தங்கராசு நடராஜன் 
தொடர்கள்

பாப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்!

கவிதாபாரதி

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை விடக் கடினமானது, பாகுபாடின்றி ஐ.ஐ.டி.யில் வேலை கிடைப்பதும், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதும்… இந்தப் பின்னணியில்தான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன பாப்பம்பட்டியில் பிறந்து இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த இளைஞனின் திறமையைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அந்த இளைஞனின் பெயர் தங்கராசு நடராஜன். அப்பா ஒரு தறிப்பட்டறையில் கூலித்தொழிலாளி, ஒரு தம்பி, மூன்று தங்கைகள் என உடன்பிறந்தவர்களோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர்.

சின்ன வயதிலிருந்தே நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் ஆடுவது நடராஜனின் பொழுதுபோக்கு, உள்ளூர் இளைஞர்கள் விளையாடும் கிரிக்கெட்டை வேடிக்கை பார்ப்பது அவரது அன்றாட வேலைகளில் ஒன்று, ஆடுகளத்துக்கு வெளியே நின்று பந்துகளை எடுத்துப்போடும் வேலை, வேடிக்கை பார்க்கும் சிறுவர்களுக்கு வழங்கப்படுகிறது, அதில் நடராஜனும் ஒருவர்.

ஆடுகளத்தைவிட்டு வெளியேறும் பந்துகளை மற்ற சிறுவர்கள் சும்மா தூக்கி வீசும்போது, நடராஜன் மட்டும் அதைப் பந்துவீச்சாகக் கருதி ஒரு பந்துவீச்சாளரின் லாகவத்தோடு வீசுவது வழக்கம், மற்றவர்கள் யாரும் அதைக் கவனிக்கவில்லை. அந்த அணியிலிருந்த ஜெயப்பிரகாஷ் எனும் இளைஞர் நடராஜனின் அசைவுகளுக்கு உள்ளிருக்கும் ஆட்டக்காரனைக் கண்டுபிடித்தார். அவன் எடுத்து பந்தை எடுத்து வீசுவதில் ஒரு தனித்தன்மையும் வேகமும் இருப்பதை உணர்ந்த ஜெயப்பிரகாஷ், நடராஜனை அந்த அணியில் பந்துவீச அனுமதித்தார், பயிற்சியளித்தார்.

இப்படியாகப் பயிற்சி எடுத்தபடியே கல்லூரிக்கும் போய்க்கொண்டிருந்தார் நடராஜன். கல்லூரிப் படிப்பிற்காக விடுமுறை நாட்களில் மண் அள்ளும் வேலைக்கெல்லாம் போயிருக்கிறேன் என்கிறார் நடராஜன். பட்டினியே கிடந்தாலும் கிரிக்கெட் பயிற்சி எடுப்பதை நிறுத்தவில்லை அவர்.

ஒரு கட்டத்தில் நடராஜனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லத் தீர்மானிக்கிறார், ஜெயப்பிரகாஷ், அவரின் பெற்றோரிடம், ”உங்கள் மகனை என்னை நம்பி ஒப்படையுங்கள்; அவனைக் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக ஆக்குகிறேன்’ என்று கேட்கிறார். வீட்டுக்கு தலைப்பிள்ளை, அவனுக்கு அடுத்து நான்கு பேர் இருக்கிறார்கள்; அதிலும் மூன்று பெண் குழந்தைகள் என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை. எங்கள் மகனுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்தால் போதும் என்று ஜெயப்பிரகாஷிடம் ஒப்படைக்கிறார்கள்.

நடராஜனை நல்ல கிரிக்கெட் வீரனாக உருவாக்கவேண்டும் என்பதை ஒரு பெருங்கடமையாக எடுத்துக்கொண்டு செயல்பட்டார், ஜெயப்பிரகாஷ். சேலத்தில் உள்ள கிளப்புகளில் சேர்த்து விளையாட வைக்கிறார். இதற்குமேல் இங்கு வளர்ச்சியில்லை என்னும் நிலையில் சென்னை கிளப்புகளில் பயிற்சி பெறவும், விளையாடவும் அழைத்துவருகிறார். அதுதான் நடராஜன் சேலத்தைத் தாண்டி சென்னை செல்லும் முதல் பயணமாகும்.

சென்னையில் பயிற்சிபெற்ற நடராஜன் பி.எஸ்.என்.எல் அணிக்குத் தேர்வு செய்யப்படுகிறார். அங்கிருந்து தமிழ்நாடு அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. மாபெரும் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் வங்காளத்துக்கு எதிராக, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆட்டத்தைத் தொடங்கினார், ஒரு பேரிடி காத்திருக்கிறது என்பதை அறியாமல்.

நடராஜன் பந்து வீசும் முறை விதிமுறைகளுக்கு முரணாக இருக்கிறது என்று அவர் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அவதூறோடு திரும்பிப் போய் கிரிக்கெட்டை மறந்துவிட்டு சின்ன பாப்பம்பட்டியில் மண்ணள்ள வேண்டும் அல்லது தறித்தொழிலுக்குத் திரும்பவேண்டும் என்ற நிலை. தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருப்பதல்ல வீரம், தோல்வியை எதிர்கொள்வது, அதிலிருந்து மீள்வதும்!

தன் பந்து வீச்சில் எது தவறு என்பதைக் கேட்டறிந்தார், நடராஜன். தமிழ்நாட்டு அணியின் முன்னாள் வீரர் சுனில் சுப்பிரமணியம் தனது ஆட்டத்தை மாற்றியமைத்துக்கொள்ள உதவினார் என்கிறார் நடராஜன், தமிழ்நாடு அணியின் முன்னாள் வீரர்கள் டி.வாசு, வெங்கடரமணா ஆகியோரையும் தனக்கு உதவியவர்களாக நன்றியோடு நினைவுகூர்கிறார்.

அதன்பிறகு தனது பந்துவீச்சின் உத்தியை மாற்றிக்கொண்டு கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். 2017-ல் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்குத் தேர்வு பெற்றார். மொழிப் பிரச்னை காரணமாக அங்கிருந்த வீரர்களோடு கலந்து பழக இயலாமல் சிரமப்பட்டார்.

அந்த அணியில் இருந்தவர்களில் பெரும்பாலோர் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே அறிந்திருந்தனர். கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட நடராஜன் சுலபமாக உரையாடுமளவுக்கு ஆங்கிலத்தைக் கற்கவில்லை. எனக்கு மற்ற வீரர்களோடு கலந்துரையாடும் அளவுக்கு மொழியறிவு போதவில்லை; எனவே இளைஞர்கள் தாங்கள் திறமைகளோடு மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தார் நடராஜன். (அது நடராஜன் இந்தி கற்றுக்கொள்ளச் சொல்கிறார் என்று பரப்பப்பட்டு சமூகவலைதளங்களில் பெரும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது)

அதன்பின்னர் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன், இந்திய அணிக்குத் தேர்வு பெற்று ஆஸ்திரேலியா மண்ணில் கம்பீரமாகக் களமிறங்கினார். எப்போதும் எதிரணியினரை ஏளனமாகவே மதிப்பிடும் ஆஸ்திரேலிய அணியினரும் ஊடகங்களும் நடராஜனைக் கொண்டாடி மகிழ்ந்தன.

காயம் காரணமாக இந்திய அணியில் ஆடமுடியாமல் போனது. எதிர்காலத்தில் மீண்டும் இடம்பெறலாம். எனினும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் ஏற்ற இறக்கங்களோடு கூடிய அவரது துறைசார்ந்த பாதை. கபில்தேவ், தோனி போல எந்தப் பின்புலமும் இல்லாமல் வந்து சாதித்துக் கொண்டிருப்பவர் என்பதையும் தாண்டி நடராஜனை இந்தப் பெருவழிப்பாதை தொடரில் சேர்க்க மிகமுக்கியமான காரணமிருக்கிறது.

இளையதலைமுறைப் பிள்ளைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்கும் நவீனமான பயிற்சிப்பள்ளி ஒன்றை அவர் ஆரம்பித்திருக்கிறார். இதை சென்னையிலோ சேலத்திலோ நடத்தி, தன் பிரபலத்தைக் காசாக ஆக்கியிருக்கலாம்; ஆனால் அதை தன் சொந்த கிராமத்தில் தொடங்கி இலவசமாகக் கற்றுத்தருகிறார்.

கஷ்டப்பட்டு நான் பெற்ற வாய்ப்புகளை, என் போன்ற தகுதியுள்ள கிராமத்துப்பிள்ளைகள் எளிதில் அடைய வழிகாட்டுவதே, தான் தொடங்கியுள்ள பயிற்சிப்பள்ளியின் நோக்கம் என்கிறார், அவர். இது தானறிந்த மந்திரத்தை மதில் மேலேறிக் கூவிய இராமானுஜரின் மனோபாவத்துக்கு ஒப்பானதில்லையா.. நடராஜனின் நோக்கமும், புகழும் மென்மேலும் ஒளிரட்டும்.