தொடர்கள்

வனமக்கள் தோழன்!

பெருவழிப்பாதை - 15

கவிதாபாரதி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள மந்தை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன், அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவரான கருப்பனுக்கு விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ள அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. விவசாயம் செய்யத் தண்ணீர் வேண்டும் என்பதற்காக கருப்பன் கிணறு தோண்டினார், நினைத்தபடி தண்ணீர் வராததால் அந்தப்பகுதியிலுள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பணக்காரரிடம் பண உதவி கோரியிருக்கிறார்.

அந்த நிலத்தை அடமானமாக எழுதி வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுத்த அந்த மனிதர் சில நாட்களில் கருப்பனை நிலத்தைவிட்டு விரட்டிவிட்டார், கிட்டத் தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக தன் நிலத்தை மீட்கப் போராடிக்கொண்டிருந்தார் கருப்பன்.

இந்நிலையில் இருபதாண்டுகளுக்கு மேலாக தன் அனுபவத்தில் இருக்கிறது என்பதைக்காட்டி கருப்பன் பெயரிலுள்ள மின் இணைப்பைத் தன் பெயருக்கு மாற்ற மனுச்செய்தார் அந்த மனிதர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ப.பா.மோகனைச் சந்திக்க ஈரோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்த கருப்பன் கட்சிப் பொறுப்பிலுள்ள ஒரு தோழருக்கு அறிமுகமானார். எழுபது வயதைக் கடந்த நிலையிலும் தன் நிலத்தை மீட்கப்போராடும் கருப்பனின் வைராக்கியம் தோழரைக் கவர்ந்தது, கருப்பனின் நிலத்தை மீட்டுத்தர முடிவெடுத்தார்

தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு அரசால் வழங்கப்பட்ட நிலத்தை எந்தப் பரிவர்த்தனையின் அடிப்படையிலும் வேறொருவர் உரிமை கொண்டாடமுடியாது என்பதை வலியுறுத்தி மாவட்ட வருவாய் வட்டாட்சியர் மூலமாக கருப்பனின் நில உரிமையை தோழர் மீட்டுக்கொடுத்தார், ஆனால் ஆக்கிரமிப்பாளர் சென்னையிலுள்ள நில அளவை ஆணையரிடம் சென்று வட்டாட்சியரின் முடிவுக்குத் தடை பெற்றுவிட்டார்.

மீண்டும் தோழர் கருப்பனை அழைத்துக்கொண்டு சென்னை வந்து ஆணையரைச் சந்தித்து நிலத்தை கருப்பனுக்கே கொடுக்கும் ஆணையைப் பெற்றார், நிலத்தை மீட்டு கருப்பனுக்கே தருமாறு ஈரோடு மாவட்ட வட்டாட்சியருக்கு அவர் உத்தரவிட்டார்.

வருவாய் வட்டாட்சியர் நிலத்தை மீட்பதற்கு அந்தியூர் காவல்துறை ஒத்துழைக்கவில்லை, இதனால் சாதிமோதல் வரும் என்று தெரிவித்தது காவல்துறை, காரணம் ஆக்கிரமிப்பாளரும், ஆய்வாளரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள், இறுதியில் காவல்துறைக்கே தெரிவிக்காமல் தனது துறை அதிகாரிகளை அழைத்துக்கொண்டு வட்டாட்சியரே நிலத்தில் இறங்கி ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றினார், அந்த நிலத்திலிருந்து ஒரு கை மண்ணை அள்ளி கருப்பனிடம் கொடுத்தார், தன் ஆயுள் முடிவதற்குள் தன் நிலத்தை மீட்கவேண்டும் என்னும் வைராக்கியம் வென்ற மகிழ்ச்சியில் கண்கலங்கி அதைப் பெற்றுக்கொண்டார் கருப்பன், தன் கடமை முடிந்த நிறைவோடு தோழர் அங்கிருந்து நகர்ந்தார்

ஒரு கருப்பன் மட்டுமன்று சத்தியமங்கலம், அந்தியூர், பவானிசாகர், தாளவாடி பகுதி மக்களின் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாதவர் தோழர் வி.பி.குணசேகரன்.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் வலையக்காரம்பாளையம் என்ற ஊரில் வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தவர் குணசேகரன், அவரது தந்தை பல ஆண்டுகள் பஞ்சாயத்துத் தலைவராகவும், ஒன்றியப் பெருந்தலைவராகவும் இருந்தவர். பொறியியல் பட்டம் பெற்ற குணசேகரன் நாசிக்கில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினார். பின் ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையில் பொறியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.

பொதுவுடமை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவரால் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை. அடிப்படையிலேயே அவர் சுயசாதி எதிர்ப்புக் கொண்டவராக இருந்தார். பொதுவுடமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அவர் தமிழ்நாடு, கர்நாடகா எல்லையிலுள்ள மலைவாழ்மக்கள் கிராமங்களில் கட்சிக்கிளைகளைக் கட்டுவதில் முழுமூச்சாக இறங்கினார்.

எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்த மலைவாழ் மக்களின் நலனைக்கருத்தில்கொண்டு 1989-ல் மலைவாழ்மக்கள் பாதுகாப்புக்குழு என்ற பெயரில் ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்.

குடிநீர்வசதி, பள்ளிக்கூட வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தினார். மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்விக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் அங்கேயே தங்கிப் பணிபுரிய வேண்டும்,

பொதுவாக இதுபோன்ற மலைப்பகுதிகளுக்கு எதாவது தண்டனையின் அடிப்படையில் பணிமாறுதல் செய்யப்படுபவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் அவ்வாறு மாறுதலாகி வரும் ஆசிரியர்கள் கீழே தங்கிக்கொண்டு எப்போதாவது பள்ளிக்கு வருவர். குறைந்த சம்பளத்தில் யாரையாவது பிடித்து தனக்குப்பதிலாக பாடம் நடத்தவைத்துவிட்டு, அரசு சம்பளத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர். இதற்காகப் பல இடங்களில் போராடி அந்தப் பள்ளிகளை ஒழுங்குபடுத்தினார்.

பள்ளிக்கூடங்கள் இல்லாத ஊர்களில் பள்ளிகளைக்கட்டி, அங்குள்ள இளைஞர்களை ஆசிரியர்களாக்கி நடத்தினார். பின்னர் அந்தப்பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவும் வழிவகைகளைச் செய்தார்.

மலையில் இயற்கையாகக் கிடைக்கும் விளைபொருட்கள் மலைவாழ் மக்களின் உரிமைக்குவிடுவதுதான் வழக்கம், ஆனால் அரசு அவற்றை வெளிநபர்களுக்குக் குத்தகைக்கு விட்டு வருவாயை உண்டாக்கும் வேலையைச் செய்தது, மக்களைத்திரட்டிப் போராட்டங்களை நடத்தி மலைவாழ்மக்களுக்கே அந்த உரிமையை மீட்டுத்தந்தார்.

மலவாழ்மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் கிடைப்பது கடினம், அரசு அலுவலகங்களுக்குப் போய் சான்றிதழ்களைக்கொடுத்து தாங்கள் பழங்குடிகள்தான் என்று நிரூபிப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது, எனவே அதிகாரிகள் அவர்களின் மனுக்களை எளிதாக நிராகரித்துவிடுவர். அதே சமயம் செல்வாக்குள்ள வெளிநபர்கள் குறுக்குவழியில் அந்தச் சான்றிதழ்களைப்பெற்று சலுகைகளை ஏற்படுத்தி வந்தனர்.

அதிகாரிகள் மலைவாழ்மக்களின் இடத்திற்கு வந்து, விசாரித்து அறிந்து சான்றிதழ்களை வழங்கினால்மட்டுமே இப்பிரச்னை தீரும் என்பதை வி.பி,ஜி உணர்ந்தார். அப்போதைய பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், மற்றும் மோகனசுந்தரம், வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோரும் அவருக்கு ஒத்துழைத்தனர். பல இயக்களை நடத்தி அதிகாரிகள் நேரடியாக வந்து ஆராய்ந்து சான்றிதழ்கள் வழங்கும் முகாம்கள் சோதனை முறையில் ஈரோடு மாவட்ட்த்தில் நடத்தப்பட்டனர், இந்த முகாம்களில் அரசு அலுவலர்களோடு, கிராம மக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்று பரிசீலிக்கப்பட்டு உரியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் மலைவாழ்மக்கள்மீது நடத்தப்பட்ட கொடுமைகள் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதது. இதில் பொதுப்பார்வைக்கு வந்தவை சொற்பமே. சட்டவிரோதமாக முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை மீட்கவும், தொடர்ந்து அதிரடிப்படையினர் கைது செய்யாமல் காக்கவும்

வி.பி.ஜி பெரும்பாடுபட்டார், பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்விளைவாகவே சதாசிவா கமிஷன் அமைக்கப்பட்டதும், அதிரடிப்படையினரால் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு இழப்பீடு வழங்குவதும் நடந்தன, எனினும் ஒதுக்கப்பட்ட தொகையின் ஒரு பகுதி இதுவரைக்கும் வழங்கப்படாமலே கிடக்கிறது.

தலைமுறை தலைமுறைகளாக வனத்தில் வாழும் மக்களிடம் அவர்கள் பயன்படுத்தும் நிலங்களின் உரிமைப்பத்திரங்கள் இல்லை, அவர்களை சொந்தநிலங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு அந்த நிலங்களை கீழே இருந்து வரும் செல்வாக்குள்ள தனியார்களுக்கும், கட்சிப்பிரமுகர்களுக்கும் பட்டாப் போட்டுத்தரும் செயல்கள் நடக்கின்றன, வனத்துறை அதிகாரிகளில் சிலரே இதற்குத் துணைபோகின்றனர், இன்னொரு பக்கம் புலிகள் காப்பகம் என்று அறிவித்துவிட்டு அரசே அவர்களின் சொந்த நிலத்திலிருந்து அதன் மக்களை அப்புறப்படுத்துகிறது.

இதுபோன்ற செயல்களுக்கு எதிராக பழங்குடிமக்களின் நிலமீட்புப்போராட்டத்தை அந்த மக்களைக்கொண்டே 2000ஆம் ஆண்டிலிருந்தே நடத்தி வருகிறார், வெறும் தன்னார்வத்தொண்டராக இல்லாமல் தன்னை ஒரு மீட்பராகவும் கருதிக்கொள்ளாமல் மக்கள் அவர்களின் உரிமைகளை அறியவும், அவர்களை அரசியல்படுத்துவதற்குமான வேலைகளைச் செய்துகொண்டிருப்பதே, வி.பி.ஜி என்னும் வி.பி.குணசேகரனின் சிறப்பு.

அரசு எப்போதும் மலைவாழ்மக்களை வனத்தை ஆக்கிரமிப்பவர்களாகவே பார்க்கிறது, ஆனால் அந்த மக்கள் வனத்தோடு இயைந்து வாழ்பவர்கள், உணவுத்தேவைகளுக்கு சிறு விலங்குகளை வேட்டையா டுவார்களே தவிர பாதுகாக்கப்படும் வனவிலங்குகளை அவர்கள் கொல்வதில்லை, யானைகளைக்கூட அவர்கள் பெரியசாமி என்றே சொல்வார்கள், தங்கள் நிலத்தில் யானை வந்து நின்றுவிட்டுச் சென்றால் அந்த வருடம் விளைச்சல் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை.

அப்பாவி மலைவாழ்மக்களை வனங்களிலிருந்து அப்புறப்படுத்த நினைக்காமல் அவர்களுக்கு வனம் சார்ந்த வாழ்விடங்களை உத்தரவாதப்படுத்தவேண்டும், தனியார்களின் ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அவற்றை மீட்டெடுத்து அந்த மக்களுக்கே பிரித்துத்தரவேண்டும் என்கிறார் வி.பி.குணசேகரன்.

இவற்றையெல்லாம் கடந்து வேறொரு மகத்தான செயலையும் செய்துகொண்டிருக்கிறார் வி.பி.ஜி. மலைக்குழந்தைகளின் படைப்புத்திறனை வெளிஉலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களின் கலைத்திறன்களை ஊக்குவித்து வெளிக்கொணர்கிறார்.

மலைவாழ்மக்களின் பாடுகளை இலக்கிய ஆவணமாக்கவும் உதவுகிறார். ச.பாலமுருகன் எழுதிய சோளகர்தொட்டி வி.பி.ஜி.யின் வழிகாட்டுதலில் உருவானதே. வனமக்களின் தோழன் வி.பி.ஜி.யின் முயற்சிகள் வெல்லட்டும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram