படம்: ஏ.ஐ 
தொடர்கள்

ராஜாவுடன் நடந்த நாள்கள் - 4

திசையாற்றுப்படை - 37

இரா.பிரபாகர்

ராஜா 1979-இலேயே விஸ்வரூபம் எடுத்தார் என்று கூறலாம். இந்த ஓராண்டில் வந்த படங்களும் அவற்றிலிருந்த பாடல்களும் அவரை எந்த வகைக்குள் அடக்குவது என்று யூகிக்க முடியாத விதத்திலிருந்தன.

அழகே உன்னை ஆராதிக்கிறேன், ஆறிலிருந்து அறுபதுவரை, அன்னை ஓர் ஆலயம், உதிரிப்பூக்கள், கல்யாணராமன், நிறம் மாறாத பூக்கள், பகலில் ஒரு இரவு, பட்டாக்கத்தி பைரவன், தர்ம யுத்தம், பூந்தளிர், ரோசாப்பூ ரவிக்கைக்காரி ஆகிய படங்களின் அணிவகுப்பில், ‘டப்பாங்குத்து ராசா’ என்று நக்கல் விமர்சனம் செய்துகொண்டிருந்தவர்களின் சப்த நாடியையும் நிற்கச் செய்தார்.

ஒரு விருந்தில் இலை நிறைய தேவைக்கதிகமாக பதார்த்தங்களைப் பரிமாறினால் நாம் கவனக்குறைவாக ஒரு அற்புதமான இஞ்சி ஊறுகாயைச் சுவைக்காமல் தவறவிடுவதைப் போல ராஜாவின் பாடல்களின் கூட்ட நெரிசலில் சில பாடல்கள் அப்படி கால ஓட்டத்தில் பொதுப்புழக்கத்தில் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போய்விடுவது வழக்கம். 79இல் வெளிவந்த படங்களில் இரண்டு படங்கள் கொஞ்சம் வேறுபட்டவையாக இருந்தன. ஏறத்தாழ ‘அன்னக்கிளி’ சாயலிலான கிராமியப் படங்கள். தேவராஜ் மோகனின் ‘சக்களத்தி’, ஆர். செல்வராஜின் ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’. இந்தப் படங்களில் ராஜாவின் குரலிலான ‘வாட வாட்டுது ஒரு போர்வ கேக்குது, ’, ‘ஒனக்கெனத்தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன்’ பாடல்களே அவை. நாட்டுப்புற ஆன்மாவில் தோய்ந்த மெட்டு. இடையிசைகளில் ராஜா பயன்படுத்தியிருக்கும் விசித்திரமான இசையொலிகள், நவீன இசைக்கருவிகளைப் பயன்படுத்திய விதத்தில் இரவுப் பொழுதையும் தனிமை, ஏக்கம் ஆகிய உணர்வுகளையும் இசையாக்கியிருப்பார். அன்னக்கிளி வெளியாகி இரண்டாண்டுகளுக்குள்ளாக அவருக்கு திரைஇசையின் சூக்குமங்கள் கைக்குள் வந்துவிட்டதை உணர்த்தக்கூடிய பாடல்களில் இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். ஒலித்தட்டுகளில் வெளியாகி இப்போது யூ டியூபில் கிடைக்கும் இப்படப்பாடல்களின் ஒலித்தரம் சுமாருக்கும் கீழாக இருக்கிறது. (ஒனக்கெனத்தானே AI வடிவ சுருக்கத்தைக் கேட்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்.

இப்படியாக ராஜா இசையமைத்த படங்களைப் பார்ப்பது, தேநீர்க் கடைகளில் ராஜா பாடல்களைக் கேட்பது. கச்சேரிகளை ரசிப்பது, விடுதியில் பின்னிரவுகளில் பிரபலமான பாடல்களுக்கிடையே ஒளிந்திருக்கும் பாடல்களை அலசுவது என்று சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த காலத்தில் கல்லூரி இசைக்குழுவில் இடம் கிடைத்துவிட்டது. எனக்கு அப்போதும் எப்போதும் வாசிக்கத்தெரிந்த ‘பேங்கோஸ்’ ஒரு எளிமையான தோல் கருவி. பள்ளிக்காலத்தில் மத்தியான இடைவேளையில் இரண்டு பெயிண்ட் டப்பாக்களைக் கால்களில் இடுக்கிக்கொண்டு அடித்த பழக்கம். எம்.எஸ்.வி. காலத்தில் பேங்கோஸ் என்றால் ராஜா காலத்தில் டிரிபிள் காங்கோ பிரபலமானது. பூவிழிவாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே (1977) பாடலிலேயே காங்கோவைத் கையிலெடுத்திருப்பார். எம்.எஸ்.வி. பேங்கோவை வைத்து நூற்றுக்கணக்கான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ, எங்கே நிம்மதி, போனால் போகட்டும் போடா’ என அருமையான பாடல்களும், பின்னனி இசையில் விறுவிறுப்பான காட்சிகளுக்காக பேங்கோவை உருட்டியிருக்கிறார். 70கள் வரைக்கும் தாளக்கருவிகளில் டிரம்ஸ்க்கு அடுத்தபடியான நவீனமான கருவியாக பேங்கோவே கோலோச்சியது. ராஜா சிந்தசைசரோடு டிரிபிள் காங்கோவையும் கூட்டுச்சேர்த்துக்கொண்டு நூற்றுக்கணக்கான பாடல்களில் புதுப்புது தாளக்கட்டுகளை உருவாக்கினார். ‘ஏய்.. பாடல் ஒன்று (ப்ரியா), வெள்ளைப் புறா ஒன்று (புதுக்கவிதை), கேளடி கண்மணி ( புதுப்புது அர்த்தங்கள்) என்று கணிசமான பாடல்களில் விதவிதமான காங்கோவைப் பயன்படுத்தினார். கல்லூரி இசைக்குழுவில் நான் பேங்கோ வாசிக்க ஆரம்பித்தேன். பேங்கோ வாசிப்பதில் என்ன ஒரு சிக்கல் என்றால் வாசித்த மறுநாள் இரண்டு தொடையிடுக்குகளும், இரண்டு ஆள் காட்டி விரல்களும் ரணகளம் ஆகிவிடும். காங்கோவை இடுக்க வேண்டியதில்லை. பெரிய உருவம் என்பதால் பொத்தி வாசிக்கலாம். ஓசையும் கூடுதலாக வரும். எப்படியாவது இந்த டிரிபிள் காங்கோவை தொட்டுவிடவேண்டும் எனும் தீராத மனக்குறை முதல்மரியாதை சிவாஜிக்கு ராதவைப் பார்க்கவேண்டி தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்த மாதிரி மனசு அல்லல் பட்டுக்கொண்டிருந்தது.

தென்தமிழகத்தில் கல்லூரி இசைக்குழுக்களில் அமெரிக்கன் கல்லூரி இசைக்குழுவிற்கென்று தனி இடம் இருந்தது. எங்களுக்கு முந்தைய இசைக்குழுவில் இடம் பெற்ற சீனியரான ஜெயக்குமார் எனும் கிதார் கலைஞர் பின்நாட்களில் சென்னையில் சங்கர்-கணேஷ் போன்ற திரைப்பட இசையமைப்பாளர்களிடம் கிதார் வாசிப்பவராக இருந்தார். அவருடைய புதல்வர்தான் ஹாரிஸ் ஜெயராஜ். எங்கள் குழுவின் கிதார் வாசிக்கும் சீனியர் பான்சிங் ஒரு அபாரமான கலைஞர். அவர் குடும்பத்தில் மூன்று சகோதரர்களும் இசைக்கலைஞர்கள். கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் எப்போதும் நாங்கள் முதல்பரிசை தட்டிவிடுவோம. மதுரை மருத்துவக்கல்லூரியில் பான்சிங் பொன்மாலைப் பொழுதின் முதல் கிதார் இசையை வாசித்ததும் எழுந்த கைதட்டல் இன்னும் என் நினைவுளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. உறவுகள் தொடர்கதை, ராமனின் மோகனம் ஆகிய பாடல்களின் தொடக்க இடையிசைத் துணுக்குகளையெல்லாம் கிதாரில் அள்ளி எறிந்துவிடுவார். எல்லா முதற்பரிசுகளும் அவர் பொருட்டானவையே. பான்சிங் அப்போதே கச்சேரிகளில் வாசிக்கக்கூடிய தொழில்முறைக் கலைஞர்களில் ஒருவராக இருந்தார்.

