ஜூபின் கார்க் எனும் அஸ்ஸாமியப் பாடகர் சிங்கப்பூரில் கடல் விளையாட்டின் போது மரணமடைந்தார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியானபோது அந்தப் பாடகரை ஒரு பெயராக மட்டுமே தெரிந்திருந்தது. இந்திய அளவில் அவர் ஒரு பிரபலமான பாடகராக இல்லை என்பதும் அஸ்ஸாமிய இசை நம்மை வந்தடைந்திருக்கவில்லை என்ற வகையிலும் அச்செய்தி பெரிதாக நம் கவனத்தை ஈர்க்கவில்லை.
ஆனால் அஸ்ஸாம் மக்கள் திரண்டெழுந்து அவருக்காக அஞ்சலி செலுத்தியவிதமும், மாநில அரசு அவருக்காக மூன்று நாள்கள் துக்கம் அனுஷ்டிக்க அறிவித்ததும், 21குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவர் இறுதிச் சடங்கு நிகழ்த்தப்பட்டதையும், மொத்த அஸ்ஸாமும் முடங்கியதையும் பார்த்தபோது மறைந்த ஜுபின் ஒரு வழக்கமான பாடகர் மட்டுமல்ல என்பது புரியத் தொடங்கியது. ஜுபினின் இறுதி ஊர்வலம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. காரணம் உலக வரலாற்றில் அதிக மக்கள் கலந்துகொண்ட இறுதி ஊர்வலங்களில் ஒன்றாக அது இருந்தது எனபதே. மைக்கேல் ஜாக்சன், எலிசபெத் மகாராணி, அறிஞர் அண்ணா போன்றோரின் இறுதிச்சடங்கிற்குத் திரண்ட மக்கள் வெள்ளத்திற்கு இணையாக இந்தநூற்றாண்டில் நிகழ்ந்த நிகழ்வாக ஜுபினின் இறுதி ஊர்வலம் குறிப்பிடப்படுகிறது. ஒரு பாடகருக்கு ஒரு மாநிலமே திரண்டு அஞ்சலி செலுத்துவதன் பின் இருப்பது வெறுமனே இசை மட்டும்தானா?
1972இல் மேகாலயாவில் பிறந்த ஜுபினிடன் மூன்று வயதிலேயே இசையார்வம் தென்பட்டது. தன் தாயிடமிருந்து இசையைக் கைவரப்பெற்ற ஜுபின் பதினொரு வயதில் ஒரு குருவிடமிருந்து முறைப்படி தபலா இசைக்கக் கற்றுக்கொண்டார். இசையார்வத்தின் மிகுதியில் தன் அறிவியல் பட்டப்படிப்பைப் பாதியில் துறந்து இசையைத் தழுவிக்கொண்டவர்.
1992 இல் மாநிலம் தழுவிய இளையோருக்கான இசைப்போட்டியில் மேற்கத்திய தனிக்குரலிசைக்காக முதல் பரிசு பெற்றபோது தொடங்கிய அவரின் இசைப்பயணம் அவரின் இறுதிமூச்சு வரை தொடர்ந்தது. 1992இல் வெளியான ‘அனாமிகா’ எனும் முதல் இசை ஆல்பம் தொடங்கி ஏறத்தாழ 38000 பாடல்கள் பாடிய பாடகராக மட்டுமல்லாமல் ஒரு நிகழ்த்துநராகவும் மக்களிடையே நன்கு பரிச்சயமானவராகியிருக்கிறார். ஆங்கிலம், இந்தி, பெங்காலி, கன்னடம், அஸ்ஸாமி மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் கிளைமொழிகள் உட்பட நாற்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியிருக்கிறார். தமிழிலும்கூட இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறாராம். 2006 இல் வெளியான கேங்ஸ்டர் இந்தி படத்தில் அவர் பாடிய ‘யா அலி’ அவரை பாலிவுட்டிலும் பிரபலமாக்கியது. தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகளும் வந்தன. ஆனால் மும்பையிலேயே தங்கி தொடர்ந்து பாலிவுட் வாய்ப்புகளைப் பெறும் திட்டமற்றவரான ஜுபின் தன் சொந்த மாநிலத்தில் இயங்குவதையே தொடர்ந்தார். பணமும் புகழும் எனக்கு பொருட்டல்ல. நான் விரும்பியதைச் செய்வதே என் விருப்பம் என்பதை பல இடங்களில் பதிவு செய்கிறார்.
ஜுபினை ஒட்டு மொத்த அஸ்ஸாமிய மக்களும் விரும்பியதற்கான முக்கிய காரணம் அவர் தன்னை எந்த சாதிய மத அடையாளங்களுக்குள்ளும் அடைத்துக்கொள்ளாததே என்கிறார்கள். ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஜுபின் பூணுல் அணிவதை தவிர்த்ததோடு, நான் சாதி மதங்களற்றவன் என்று அறிவித்துக்கொண்டார்.
ஒரு பாடகராகத் தொடங்கி பாடலாசிரியராகவும், நிகழ்த்துநர், நடிகர், இயக்குநர் என்பதாக தன் பாதையை விரிவாக்கிக் கொண்டவர் அவர். 27 அஸ்ஸாமியப் படங்களில் நடித்து அஸ்ஸாமிய திரையுலகிற்கு புத்துயிர் அளித்தவர் என்கிறார்கள். இத்தனை பிரபல்யம் இருந்தும் சாலையோரக் கடைகளில் சாமான்யர்களோடு தேநீர் அருந்திச் செல்லுமளவுக்கு எளிமையானவர். எல்லாவற்றுக்கும் மேல் அவர் சத்தமில்லால் ஒரு சமூகச் செயல்பாட்டாளராகவும் இருந்துவந்தார். கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தபோது தன்னுடைய ஒரு வீட்டையே மருத்துவமனையாகத் தாரைவார்த்தவர். எப்போதும் தன்னை எந்த அரசியல் கட்சியோடும் இணைத்துக்கொள்ளாதவர். இது இந்தியா முழுதும் பெரும்பாலான திரைக்கலைஞர்கள் செய்யக்கூடியதே. எந்த சர்ச்சைகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற தற்காப்பு தந்திரமே அது. பலர் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அவர்களோடு இன்ஸ்ட்டண்ட் நட்புக்கொண்டுவிடும் சாமர்த்தியமுள்ளவர்கள். ஆனால் ஜுபின் அரசியல் கட்சிகள் பால் சாராதவர் என்பதோடு எப்போதும் மக்களோடு நிற்பவராக இருந்திருக்கிறார். அரசுகளின் ஊழல்களைப் பகிரங்கமாகக் கண்டிப்பவராக இருந்திருக்கிறார். மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் வந்தபோது அஸ்ஸாமில் அரசியல் கட்சி சாராமல் அதற்கு எதிராக குரல் கொடுத்தவர் ஜுபின் ஒருவரே.
தன் இசையால் மக்களின் உணர்வுகளோடு கலந்தவர். தன் கருத்துக்களால் அஸ்ஸாமியப் பண்பாட்டைக் கற்றுக் கொடுத்தவர். தன் செயல்பாடுகளால் மக்கள் அரசியலை முன்னெடுத்தவர். எல்லாவற்றையும் இணைத்துப்பார்க்கும்போதுதான் சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து தலைமுறை இடைவெளிகளை தகர்த்து அந்தக் ஜுபின் எனும் கலைஞன் போற்றப்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
குஜராத் படுகொலைகளின்போதும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் போதும், நோய்த் தொற்றுக்காலத்தில் நீரும் உணவுமின்றி நாற்கரச்சாலைகளில் எளிய உழைப்பாளிகள் நடையாய் நடந்த போதும், குடியுரிமைத் திருத்தம் எனும் பெயரில் சிறுபான்மையினர் நாடற்றவர்களாய் நாள் குறிக்கப்பட்டபோதும், சாதியின் பெயராலான படுகொலைகளின்போதும், அன்புள்ள சூப்பர் ஸ்டார்களே, உலக நாயகன்களே, இசை ஞானிகளே, இசைப்புயல்களே, இசைச் சூறாவளிகளே, தேனிசைத் தென்றல்களே உங்களிடமிருந்து மக்களுக்கான ஒற்றை வாக்கியம் வந்துவிடாதா என உங்கள் ரசிகர்களாகிய நாங்கள் எதிர்பார்த்தோம். எதிர்பார்க்கிறோம். ஏனெனில் உங்கள் பிரபல்யம் மிகவும் பெறுமதியானது. உங்கள் ஒற்றை வாக்கியம் பல்லாயிரம் குரல்களுக்கு இணையானது. ஆனால் நீங்கள் ஒருபோதும் உங்கள் மௌனத்தைக் கலைத்ததில்லை. ஜுபின் எனும் எளிய பாடகன் மக்கள் கலைஞனாக மறைந்த இந்த சந்தர்ப்பத்தில் இப்படியான யோசனைகள் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. உங்களுக்கு அரசியல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசியலற்ற கலை என்று எதுவுமில்லைதானே!
ஜுபினை ஒரு மாநிலத்தின் மனம் கவர்ந்த பாடகர் என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட புரிதல். ஜுபின் அனைத்து அஸ்ஸாமியர்களின் உணர்வோடு கலந்தவர். அஸ்ஸாமின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் தலைமுறைகளுக்குக் கடத்தியவர். வடகிழக்கு மாநிலங்களின் பண்பாட்டுத் தூதர்.