தொடர்கள்

ஆரோக்கியமான வாசகரே இலக்கியத்தை வளர்ப்பவர்

செல்வராஜ் ஜெகதீசன்

“ஆரோக்கியமான வாசகரே இலக்கியத்தை வளர்ப்பவர்”

''இடைவிடாத தேடுதல் கொண்டவனே/கொண்டவளே நல்ல வாசகர்.

எந்தப் படைப்பாளியிடமும் தேங்கிவிடக் கூடாது. மாலை போட்டு சூடம் காட்டக் கூடாது. தலைவராக, ஒரே படைப்பாளியை பாலபிஷேகம் செய்யக் கூடாது. ஓடிக்கொண்டே இருக்கிற நதி போல ஒரு நல்ல வாசகர் இருப்பார். நல்ல வாசகர்களே, நல்ல எழுத்தாளரையும் உருவாக்க முடியும்.

வாசகர், 'சக இருதயர்’ என்பது, ஓர் அழகிய உண்மை. எழுதுபவரையும்விட ஒரு நல்ல, ஆரோக்கியமான வாசகரே இலக்கியத்தை வளர்ப்பவர்!''

# பிரபஞ்சன்

ஜனவரி 2013 இல் எழுத ஆரம்பித்து  டிசம்பர் 2013 வரை தொடர்ந்த தொடர் இந்த வாரத்தோடு நிறைவு பெறுகிறது.

ஏறக்குறைய ஓராண்டு, 46 கவிஞர்கள், 378 கவிதைகள்.

தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த தொடர் கொடுத்த ஆனந்தம் அளவிட முடியாதது. அது ஒரு கவிதை ரசிகன், தன் வாசிப்பின் சுகத்தை உலகெங்கும் உள்ள தமிழர்களோடு பகிர்ந்து கொண்ட சந்தோஷம்.

இதில் எடுத்தாளப்பட்ட கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளை நான் கண்டடைந்த வழிகள்:

• ஒவ்வொரு வருடமும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் (நான் வர இயலாத வருடங்களில் நண்பர்களை வாங்கச் செய்து, அவற்றை அபுதாபிக்கு வரவழைப்பது ஒரு தனிக் கதை, ஊருக்கு போகும் சில நண்பர்கள் இதன் பொருட்டு, சொல்லாமலே போய் வருவது உட்பட)

• விடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம் கண்டிப்பாக எப்படியும் இரண்டு முறையாவது தி. நகர் புக்லாண்ட்ஸ் கடைக்கு போய் புத்தகங்களை அள்ளி வருவேன்.

• கே கே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் மற்றொரு இடம். 

• இந்த வருடத்திலிருந்து சைதாப்பேட்டை அகநாழிகை புத்தகக் கடையும் லிஸ்டில்.

• சென்னை மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டர் வளாக புத்தகக் கடை, ஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டால் போன்ற கடைகளில் இருந்தும் சில நல்ல புத்தகங்களை வாங்கி இருக்கிறேன்.

படிக்க வேண்டிய புத்தகங்களை எப்படிப் போய்ச் சேர்ந்தேன்?

1) என் அந்தரங்கம் தொகுதிக்கான முன்னுரையில் கவிஞர் விக்ரமாதித்யன் பரிந்துரைத்திருந்த புத்தகங்கள். 

2) சுகுமாரன் அவர்களைப் பற்றி இங்கு கண்டிப்பாக சொல்ல வேண்டும். ஒரு தொகுப்பே வெளியான நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, வாருங்கள் என்று சொன்னதோடு, அவர் அப்போது பணியிலிருந்த குமுதம் அலுவலக அறையில் வைத்து, கவிதை குறித்து பேசிய ஒரு இரண்டு மணி நேரங்கள் நிச்சயம் கவிதை குறித்த நிறைய திறப்புகளை (அட்லீஸ்ட் படிக்கவேண்டியவை குறித்து) எனக்குத் கொடுத்தது. ஒரு பிரத்யேக நன்றியை அவருக்கு சொல்லிக்கொள்கிறேன். இன்னமும் இன்றைய தேதி வரை, தொலைபேசியில் தொல்லை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

நன்றி சொல்வதென்றால்,

1) முதலில், இப்படி ஒரு தொடர் எழுதப் பணித்த அந்திமழை இளங்கோவன்.

2) அந்திமழை குழுமத்தை சார்ந்த அசோகன் நாகமுத்து, கௌதமன், சுகுமாரன்

3) ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைச் சொன்ன கலாப்ரியா, சமயவேல்

4) நல்ல பணி தொடருங்கள் என்று ஊக்கம் கொடுத்த கவிஞர் ராஜ சுந்தரராஜன் முதல் வாசித்து கருத்துகளையும் விருப்பங்களையும் தெரிவித்த முக நூல் நண்பர்கள்.

எல்லோர்க்கும் உளமார்ந்த நன்றிகள். 

பிரமிள், பிரம்மராஜன், தேவதேவன், குட்டிரேவதி, தூரன் குணா, ந. பெரியசாமி, தமிழ்நதி, கதிர்பாரதி, நிலாரசிகன், சாம்ராஜ், மாலதி மைத்ரி என்று இருப்பில் இருக்கும் இன்னபிற  கவிஞர்களின் தொகுதிகளை முன்வைத்து கவிதையின் கால் தடங்கள் இரண்டாம் பகுதியை, வாய்ப்பும் வசதியும் கூடியமையும் பட்சத்தில், மீண்டும் அந்திமழையில் எழுதுவேன்.