கல்லூரி இசைக்குழுவின் ஹார்மோனியம் வாசிக்கும் சாம்சன் தன்னுடைய ஹார்மோனியத்தை விடுதியில் என் அறையில் வைக்கத்தொடங்கி, கிதார் போன்ற இன்னபிற கருவிகளை வைக்கும் குடோனாகவும் பயன்படுத்தினார். எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒத்திகை என்ற பெயரிலான இசையொலிகள் விடுதி அறையின் சன்னல்களின் வழியாக கசிந்தபடியிருக்கும். இசை ஆர்வலர்கள் இல்லாத இடம் உண்டா? அதனால் எப்போதும் வேடிக்கை பார்க்கும் நண்பர்கள் சூழ இசைஞர்கள் கூடுமிடமாக என்னுடைய அறை மாறிவிட்டது.

இப்படியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அன்பர் ஒருவர் ஒருநாள் ‘பங்கு (பங்காளி என்பதன் சுருக்கம்) ஒங்க குரூப்பை புக் பண்ண எங்க மச்சான் நாளைக்கு வற்ராரு’என்றார். நானும் ஹார்மோனியம் சாம்சனும் ஒருவரை ஒருவர் குழப்பமாகப் பார்த்துக்கொண்டோம். பங்கு விவரித்தார். ‘அதாவது எங்க மச்சான் கல்யாண வரவேற்புல ஒங்க கச்சேரி வைக்கணும்னு ஆசைப்படுறார்’. அதாவது ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நம் குழு இசைக்கப்போகிறது. அங்கு குழுமியிருக்கும் மனங்களை அசைக்கப்போகிறது என்கிறார் நண்பர். நட்பு என்பதுதான் எத்துணை மகத்துவமானது பாருங்கள். நட்பெனப் படுவது யாதெனின்னு வள்ளுவர் சும்மாவா சொன்னார். இன்னும் ஒரு வாரத்தில் வரப்போகும் அந்த வெள்ளிக்கிழமைக்காக மாங்கு மாங்கென்று ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தோம். ‘தோம்’ என்றால் நாங்கள் ஐந்து பேர். ஹார்மோனியம், அக்கொஸ்டிக் கிதார், தபலா, பேங்கோஸ், எஸ்.பி.பி.யைப் போலிசெய்யும் எங்கள் பிரதான பாடகர் வனராஜ். இதுதான் எங்கள் குழு. 3:30க்கு கல்லூரி முடிந்தவுடன் ஒத்திகை ஜரூராக நடந்தபடி இருந்தது. புக்பண்ண வருவதாகச் சொன்ன மச்சான் வரவில்லை என்றாலும் நண்பரே கச்சேரியை உறுதி செய்துவிட்டார். அதாவது வைகையின் தென் கரையில் உள்ள மண்டபத்தில் கச்சேரி. மாலை ஆறு மணிக்கு நாம் மண்டபத்தில் இருக்கவேண்டும். ஒலி அமைப்பெல்லாம் மண்டபத்தில் தயாராக இருக்கும். நான்கு மணிக்கே வேன் வந்துவிடும். தினமும் எங்கள் ஒத்திகையை மேற்பார்வையிட்டவாறு ஊக்கமூட்டிக்கொண்டிருந்தார் அந்தப் புரவலர். கச்சேரிக்கு முதல் நாள் மாலை வந்தவர் ‘பங்கு நீங்க அஞ்சு பேர்தான. அதனால வேன் வராது. அம்பாசிடர்தான் வரும். கொஞ்சம் அஜஸ்ட் பண்ணிக்கிடலாம்ல’ என்றார். அதனாலென்ன. இருக்கட்டுமே. கலைக்காக இதைக்கூட பொறுத்துக்கொள்ள மாட்டோமா என்ன? நாள் நெருங்க நெருங்க பாடகர் ஒத்திகையில் பாட மறுத்தார். குரல் பாதிக்கப்படுமாம். சுடுதண்ணீர் என்ன, மிளகு பனங்கற்கண்டு ஒதுக்கல் என்னவென்று தேவைக்கதிமாகத் தயாராகிக் கொண்டிருந்தார். அந்த வெள்ளியும் விடிந்தது. பதட்டம், ஆர்வம் என்று கலவையாக காத்திருந்தோம். மதிய உணவு இடைவேளையில் வந்த பொறுப்பாளர், ‘பங்கு ஒரு சின்ன சிக்கல். அதாவது வேன், அம்பாசிடர் ரெண்டுமே பிசியா இருக்காம். அதுனால ஒரு ரிக்சா கொண்டு வர்றேன். என்னோட சைக்கிளும் இருக்கு. பக்கத்துலதான்’ என்று சொல்லிவிட்டு பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சைக்கிளில் பறந்துவிட்டார்.

சரி. கல்யாணம் என்றால் இந்த மாதிரியான தொரட்டுகள் இருக்கத்தான் செய்யும். முகூர்த்த நாளும் வந்தது. மாலை நான்கு மணிக்கே தயாராகிவிட்டோம். திருமண வரவேற்பு எனும்போது விருந்தினர்கள் அனைவருமே கண்ணியமான தோற்றத்தில் வருவார்கள் அல்லவா. அதோடு இந்த இளம் பெண்கள் வேறு வண்ண வண்ண பட்டுப்பாவாடையும் தாவணியுமாக இங்கிட்டும் அங்கிட்டும் அநாவசியமாக நடந்துகொண்டிப்பதற்கான வாய்ப்புகள் உண்டுதானே. இதையெல்லாம் மனதில்கொண்டு கூடுதல் கவனமெடுத்து தயார் நிலையில் காத்திருந்தோம். மணி ஐந்தைக் கடந்து ஆறுக்கு அருகில் வந்துகொண்டிருந்தது. வேகு வேகுவென்று நண்பர் அதே சைக்கிளில் மூச்சு வாங்க இறங்கினார். நாங்கள் அவருக்கு பின்னால் வர வேண்டிய சைக்கிள்ரிக்சாவைத் தேடினோம். நண்பர் சொன்னார் ‘பங்கு ரெம்ப பக்கந்தான். ஆத்த குறுக்கக் கடந்தா போயிறலாம். ஹார்மோனியத்தை தூக்கி சைக்கிள் கேரியர்ல வைங்க.

உருட்டிக்கிட்டே போயிறலாம் என்றார். எங்களுக்கு வேறு வழியெதுவும் இருக்கவில்லை. ராஜாவின் அன்னக்கிளி முதல்நாள் பாடல்பதிவின்போது மின்சாரத்தடை ஏற்படவில்லையா? இதெல்லாம் நல்ல சகுனம்தான் என்றார் சற்றும் மனம்தளராத பாடகர். யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாதே என்ற பதட்டத்துடன் இசைக்கருவிகளைத் தூக்கிக்கொண்டு வைகைக் கரையை அடைந்துவிட்டோம். தண்ணீரில்லாத வைகையில் இறங்கும் பற்பல ஒற்றையடிப்பாதைகளில் ஒன்றில் சைக்கிளை இறக்கி மறு கரைக்குப் போவதற்குப் பதிலாக ஆற்றின் மையத்திலிருக்கும் மணல் திட்டை நோக்கி பங்கு உருட்டினார். அங்கே பத்துப் பதினைந்து பேர். மாப்பிள்ளையின் நண்பர்களாக இருக்கவேண்டும். ஹார்மோனியத்தை இறக்கி மணலில் விரித்திருந்த ஜமக்காளத்தில் வைத்துக்கொண்டே… ‘பங்கு, மண்டபம் நாளைக்கு காலைல இருந்துதான் புக் பண்ணிருக்காம். அதான் மச்சான் இங்கயே கச்சேரிய வைச்சுக்கலாம்னு சொல்லிட்டாரு’ என்றார் எவ்வித சங்கோஜமும் இல்லாமல்.

கல்யாண மண்டபம் என்ன, ஜரிகை தாவணி அணிந்த பெண்கள் என்ன, விருந்தென்ன என்ற கற்பனைகள் சிதறி வைகை மணல்திட்டில் ஜமக்காளத்தில் அமர்ந்து மேம்பாலத்தில் பேருந்துகள் போவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பதினைந்துபேர் கொண்ட ‘பேச்சலர்ஸ் பார்ட்டிக்கு’ கச்சேரி வாசித்த வரலாற்று நிகழ்வைத் தொடங்கினோம். ‘என் இனிய பொன் நிலாவே, இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற வரிசையில் கச்சேரி போய் கொண்டிருக்கும்போதே, யாராவது தெரிந்த ‘பங்காளிகள்’ வந்து விடக்கூடாதே என்ற பதட்டம் ஒருபுறமிருக்க, சைக்கிள் ஒன்றைத் தள்ளியபடி ஒருவர் வர கைக்கிள் கேரியரில் பிளாஸ்டிக் குடம் ஒன்றை ஜாக்கிரதையாகப் பிடித்தபடி வந்த இன்னொருவர் குடத்தை இறக்கி வைக்கிறார். குடத்தைப் பார்த்தவுடன் மாப்பிள்ளை தோழர்களின் முகங்களில் பல்பு எரிகிறது. ஆளுக்கொரு குவளையை முகம் சுளித்தபடி குடிக்கிறார்கள். விருந்துக்கான முன்னுரையாக பட்டைச் சாராய விநியோகம் என்பது மெல்லப் புரிகிறது.

இதற்குள் ஒருவர் ‘ தம்பி…சுதி ஏத்துறமாதிரி ஒரு பாட்டப் போடுங்க’ என்கிறார். இன்னொருவர் ‘பொதுவாக எம்மனசு தங்கத்தை எறக்குங்க’ என்று வேண்டுகோளையே மிரட்டலாக வைக்கிறார். ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர் என்று ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ ஐந்தாவதுமுறையையும் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. பாடகரின் குரல் எம்.ஆர்.ராதாவின் குரல் மாதிரி தகரத்தில் ஆணிகொண்டு கீறுவதுபோன்ற ஓசைக்கு மாறிக்கொண்டிருக்க, என்னுடைய இரண்டு ஆட்காட்டி விரல்களும் ‘விண் விண்ணென்று’ தெறிக்க ஆரம்பித்துவிட்டன. ‘பங்கு எங்களை அக்கரைல கொண்டு போயி விட்டுற்ரா…’ என்று கெஞ்சிக் கூத்தாடி வைகைக்கரையிலிருத ஹோட்டலில், பங்கு வாங்கிக் கொடுத்த நாலே நாலு இட்டிலிகளை சாப்பிட்டுவிட்டு கமுக்கமாக விடுதிவந்து சேர்ந்தோம். இப்படியாக எங்கள் முதல் கச்சேரி சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram