தொடர்கள்

பகுதி நேர வேலை... பாழாகும் உயர்கல்வி!

திசையாற்றுப்படை - 22

இரா.பிரபாகர்

பொதுவாக கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் (செமஸ்டர்) முடிந்தவுடன் தேர்ச்சியடையாத, மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும் அவர்தம் பெற்றோர்ளையும் அழைத்து கலந்து பேசுவது வழக்கமான ஒன்று. அப்படி நான் இளங்கலை பயிலும் மாணவர்களை அழைத்துப்பேசிய ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு மாணவர் அவருடைய தாயாரோடு வந்திருந்தார். அந்த மாணவர் ஏற்கனவே என் கவனத்தில் இருந்து வருபவர். காரணம் நல்ல விளையாட்டு வீரருக்குரிய உடல் முறுக்குடனும், நல்ல நேர்த்தியான உடைகளுடனும் வலம் வருபவர்.

பெற்றோர் ஏதோ ஒரு மாத ஊதியத்தில் இருக்கக் கூடும் என்று நினைத்திருந்தேன். அன்று அவருடைய அம்மாவைக் கண்டபோது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. காரணம் படிப்பறிவில்லாத எளிமையான ஒரு கிராமத்துத் தாயாக அவர் இருந்தார். அவர் விவசாயக் கூலியாக இருக்கிறார். தந்தையார் செயலாக இல்லை. அவரைப்பற்றிப் பேச இருவரும் விரும்பவில்லை எனத் தெரிந்தது. நான் அந்த மாணவனிடம் ‘அம்மா இவ்வளவு சிரமப்பட்டு படிக்க வைக்கிறார்களே… நீ ஏன் படிப்பதில்லை. எந்தப்பாடத்திலும் தேர்ச்சி அடையாததற்கு என்ன காரணம்? ஒரு மணிக்கே வகுப்புகள் முடிந்துவிடுகிறதே… நீ விளையாட்டில் இருக்கிறாயா? அதற்குப்பின் உன்னுடைய பொழுதுபோக்கு என்ன? என்று தோரணையாக வினாக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தேன். அவன் முகத்தில் எந்த சலனமுமில்லாமல், நான் பார்ட் டைம் வேலைக்குப் போறேன்சார் என்றான். மார்க்கெட்டில் மூட்டை தூக்குவதாகவும், இரவு 9 மணிக்குமேல் ஆரம்பித்து பின்னிரவுவரை சுமைகளை ஏற்றி இறக்கிவிட்டு, அப்படியே கல்லூரிக்கு வந்துவிடுவதாகவும், அதனால் பிற்பகல் முழுவதும் தூங்க வேண்டியிருப்பதால் படிக்க நேரம் இருப்பதில்லை என்றார். அவருடைய கட்டுக்கோப்பான உடல் தோற்றத்திற்கான காரணம் அப்போதுதான் பிடிபட்டது. மாதம் 4000 முதல் 5000 வரை சம்பாதிப்பதாகவும் அதில் 2000 த்தை அம்மாவுக்கு கொடுத்துவிட்டு மீதத்தை சாப்பிட, உடைகள் மற்றுமான செல்பேசி செலவுகளுக்கு வைத்துக்கொள்வதாகவும் சொன்னார். தன் மகன் மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்பதைப்பற்றிய கவலையைவிட, மகன் பொறுப்பாக பகுதிநேரமாக வேலைக்குச் சென்று தனக்கும் உதவியாக இருப்பதைப்பற்றிய பெருமிதமே அந்த அப்பாவித்தாயிடம் வெளிப்பட்டது.

ஒரு முதுகலை மாணவி ஒரு மருந்து குடோனில் வேலை பார்க்கிறார். பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை. 3000 ரூபாய் மாதச் சம்பளம் கிடைக்கிறது. அந்தச் தொகை இல்லாவிட்டால் அவர் படிப்பைத் தொடரமுடியாது. இன்று தமிழகம் முழுவதும் நகரங்களில் மலிவான கூலிக்கு எளிதாகக் கிடைப்பவர்கள் கல்லூரி மாணவர்கள். பெரும்பாலும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள். நல்லவேலையாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் மாலைவரை கல்லூரியில் இருந்தாகவேண்டியிருக்கிறது. சென்னையின் மையத்தில் இருக்கும் ஒரு கல்லூரியின் பேராசிரிய நண்பரிடம் உரையாடியபோது சொன்னார். 60 மாணவர்கள் பயிலும் ஒரு வகுப்பில் பாதிக்கும் குறைவானவர்களே வகுப்புக்கு வருகின்றனர். மற்றவர்கள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்த கையோடு ஏதாவது வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். தேர்வு நேரத்தில் ஆஜராகி தேர்வையும் எழுதிவிடுகிறார்கள் என்கிறார். இன்று பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகளில் வருகைப்பதிவு, மாணவர் தேர்ச்சி போன்றவற்றில் நீக்குப்போக்காக இருந்துகொள்வது இயல்பாக மாறியிருக்கிறது. காரணம் கல்லூரியின் தேசிய தர மதிப்பீட்டுப் பட்டியலுக்கு தேர்ச்சி சதவீதம் ஒரு முக்கியமான அம்சமாகும்.

ஒரு நாள் வகுப்பில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மொத்தமாகக் காணாமல் போனார்கள். விசாரித்தபோது சார் இன்னைக்கு நல்ல முகூர்த்தம் என்றார் ஒரு மாணவர். எல்லா மாணவர் வீடுகளிலும் திருமணமா என்ன? என்றபோது பந்தி பறிமாறப் போயிருக்காங்க சார். 350 ரூபா+ நல்ல சாப்பாடு என்றனர்.

ஆக இன்று திருமணவீடுகளில் பந்தி பரிமாறுவது, மாலைநேர பரோட்டாக்கடைகளில் சப்ளையர், தண்ணீர் கேன்கள் விநியோகம், மால்கள் மற்றும் கடைகளில் விற்பனையாளர், உணவு விநியோகம், வாடகை பைக் சவாரி ஓட்டுவது என்று ஆரம்பித்து சுமைதூக்குவது வரையிலான சகல வேலைகளையும் மிகக் குறைந்த ஊதியத்திற்கு செய்யத் தயாராக இருப்பவர்களாக கல்லூரி மாணவர்கள் ஆகியிருக்கிறார்கள் அல்லது ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, மாலை நேரங்களில் குட்டிச்சுவர்களில், தேநீர்கடைகளில் அரட்டை அடித்துக் கொண்டு, அரசாங்கத்தைக் குறைகூறிக்கொண்டு, வேலைக்கான ஓலையைக் கொண்டுவரப்போகும் தபால் காரருக்காய் காத்திருந்த 70கள் கால ‘பாலைவனச்சோலை’ சந்திரசேகர் வகையறா இளைஞர்களாக இல்லாமல் படிக்கும்போதே பொறுப்பாக ஒரு வேலையையும் பார்த்துக் கொண்டு குடும்பத்திற்கும் உதவியாக விளங்கும் இந்த இளைய சமுதாயத்தை முன்னிறுத்தி ‘உழைத்தால் உயரலாம்’ என்று ஒரு எழுச்சியுரை ஆற்றுவதுகூட சாத்தியமானதே. ஆனால் உண்மை சற்று வேறானது. தமிழக உயர்கல்வியின் நோக்கம், தற்போதைய அதன் போக்கு அதோடு இன்றைய கீழ் நடுத்தர, முதல்தலைமுறை படிப்பாளிகளுக்கான எமனாக இந்த ‘பகுதி நேர வேலை’ மாறியிருக்கிறது என்பதைப் பொதுவெளியில் விவாதிக்க வேண்டியது அவசியமாக மாறியுள்ளது.

20ஆம் நூற்றாண்டின் நவீன வரவுகளில் ஒன்றே இந்த பகுதி நேர வேலை. குறிப்பாக உலகப் போர்கள் முடிந்தபின் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார எழுச்சி (post war economic boom) புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஏற்கனவே மனிதவளப் பற்றாக்குறை இருக்கும் மேற்கத்திய நாடுகளில் அதிக நிபுணத்துவம் இல்லாத எளிய வேலைகள் பகுதி நேர வேலைகளாக மாறுகின்றன. உணவகங்களில் பரிசாரகர்களாக, அங்காடிகளில் விற்பனையாளர்களாக இப்படியாக பல்வேறு உதிரிப் பணிகளில் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் பணிவாய்ப்பைப் பெறுகிறார்கள். இத்தகைய பகுதிநேர வேலைவாய்ப்புகள் மேற்குலகில் குறிப்பிடத்தக்க கலாச்சார மாற்றங்களை உருவாக்கியதையும் கவனிக்கமுடியும். பெற்றோர்களைச் சார்ந்திருந்த இளையோர் சமூகம் குடும்பக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டது. பகுதிநேர வேலைபார்ப்பதன் மூலம் கிடைத்த வருவாயில் தனியாக வசிப்பது, சுற்றுப்பயணங்கள் மேற்கொள்வது என்பதான சூழல் உருவாகியது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் குடும்ப அமைப்பைக் கேள்விக்குள்ளாக்குதல், மத அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு ஆகியனவற்றை உள்ளடக்கிய நிறுவன எதிர்ப்பை முன்னிலைப்படுத்தும் புதிய ‘இளையோர் பண்பாடு’ (youth culture) தோற்றம் பெற்றது. மேற்கூறிய புதிய மதிப்பீடுகளை உள்ளடக்கமாகக் கொண்ட ‘ராக் இசைப் பண்பாடு’(rock culture) இத்தகைய இளையோரை மையமாகக் கொண்டு உருவானதே. ஆயிரக்கணக்கில் இளையோர் கூடுகைகளுக்கான சாத்தியங்களை இந்த ராக் இசை நிகழ்வுகள் உருவாக்கின. கையில் டாலர்களுள்ள சுதந்திரமான நவீன இளைஞன் உருவாகிய காலமாக அது அமைந்தது. குடும்பங்களிலிருந்து வெளியேறிய, ஆலயங்களைப் புறக்கணித்த, கல்விச் சூழலையும் அரசின் கொள்கை முடிவுகளையும் கேள்விக்குட்படுத்தத் தயங்காத ஒரு புதிய தலைமுறை உருவானது. அதன் இன்னொரு பக்கமாக ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களை நுகர்வது, தற்கொலை, விட்டேத்தியான மனநிலை என அரசுகளே கவலை கொள்ளத்தக்கதாகவும் அந்த சூழல் இருந்தது.

சரி. தமிழகத்துக்கு வருவோம். தமிழகத்தில் உயர்கல்வி என்பது ஒருவனை பல வகைகளில் அவனை மீட்கும் கருவியாக இருந்து வந்திருக்கிறது. ஒரு அரசு வேலையோ, அதற்கு இணையான மாதச்சம்பளப் பணியோ இரண்டுமில்லாவிட்டாலும் தன் வாழ்க்கையை எவ்வகையிலாவது மேம்பாடுத்திக் கொள்வதற்கான பக்குவத்தையும் உயர்கல்வி அளித்தது. குறைந்தபட்சம் அவன் ஒரு மேம்பட்ட சமூக மனிதனாக விளங்கவும் வாய்ப்பளித்தது. அதற்குக் காரணம் கல்லூரி வளாகச் சூழல், நண்பர்கள் மூலமான ரசனை மாற்றங்கள், எதிர்காலத் தொடர்புகள் ஆகியன. ஏனெனில் ஒரு நாளின் விழித்திருக்கும் நேரத்தில் அதிக நேரத்தை கல்லூரி வளாகத்தில் செலவழிப்பவனாக அன்றைய மாணவன் இருந்தான். இன்று இந்தியாவில் பிற மாநிலங்களில் உயர்கல்வி பெறுபவர்கள் சதவீதம் 25% ஆக இருக்க, தமிழகத்தில் அது 57% மாக இருக்கிறது. அதிலும் கலை அறிவியல் கல்லூரிகளை அதிகமும் நாடுபவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறைப் படிப்பாளிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு படித்துப் பட்டம் பெற்று தொடர்ந்து தீவிரமான முயற்சிகளுக்குப் பின்னரே நல்லதொரு எதிர்காலம் அமையும் என்பதான ஆலோசனைகளை வழங்க குடும்பத்தில் யாருமில்லை. ஆகவே கிடைக்கின்ற பட்டப்படிப்பில் சேர்வதும் கூடவே ஒரு பகுதிநேர வேலையில் இணைவதுமாக இருக்கிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால் நம் நாட்டில் பகுதிநேர வேலையென்பது பகுதிநேரமாக இருப்பதில்லை. நாளடைவில் படிப்பு பகுதிநேரமாகிவிடுகிறது. அந்த இளம் வயதில் அவர்களுக்கு மாதந்தோறும் கிடைக்கும் சில ஆயிரம் ரூபாய்கள் அவர்களுக்கு ஒரு போலியான நம்பிக்கையை அளித்துவிடுகின்றன. கடுமையான உடல் உழைப்பு அவர்களை படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் செய்துவிடுகிறது. ஆகவே எதிர்காலம் பற்றிய பெரும் கனவுகள் காண்பதற்குக்கூட திராணியற்றவர்களாகிவிடுகிறார்கள். அதிகபட்சமாக டி.என்.பி.சி. குரூப் 4, காவலர், ராணுவம் ஆகியவையே அவர்களின் கனவாக சுருங்கிக் கிடக்கிறது. 20ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உயர்கல்வி ஒரு முதல்தலைமுறைப் படிப்பாளிக்குக் கொடுத்த உத்தரவாதத்தை கொடுக்கும் சக்தியற்றதாக சாரமற்றதாக மாறியிருக்கிறது.

அப்படியென்றால் மாணவர்களை பகுதிநேர வேலைகளில் அமர்த்துவதை தடைசெய்ய வேண்டும் என்பதல்ல நமது வாதம். மாறாக அரசு தலையிட்டு முறைப்படுத்தியாகவேண்டும். அமெரிக்காவில் மாணவர்கள் ஒரு வாரத்திற்கு 20 மணிநேரங்களே வேலைசெய்ய அனுமதிக்கப்படுகிறார்களாம். விடுமுறைக் காலங்களில் 40 மணிநேரங்கள் வேலை செய்யலாம். குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு 7.25 டாலர்களும் அதிகபட்சமாக 10 முதல் 20 டாலர்களுமாக இருக்கிறது. மேலும் அங்கு வாரத்திற்கு ஐந்து நாள்கள், தினசரி ஐந்து வகுப்புகள் என்ற முறையில் கல்லூரிகள் இயங்குவதில்லை. ஆகவே வாரத்திற்கு 20 மணிநேரங்கள் வேலைக்காக ஒதுக்குவது அவர்களின் படிப்பைப் பாதிப்பதில்லை. அத்தோடு அங்கு வேலையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனோபாவமும் இல்லை. ஒப்பீட்டு அளவில் இந்தியர்களாகிய நாம் அனைவருமே வாய்ப்புக் கிடைத்தால் உழைப்புச் சுரண்டலைச் செய்பவர்களாகவும் சுரண்டலுக்கு ஆட்பட்டவர்களாகவும் இருக்கிறோம். 2004 இல் இந்திய அரசு பரிந்துரைத்துள்ள தனித்திறனற்ற தொழிலாளிக்கு ஒரு மணி நேரத்திற்கு 167 / 178 ரூபாயும் திறன் பெற்ற தொழிலாளிக்கு 218 ரூபாய் என அறிவித்திருக்கிறது. அமெரிக்க டாலரோடு ஒப்பிட்டால் 3 டாலருக்கு அருகில் கூட வருவதில்லை. நாம் ஏன் ஒப்பிடவேண்டும். இந்தியராகவே இருப்போம். அந்த குறைந்தபட்சம் மணிக்கு 150 ரூபாய் கொடுப்பதாகக் கொண்டால்கூட நாளொன்றுக்கு 2 மணிநேரம் மாதத்திற்கு 20 நாள்கள் வேலைபார்த்தாலே 6000 ரூபாய் கிடைக்கக்கூடும். படிப்பைக் கைவிட்டு வேலையில் மூழ்கவேண்டிய அவசியமில்லாமல் இருக்கும். கூடுதலாக சாதியமும் உழைப்பும் இணைந்து தொழிற்படும் இந்திய சமூகத்தில் சுயமரியாதையை குலைக்காத வேலைகளையே இளைஞன் ஒருவன் செய்தாகவேண்டும். இந்த பகுதி நேரவேலை எனும் விசச்சூழலில் சமூகப் பொருளாதார அடிப்படையில் கீழ்தட்டில் இருக்கும் மாண்வர்களே மாட்டிக் கொள்கிறார்கள். நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கத்தினர் உயர்கல்விக்காக தம் குழந்தைகளுக்கு தாராளமாக செலவழிக்கும் மனநிலையில் இருக்கிறார்கள். கவனமாக பிள்ளைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார்கள். அமெரிக்காவில் படிக்கும் 10லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் 25% பேர் இந்தியர்கள். இதுபோக கனடா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா என சாரிசாரியாக இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றவண்ணம் உள்ளனர். ஆனால் ஒரு ஏழை மாணவன் படிப்பிற்காகவும் அவன் அன்றாடச் செலவினங்களுக்காகவும் நள்ளிரவில் சுமைதூக்க வேண்டியிருக்கிறது.

சமூக நீதியைத் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கும் நமது அரசு இந்த அவலத்தைக் களைந்தாகவேண்டும். உயர்கல்விக்கு நிறுவனங்களின் கதவுகளைத் திறந்துவிட்டால் மட்டும்போதாது. படிப்பதற்கேற்ற சூழலையும் வாய்ப்புகளையும் உருவாக்கியாகவேண்டும். குறைந்த பட்சமாக மாணவர்களை எந்த வயதிலிருந்து வேலைக்கு அமர்த்தலாம். எத்தனை மணிநேரங்கள் வேலை வாங்கலாம். அதற்கான குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு என்பனவற்றை அரசு தெளிவுபடுத்துவதோடு, கண்காணிக்கவும் வேண்டும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram