அரசாங்க வேலைகளிலேயே பிறர் பொறாமைப்படும் வேலை ஆசிரியர் வேலை என்பது பொதுவான கருத்து. வேலை நேரம் குறைவு, வேலை நாட்களும் குறைவு, பணிச்சுமையும் குறைவு என்பது பொதுப்பார்வை.
குழந்தைகளை கழிவறை கழுவ வைப்பது, சாதி பார்த்து நடத்துவது, தங்கள் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்துவது என ஆசிரியர் பணியின் மேன்மையை உணராத ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
வெற்றிகரமான ஒவ்வோர் ஆளுமைக்குப் பின்னாலும் ஆசிரியர் ஒருவர் இருப்பார், நேரடியாகவோ, மறைமுகமாகவோ… ஆசிரியப்பணியை பெரும் சேவைக்கான வாய்ப்பாகக் கருதும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள், மகா டீச்சர் மாதிரி.
மகா டீச்சர் ஜவ்வாது மலையிலுள்ள அரசவெளி பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை.
திருவண்ணாமலை மாவட்டம் செல்லாங்குப்பம் கிராமத்தில் பிறந்த மகாலட்சுமி வெறும் வேலை என்பதற்காக ஆசிரியர் வேலைக்குச் செல்லவில்லை. அந்தப் பணியின்மீது பெரும் ஈர்ப்போடு சென்றார்.
உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியர் வேலை என்பது ஒரு மரபு சார்ந்த பள்ளியில் பணிபுரிவது போன்றதன்று. அந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியப் பணிக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுப்பது பள்ளிக்கல்வித் துறையன்று, பழங்குடியினர் நலத்துறை. அந்தப்பள்ளிகள் கல்வியின் அவசியத்தை உணராத, அப்படியே உணர்ந்தாலும் பள்ளிக்கு வர இயலாத குழந்தைகளுக்கானவை.
தொலைதூரங்களில் உள்ள பள்ளிகள் என்பதால் இவை தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதில்லை. கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள் என்பதால் பெரும்பாலும் அவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். மாடு மேய்க்கப் போய்விடுவார்கள் அல்லது கைக்குழந்தைகளுக்குக் காவலாக வீட்டிலேயே இருந்துவிடுவார்கள்.
கீழே இருந்து இந்த மலைப்பள்ளிகளுக்குச் செல்லும் ஆசிரியர்களாக இருந்தால் அவர்களும் தினமும் பள்ளிக்குச் செல்லமாட்டார்கள். ஓரிரு குழந்தைகள் வரும். சில இடங்களில் பள்ளிகளின் ஆசிரியர்கள் சொற்ப சம்பளம் கொடுத்து வேறு யாரையாவது பை ரன்னராக வைத்துக்கொள்வார்கள் அல்லது குழந்தைகள் வராத பள்ளிக்கு அவ்வப்போது ஆசிரியர்கள் மட்டுமே வந்து செல்வார்கள். மலையேறிவந்து இவற்றையெல்லாம் கண்காணிப்பதற்கு அதிகாரிகளுக்கு நேரமோ, அக்கறையோ இருக்காது.
வசதியில்லாத குடும்பத்தில் பிறந்து, நல்லெண்ணம் கொண்டவர்களின் உதவியால் படித்துப் பட்டம் பெற்ற மகாலட்சுமி, தான் பெற்ற கல்வியால் தான் மட்டும் உயரவேண்டும் என்று கருதவில்லை. தன் கையில் கிடைத்த ஒற்றை மெழுகுவர்த்தியால் ஊருக்கெல்லாம் தீபமேற்ற நினைத்தார். கல்வியின் அவசியத்தை உணராத மலைவாழ் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதை விரும்பி ஏற்றுக்கொண்டார். அதற்காகவே உண்டு உறைவிடப்பள்ளியின் ஆசிரியர் வேலைக்குத் தேடிப்போய்ச் சேர்ந்தார்.
2005-இல் இவர் அரசவெளி பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தபோது அதுவொரு தொடக்கப்பள்ளி. அங்குள்ள பழங்குடி மக்கள் வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் ஏலக்காய் தோட்டங்களிலும், காப்பித்தோட்டங்களிலும் வேலை செய்வதற்காக கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்குக் குடும்பத்தோடு சென்றுவிடுவார்கள்.
முதன்முதலாக பள்ளிக்குள் நுழைந்தபோது அதற்குள்ளிருந்து பன்றிக்குட்டிகள் வெளியே ஓடின. முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தையின் பெயர்கள் பதிவேடுகளில் இருந்தன. ஆனால் அந்த மாணவர்கள் யாருமே அங்கில்லை. ‘அந்த நிலையைப் பார்த்ததும் எனக்குக் கண்ணீர் வந்தது,’ என்று தன் முதல் நாள் அனுபவத்தை விவரிக்கிறார் மகா.
சத்துணவு சமைப்பதற்காக ஒருவரும், ஒரு தலைமையாசிரியர் மட்டுமே அந்தப் பள்ளியின் பணியாளர்கள். தலைமையாசிரியர் சத்துணவுக்கான பொருட்களை எடுத்து வருவதற்காக கீழே உள்ள அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். ‘படிக்கறதுக்கு யாரும் வரமாட்டாங்கம்மா, பெல்லடிச்சா சில பசங்க வந்து சத்துணவு வாங்கிட்டுப் போவாங்க,’ என்றார் சத்துணவு அமைப்பாளர்.
வெளிவேலைக்குச் செல்வது அல்லது வீட்டுவேலைகளைச் செய்வது மட்டுமே அங்குள்ள குழந்தைகளின் பணியாக இருந்தது. வெளியூர் வேலைக்குப்போகும்போது பெற்றோர் அவர்களையும் அழைத்துச் சென்றுவிடுவார்கள். பெரும்பாலும் பெண்குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். பதின்வயதுச் சிறுமிகளை முப்பது , நாற்பது வயதுள்ளவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதெல்லாம் அங்கு சாதாரணம் என்பதையெல்லாம் கேட்டறிந்தார் மகா. கல்வியின் தேவையென்பது அவர்களது வாழ்க்கைமுறையில் இல்லை.
தனக்கு முன் பெரும் சவால்கள் காத்திருப்பதை உணர்ந்தார். முதலில் குழந்தைகளை பள்ளிக்கு வரவைக்க வேண்டும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு அவர்களின் வீடுதேடிப் போனார். அப்போது அவர் எதிர்கொண்ட முதல் கேள்வி, ‘நீ என்ன சாதி?’
‘நானும் மனுசி, நீங்களும் மனுசி.. உங்க கொழந்தைக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்க வந்திருக்கேன், இதுக்கு எதுக்கு சாதி..’ என்று பதில் சொல்லுவார்.
‘அதுக்கு எதுக்கு எங்க வீட்டுக்கு வர்றே, பள்ளிக்கூடத்துல இரு, பசங்க வந்தா சொல்லிக்குடு, பசங்க வந்தாலும், வரலேன்னாலும் உனக்கு சம்பளம் வரும், வாங்கிட்டு பேசாம போ,’ என்பதுதான் பரவலாக அவருக்குக் கிடைத்த பதில். ஆனாலும் விடாமல் குழந்தைகளைத் தேடி வீடுவீடாக நடந்தார். அந்தப் பகுதியில் அவரை பிள்ளை பிடிப்பவராகவே பார்த்தார்கள்.
‘ஊருக்குள்ள வந்தீன்னா கல்லை எடுத்து அடிச்சு மண்டைய ஒடைச்சிருவேன்,’ என்று வந்து படிக்க வேண்டிய சிறுவர்களே மிரட்டும் சம்பவங்களும் நடந்தன. ஆனாலும் மகா மனம் தளரவில்லை. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள் என்று தேடித்தேடிப் போய்க்கொண்டே இருந்தார்.
முதலில் அவருக்குக் கிடைத்த வெற்றி, வெளியூர் வேலைக்குச் செல்லும் தொழிலாளர் குடும்பத்துக் குழந்தைகள். ‘நீங்கள் திரும்பி வரும்வரைக்கும் உங்கள் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்ற உத்தரவாதத்தை நம்பி சிலர் குழந்தைகளை விட்டுச்சென்றனர். அவர்கள் திரும்பி வரும் வரைக்கும் அந்தக்குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி, முடிவெட்டி, துணிதுவைத்து சோறூட்டிப் பார்த்துக்கொண்டு கல்வியும் கற்றுக் கொடுத்தார் மகா.
இவ்வாறு தொடங்கிய மகா டீச்சர் மீது அந்தப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை வரத்தொடங்கியது, அவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளின் கல்வி குறித்த அவசியத்தை எடுத்துச்சொல்லிப் புரிய வைத்தார் மகா. ‘நம்ம பொழைப்புத்தான் காடுமேடுன்னு அலையற கூலிப் பொழப்பாப் போச்சு, இந்தப் பசங்களாவது படிச்சு வேலைக்குப்போய் நெழல்ல உக்காந்து சம்பளம் வாங்கட்டும்’ என்று அந்த மக்களின் மனோநிலை மாறத்தொடங்கியது. இந்த மாற்றத்தினால் அன்று தொடக்கப்பள்ளியாக இருந்த அந்தப்பள்ளி நடுநிலைப்பள்ளியாகி, உயர்நிலைப்பள்ளியாகி இந்த ஆண்டுமுதல் மேனிலைப்பள்ளியாக உயர்ந்திருக்கிறது.
சக ஆசிரியர்கள், அதிகாரிகள் என அனைவரும் கைகோக்க, அரசின் அனைத்துத் திட்டங்களும் அங்கு முறையாக செயல்படுத்தப்படுகின்றன. மகாவின் இலக்கியத்தொடர்புகள் மூலம் ஆரோக்கியமான புரவலர் வட்டமும் அமைந்திருக்கிறது. பள்ளிப்பராமரிப்பு, குழந்தைகளின் கல்விச்செலவுகளுக்கு புரவலர்கள் கணிசமாக உதவுகிறார்கள்.
இன்றைக்கு அந்தப் பகுதி மக்கள் எல்லோரும் கல்வியின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். இடைநிற்றல் ஏறக்குறைய முழுமையாகக் குறைந்திருக்கிறது என்றாலும் படிக்க வரும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் குறித்தும் பொதுத்தேர்வுகள் குறித்தும் இன்னும் உளவியல்ரீதியான பயமிருக்கிறது.
பத்தாம்வகுப்புத் தேர்வு நெருங்கும் சமயத்தில் அவர்கள் தேர்வெழுதப் பயந்து பள்ளிக்கு வராமல் நின்றுவிடுகிறார்கள். அந்த நேரத்தில் மீண்டும் அவர்களைத் தேடிச்சென்று நம்பிக்கையூட்டி அழைத்து வரவேண்டியிருக்கிறது என்று துர்காவின் கதையை உதாரணமாகச் சொல்கிறார்:
‘துர்கா என்னும் மாணவி பத்தாம்வகுப்புப் பொதுத்தேர்வு எழுதப் பயந்துகொண்டு பள்ளிக்கு வராமல் நின்றுவிட்டாள். அவளைத் தேடிச்சென்று அழைத்தபோதும் அவள் பயம் மாறவில்லை. எனக்காக வா, எல்லாப்பாடத்துலயும் 35 மார்க்குக்கு மேல எடுத்துப் பாசாக வெக்க வேண்டியது என் பொறுப்புன்னு..’என்று அவளைக் கைகூப்பித் தொழுது அழைத்துவந்தேன்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் அன்று அவள் பயந்துபோய் தன் பெற்றோருடன் கர்நாடகாவுக்கு கூலிவேலைக்குச் சென்றுவிட்டாள். முடிவு வெளியான அன்று அவள் அண்ணன் காட்டு ராசா அழைத்தார். தங்கச்சி பாசாயிட்டாளா டீச்சர் என்று கேட்டார். அறுபது சதவீத மார்க்கோட பாசாகியிருக்கான்னு சொன்னேன். துர்கா மகிழ்ச்சியில் அழுதாள். இந்த ஆண்டு அவள் மேனிலை வகுப்புக்குச் செல்ல இருக்கிறாள்.’
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துர்காவையும், மகாவையும் பாராட்டி தன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்காக எவ்வளவு உன்னதமான திட்டங்களை அரசு தீட்டினாலும், அவற்றைச் செயல்படுத்துவதற்கு மகா டீச்சர் போன்ற களப்பணியாளர்கள் அவசியம். இந்தக்கட்டுரை மகாவுக்கும், மகா போன்ற ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்.
துர்கா போன்று பொதுத்தேர்வுக்குப் பயப்படும் குழந்தைகளுக்குத்தான் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கெல்லாம் பொதுதேர்வையும், தனிப்பட்ட தகுதித்தேர்வுகளையும் திணிக்க நினைக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.