தொடர்கள்

நீர்மனிதன்

பெருவழிப்பாதை - 20 

கவிதாபாரதி

”நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு”

-திருவள்ளுவர்

புண்ணியங்களிலெல்லாம் பெரிய புண்ணியம் தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பது என்பது தமிழர்களின் நம்பிக்கை. அப்படியான புண்ணியவான் ஒருவரின் கதைதான் இது.

அவர் பெயர் நிமல் ராகவன்.

கெணத்தைக் காணோம் என்று காவல்துறையில் புகார் கொடுக்கும் நகைச்சுவைக்காட்சி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். உண்மையில் நிமல் ராகவனிடம் இப்படியான புகார்கள்தான் வருகின்றன.

எங்க ஊர்ல ஒரு கொளம் இருந்ததா எங்கப்பா சொல்லுவாரு, இப்ப அதைக் காணோம், மனுசன் குடிக்கறதுக்கும் தண்ணியில்ல, ஆடுமாடு குடிக்கறதுக்கும் தண்ணியில்ல என்று வரும் புகார்களை ஏற்றுக் கொண்டால், அங்குபோய் ஆய்வுசெய்து உறுதிப்படுத்திக்கொள்கிறார்.

பின் அதன் நீர்வரத்துக்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கிறார், பெரும்பாலும் அவை ஆக்கிரமிப்பில் இருக்கும், கிராம நிர்வாகம், உள்ளூர் மக்கள், அரசுத்துறைகளின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை மீட்கிறார். குளத்தைத் தூர் வாருகிறார். அடுத்த மழையில் அங்கு பழையகுளம் உயிர்பெற்றுவிடுகிறது. பின் அவை வற்றுவதேயில்லை.

முதலில் நம் தமிழ்நாட்டுக்குள் நடந்த இந்த சேவை புகழ்பெறத் தொடங்கியபின், நாடு முழுவதும் விரிந்திருக்கிறது. 17850 சுமார் சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட 275 ஏரிகளை இவ்வாறு இவர் மீட்டிருக்கிறார். இதன்மூலம் 1567 ஏக்கர் காடுகளும், 27 லட்சம் மரங்களும் உயிர்பெற்றிருக்கின்றன.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் முதல் மகாராஷ்டிராவில் கொத்துக்கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட விதர்பா வரைக்கும் பலகுளங்கள் இவரால் உயிர்பெற்றிருக்கின்றன. ஆப்பிரிக்க நாடான கென்யாவிலும் நீர்மீட்ட இவர், அண்மையில் யாழ்ப்பாணத்திலும் தன் சேவையைச் செய்திருக்கிறார்.

யாரிந்த நிமல்..? எப்படி இவர் நீர் மனிதரானார்..?

 “தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள நாடியம் எனது சொந்த ஊர். கடலிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள இந்த ஊரின் முக்கியத்தொழில் தென்னை விவசாயம். குறிப்பாக பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகள் தென்னை மரத்தையே நம்பியிருக்கின்றன. நான் ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார், அதன்பிறகு எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றியது அவர் வைத்த தென்னைமரங்கள்தான்..” என்கிறார் நிமல்

பொறியியல் படித்து புனேவில் வேலைக்குச் சென்ற விமல் பின் நல்ல சம்பளத்தில் துபாய்க்குச் சென்றார். வசதியான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் 2018-ல் தஞ்சாவூர் வட்டாரம் முழுக்க கஜா புயல் தாக்கியது. ஏராளமான தென்னைமரங்கள் சாய்ந்துவிட்டன. அந்தப்பகுதி முழுக்க துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்த சேதங்களிலிருந்து சொந்த ஊரையும், மக்களையும் காப்பாற்றும் நோக்கில் நிவாரணப்பணிகளுக்காக வந்தார் நிமல்.

