முன்பெல்லாம் தமிழ்நாட்டு சமையலில் அந்தந்த வீட்டுத் தாய்மார்களின் கைமணமிருக்கும். இப்போது பெரும்பாலான தமிழ்ச்சமையலறைகள் சக்தி மசாலாவின் மணத்தால் நிறைந்துள்ளன என சொல்லலாம்.
உணவைப்பொறுத்தவரை ஒரு வீட்டுக்குள்ளேயே வேறுபட்ட விருப்பங்கள் இருக்கும்நிலையில் ஒரு சுவை எல்லோரையும் வெற்றி கொள்வது மிகவும் கடினமானது, சக்தி மசாலா அதைச் சாதித்தது எப்படி?
1977 இல் ஈரோட்டுக்கு அருகிலுள்ள பெருந்துறை என்னும் சிறுநகரத்தில் துரைசாமி என்பவர் மஞ்சள் வியாபாரத்தைத் தொடங்கினார், அவருடைய முதலீடு சுமார் பத்தாயிரம் ரூபாய். மஞ்சள் வியாபாரம் நன்றாக நடக்க ஆரம்பித்தது.
வெறும் மஞ்சள் தூளோடு மற்ற தூள்களையும் விற்கலாமே என்ற எண்ணத்தோடு அவரது மனைவி சாந்தி துரைசாமியும் அதில் இணைந்தார், சமையலறைகளின் தேவை அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள் போன்றவற்றையும் தாங்களே தயாரித்து விற்க ஆரம்பித்தனர், மெதுவாக அது சக்தி மசாலா என்னும் இலச்சினையாகவும், நிறுவனமாகவும் உருமாறத்தொடங்கியது.
அவர்கள் வளர்ந்த நேரம் தமிழ்நாட்டில் சமூக, பண்பாட்டு மாற்றங்கள் புதுவடிவம் பெறத்தொடங்கிய காலம். திராவிட ஆட்சிகள் தொடங்கி வைத்த பெண் கல்வியின் பெருமாற்றம் பெண்களை வெறும் சமையலறையின் அடிமைகளாக இருப்பதிலிருந்து விடுவிக்கத் தொடங்கிய நேரமது. கல்விக்காகவும், வேலைக்குச் செல்வதன் பொருட்டும் சமையலுக்காக அதிகநேரத்தை ஒதுக்க முடியாத சூழலில்தான் சக்தி மசாலா அவர்களுக்கு நேரத்தையும், பணிச்சுமையையும் குறைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தது.
தொடங்கிய நாள்தொட்டு இன்றுவரைக்கும் லாபத்துக்காக சமரசம் செய்துகொள்ளாமல், தரத்தில் கவனம் செலுத்துவது சக்தி மசாலா வெற்றியின் ரகசியம்.
விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்குவது, அவர்களுக்கு நியாயமான விலையைத் தருவது, தரமான பொருட்களை விற்பது என்று கொள்முதல் தொடங்கி விற்பனை வரைக்கும் அறம்பிறழாத வியாபாரத்தைக் கடைபிடிக்கிறார்கள்
இதன் காரணமாக 1994, 2005, 2012, ஆகிய ஆண்டுகளில் தரமான தயாரிப்புகளுக்காக ஒன்றிய அரசின் தேசியவிருதுகள் சக்தி மசாலா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன, நியாயமான வணிக நடைமுறைகளுக்காக வழங்கப்படும் ஜம்னாலால் பஜாஜ் விருது 1992, 2001, 2012, 2020 ஆகிய வருடங்களில் இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் ஒரு நிறுவனம் நேர்மையாகவும், தரமாகவும் வளர்ந்த கதை, தனிப்பட்ட அந்த வெற்றியை ஒரு சமூகம் பாராட்டலாம், ஆனால் கொண்டாடத் தேவையில்லை. எனில் துரைசாமி, சாந்தி துரைசாமி இருவரையும் நமது தொடரில் கொண்டாட வேண்டிய தேவை என்ன?
பழமைவாதக் கருத்துகள் நிரம்பிய, ஆணாதிக்க சிந்தனைகளில் ஊறிய பின்னணியிலிருந்து வந்தவர்தான் துரைசாமி,
‘ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி’ என பாரதி பாடியதையெல்லாம் அவர் படித்துத் தெளிந்திருக்க வாய்ப்பிலை, ஆனாலும் ஒரு நிறுவனத்தில் பங்கேற்று நடத்தும் பொறுப்புக்கு சற்றேறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பே கணவனோடு மனைவியும் வந்திருப்பதே பாராட்டுக்குரியதுதான்.
தங்கள் அடைந்த வெற்றியின் பணப்பலன்களை தாங்கள் மட்டுமே அனுபவிக்காமல் தங்களைச் சுற்றியுள்ள கிராமங்களின் மேம்பாட்டிற்குச் செலவழிக்கிறார்கள். அதன் சிறு பட்டியலைப் பாருங்கள்.
சக்திமசாலா நிறுவனம் மக்கள் சேவைகளுக்காக சக்திதேவி அறக்கட்டளையை நடத்தி வருகிறது. இதன் சார்பாக ஒரு மருத்துவ ஆய்வகமும், குறைந்தவிலையில் மருந்துகளை வழங்க மருந்தகமும் நடத்தப்படுகிறது.
அறிவுசார் ஊனமுற்றோருக்கான சக்தி பள்ளி, சக்தி ஆட்டிசம் சிறப்புப்பள்ளி, சக்தி ஆட்டிசம் தொடக்கநிலை தலையீட்டு மையம் ஆகியவற்றின் வழியாக சிறப்புக்குழந்தைகளுக்கான சிகிச்சை கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர்.
வழிகாட்டி என்னும் திட்டத்தின் மூலம் ஆறு அரசுப்பள்ளிகளில் முழு நூலகத்தை நிறுவியிருக்கின்றனர். பெருந்துறை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் மின்னணு நூலகம் நிறுவப்பட்டிருக்கிறது, அரசுப்பள்ளிகளுக்கு கட்டடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.
41 அரசுப்பள்ளிகளுக்குப் புத்தகங்கள், ஆறு அரசுப்பள்ளிகளுக்கு செய்தித்தாள்கள் வழங்கப்படுகின்றன, ஆறு அரசுப்பள்ளிகளின் மாணவர்களுக்கு தொழிற்கல்விப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஈரோடு மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. 650-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 25 அரசுப்பள்ளி மாணவியர் இவர்கள் அறக்கட்டளை செலவில் சத்தியபாமா பல்கழகத்தில் சேர்க்கப்பட்டு கல்வி வழங்கப்படுகிறது. விருட்சம் திட்டத்தின் மூலமாக விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாணவர்கள் வேளாளர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டு இலவசக்கல்வி வழங்கப்படுகிறது.
இவையன்றி குளங்களுக்குத் தூர்வாருதல், தடுப்பணைகள் கட்டுதல், பின்தங்கிய கிராமங்களுக்கு தார்ச்சாலைகள் அமைத்தல், தண்ணீர்த்தொட்டிகள், கழிப்பறைகள் கட்டித்தருதல், மரம் நடுதல் போன்ற சேவைகளும் சக்திமசாலா மூலமாக வழங்கப்படுகின்றன. சில இலவச மின்மயானங்களின் பராமரிப்புச் செலவுகளையும் இந்நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கிறது..
எல்லாவற்றிற்கும் மேலாக மாற்றுத்திறனாளிகளுக்காக பல சேவைகளையும், நல்வாழ்வுத்திட்டங்களையும் இந்நிறுவனம் செய்துகொண்டிருக்கிறது. மேலும் நிறுவனத்தின் தொழிற்சாலைகளிலும், நிர்வாகத்திலும் பல நூறு மாற்றுத்திறனாளிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாற்றுத்திறனாளிக் களுக்கான சேவைகளுக்காக வழங்கப்படும் ஹெலன்கெல்லர் விருது கடந்த ஆண்டு சக்திமசாலா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு சக்திமசாலாப் பொதியிலும் உணவுப்பொருட்கள் மட்டுமன்றி சுற்றுப்புறத்தூய்மை, மக்கள் நலன், கல்வியறிவளித்தல், மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவையும் அடங்கியிருக்கின்றன என்பதை அறியும்போது அதன் சுவையும் நறுமணமும் மேலும் அதிகமாவதை உணர முடிகிறது.
”அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி”
வசதியற்ற வறியவர்களின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும். அப்படிச் செய்வதுதான், பொருள் வசதிபெற்ற ஒருவன் தன் பொருளைச் செலவு செய்வதற்கு ஏற்ற சிறந்த வழிமுறையாக அமையும் என்கிறது வள்ளுவம்.