தொடர்கள்

இரட்டை சதம்; இரட்டை மகிழ்ச்சி!

சிவசிவன்

சயீத் அன்வரை எனக்குப் பிடிக்காமல் போனது. இத்தனைக்கும் பாகிஸ்தான் அணியில் இருந்த மிக அருமையான விளையாட்டுவீரர் அவர். 1997-ல் சென்னை டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அவர் விளையாடியபோது கிட்டத்தட்ட அவர் 200 ரன்களை அடிக்க மிக அருகில் வந்ததால்தான் அவரை எனக்குப் பிடிக்காமல் போனது. கும்ப்ளே ஸ்பின்னும் இல்லாமல் வேகமும் இல்லாமல் போட்ட பந்துகளை அவர் முட்டிபோட்டு ஸ்வீப் செய்யச் செய்ய எனக்கு கோபமும் இயலாமையும் எகிறின. ஏனெனில் ஒருநாள் போட்டியில் முதல்முதலாக இரட்டை சதம் அடிக்கும் சாதனையை நான் சச்சினுக்காக ரிசர்வ் செய்து வைத்திருந்தேன். நல்லவேளையாக தலைக்கு வந்தது தொப்பியோடு போனது. அன்வர் 194 ரன்னோடு நடையைக் கட்டினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் பிரார்த்தனை செய்து கொண்டுதான் அந்த ஆட்டத்தில் அன்வர் ஆடியதாக நினைவு. ஒவ்வொரு முறை அண்ணாசாலையின் அந்த தர்காவைக் கடக்கும்போதும் அந்த 194 ரன்களின் நினைப்பு எனக்கு தவறாமல் வரும். அப்புறம் ஜிம்பாப்வேயின் சார்லஸ் கோவன்ட்ரி என்று யாரோ ஒரு வீரர்கூட 194 அடித்திருக்கிறார்.

சச்சின் இரட்டை சதம் அடிக்கும் நாளுக்காக நான் ஒரு கழுகுபோல் காத்திருந்தேன். அதற்குப் பலனும் கிடைத்தது. 

ஒரு நாள் கிரிக்கெட்டின் நாற்பதாண்டு வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மிகப்பொருத்தமாக உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அடித்தார்.

ஆனால் அந்த 200 அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. குவாலியரில் பிப்ரவரி 24, 2010&ல் நடந்த ஆட்டம் அது. இந்த தினத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு அதை கடைசியில் சொல்கிறேன். இதற்கு முந்தைய ஆட்டத்தில் சச்சின் கொஞ்ச ரன்னிலேயே ரன் அவுட் ஆகியிருந்தார். அவருக்கு 36 வயது வேறு ஆகிவிட்டது. எப்போ ஓய்வு பெறுவார் என்று முனகல்கள் சின்னதாய் எழத் தொடங்கி இருந்த நேரம்.

அன்று 150 ரன்களைத் தாண்டியதும் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. ஆவ்.. அவர் ஒரு சிக்ஸ் அடித்துவிட்டு தொடையைப் பிடித்துக்கொண்டார். ஆனால் சென்னையில் சயீத் அன்வர் செய்ததுபோல அவர் ஒரு ரன்னரை வைத்துக் கொள்ளவில்லை. எதிர்முனையில் இருந்த டோனி சச்சினை கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கச் சொல்லிவிட்டு ரன்குவிப்பைப் பார்த்துக்கொண்டார். டம். டம்.. ஆமாம்... டோனி அன்று 35 பந்துகளில் 68 ரன்களை எடுத்தார். 

பின்னர் 150 ஐத் தாண்டி 175-ஐ ஒரு சிக்ஸ் அடித்து எட்டியபோது கபில்தேவ் ஜிம்பாப்வேக்கு எதிராக எடுத்திருந்த ரன்களை இரண்டாவது முறையாகத் தாண்டினார். சென்ற ஆண்டுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 175 ரன்களை சச்சின் குவித்து ஆட்டமிழந்திருந்தார். அதற்கும் முன்பாக தன்னுடைய அதிக பட்ச ரன்களாக 186-ஐ நியூசிலாந்துக்கு எதிராக எடுத்திருந்தார். ஆண்டு 1999. இடம்: ஹைதராபாத்.

காலிஸ் வீசிய ஒரு புல்டாசை தட்டிவிட்டு நான்கு ரன்கள் எடுத்தபோது தன்னுடைய பழைய ரிக்கார்டான 186ஐ சமன்செய்தார். அடுத்தது ஒரு ரன். புது இந்திய ரெக்கார்ட் உருவாகிவிட்டது. அடுத்தது 46-வது ஓவரில் உலக சாதனையான அன்வரின் 194-ம்  இரண்டு ரன்கள் எடுத்ததின் மூலம் கடக்கப்பட்டது. கூட்டம் ஆர்ப்பரித்தது. சச்சின் அமைதியாக மார்க் பௌச்சரின் நீட்டிய கையை குலுக்கினார். பேட்டை உயர்த்தவில்லை. கொண்டாட்டம் இல்லை.

200க்கு பக்கத்தில் வந்தாச்சு. 49-வது ஓவர் முழுக்க டோனிதான். அவர் அதில் 17 ரன்கள் அடித்தார். கடைசிஓவரின் முதல் பந்து மீண்டும் டோனி. சிக்ஸ். அடுத்த பந்தில் ஒரு ரன். இப்போது சச்சின் பந்தை எதிர்கொண்டார். 200 அடித்தாகவேண்டும். கூட்டத்தின் இதயங்கள் ஒரே மாதிரி துடித்தன. அதோ... இரட்டை சதம் அடித்தே விட்டார் சச்சின்!... மட்டையை உயர்த்துகிறார். தலையை உயர்த்தி விண்ணைப் பார்க்கிறார். எல்லா கிரிக்கெட் ரசிகர்களும் தாங்களே 200 அடித்ததாக மகிழ்கிறார்கள். 

ஒரு ஆட்டக்காரனின் உச்சபட்ச பங்களிப்பு இதுதான். அவனது ஒவ்வொரு சாதனையின் போதும் தன்னைக் கவனிக்கும் அத்தனைபேருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறான். 

அந்த ஆட்டத்தில் சச்சின் 37 பந்துகளில் அரை சதம் அடித்தார். 90 பந்துகளில் 100. முதல் சிக்ஸை அடித்தது 111 ரன்களைக்கடந்த பின்னரே. 200 ரன்களை 147 பந்துகளில் எடுத்து ஆட்டமிழக்காமல் ஒரு மாவீரனாக களத்தை விட்டு வெளியேறினார். 

அந்த ஆட்டத்தின் சிறப்பு அவர் ஒரு தவறு கூட செய்யாமல் ஆடியதுதான். ஒரு ரன் அவுட் சான்ஸ் இல்லை. தவற விட்ட கேட்ச் வாய்ப்புகள் இல்லை. கிளீனான ஆட்டம். கிளாசிக்கான மட்டைவீச்சு. கடைசியில் இந்தியா குவித்த ரன்கள் 401. தென்னாப்பிரிக்கா 248 ரன்களில் ஆட்டமிழந்து தோற்றது.

இந்த இரட்டை சதம் அடித்த அதே நாளில் 1988&ல் பள்ளி அணிகளுக்கான போட்டியில் வினோத் காம்ளியும் இவரும் சேர்ந்து அப்போதைய உலக சாதனையான 664 ரன்களை குவித்திருந்தனர்.

அதற்கு அடுத்த ஆண்டே சேவாக், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் போட்டார். 2014&ல் போனவாரம் ரோகித் சர்மாவும் 200 அடித்தார். ஆட்ட விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டதும் இப்படி 200 மலிவாகப் போனதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த மூவருமே இந்தியர்கள்; இன்னும் வெளிநாட்டு வீரர்கள் யாரும் 200 அடிக்கவில்லை என்று மகிழ்ச்சி அடையலாம்தான். ஆனால் விரைவில் அடுத்த நாட்டுக் காரர்களும் அடித்துவிடுவார்கள் என்பது உறுதி. ஆனால் முதல்முதலாக 200 ரன்களைக் கடப்பதைக் காண்பதில் இருக்கும் மகிழ்ச்சி இனி இருக்காது. அந்த மகிழ்ச்சியை சச்சின் கொடுத்ததுதான் விசேஷம். இரட்டை சதம்; இரட்டை சந்தோஷம்! இல்லையா?

தொடர்-விடைகொடு ரசிகனே- சச்சின்-1

(இந்த கட்டுரைத் தொடர் தொடர்பான கருத்துகள், விமர்சனங்களை editorial@andhimazhai.com-க்கு எழுதுங்கள்)