 “மக்கள் புயல் சேதங்களிலிருந்து மீண்டுவிட்டாலும், புயலின் பாதிப்பு அந்தப்பகுதி முழுவதும் புரட்டிப் போட்டிருந்தது. மின்சாரம், உணவு பொன்ற அத்தியாவசியப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியிருந்தன, அதைவிட முக்கியமாக நிலத்தடி நீரில் கடல் நீர் புகுந்திருந்தது. அவ்வளவு புயல், மழைக்குப் பிறகு குடிநீர்த்தட்டுப்பாடு வந்திருப்பதன் காரணம் ஏரி, குளங்களில் நீரைச் சேமித்து வைக்காததுதான் என்பதை உணர்ந்தோம். கனமழை காரணமாக 120 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்திருக்கிறது. இது சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களின் பல வருடங்கள் குடிநீர் தேவையைத் தீர்க்கும் அளவு என்பதை அறிந்துகொண்டு ஏரி, குளங்களில் நீரைத் தேக்குவது அத்தியாவசியக் கடமை என்பதை அறியநேர்ந்தது. சொந்தமண்ணில் இவ்வளவு பெரிய பிரச்னை இருக்கும்போது மீண்டும் துபாய்க்கு வேலைக்குப் போவது இந்த மண்ணுக்குச் செய்யும் துரோகம் என்று கருதி என் வேலையைத் துறந்துவிட்டு இந்தப் பணிகளில் இறங்கினேன்..” என்று தன் ஆரம்பநாள்களை நினைவு கூர்கிறார் விமல்.

முதலில் 564 ஏக்கர் பரப்புள்ள பேராவூரணி ஏரிக்கு நீர்வரத்தைக் கொண்டுவந்தோம். இதனால் குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமன்றி சுற்றுவட்டாரங்களும் பயன்பெற்றன. அங்கெல்லாம் 350 அடி ஆழத்திலிருந்த நிலத்தடி நீர் ஐம்பது அடியில் கிடைக்கும்வகையில் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையில்தான் அடுத்தடுத்த இடங்களில் இதைத் தொடர்ந்திருக்கிறார் விமல்.

1.நீர்நிலைகளைத் தூர் வாருதல், 2.நீர்வழித் தடங்களைக் கண்டு-பிடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களுக்கு நீர் வந்து சேர ஏற்பாடு செய்தல், 3.நிலத்தடி-நீரை உயர்த்துதல், 4.ஆகாயத்தாமரை-களை அகற்றி தூய்மைப்படுத்துதல் 5.கடலோரம் காய்ந்துபோய் வெள்ளைப் பாலைநிலமாகிவிட்ட நீர்த்தேக்கங்களில் உப்புத்தன்மையை அகற்றி நன்னீரைத் தேக்குதல், 6.ஜம்மு போன்ற மலைச்சரிவுகளில் நீர்த்தேக்கங்களை ஏற்படுத்துதல் -என அந்தந்தப் பகுதியின் தேவைக்கேற்ப நிமலின் செயல்பாடுகள் அமைகின்றன.

நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சவால்மிகுந்த பணியல்லவா என்றால், கொலைமிரட்டல் வரைக்கும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன், மக்கள் ஆதரவுதான் ஓரே நம்பிக்கை என்கிறார். “குடும்பக்கடன்களை யெல்லாம் கட்டிமுடித்து கரையேறும் நிலையில் வெளிநாட்டு வேலையை ராஜினாமா செய்தது பெரும் வாழ்வியல் நெருக்கடியை உருவாக்கியது. இப்போது அதை சமாளிக்கக் கற்றுக்கொண்டேன். வறண்டு கிடந்த குளம் எங்கள் முயற்சிக்குப் பிறகு நிரம்பி வழிவதையும், அதைக் கண்டு மக்கள் பூரிப்பதையும் அனுபவிப்பதற்கு எந்த விலையும் கொடுக்கலாம்,’’ என்று சொல்லிச் சிரிக்கிறார் நிமல் என்னும் நீர்மனிதன். அதைப் பார்ப்பதற்கு பரந்துவிரிந்த ஒரு குளம் நிரம்பித் ததும்புவது போலவே இருந்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram