தொடர்கள்

இங்கே ஒரு டங்கல்!

பெருவழிப்பாதை - 27

கவிதாபாரதி

ஓர் ஏழைத்தந்தை… வெற்றிகரமான விளையாட்டு வீரனாக வேண்டும் என்பது அவருடைய கனவு. வறுமையான சூழல்… அவர் கனவு கனவாகவே போகிறது. எல்லோரையும்போல திருமணம் செய்துகொண்டு சம்சார சாகரத்தில் சங்கமிக்கிறார்.

ஆனாலும் அவரது கனவு சாம்பலுக்குள் கிடக்கும் சிறு கங்குபோல உயிர்ப்புடனே இருக்கிறது.

நிறைவேறாத தன் கனவுகளை, தன் குழந்தைகளைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று தவமிருக்கிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் இரண்டும் பெண் குழந்தைகள். அந்தத் தந்தை மனந்தளரவில்லை. இந்த பெண்கள் இருவரையும், தான் ஆசைப்பட்டது போல விளையாட்டு வீரர்களாக்க முயற்சி செய்கிறார். குற்றமும் சுற்றமும் நட்பும் அவரைக் கேலி செய்கிறது, விலக்கி வைக்கிறது.. அதற்காக ஒரு போதும் அவர் பின்வாங்கவில்லை, தன் இரண்டு மகள்களையும் வெற்றிகரமாக விளையாட்டு வீராங்கனைகளாக்குகிறார்.

இப்படி எழுதினால் அது அமீர்கானின் ’டங்கல்' திரைப்படத்தின் கதை என்று சொல்வீர்கள். ஆனால் இது அமீர்கானின் கதையன்று. முருகேசனின் கதை.

முருகேசனோடு பிறந்தவர்கள் நான்கு ஆண்கள்; ஐந்து பெண்கள். இந்தக் குடும்பம் பசியாற்ற தந்தையின் வருமானம் போதவில்லை.

தாய் வீட்டு வேலைக்கு செல்வார். அங்கு கொஞ்சம் அரிசி கொடுப்பார்கள்; அதைக் கொண்டு வந்து கஞ்சி காய்ச்சுவார். அதிலிருக்கும் சோறு பெண் குழந்தைகளுக்கு, கஞ்சி ஆண் குழந்தைகளுக்கு. அரை வயிறு கூட நிரம்பாத வாழ்க்கையை வாழ்ந்த முருகேசனுக்கு விளையாட்டு வீரர் ஆக வேண்டும் என்பது லட்சியம், கனவு.

எல்லா விளையாட்டுகளும் அவருக்கு கை வரப்பெற்றன. அவர் கராத்தேவில் தன் கவனத்தைச் செலுத்தினார். போட்டிகளுக்கு செல்லும்போது அதில் கலந்துகொள்ளும் மற்ற இளைஞர்கள் காரில் வந்து இறங்குவார்கள். சத்தான உணவுகளை உண்பார்கள். முருகேசனோ அரைவயிற்றுக் கஞ்சியோடு பசி மயக்கத்தில் செல்வார். ஆனாலும் இறுதியில் வெல்வது அவர்தான், ஆனாலும் வறுமை அவரை வென்றது. விளையாட்டுக் கனவைத் தொடர முடியாத சூழலில் அதைக் கைவிட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது, நிரந்தர வேலையில்லை அன்றாடம் கிடைக்கும் கூலித் தொழில்தான். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்தவள் கிருத்திகா. இரண்டாவது துளசிமதி. துளசிக்கு இடது கையில் சற்றுக் குறைபாடு. அந்தக் கையை இயக்க முடியாது.

இரு பெண் குழந்தைகளையும் சிறு வயதிலிருந்து விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார். ஒரு கை இயங்காத துளசிமதிக்கென்று எந்தச் சிறப்பு சலுகையும் இல்லை.. எல்லா உடற்பயிற்சிகளையும் அவரும் செய்ய வேண்டும். ஒவ்வொரு விளையாட்டாக அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.

அப்போது பூஸ்ட் வாங்கினால் அதனோடு ஒரு பேட்மிண்டன் மட்டையை கொடுப்பது அந்த நிறுவனத்தின் விளம்பர உத்தி.

பூஸ்ட் வாங்கிய பணக்காரர்களிடமிருந்து இந்த மட்டையை நன்கொடையாக கேட்டு வாங்கி அதைக் கொண்டு தன் மகள்களுக்கு பேட்மிண்டன் விளையாட்டை கற்றுக் கொடுத்தார். பெரிய பயிற்சிக்குப் பிறகு அவர்களிடம் கேட்டார், "இந்த விளையாட்டு எப்படியிருக்கிறது?’’ அந்தக் குழந்தைகள் கூறினர்,"கை வலிக்குதுப்பா.. பள்ளிக்கூடத்துல பாடம் எழுத முடியல.. கஷ்டமா இருக்குப்பா.. பேட்மிண்டன் வேண்டாம்ப்பா.."

முருகேசன் சிரித்தார்.. ”அப்படியானால் இதுதான் நீங்கள் தொடரப் போகும் விளையாட்டு.. கஷ்டப்பட்டுக்கிடைக்கும் வெற்றிதான் உங்களை அதே துறையில் அழைத்துச் செல்லும்.."

காலை ஐந்து மணிக்கு மைதானத்திற்கு அழைத்துச் சென்று பயிற்சியைத் தொடங்குவார். எட்டு மணி வரை கடுமையான பயிற்சி. பிறகு அவர்களை பள்ளிக்கு அனுப்புவார். கையிலிருக்கும் காசுக்கு அவர்களுக்கு முடிந்த அளவுக்கு ஊட்டச்சத்துள்ள உணவை வாங்கிக் கொடுத்தனுப்புவார்.

பின் ஏதாவது ஒரு வேலைக்குப்போய் கிடைக்கிற பணத்தில் புரோட்டின் தேவைகளுக்காக கோழிக்கறி வாங்கிச் சமைத்து மதியம் குழந்தைகளுக்காக எடுத்துச்செல்வார்.

மீண்டும் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பயிற்சி. அதற்குப் பிறகு இருவரும் அன்றைய வீட்டுப் பாடங்களை எழுத வேண்டும். இப்படியான கடுமையான பயிற்சிகளைக் கொடுத்து உள்ளூர் போட்டிகளில் அந்தக் குழந்தைகள் வெற்றி பெற வைக்கிறார்.

அவர் குடியிருப்பது காஞ்சிபுரத்தின் ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்கிற ஒரு குடிசையில், மழை பெய்தால் வீட்டுக்குள் ஒழுகும் நீரைப் பாத்திரங்களை வைத்துப் பிடித்து வெளியே ஊற்ற வேண்டும் என்கிற நிலை.

கிருத்திகாவும், துளசிமதியும் உள்ளூர்ப் ்போட்டிகளில் தங்கள் வெற்றிக் கணக்குகளைத் தொடங்கினர். அடுத்து மாநில அளவிலான போட்டிகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கான மட்டைகளின் விலை அதிகம். அதை வாங்கித்தரும் வசதி முருகேசனுக்கில்லை. காஞ்சிபுரம் மைதானத்தில் பொழுதுபோக்காக விளையாடவரும் பணக்காரர்கள் தங்கள் மட்டை உடைந்துவிட்டால், அதைத் தூக்கிப் போட்டுவிட்டு புதுமட்டை வாங்கி விடுவார்கள். இப்படி உடைந்துபோன மட்டைகளைக் கேட்டுவாங்கி அதில் ஓட்டுப் போட்டு தன் குழந்தைகளுக்குத் தருவார்.

இவ்வாறு மூன்று இடங்களில் ஒட்டுப்போட்ட மட்டை கொண்டு விளையாடித்தான் இருவரும் மாநில அளவில் சாம்பியன் பட்டத்தை வென்றார்கள். எல்லாவற்றிற்கும் முருகேசன்தான் பயிற்சியாளர்.

அடுத்து தேசிய அளவிலான போட்டிகள். இதில் கலந்துகொள்ளும் செலவு மிக அதிகம். மூன்று பேருக்கு பயணக் கட்டணம், தங்குமிடம், உணவு ஆகியவற்றை சமாளிப்பது கடினம். போட்டி நடக்கும் மைதானங்கள் அதி நவீனமான இடங்களில் அமைந்திருக்கும். அதனருகே தங்குமிடங்களின் வாடகை முருகேசனால் நினைத்துப் பார்க்க முடியாதவை. எனவே அங்கிருந்து வெகு தொலைவில் புறநகர்ப்பகுதியில் வாடகை குறைவான விடுதிகளில் அறையெடுத்துத் தங்கவைப்பார்.

மற்ற போட்டியாளர்கள் விலை உயர்ந்த கார்களில் வந்து இறங்குவார்கள். முருகேசன் நகரப்பேருந்துகளில் தன் குழந்தைகளுடன் வந்து இறங்குவார். மற்ற குழந்தைகள் விலை உயர்ந்த ஷூக்கள், உயர்தர மட்டைகளுடன் களமிறங்குவார்கள். கிருத்திகாவும், துளசிமதியும் இருநூறு ரூபாய்க்கு வாங்கிய ஷூ, ஒட்டுப்போட்ட மட்டைகளுடன் விளையாடுவார்கள்.

“ஏறக்குறைய இரண்டு மாதங்கள் உழைத்து, பணத்தைச் சேர்த்து வைத்துத்தான் அப்பா இதுபோன்ற போட்டிகளுக்கு அழைத்துச்செல்வார். இந்தப் போட்டியில் வென்று அதில் பணப்பரிசும் கிடைத்தால் அடுத்த சில நாட்களுக்கு அது எங்கள் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். தோற்றுப்போனால் ஊர் திரும்பி, மீண்டும் பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கவேண்டும். வெற்றி தோல்விகளைப்பற்றி அப்பா கவலைப்பட மாட்டார், ஆனாலும் தோல்வியால் அடையப்போகும் வறுமை பற்றிய பயமே எங்களை பெரும்பாலான போட்டிகளில் வெல்ல வைத்தது…’’ என்கிறார் கிருத்திகா.

2013 வர்தா புயலில் வீடு சேதம் அடைந்தது. அதற்கான இழப்பீட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு நடந்து அங்கு கிடைத்த சொற்ப இழப்பீட்டுத் தொகையில் தங்கள் குடிசையைச் சரி செய்து கொண்டு வாழும் நிலைமையில் தான் முருகேசனின் குடும்பம் இருந்தது. இதற்கிடையில் அவர் தன் சுற்றுப்புறங்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் சாதிய ரீதியான ஏளனங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. எனினும் இவை எதுவும் தன் குழந்தைகளைப் பாதிக்காத வகையில் அவர்களை பார்த்துக்கொண்டார்.

இப்படியான நிலையில் கிருத்திகா தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.

பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களும் பெற்றார். விளையாட்டுத் தகுதியின் அடிப்படையில் அவருக்கு நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. விளையாட்டைத் தொடர்ந்தபடியே பல பரிசுகளையும் வென்று தன் படிப்பையும் முடித்தார். இன்று அவர் சென்னை மாநகராட்சியில் கால்நடைத்துறை அலுவலராக பணிபுரிந்தபடி இன்னும் தன் விளையாட்டைத் தொடர்கிறார்.

2023 ஆம் ஆண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடக்கிறது. ஏற்கனவே விருது பெற்றவரான சீன வீராங்கனை ஆடுகிறார். அவரை எதிர்த்து விளையாடுபவர் நம் துளசி மதி. அரங்கம் முழுக்க சீன ரசிகர்களால் நிறைந்திருக்கிறது. இந்தியர்கள் 10 பேர் கூட இல்லை. முழு அரங்கமும் சீன வீராங்கனையைத்தான் ஊக்குவிக்கிறது; ஆதரிக்கிறது. ஆனாலும் துளசிமதி அந்தப் போட்டியில் வென்றார். ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தோடு இந்த போட்டிகளில் வென்ற முதல் இந்திய பெண்மணி என்னும் பெருமையுடன் அவர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். ஊடகங்கள் அவர் வருகைக்குக் காத்திருந்தன. வெற்றியோடு திரும்பி வரும் தன் மகளை வரவேற்க முருகேசன் காத்திருந்தார். தரையிறங்கிய துளசி மண்டியிட்டு தன் தகப்பனும் குருவுமான முருகேசனுக்கு வணக்கத்தை செலுத்தி தான் பெற்ற பதக்கத்தை அவருக்கு அர்ப்பணித்தார். பார்வையாளர்களும் நெகிழ்ந்து கைதட்டி பாராட்டினார்கள் . அதே ஆண்டு பாரிஸில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசு துளசிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கிக் கௌரவித்தது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி நம்முடைய குடியரசு தலைவர் திரௌபதி அவர்களின் கையால் துளசிமதி அர்ஜுனா விருது பெற்றார்.

அண்மையில் பிரான்சிலும் அயர்லாந்திலும் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு ஆறு விருதுகளை வென்றார். அங்கே வீரர்களின் தனிப்பட்ட பயிற்சியாளர் சொந்த செலவில் தான் செல்ல வேண்டும் என்பதால் முருகேசன் துளசிமதியோடு செல்வதற்கு இயலவில்லை. துளசி வெற்றி பெற்றதும் அங்குள்ள ஊடகத்துறையினர் இதற்கு காரணம் யார் என்று கேட்டார்கள். துளசி பெருமையோடு தன் தந்தையைப் பற்றிக் கூறினார். அவர்கள் முருகேசனைக் காண விரும்பி காணொளி அழைப்பு மூலம் அவரோடு உரையாடி மகிழ்ந்தனர்.

இதுவரை 25 நாடுகளில் நடந்த சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 27 தங்கம் 17 வெள்ளி 13 வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார் துளசிமதி.

இப்போது விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் படித்துவருகிறார் துளசி. கல்லூரிக்கு அருகிலேயே வீடெடுத்துத்தங்கி அவருக்கு இன்னும் பயிற்சியளித்துக்கொண்டிருக்கிறார் முருகேசன். தன் மகளுக்கு மட்டுமன்றி அவரைப்போன்ற இன்னும் பலருக்கும் பயிற்சியளித்துக்கொண்டிருப்பது முருகேசனின் தனிச்சிறப்பு.

சாதனைக்கு எதுவும் தடையில்லை என்பதை இதுபோன்ற பல முருகேசன்கள் போதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். முருகேசன்களும், துளசிமதிகளும் வாழ்க!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram