குண்டு விழுந்தாலென்ன- வீடு குலுங்கி இடிந்தாலென்ன. உடல் துண்டு பறந்தாலென்ன நாங்கள் துடித்து மடிந்தாலென்ன.. தமிழீழத்தாகம் தணியாது எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது..” ஈழக்கனவின் நெருப்புப் பிழம்பாய் முழங்கிய தேனிசை செல்லப்பாவின் குரலைக் கேட்டவர் யாரும் மறந்துவிட முடியாது.
தோற்கடிக்கப்பட்ட கனவின் மிச்சமாய் இன்னும் இருக்கும் சில நினைவுகளில் தேனிசை செல்லப்பாவின் பாடல்களும் ஒன்று
தமிழ்நாட்டில் பிறந்த செல்லப்பா, ஈழத்தின் போர்க்குரலானது எப்படி..? மேதகு பிரபாகரன் அவர்களால் பாசறைப்பாணர் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றது எப்படி..?
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி என்னும் ஊரில் பிறந்தவர் செல்லப்பா. பதினோராவது வயதில் தன் தந்தையை இழந்த அவர்மேல் குடும்பச்சுமை ஏறியது.
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின்மேல் பற்றுக்கொண்டவர் செல்லப்பா, அவர் தூத்துக்குடி வருவதை அறிந்து அவரைத் தேடிப்போய்ச் சந்தித்தார். அவரைப் பாடச்சொல்லிக் கேட்ட ராதா, திருச்சி சங்கிலியாண்டபுரத்திலுள்ள தன் வீட்டுக்கு வந்து சந்திக்கச் சொன்னார், அதேபோல் திருச்சி சென்ற செல்லப்பாவைத் தன் குழுவில் சேர்த்துக்கொண்டார்.
சில நாள்களுக்குப் பிறகு சென்னை வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள ஒற்றைவாடைத் தியேட்டரில் தன் குழுவைக்கொண்டுவந்து தங்கவைத்தார் ராதா, அவரது நாடகத்தில் பாடிக்கொண்டும், சிறுசிறுவேட்த்தில் நடித்துக்கொண்டும், ராதாவின் குழுவிலேயே இருந்தார் செல்லப்பா..
அப்போதைய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சி.பா.ஆதித்தனாரோடு சேர்ந்து மன்னார்குடியில் பட எரிப்புப் போராட்டத்திற்கு பெரியார் ஏற்பாடு செய்திருந்தார். இந்திய தேசப்பட்த்தை எரிப்பதுதான் போராட்டம், போராட்ட மேடையில் எம்.ஆர்.ராதாவின் நாடகமும் நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
போராட்ட மேடையில் பாட்டுக்கச்சேரி ஒன்றை நடத்த ஆதித்தனார் விரும்பினார்.அதற்குப் பாடகர்கள் யாரும் வராதநிலையில் செல்லப்பா மேடையேற்றப்பட்டார். அவரது பாடல், பிடித்துப்போன ஆதித்தனார் செல்லப்பாவை நாம்தமிழர் கட்சியின் முழுநேரப்பாடகராக நியமித்து கட்சி அலுவலகத்திலேயே தங்கவைத்தார், அங்கிருந்தபடியே நாம் தமிழர் கட்சி மேடைகளிலும், திராவிடர் கழக மேடைகளிலும் பாடிக் கொண்டிருந்தார் செல்லப்பா.
அந்த நேரத்தில்தான் சாஸ்திரி-பண்டாரநாயகா ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து ஐந்து லட்சம் மலையகத்தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். அதற்காக ஏ.எல்.நாராயணனை வைத்து ஒரு பாடலை எழுதி செல்லப்பாவைப் பாடவைத்தார் ஆதித்தனார்:
“செந்தமிழா மனம் பொங்குதடா.. சிங்களர் கொடுமை மிஞ்சுதடா
இதை நேரு பண்டிதரும் பார்க்கவில்லை சொந்த ஊரு மந்திரியும் கேட்கவில்லை.. யாரும் துணைக்கிங்கே வரவில்லை ஆறுதல் வார்த்தைகள் தரவில்லை
செந்தமிழா மனம் பொங்குதடா சிங்களர் கொடுமை மிஞ்சுதடா
இதனை மேடைதோறும் உணர்ச்சி மேலிடப் பாடினார் செல்லப்பா.
தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த செல்லப்பாவின் குரலும் பாவமும் ஒரு மனிதரைக் கவர்ந்தது, அவர் பேபி சுப்பிரமணியம், ஈழத்திலிருந்து வந்து சென்னையில் தங்கியிருந்த புலிகளின் செய்தித்தொடர்பாளர்.
சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தின் நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த செல்லப்பாவை சந்திக்கிறார் பேபி சுப்பிரமணியம், ’தேசியத்தலைவர் உங்களைச் சந்திக்கவிரும்புகிறார், நாளை சந்திக்க இயலுமா?’ என்று கேட்டார். செல்லப்பா விருப்பத்தோடு ஒப்புக்கொள்ள மறுநாள் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
இயக்கத்தின் பிரச்சாரத்திற்காக எழுதப்பட்ட பத்து பாடல்களைக் கொடுத்து இதை நீங்கள் பாடித்தரவேண்டும் என்று பிரபாகரன் ஒப்படைத்தார். அதற்கு ஒப்புக்கொண்ட செல்லப்பா ராமச்சந்திர ஆதித்தனின் உதவியை நாடினார். பாடல்கள் ஒலிப்பதிவு செய்வதற்கான செலவை ராமச்சந்திர ஆதித்தன் ஏற்றுக்கொண்டார்.
எல்டாம்ஸ் சாலையிலிருந்த கிறித்துவ கலைத்தொடர்பு நிலையத்தில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. பாடல்களைக் கேட்ட அக்கலைத்தொடர்பு நிலையத்தின் நிர்வாகி ஒலிப்பதிவுக்கூடத்திற்கான வாடகையை வாங்க மறுத்துவிட்டார்.
இப்படியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்கள் பிரதியெடுக்கப்பட்டு ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன..அங்கு இயக்கப்போராளிகளிடமும், பொதுமக்களிடமும் அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில்
வாருங்கள் புலிகளே தமிழீழம் காப்போம்
வாழ்வா சாவா ஒருகை பார்ப்போம்
முந்தை எங்கள் தந்தை வாழ்ந்த முற்றமல்லவா
முடிசுமந்து நாங்கள் ஆண்ட கொற்றமல்லவா
இந்த மண்ணின் மக்கள் எங்கள் சுற்றமல்லவா
தமிழீழ மண்ணை மறந்து வாழ்தல் குற்றமல்லவா
என்ற பாடல் பிரபாகரனின் பெருவிருப்பத்திற்குரிய பாடலாகும்.
1990ஆம் ஆண்டு அவர் ஈழத்திற்கு அழைக்கப்பட்டார், யாழ்கோட்டை மைதானத்தில் ஐந்து லட்சம் மக்கள் முன்னிலையில் அவரது கச்சேரி நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து எட்டு மாவட்டங்களில் அவரது கச்சேரி சிறப்பாக நடைபெற்றது, சாவகச்சேரியில் நடைபெற்ற கச்சேரிக்கு பிரபாகரன் நேரில் வந்திருந்ததை நெகிழ்வோடு குறிப்பிடுகிறார் செல்லப்பா.
அதன்பிறகு உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களிலெல்லாம் தேனிசை செல்லப்பாவின் குரல் கச்சேரிகள் நடந்திருக்கின்றன, ஆனால் பெருந்தொகை கொட்டிக்கொடுத்தபோதும் கொள்கைக்கு முரணான மேடையேற மறுத்துவிட்டார் செல்லப்பா, போலவே திரையிசைப்பாடல்களிலும் அவர் ஆர்வம் காட்டவில்லை, கடைசிவரைக்கும் இனத்தின், மொழியின் உணர்வெழுச்சிப்பாடல்களே போதும் என்கிறார் தேனிசை என்னும் புலியிசைப்பாடகர்.