குஸ்தாவ் லெ போன் எனும் பிரெஞ்சு அறிஞர் எழுதிய ‘த சைக்காலஜி ஆஃப் த மாஸஸ்’ எனும் நூலில் ‘ஒரு நெருக்கடி நிகழும் போது, நாகரிக ஏணியில் மனிதன் வேகமாக பல படிகள் கீழிறங்கி விடுகிறான். பீதி தலைதூக்கி வன்முறை வெடிக்கும்போது, மனிதர்களாகிய நாம் நம்முடைய உண்மையான இயல்பை வெளிப்படுத்துகிறோம்’ என்பதோடு ஒரு நெருக்கடியின் போது மக்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை வரிசைப் படுத்துகிறார். இது மனிதர்களின் நடத்தையியலைப் பேசும் நூல்களுள் மிகுந்த செல்வாக்குப் பெற்றதாக இருந்தது. இதன் அடிப்படையிலேயே ஆளுபவர்கள் அதீதமான சூழல்களை நிர்வகிப்பதற்கான திட்டங்களை வகுக்கிறார்கள்.
மனிதர்களைப் பற்றிய இந்த எதிர்மறைக் கண்ணோட்டத்தின் ஆரம்பம் ‘மனிதர்கள் அனைவரும் பாவிகள்’ எனும் கிறித்தவ கருத்தியலிலிருந்து தொடங்குகிறது. கிறித்தவத்தில் பல சீர்திருத்தவாதிகள் எழுந்தபோதும் ‘ஆதி பாவம்’ எனும் கருத்து மறையவில்லை. 18ஆம் நூற்றாண்டு அறிவொளிக்கால அறிஞர்களும் ஒழுக்கம் கெட்ட மனிதர்களை மீட்க பகுத்தறிவாலேயே இயலும் என்றனர். மனிதர்கள் பொதுவாக நன்றியற்றவர்கள், நிலையற்ற மனம் கொண்டவர்கள் என்றார் மாக்கியவல்லி. முடிவின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிற கொலைகாரப் பரம்பரையின் வழித்தோன்றல்கள் நாம் என்றார் நவீன உளவியலின் தந்தையான ப்ராய்டு. இப்படி மனிதனின் இயல்பே கோணலானது என்பதாக நாம் நெடுங்காலமாக நம்ப வைக்கப்பட்டுள்ளோம்.
இனத்தின் பெயரால் இன்னபிற காரணங்களால் மனிதர்கள் சக மனிதர்களை வெறுப்பதும், கொலைவெறி கொண்டு வன்முறையைக் கையிலெடுப்பதும் இன்று நேற்றல்ல மனித நாகரிகத்தில், பரிணாமப் போக்கில் இருப்பதுதான். அது இயல்பானதே. அது ஒரு அடிப்படை உள்ளுணர்வு. ஏனெனில் நாமும் பாலூட்டி இனமாக வேட்டையாடி தின்று பிழைத்தவர்கள்தானே என்ற கருத்து நீண்டகாலமாகச் சொல்லப்பட்டு வந்தது.
சமீபத்தில் நான் வாசித்த நூலொன்று மேற்சொன்னவற்றை முற்றுமுழுதாக மறுக்கக் கூடியதாகவும், மனிதன் தன் நல்லியல்புகளாலேயே பெரும் சக்தியாக உருவெடுத்தான் என்பதை வரலாற்று ரீதியாக நிறுவுவதாகவும் இருக்கிறது. அந்த நூல் ருட்கர் பிரெக்மன் எழுதிய ‘மனித குலம்: ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு (Humankind: A hopeful history ) என்பதாகும். மனிதர்கள் அடிப்படையில் தன்னலவாதிகள், முரட்டுத்தனமானவர்கள், எளிதில் பீதியடையக் கூடியவர்கள் என்பது ஒரு கட்டுக்கதையே. அடிப்படையில் பெரும்பாலான மனிதர்கள் பண்பார்ந்தவர்கள் என்பதை பல்வேறு உண்மையான வரலாற்றுச் சம்பவங்கள், ஆய்வுகள் வழியாக உறுதிபட இந்த 515 பக்க நூல் விவரிக்கிறது.
பொதுவாகத் தினமும் செய்திகள் வாசிப்பதன் மூலம் நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வது ஒருவரை எல்லாம் தெரிந்தவராக ஆக்குகிறது என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் செய்திகள் நம்முடைய மன ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பவை என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்கிறார்.
1990களில் ஜார்ஜ் ஜெர்ப்னர் எனும் ஆய்வாளர் ஓர் ஆய்வை மேற்கொண்டு, உலகம் தரம்தாழ்ந்து போய்க்கொண்டிருப்பதான எண்ணம் என்பது பெரும்பாலான மக்களிடையே பரவியிருக்கிறது. இது ஒரு நோய்க்கூறு என்றார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம், சந்தேகம், மனித குலத்தின்மீதான வெறுப்பு, அவநம்பிக்கை மனப்போக்கு ஆகிய அறிகுறிகள் தென்படும். இத்தகைய நபர்கள் மன அழுத்தத்தாலும் மனச்சோர்வாலும் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கணித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன், 30 நாடுகளைச் சார்ந்த மக்களிடம் எளிய ஒரு கேள்வி கேட்கப் பட்டது. ‘ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, இந்த உலகத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது மேம்பட்டுக்கொண்டிருக்கிறதா? மோசமடைந்து கொண்டிருக்கிறதா? வினாக்களை எதிர்கொண்ட பெரும்பாலான மக்களின் கருத்து ‘உலகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது’ என்பதாக இருந்தது. ஆனால் எதார்த்தம் இதற்கு நேரெதிரானதாக இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் வறுமை, குழந்தைகள் இறப்பு விகிதம், பஞ்சங்கள், குழந்தை தொழிலாளர் நிலை போன்றவை கணிசமாகக் குறைந்திருக்கின்றன. மாறாக பொதுச்சுகாதாரம், போக்குவரத்து, அனைவருக்குமான கல்வி போன்றவை உலகெங்கிலும் மேம்பட்டு மனித நாகரிகத்திலேயே மிகவும் ஆரோக்கியமான, செழிப்பான நூற்றாண்டில் வசித்து வருகிறோம். ஆனால் பொதுப்புத்தியில் உலகம் சீரழிந்துகொண்டிருப்பதான பிம்பமே நிரந்தரமாய் உறைந்திருக்கிறது. இதற்குக் காரணம் நாம் அன்றாடம் நுகரும் செய்திகளே. எப்போதும் அசாதாரண நிகழ்வுகளே செய்திகளாக மாறுகின்றன. விபத்துகள், கொலைகள், திருட்டுகள், வன்முறைகள், தீவிரவாதத் தாக்குதல்கள், போர்கள், போராட்டங்கள் இவைகளே 90% செய்தி ஊடகங்களை ஆக்ரமிக்கின்றன.
மனிதர்கள் ஏன் மோசமான செய்திகள்மீது அதிக நாட்டம் கொள்கிறார்கள்? அதற்கு ஆய்வாளர்கள் இரண்டு காரணங்களை ஊகிக்கிறார்கள். நாம் வேட்டையாடிகளாக இருந்த காலத்தில் ஒரு நச்சுச் சிலந்தி அல்லது பாம்பு குறித்து அதிக எச்சரிக்கையுணர்வுடன் இருப்பது நாம் உயிர் பிழைத்திருப்பதற்கு அவசியமானதாக இருந்தது. ஆகவே மோசமானவை குறித்து விழிப்புணர்வுடன் இருக்க பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். இப்படித்தான் உலகில் அன்றாடம் நிகழ்ந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான நல்ல விசயங்களை விடுத்து குறைந்த எண்ணிக்கையிலான குற்றங்களின் மேல் நம் மனம் கவனம் கொள்கிறது.
போர்களும் பேரிடர்களும் நிகழும்போது மனிதர்கள் மிகவும் சுயநலமிக்கவர்களாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் நடந்து கொள்வார்கள் என்று நாம் நம்பி வந்திருக்கிறோம். ஆனால் அப்படியல்ல. அருகில் சென்று பார்க்கும்போது யதார்த்தம் வேறாக இருக்கிறது என்பதை இந்நூல் மிகவிரிவாகப் பேசுகிறது. சாமுவல் மார்ஷல் எனும் ‘போர் வரலாற்றறிஞர்’ ஆச்சரியமூட்டும் ஓர் அவதானிப்பை வெளியிட்டார். சில போர்க்களங்களுக்கு நேரடியாகச் சென்று எத்தனை வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளைப் பயனபடுத்துகின்றனர் என்பதை சோதித்தார். அப்போது 15 முதல் 25 சதவீதத்தினரே துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். 75% தங்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திருந்ததைக் கவனித்தார். அங்கிருந்த ஒரு அதிகாரி விரக்தியோடு கூறினாராம். “நானோ அல்லது அதிகாரிகளோ கடுங்கோபத்துடன் ‘முட்டாள்களே துப்பாக்கியை அலங்காரத்திற்காகவா வைத்திருக்கிறீர்கள்? சுடுங்கள்..’ என்று கத்தி அவர்களைத் தூண்டினால் மட்டுமே அவர்கள் சுட்டனர்,” என்றார். அதுபோலவே இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்ற வீரர்களை ஆய்வாளர்கள் பேட்டி கண்டபோது அவர்களில் பாதிக்குமேற்பட்டவர்கள் ஒருவரைக்கூடக் கொன்றிருக்க வில்லை என்பது தெரிந்தது.
அதேபோல் ஆங்கிலேய ஜெனரல் மாண்ட் கோமெரி தன் வீட்டுக்கு எழுதிய கடிதத்தில், ‘நம்முடைய வீரர்களிடம் உள்ள பிரச்னை என்னவென்றால், இயல்பாக அவர்கள் கொலைகாரர்கள் அல்லர் என்பதுதான்’ என்று எழுதியிருந்தாராம். இத்தகைய கண்டுபிடிப்புகளால் உந்தப்பட்ட ஆய்வாளர்கள் போர்கள் குறித்த தங்கள் அனுமானங்களை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினர். அமெரிக்க உள்நாட்டுப் போர் உச்ச கட்டத்தில் நிகழ்ந்த ஓர் இடத்தில் போர் முடிந்தபிறகு மீட்கப்பட்ட 27ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளில் 90% துப்பாக்கிகளில் குண்டுகள் அப்படியே இருந்தன. ஒரு குண்டுகூட சுடப்படவில்லை.
போர்களில் மட்டுமல்லாமல் பிற பேரிடர் காலங்களிலும் மக்கள் நிதானமாக ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்துகொண்ட எண்ணற்ற சந்தர்ப்பங்களை நூலாசிரியர் பதிவு செய்கிறார். 2005இல் அமெரிக்காவின் நியூ ஆர்லென்சில் வரலாறு காணாத புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வன்முறைகள் நிகழ்ந்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் பின் நிதானமாக விசாரித்ததில் அப்படியான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எல்லாமே வதந்திகளிலிருந்து ஊடகங்கள் இட்டுக்கட்டியவை என்பது தெரிந்ததாம். நியூயார்க்கின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போது கூட அக்கட்டடத்தில் இருந்தவர்கள் மிகவும் பொறுப்பாக, நிதானமாகவே நடந்து கொண்டதாகத் தெரியவந்தது. நம்மிடையே கூட போதுமான உதாரணங்கள் உண்டுதான். கொரோனா காலத்திலும், சென்னை வெள்ளத்தில் மூழ்கியபோதும் நம்ப இயலாத அளவுக்கு ஒருவருக்கொருவர் ஆதரவாக நடந்துகொண்டனர் அல்லவா.
இப்படி உலகெங்கிலும் மனித நாகரிகத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், ஆய்வுகள் போன்றவற்றின் மூலம் வன்முறை மனித இயல்பல்ல. சக மனிதர்களோடு இணக்கமாக இருப்பதே மனிதனின் பொதுவான விருப்பமாக இருக்கிறது. மனித நாகரிகம் நெடுகிலும் வெறுப்பும் நம்பிக்கையின்மையும் மிகக்குறைவாகவே தென்படுகின்றன.
வேளாண் சமூகத்தின் தோற்றத்தின் பின்னர் கிராமங்களும், நகரங்களும், பெரு நகரங்களும் இணைந்தபோது அது ஒரு பேராபத்தான நிகழ்வில் போய் முடிந்தது. தேசம் என்பதன் தோற்றம்தான் அது என்றார் ரூசோ. ஆம் தேசங்கள் உருவானபின்தான் கண்ணால் நாம் பார்த்திராத எதிரிகள் நமக்கு உருவாயினர். தேசத் தலைவர்கள் ஆணையிடும்போது நாம் அவர்களை வெறுத்தாகவேண்டும். இப்படித்தான் கற்பனையான எதிரிகளை இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கினர். வெறுப்பரசியலால் சூழப்பட்டிருக்கும் நமக்கு இந்நூல் சொல்லும் செய்தி காலத்தின் தேவையாக இருக்கிறது.
சுதந்திரத்திற்குப் பின் இந்தியத் திருநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நமது நாடு எதிர்கொண்ட கார்கில் போர் முதலிய சில போர்களைப் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் அந்தச் செய்திகள் உருவாக்காத பதட்டத்தையும் சங்கடத்தையும் இப்போது உணர்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிராக ஆரம்பித்த யுத்தம் தவிர்க்க முடியாததுதான். அனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போரை, இதைப் போர் என்றுகூட சொல்ல இயலாது. எதிர்த் தாக்குதல்தான். ஆனால் இதை ஒரு போர் என்பதாகவும், இதை ஒரு கொண்டாட்டமாகவும் சாதனையாகவும் பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுகிறோம். நாம் நம் நாட்டின் ராணுவத்தையும் இப்போதைய ஆட்சியாளர்களையும் பாராட்டிப் மகிழ்ந்து ஆரவாரிக்கவேண்டும் என நிர்பந்திக்கப் படுகிறோம். உலகின் எந்த மூலையிலும் போர் தேவையற்றது, தீமை பயப்பது எனும் தனிப்பட்ட நம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்துவது தேச துரோகமாகிவிடும் என எச்சரிக்கப்படுகிறோம்.
நான் தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது என் காணாமல் போன பென்சிலை எடுத்துவிட்டதாகக் கருதி என் பக்கத்து இருக்கை மாரியப்பனை கிள்ளி வைத்ததற்குப் பதிலாக அவன் என்னை கடித்து, இருவரும் கண்ணீரும் கம்பலையுமாக நின்றபோது என் வகுப்பு ஆசிரியை, ‘எதுன்னாலும் எங்கிட்ட சொல்லணும். நீ அடிச்சதால் பென்சில் கெடச்சதா? கடிதான கிடைச்சது..’ என்றார். நான் ஆசிரியரானபோது பல்வேறு சந்தர்ப்பங்களில் கல்லூரியில், விடுதியில் மாணவர்கள் கோஷ்டிச் சண்டைகளில் ஈடுபடும்போதும்
‘எதுன்னாலும் பேசித்தீத்துக்கணும். அடிதடி தீர்வாகாது’ என்று எச்சரித்திருக்கிறேன். தெருச்சண்டைகளிலும்கூட மத்தியஸ்தர்கள் ‘பேச்சு பேச்சா இருக்கணும்ப்பா… அதென்ன கைநீட்டுற பழக்கம்’ என்பார்கள். வரப்புத் தகறாறுகளில் பரஸ்பரம் வெட்டிக்கொண்டு குடும்பமாய் நீதிமன்ற வராண்டாக்களில் கிடந்தவர்களும் கூட இப்போதெல்லாம் வழக்குப் பதிவுசெய்து காத்திருக்கப் பழகிக் கொண்டார்கள். மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பிரச்சனைகளுக்காக அரசுகள் நீதிமன்றங்களை அணுகும்போதுகூட நீதியரசர்கள் ‘ஏன் இரண்டு அரசுகளும் பேசித் தீர்த்துக்கொள்ளக்கூடாது?’ எனப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் நாடுகளை ஆளும் இந்த மெத்தப்படித்த கணவான்கள் மட்டும் பேசித்தீர்த்துக்கொள்வதைவிட மோதிப்பார்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்?
22% மக்களை வறுமைக் கோட்டுக்குக்கீழே வைத்திருக்கும் இந்திய அரசும் 40% மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே வைத்திருக்கும் பாகிஸ்தான் அரசும் போருக்காக பல்லாயிரம் கோடிகளை வாரி இறைப்பது எத்தனை அபத்தம்? இந்தத்தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிந்துவிடுமா? அப்படி எங்காவது ஒழிக்கப்பட்டிருக்கிறதா? உலகின் சண்டியரான அமெரிக்காவின் அத்தனை பாதுகாப்பு கவசங்களையும் மீறி இரட்டைக் கோபுரங்களைத் தகர்க்க முடியுமென்றால் நாற்புறமும் திறந்திருக்கும், ஊழல் தலைவிரித்தாடும் நமது தேசத்திற்குள் தீவிரவாதிகள் நினைத்தால் எத்தகைய அழிவுகளைத் திட்டமிடமுடியும்? இந்தியா முழுவதும் போர்களினால் விதவைகளானவர்களாக 6.98 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆக குறைந்தபட்சம் 7லட்சம் தந்தைகளை இழந்த குழந்தைகள் இருக்கிறார்கள். நமக்கெல்லாம் எட்டாத தொலைவில் போர்கள் நடந்தாலும் தமிழகத்தில் 59 ஆயிரம் விதவைகளும் கேரளாவில் 70 ஆயிரம் விதவைகளும் இருக்கிறார்கள். அந்த வீரர்களின் சவப்பெட்டிகளில் மூவர்ணக் கொடிகளைப் போர்த்தலாம். 21குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்படலாம். ஆனால் அந்த இளம் விதவைகளுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லுவதற்கு யாரிடம் வார்த்தைகள் இருக்கின்றன? போர்முனையில் அதிகமும் உயிரிழப்பவர்கள் இளம் வீரர்கள். உலகம் முழுவதிலும் அதிகார வெறிபிடித்து போர்களை ஊக்குவிக்கும் இந்த வயோதிகர்களிடமிருந்து இப்பூவுலகைக் காப்பாற்றுவது எப்படி எனபதுதான் இன்றைய மனித நேயர்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கவேண்டும்.
காற்றில் பரவும் வாசனையைப் போன்று இன்று வெறுப்பு வியாபித்திருக்கிறது. இந்த செயற்கையான வெறுப்புணர்வு ஆட்சியாளர்களாலும் அவர்களின் ஊடகங்களாலும் கவனமாகப் பரப்பப்படுகிறது.
இப்போது வெறுப்பை உமிழ்வதற்கு எல்லோருக்குமான வெளியாக சமூக ஊடகங்கள் வாய்த்திருக்கின்றன. இந்த வெறுப்பரசியல், சக மனிதர்கள் மேலான நம்பிக்கையின்மையி லிருந்து நம்மை விலக்கிக் கொள்வது எப்படி என்பதே இன்றைய அவசரத் தேவையாக இருக்கிறது. எந்தப் போரிலும் யாரும் வென்றவரில்லை என்பதை விளக்கவேண்டிய அவசியமில்லை.