பிரியங்க் கார்கே என்பவர் கர்நாடகாவின் உள்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் மல்லிகார்ஜூன் கார்கேவின் மகன்.
அண்மையில் இந்திய அரசியலையே தீர்மானிக்கிற அளவுக்கு சக்தியுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏன் பதிவுசெய்யாமல் இயங்குகிறது..? என்கிற கேள்விகளை எழுப்பினார். இதற்கு முன்னாள் பா.ஜ.க. அமைச்சரும் தற்போதைய எம்.பி.யுமான ரமேஷ் ஜிகாஜின்கி, “நீ ஒரு தலித், நீ எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் கேள்வி கேட்கலாம்..” என்று கேட்க, நாடு முழுவதும் சர்ச்சையானது.
இச்சர்ச்சை பற்றி தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதியோ அமைப்புகளோ கேள்விகள் எழுப்பியதாக என் கவனத்துக்கு வரவில்லை, காங்கிரசும்கூட கேட்கவில்லை.. ஒரே ஒரு தனிமனிதனின் குரலை மட்டுமே கேட்டேன், பியூஸ் மனுஷ். இவர் அரசியல்வாதியல்ல, சேலத்தைச் சேர்ந்த ஒரு சமூகசேவகர்.
சேலத்தில் வசிக்கும் ஒரு மார்வாடி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் ப்யூஸ் மனுஷ்.. பொதுவாக மார்வாடிகள் கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்கள்.. சமூக ஆர்வலராகவும், சுற்றுச்சூழல் போராளியாகவும் இருந்த இவர் திருமணத்திற்குப் பிறகும் ”திருந்தாத” காரணத்தால் மனைவி, குழந்தைகளுடன் வீட்டைவிட்டு அனுப்பப்பட்டார்.
பரந்த அளவிலான அவரது முதல் போராட்டமே உலகப் பெரும் நிறுவனமான மால்கோ நிறுவனத்துக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் வென்று சாதனை படைத்தது.
பொதுவாக சுற்றுச்சூழல் உட்பட்ட பிரச்னைகளில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் அந்தச் செயல் அரசு அனுமதி பெற இயலாது. அந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு எதிராக ஒரு பொதுநல வழக்கை யாராவது ஒருவர் தாக்கல் செய்வார்.
உதாரணத்துக்கு ஒரு தொழிற்சாலையின் கழிவுநீர் நீர்நிலைகளில் திறந்துவிடப்படுகிறது என வைத்துக்கொள்வோம்; அதற்கு எதிராக யாரோ ஒருவர் வழக்குத் தொடுப்பார்.. வழக்கு விசாரணை வரும், வழக்குத் தொடுத்தவர் சரியாக வாதிடமாட்டார், தொழிற்சாலையின் வழக்கறிஞர் திறமையாக வாதாடி அந்தக் கழிவுநீர் சுத்திரிகரிக்கப்பட்ட பிறகுதான் திறந்துவிடப்படுகிறது, அதனால் ஆபத்து எதுவும் இல்லை என்று தீர்ப்பை “வாங்கி”விடுவார்.. இப்போது கழிவுநீர் கலப்பது சட்டப்பூர்வமானதாகிவிடும். வழக்குத் தொடுத்தவருக்கும் அதற்குரிய சன்மானம் கிடைத்துவிடும்.
மேட்டூர் அணையிலிருந்து வரும் தண்ணீரில் ஒரு பன்னாட்டு அலுமினிய கம்பெனிக்கு எதிராகவும் இப்படியொரு வழக்கு இருந்தது.. மேலும் அந்த கம்பெனிக்கு வேண்டிய பாக்சைட் தாதுக்கள் கஞ்ச மலையிலிருந்தும், கொல்லிமலையிலிருந்தும் வெட்டி எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன.. இதற்கெதிராகவும் சில லெட்டர்பேடு மலைவாழ் நலச் சங்கங்கள் சார்பாக வழக்குகள் இருந்தன.
நீதிமன்றத்தில் மனுச்செய்து இந்த வழக்குகளில் இணைத்துக்கொண்டு சட்டரீதியான் போராட முன்வர முடியுமா என பியுசிஎல் அமைப்பைச் சேர்ந்த நாகசைலா என்பவர் பியூஸ் மனுஷிடம் கேட்டிருக்கிறார். பியூஸ் அதற்கு ஒத்துக்கொண்டு சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டதோடு, இதுகுறித்து மக்களிடம் பரப்புரையிலும் ஈடுபட்டிருக்கிறார்.
ஒப்புக்காகப் போடப்பட்ட வழக்கில் முறையான நீதி கிடைத்து நதி நீர் காப்பாற்றப்பட்டது. சட்டவிரோதமான பாக்சைட் சுரங்கங்களும் மூடப்பட்டன.
இவ்வாறு தொடங்கிய இவரது செயல்பாடுகள் இன்றும் தொடர்கின்றன. சேர்வராயன் மலையடிவாரத்தில் 58 ஏக்கர் பரப்பளவுள்ள மூக்கனேரி இவ்வாறு கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு சுகாதாரக் கேடாக விளங்கியது. பியூசின் முயற்சியால் இந்த ஏரி மீட்கப்பட்டு இன்று சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி அம்மாபேட்டை ஏரி, குண்டக்கல் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி, அர்சிபாளையம் ஏரி ஆகியவையும் பியூஸின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளன.
சேலம் என்ற குறுகிய எல்லைக்குள் மட்டுமன்றி நாடு முழுவதும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் போராடி வருகிறார் இவர். புதுவையில் ஆரோவில் பகுதியைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிவரும் அமைப்புரீதியான சமூகவிரோதிகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார், சத்தீஸ்கர் உட்பட லட்சக்கணக்கான மலைவாழ் மக்களை அப்புறப்படுத்தி மலைக்காடுகளை அழிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுகிறார்.
தனிமனிதனாக பெரும் நிறுவனங்களுக்கு எதிராகவும், அரசியல் சக்திகளுக்கு எதிராகவும் போராடும் உங்களுக்கு அச்சுறுத்தல்கள் எதுவுமில்லையா என்றால் சிரிக்கிறார் பியூஸ்.
எப்படி அச்சுறுத்தல்கள் இல்லாமலிருக்கும்? வழக்குகள், சிறைத் தண்டனைகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். இதனால் மனோரீதியாக பயந்துபோன என் மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.. இப்போதுகூட எனக்கு தொடர்ந்து கொலைமிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன, இதற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை.. இப்போதுகூட அண்ணாமலையின் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக சட்டரீதியான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறேன். ஏனெனில் இதுபோன்ற வெறுப்பரசியலின் மீதுதான் பாசிசம் கட்டமைக்கப்படுகிறது. எனவே பொய்ப் பிரச்சாரங்கள், வெறுப்புப் பிரச்சாரங்களைத் தடுப்பது அவசியம் என்று உறுதியாகச் சொல்கிறார் பியூஸ்.
இயற்கையைக் காக்கவும், மக்கள்நலனைக் காக்கவும் நான் போராடுகிறேன்; அந்த இயற்கையும், மக்களும் என்னைக் காப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பியூஸ். அந்த நம்பிக்கையை நாம் காப்பாற்றவேண்டும்.