந்த ஒரு ஷாட்டுக்காகத்தான் இந்தியப் பெருங்கடலின்மேல் 795 கிலோமீட்டர்கள் பயணம் செய்து வந்து   சேர்ந்திருக்கிறேன். ஒரு பெரும் முதலீட்டுத் தயாரிப்பின் வழிமுறைகளை அருகிலிருந்து பார்க்கும்போது வியப்பாகவே இருந்தது. இந்தப் படம் முழுவதிலும் 60களைக் கொண்டுவருவதற்காக பெரும் உழைப்பைச் செலுத்தி பொருட்களை சேகரித்திருந்ததைப் பார்த்தேன். சரி. அறைக்குச் செல்வதற்கு முன் புத்தரின் அருகில் காலாறலாம் என்று அமர்ந்தேன். இலங்கையைச் சார்ந்த துணை நடிகர் ஒருவர் அருகில் வந்தார். சார் ஒங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா? என்றார். நம்மோடு எதற்கு போட்டோ எடுக்கவிரும்புகிறார். சரி. ஒரு ஷாட்ல நடிச்சாலும் நடிகன் தானே. எடுக்கலாம் என்று எழுந்தேன். எடுத்தோம். அதோடு அவர் போயிருக்க வேண்டும். போகும்போது ‘நெறைய படங்கள்ல உங்களப் பாத்திருக்கேன் சார்’ என்று ஓர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். ஒரு வளரும் கலைஞனுக்கு என்னென்ன ரூபங்களில் மன உளைச்சல்களை ரசிகர்கள் உண்டாக்குகிறார்கள் பாருங்களேன். சிறிது நேரத்தில் இன்னொரு குரூப் வந்து படமெடுத்துப் போனது. போனவர் சும்மா போகவில்லை. பலபடங்களில் என் நடிப்பைப்பார்த்த பரவசத்தைப் பகிர்ந்துகொண்டே செல்கிறார்போல. சரி. நடந்தது நடந்துவிட்டது. உண்மை தெரிவதற்குள் ஊரைக் காலிபண்ணிவிடவேண்டும் என்ற திட்டத்துடன் ஓட்டுநரைத் தேடஆரம்பித்தேன்.

 ‘நாளைக்கு ப்ளைட் போட்றலாமா சார்...?’ கேட்டார் மானேஜர். ‘இல்லை. நான் சொன்னபிறகு போட்டால் போதும்,’ என்று சொல்லிவிட்டு விடுதிக்குச் சென்றேன். இதுவரை இலங்கைக்கு வந்ததில்லை. இலங்கைக்கு சுற்றுலா மனநிலையில் பயணிக்கத் தோன்றாததால் இதுவரை இலங்கைக்கு வரதிட்டமிட்டதில்லை. என்னுடைய நல்ல நேரம். லண்டனிலிருந்து வந்திருந்த நண்பர் பாலசுகுமாருடனும், நண்பர் பத்திநாதனுடனும் தொடர்பில் இருந்ததால் அவர்களோடு சில திட்டங்கள் இருந்தன. இருவருடனும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார் வரை ஒருவாரம் சுற்றித்திரிய முடிந்தது பெரும் வாய்ப்பாக இருந்தது.

நிம்மதியாக ஊர்வந்து சேர்ந்து இரண்டு மூன்று மாதங்களாக எந்த அரவமும் இல்லை. பிற்பாடு ஒருநாள் அழைப்பு வந்தது. தொடக்கத்திலிருந்தே 60களின்  மதுரை ஸ்லாங் பற்றிய நிச்சயமின்மை இருந்துகொண்டே இருந்தது. உரையாடலில் ‘வந்துருக்காய்ங்க… போயிருக்காய்ங்க..’ என்பதாக இருந்தது. 60களின் மதுரை வழக்கை சரிபார்க்க எந்த சான்றுகளும் இல்லை. 60கள் சினிமாக்கள் மேடைத்தமிழ் பேசிக்கொண்டிருந்தன. 60களின் தமிழ்ப் புனைகதைகளிலும் வட்டாரவழக்கைக் கொண்ட கதைகள் இல்லை. ஒன்று மட்டுமே செய்யமுடியும். இப்போதைய மதுரை வழக்காக அறியப்படும் சொற்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம். 2000த்திற்குப் பின்வந்த சுப்ரமணியபுரம் தொடங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரை வந்த மதுரை நேட்டிவிட்டி படங்களில் புழங்கும் தமிழையே தொன்றுதொட்டு மதுரைக்காரர்கள் பேசிவருவதாக கோடம்பாக்கம் கருதுகிறது. 80களில் நாங்கள் கல்லூரிகளில் படித்த காலத்தில்கூட இந்த வழக்கு இல்லை. மேலும் 60களின் கல்லூரி மாணவர்களின் தரம் இன்றுள்ளதைப் போன்றதல்ல. அதையொட்டித்தான் நாம் வார்த்தைகளைப் பயன்படுத்தவேண்டும் என்பது என் தரப்பாக இருந்தது. வட்டார வழக்கு என்பது பெருநகரங்களில் ‘வர்க்கம்’ தொடர்பானது அல்லவா? அதிலும் 60களில் கல்லூரியில் படிப்பவர்களின் வழக்காக ‘அவிங்க..இவிங்க’ இருக்கமுடியாதுதானே. டப்பிங்கின் இறுதிக்கட்டம் வரைக்கும் சிவகார்த்திகேயனுக்கு அந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. கூடுதலாக 60களில் தியாகராசர் கல்லூரியில் படித்த பேராசிரியர் சாம் ஜார்ஜைத் தற்செயலாக பேச்சுவாக்கில் கண்டுபிடித்து அவரையும் முழுப்படத்தையும் இயக்குநர் பார்க்க வைத்தார். அவரும் என் கருத்தை வழிமொழிந்தவுடன் ஒருவழியாக அந்தக் குழப்பம் தீர்ந்தது.

தாய் மொழி தொடர்பான இப்படத்தில் வசனத்திற்கான இடம் கூடுதலாகவே இருந்தும் இயக்குநர் முடிந்தளவு வசனங்களைக் குறைவாகவே பயன்படுத்த விரும்பினார். படத்தின் விறுவிறுப்பிற்கு அவர் முக்கியத்துவம் அளித்திருக்கலாம். ஆனால் அவருடைய மனத்திட்டம் எப்போதும் மிகத்தெளிவாக இருந்தது. படம் வெளிவந்து, இரண்டாம் நாள் மதுரைத் திரையரங்கில் குடும்பத்துடன் படம் பார்த்தேன். என் மகள் சொன்னாள். அப்பா நீ நடிக்கவே இல்லை என்று. ஓகோ... நடிக்கவில்லை. பாத்திரமாகவே மாறிவிட்டீர்கள் என்று சொல்கிறாளோ என்று நினைத்தேன். நீ எங்களோட பேசற மாதிரிதான் இருந்தது என்று பலூனை உடைத்தாள். நான் சொன்னேன். இருக்கலாம். எல்லோருக்கும்  பேசும் முறையில், உடல் மொழியில் ஓர் இயல்பு உண்டு. அதுவே பிரதானமாக வெளிப்படும். சிவாஜியிலிருந்து தனுஷ்வரை அப்படித்தான். தமிழகத்தின் நடிப்புக் கடவுளாகக் கருதப்படும் சிவாஜியே, அவர் பேச்சுமுறையை மாற்றமுடியாமல் தேய்வழக்காக மாறியதைப் பார்த்திருக்கிறோம். நாயகர்களில் கமல்ஹாசன் மட்டுமே சில படங்களில் (குணா, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், சலங்கை ஒலி, அன்பே சிவம்) பாத்திரங்களாக மாறியிருப்பார். சினிமாவில் எல்லோருக்குமே ஒரு பாத்திரம் உண்டு. இரண்டாவது படத்தில் நடிக்கும்போதுதான் அவர் உண்மையிலேயே நடிகரா? தற்செயல் நடிகரா என்பது தெரியும்.

(பின் குறிப்பு: இந்தத் திரைக்கதையைப் படித்தபின்னரே, மொழிப்போரின் பல பரிமாணங்கள் எனக்குத் தெரிய வந்தன. குறிப்பாக பொள்ளாச்சியில் 200 பேருக்குமேல் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் போன்ற சம்பவங்கள். பொதுவெளியிலும் பலரும் அதை ஆமோதித்தார்கள். படத்தின் மையமான மொழிப்போர்    இணையவெளியில் பரவலான பேசுபொருளாக மாறியது. பொள்ளாச்சியில் அதற்காக ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படவேண்டும் எனும் கோரிக்கைகூட எழுந்துள்ளது. மொத்தத்தில் ஒரு திரைப்பட ஆர்வலனாகவும் தமிழ் மாணவனாகவும் இந்த படத்தில் சிறிய அளவில் பங்கேற்ற அனுபவம் எல்லா வகையிலும் இனிய அனுபவமாக என்னோடு இருக்கும்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram