தொடர்கள்

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எனக்குச் சொன்ன அறிவுரை! அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள்- 18

சாரு நிவேதிதா

கேள்வி: 'The angst of the Tamil brahmin: Live and let live' என்று Times of India-வில் வெளியான பத்ரி சேஷாத்ரியின் கட்டுரையை எப்படிப் பார்க்கிறீர்கள். அதனுடன் ஒத்துப் போகிறீர்களா ? 

கட்டுரையின்லிங்க் ;

http://timesofindia.indiatimes.com/city/chennai/The-angst-of-the-Tamil-brahmin-Live-and-let-live/articleshow/4540815

-உமா மகேஸ்வரன்

பதில்: ஏற்கனவே இது பற்றி பத்ரி சேஷாத்ரியை ஒத்தே எழுதியிருக்கிறேன்.  அவர் அந்தக் கட்டுரையில் சொல்லியிருப்பது அவ்வளவும் இன்றைய எதார்த்தம்.  என்னுடைய நண்பர் ஒருவர் பல ஆண்டுகளாக சினிமா துறையில் உதவி இயக்குனராக இருக்கிறார்.  சமீபத்தில் அவர் என்னிடம் கொஞ்சம் தயவான குரலில், “யாரிடமும் நான் ப்ராமின் என்று சொல்லி விடாதீர்கள்” என்றார்.  உண்மைதான்.  இன்று சினிமா துறையில் ஒருவர் பிராமணர் என்று சொல்லிக் கொண்டு இயங்க முடியாது.  சினிமா துறை மட்டும் அல்ல; எந்தத் துறையிலும் தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு வேலை இல்லை.  முப்பதுகளிலிருந்தே பிராமணர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறத் துவங்கி விட்டார்கள்.  சந்தேகமின்றி இது Exodus தான்.  முன்பு பம்பாய், தில்லி என்று போனார்கள்.  இன்று அமெரிக்கா.  

தமிழ்ச் சமூகத்தில் அதிக அளவு வெறுக்கப்படும் சாதியினராக தலித்துகளும் பிராமணர்களும் இருக்கின்றனர்.  இன்றும் பல கிராமங்களில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது.  தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிக்காத பல கிராமங்கள் உள்ளன.  சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வந்தாலும் சமூகம் தரும் அவமரியாதையைத் தாங்கிக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் தலித்துகள்.  ஆனால் தலித்துகளுக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு கூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள் பிராமணர்கள்.  கடந்த நூறு ஆண்டுகளாக பிராமண சமூகத்தைப் போல் வெளிப்படையாகத் தூற்றப்பட்ட, துவேஷிக்கப்பட்ட, கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்ட சமூகம் தமிழ்நாட்டில் வேறு எதுவும் இல்லை.  தமிழ் சினிமாவில் பிராமணர்களைக் கிண்டல் செய்வதும் அவதூறு செய்வதும் மிகவும் சகஜமான, எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட விஷயமாக இருக்கிறது.  வேறு எந்த சாதியைப் பற்றியும் இவர்கள் இப்படிப் பேச முடியாது.  பேசினால் நாக்கு இருக்காது.  அப்படிப் பேசக் கூடிய சாத்தியமே இங்கு இல்லை.  சுஜாதா ஒரு தொடர்கதையில் ஒரு சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதியவுடன் கிளம்பிய எதிர்ப்பில் அந்தத் தொடர்கதையே நிறுத்தப்பட்டது.  ஆனால் விஸ்வரூபம் என்ற படத்தில் கமல்ஹாசன் ஒரு பெண்ணிடம், “பாப்பாத்தி சிக்கனை டேஸ்ட் பண்ணி சொல்லு” என்று படு சாதாரணமாகச் சொல்ல முடிகிறது.  அதேபோல் அவருடைய பேட்டிகளிலும் பார்ப்பனர் என்றே குறிப்பிடுகிறார்.  தலித் பெண்ணையோ, வேறு எந்த சாதியையோ பற்றி இப்படி அவர் குறிப்பிட முடியுமா?  தலித்துகளின் சாதியைக் குறிப்பிட்டுத் திட்டினால் சட்டப்படி குற்றம் என்கிற போது பிராமணர்களை மட்டும் திட்டலாமா?  திட்டலாம்.  கேட்பதற்கு யாரும் இல்லை என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை.  கமல் மட்டும் அல்லாமல் எல்லா முற்போக்கு பிராமணர்களுமே பார்ப்பனர் என்றே குறிப்பிடுகின்றனர்.  பிராமணர் என்று சொல்லி விட்டால் எங்கே தங்களுடைய முற்போக்கு அடையாளம் கலைந்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.  

என் மனைவி ஒரு பிராமணப் பெண் என்பதால் முதல் சந்திப்பிலேயே என் தாயார் அவளை அவமதித்தார்.  ”ஒரு பாப்பாத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டியே?” என்று அவள் முன்னாலேயே கேட்டார்.  தொடர்ந்து இப்படியே அவளை அவமானப்படுத்தி வந்ததால் என் பெற்றோரை ஏழு ஆண்டுகள் நான் சந்திக்காமலேயே இருந்தேன்.  நான் வேறு எந்த சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் இந்த அவமரியாதை நடந்திருக்காது.  தலித் பெண்ணைத் தவிர என்பதையும் இங்கே ஞாபகத்தில் கொள்ளவும். தலித்துகளையும் பிராமணர்களையும் இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்.  அதிலும் குறிப்பாக அந்த இரண்டு சாதிகளைச் சார்ந்த பெண்களின் ஒழுக்கம் பற்றி சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகள் மிக மோசமானவை.  மெத்தப் படித்தவர்களே அப்படித்தான் கருதுகின்றனர்.  அம்மா வந்தாளில் தி. ஜானகிராமனே எழுதி விட்டார் என்று சொன்ன பலரை நான் பார்த்திருக்கிறேன்.  தஞ்சாவூரில் நான் கல்லூரியில் படித்த காலத்தில் பிராமணப் பெண்களைப் பற்றி நிலவிய கட்டுக் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை.  

தங்களுக்கு எதிராக சமூகத்தில் நிலவும் துவேஷத்தை பிராமணர்கள் எதிர்கொண்டது எப்படியெனில் – அவர்கள் அதற்கு எதிராகப் போராடுவதைத் தவிர்த்து விட்டுத் தங்களின் வாழ்விடங்களை மாற்றிக் கொண்டனர்;  தங்களை துவேஷித்த சமூகத்தையும் அந்தச் சமூகத்தின் மொழியையும் அந்தச் சமூகம் வாழ்கின்ற நிலவெளியையும் முற்றாகப் புறக்கணித்தனர்.  தமிழுக்குப் பதிலாக ஆங்கிலத்தையும், தமிழ்நாட்டுக்குப் பதிலாக அமெரிக்காவையும் சுவீகரித்துக் கொண்டனர். 

தமிழை வளர்த்ததாக திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சொல்லித் திரிந்தாலும் அவர்களுடைய ஆட்சியில் தான் தமிழ் அழிந்தது.  கடந்த முப்பது ஆண்டுகளில் மெல்ல மெல்ல தமிழ் பேச்சு மொழி ஆனதற்கு திராவிடக் கட்சிகளே காரணம்.  மாறாக, பிராமணர்கள் இதுவரை தமிழை வளர்த்தே வந்திருக்கின்றனர்.  உ.வே.சாமிநாதைய்யர் இல்லாவிட்டால் இன்று சங்கத் தமிழ் இலக்கியமே கிடைத்திருக்காது.  தமிழ் வேதம் என்று கருதப்படும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆழ்வார்கள் நமக்கு அளித்த சொத்து.  அவர்களைப் போல் தமிழ் வளர்த்தவர்கள் யார்?  இன்றளவும் பெருமாள் கோவில்களில் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிப் பாடித்தான் தமிழ் வளர்க்கிறார்கள் பிராமணர்கள்.  மேடைகளில் தமிழ் தமிழ் என்று வாய் கிழியக் கத்தும் திராவிடக் கட்சிகளின் அரசியல்வாதிகள் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதோடு மட்டும் அல்லாமல் தமிழ் இன்று பேச்சு மொழியாகி விட்டதற்கும் அவர்களே காரணம்.  

இன்று தமிழ்நாட்டில் சாதியைப் பேணுகின்றவர்கள் இடைநிலைச் சாதியினர்தாம்.  இடைநிலைச் சாதிகளால்தான் இன்று சமூகத்தில் சாதி உணர்வு மீண்டும் கடுமையான முறையில் தலை தூக்கியிருக்கிறது.   இன்னொரு முக்கியமான விஷயம், தலித்துகள் மீதான வன்முறையைக் கட்டவிழ்த்து விடுபவர்களும் இந்த இடைநிலைச் சாதியினராகவே இருக்கின்றனர்.  சாதி வன்முறையில் பிராமணர்கள் ஈடுபடுவதே இல்லை.  அவர்கள் சாதீய ஒடுக்குமுறையிலிருந்து வெளியே போய் விட்டனர்.  

பிராமணர்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை என்று ஒரு தவறான கருத்து வேறு சமூகத்தில் நிலவுகிறது.  கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களின் நிலை வயலில் நின்று வேலை பார்க்கும் குடியானவர்களின் நிலையை விட மோசமானது.  நாள் முழுவதும் அக்கினிக்கு (தீபாராதனை) அருகிலேயே நின்று அவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது.  ஏழு எட்டு மணி நேரம் அவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட வெளியே போக முடியாமல் அவஸ்தைப் படுகின்றனர்.  போனால் விக்ரகங்களின் மீது உள்ள விலை மதிக்க முடியாத ஆபரணங்கள் திருடு போய் விடும்.  இதேபோல் சவுண்டிப் பிராமணர்களின் நிலையும் மிகவும் துயரமானது.  

கடைசியாக, ஒவ்வொரு சாதிக்கும் அவர்களுக்கான குல வழக்கம், வழிபாடு, சடங்குகள், பேச்சு மொழி என்று பலவிதமான கலாச்சார அடையாளங்கள் இருக்கின்றன.  அதேபோல் தான் பிராமணர்களுக்கான பேச்சு மொழியும், வழிபாடும், சடங்குகளும், குல வழக்கங்களும்.  ஆனால் தமிழ்நாட்டில் நிலவும் பிராமணத் துவேஷத்தினால் அவர்களின் கலாச்சார அடையாளங்கள் இன்று காணாமலே போய் விட்டன.  அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.  

இன்னொரு முக்கிய விஷயம்.  தலித்துகள், பிராமணர்களைப் போல் இஸ்லாமியர்களும் வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள்.  அந்த வெறுப்பு சமயங்களில் வெளிப்படையாகவும் பல சமயங்களில் மறைமுகமாகவும் அவர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது.  

(இது முழுக்க எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் கருத்தே.  அந்திமழை நிறுவனத்தாரின் கருத்தாக இதைக் கருதவேண்டாம் - ஆசிரியர், அந்திமழை)

கேள்வி: பொது இடங்களில் முத்தமிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  உங்களுக்கு இதில் அனுபவம் இருக்கிறதா?  அதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  

-ராஜீவ்.

பதில்: எனக்கும் அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.  ஒரு காதலனும் காதலியும் ஒரு கணவனும் மனைவியும் பொது இடத்தில் முத்தமிட்டுக் கொள்வது ஒரு குழந்தைக்கு முத்தமிடுவது போல் ஒரு அன்பான விஷயமாகத்தான் எனக்குத் தெரிகிறது.  எந்தக் காமமும் அதில் எனக்குத் தெரியவில்லை.  படுக்கை அறையில் உருண்டு புரண்டு முத்தமிட்டுக் கொள்வது மாதிரியா பொது இடத்தில் முத்தமிடுவார்கள்?  இதை ஆபாசமாகப் பார்ப்பவர்களின் கண்களிலும் கருத்திலும்தான் ஆபாசம் இருப்பதாகக் கருதுகிறேன்.  ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொள்வதைப் பார்த்து ஒருவருக்கு ஆபாசமாகத் தோன்றினால் அவரிடம் ஏதோ பயங்கரமான மன விகாரமும் வக்கிரமும் இருக்கிறது என்றுதான் பொருள்.  அப்படிப்பட்டவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தாலே தூண்டுதல் அடைந்து விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.   என்னைப் பொறுத்தவரை ஒரு பெண்ணை உற்றுப் பார்ப்பதே அந்தப் பெண்ணின் அந்தரங்கத்தில் அத்துமீறும் செயலாகும்.  அப்படி இருக்கும் போது ஒரு பெண்ணைப் பார்த்து ஒருவன் காமக் கிளர்ச்சி அடைகிறான், அவளைச் சீண்டுகிறான் என்றால் அவன் தண்டிக்கப்பட வேண்டியவன்.  

பொது வெளியில் முத்தமிடுவது தவறு; அதைப் பார்த்து குழந்தைகள் கெட்டு விடும் என்று கத்துபவர்களிடம் நான் பல கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.  நம் சினிமாவைப் பார்த்துக் கெடாத பிள்ளைகளா முத்தத்தைப் பார்த்து கெட்டு விடப் போகின்றன?  உண்மையில் இந்த சமூகத்தின் பாலியல் சீரழிவுக்கு சினிமாவில் காண்பிக்கப்படும் பாலுணர்வுக் காட்சிகளே காரணம்.  வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று சான்றிதழ் வாங்கிய படங்களை சிறுவர்கள் பார்ப்பதற்கு ஏதேனும் தடை இருக்கிறதா இங்கே?  இங்கே உள்ள கலாச்சாரக் காவலர்களால் சீரழிவுக் கலாச்சாரம் என்று வர்ணிக்கப்படும் மேற்குலக நாடுகளில் வயது வந்தோர்க்கு மட்டும் என்ற சான்றிதழ் பெற்ற படங்களை சிறுவர்கள் பார்க்கவே முடியாது.  அது மட்டும் அல்ல; வீட்டிலும் எல்லா சேனல்களையும் சிறுவர்கள் பார்க்க இயலாது.  அதற்கான தடைகள் ஒவ்வொரு தொலைக்காட்சிப் பெட்டியிலும் உண்டு.  

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  பிரிட்டனில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பம் 300 மைல் தூரம் காரில் பயணம் செய்து லண்டனுக்கு வந்து வாரணம் ஆயிரம் படம் பார்க்கப் போனார்கள்.  ஒரு தம்பதியும், ஒன்பது வயது மகளும்.  டிக்கட்டை முன்பே முன்பதிவு செய்திருந்தார்கள்.  ஆனால் தியேட்டரில் அவர்களை அனுமதிக்கவில்லை.  படத்தில் சூர்யா ட்ரக் அடிக்ட்.  ஒரு காட்சியில் மிக வெளிப்படையாக கையில் போதை ஊசியைப் போட்டுக் கொள்வார்.  அதை அந்த ஒன்பது வயதுக் குழந்தை பார்க்கக் கூடாது.  படம் பார்க்க முடியாமல் தம்பதியர் திரும்பி விட்டார்கள்.  மேலை சமூகம் குழந்தைகளை எப்படிப் போஷிக்கிறது என்பதை இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  ஆனால் இங்கே தமிழ்நாட்டிலோ எட்டு, ஒன்பதாம் வகுப்புப் பையன்கள் தண்ணி போட்டு விட்டு வந்து டீச்சரின் புடவையை இழுக்கிறான்கள்.  ஏன்?  மதுவும் பாலுணர்வுத் தூண்டலும் இங்கே கட்டுக்கடங்காமல் ஓடுகிறது.  திறந்த இடமெல்லாம் டாஸ்மாக்.  குழந்தைகளும் சிறார்களும் பார்க்கவே கூடாத காட்சிகளைக் கொண்ட சினிமா அல்லது சினிமாவின் நீட்சியான தொலைக்காட்சி.  

இன்னொன்று, கணினியும் அலைபேசியும்.  போர்னோ தளங்கள் அனைத்தும் அனைவரின் பார்வைக்கும் விரிந்து கிடக்கின்றன.  இதற்கெல்லாம் எந்தத் தடையும் இல்லை.  ஆறு வயதுக் குழந்தையும் பார்க்கலாம்.  பதினாறு வயது மாணவர்களும் பார்க்கலாம்.  ஒரு எட்டாம் வகுப்பு மாணவி ஒரு பதினொன்றாம் வகுப்பு மாணவனிடம் chat செய்யும் போது கேட்டாளாம், ”நீ Sunny Leone படம் பார்த்திருக்கிறாயா?” என்று.   இந்த சீரழிவுக்குக் காரணம், ஆணும் பெண்ணும் பொதுவிடத்தில் முத்தம் கொடுப்பது தானா?  சிறார்களுக்குத் தடையே இல்லாமல் கிடைக்கும் சினிமாவும் கணினி/இண்டர்நெட் வசதிகளும்தான்.  ஒட்டு மொத்தமாக சமூகத்தில் வன்முறையும் பாலுணர்வுத் தூண்டலும் மிக அதீதமாகப் போய்க் கொண்டிருக்கிறது.  ஒரு பத்திரிகையை எடுத்தால் முக்கால்வாசிப் பக்கங்கள் முக்கால் நிர்வாணப் பெண்களின் புகைப்படங்களைத்தானே பார்க்க முடிகிறது? 

முத்தம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அடையாளம் என்பதை நாம் நம்முடைய குழந்தைகளுக்குப் புரிய வைப்போம்.  அதை விட அவசரத் தேவை, சினிமா, தொலைக்காட்சி, இண்டர்நெட் ஆகியவற்றை முறைப்படுத்துவது.  

கேள்வி: சமீபத்தில் உங்களை ஆச்சரியப்படுத்திய சம்பவம்?  ராஜா, மதுரை.  

பதில்: சமீபத்தில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் நானும் பேச நேர்ந்தது. கன்னடத்திலும் மலையாளத்திலும் இந்தியிலும் ஏழெட்டு பேர் ஞானபீடப் பரிசு பெற்றிருக்கும் போது தமிழில் மட்டும் இரண்டே பேருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது என்று என் பேச்சில் ஆதங்கப்பட்டேன்.  பேசி முடித்ததும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை என்னிடம் சொன்னார்.  ”எழுத்தாளர்களெல்லாம் ஒற்றுமையாக இருந்தால் இரண்டு அல்ல, இருபதே வாங்கலாம்.  ஆனால் நீங்கள்தான் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறீர்களே?  நீங்கள் அவரை உத்தமத் தமிழ் எழுத்தாளர் என்கிறீர்கள்.  அவர் பதிலுக்கு உங்களைத் தாக்குகிறார்.  இப்படி மாறி மாறி அடித்துக் கொண்டால் எப்படிப் பரிசு வாங்குவது?  விஞ்ஞானிகளாகிய நாங்கள் ஒற்றுமையாக இருந்ததால்தான் செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் விட முடிந்தது.”  என்னிடம் சொன்னது மட்டுமல்ல;  மேடையிலும் இதைக் குறிப்பிட்டார்.  எனக்கு ஆச்சரியத்தில் மயக்கமே வந்து விட்டது;  என்னுடைய உத்தமத் தமிழ் எழுத்தாளனெல்லாம் படித்திருக்கிறாரே இவர் என. அப்போது நான் எனக்குள் ஒரு சபதம் எடுத்தேன்.  இனிமேல் எந்த எழுத்தாளரோடும் சண்டையே போடுவதில்லை.  

உடனே ஜெயமோகனுக்கு ஃபோன் போட்டேன்.  அவர் எங்கோ ஒரு ஜங்கிளில் மோகன்லாலுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தார்.  அவரைப் பிடித்து ”இனிமேல் நான் உங்களைப் பாராட்டுவேன்; நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும்” என்றேன்.  ”அதைத்தான் 1992-இலேயே நித்ய சைதன்ய யதி சொல்லி நானும் தீவிரமாகப் பின்பற்றி வருகிறேனே சாரு?   உங்களைப் பற்றி இதுவரை நான் ஒரு வார்த்தை தப்பாக எழுதியிருப்பேனா?” என்றார்.   சரிதான் சரிதான் என்று சொல்லி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மனுஷ்ய புத்திரனுக்கு ஃபோன் போட்டேன்.  கலைஞர் டிவி லைவ் ப்ரொக்ராமிலிருந்தே என்னோடு பேசினார் மனுஷ்.  பெயருக்கேற்றபடி நல்ல மனுஷன்.  ஒரு wrong call வந்தால் கூட ஐந்து நிமிடம் பேசி விட்டுத்தான், ”ஸாரி, இது ராங் நம்பர்” என்பார்.  விஷயத்தைச் சொன்னேன்.  

”நீங்கள் என்னைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை; திட்டாமல் இருந்தால் போதும் மனுஷ்” என்றேன்.  ”என்னது திட்டா?  20 ஆண்டுகளுக்கு முன்பு நான் நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு ரயிலேறி எக்மோர் ஸ்டேஷன் வந்த அன்று என்னை ஸ்டேஷனில் வந்து பார்த்த முதல் ஆளே நீங்கள் தானே சாரு?  அப்படிப்பட்ட உங்களைத் திட்டுவேனா?  ஒரு வரி காண்பிக்க முடியுமா?  உங்களை என் அளவுக்குப் பாராட்டியவன் யாரும் கிடையாது” என்று இதே ரீதியில் ஏழு நிமிடம் பேசி விட்டு அவசர அவசரமாக, “நான் லைவ் ப்ரோக்ராமில் இருக்கேன்… அப்புறம் பேசுவோம்” என்று நிறுத்தி விட்டார்.  ஆனால் ஃபோனை நிறுத்தவில்லை போல.  “இந்துத்துவாவை எதிர்த்து நான் ஏன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்றால்… “ என்று உச்ச ஸ்தாயியில் அவர் குரல் கேட்டது. 

பிறகு எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னேன்.  “நமக்கு இது செல்லாது சாரு.  நாம்தான் ஏற்கனவே பல ஆண்டுகளாக இந்த உடன்படிக்கையில் இருக்கிறோமே?” என்றார்.  அதுவும் சரிதான் என்று சொன்னேன்.  

முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், எனக்கு விஞ்ஞானிகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.  எழுத்தாளர்களை விடப் பிடித்தது விஞ்ஞானிகளைத்தான்.  நாம் வாழும் வாழ்க்கையே விஞ்ஞானிகள் கொடுத்த பிச்சைதானே?  இந்தக் கணினி, மின்சாரம், மின்விசிறி, ஏசி, ரயில், விமானம், எல்லாம் எல்லாம் விஞ்ஞானி கொடுத்தது.  எனவேதான் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சொன்ன அறிவுரையை சிரமேற்கொண்டு இந்த முடிவுக்கு வந்தேன்.  என் முடிவை ஏற்றுக் கொண்ட சக எழுத்தாளர்களுக்கு நன்றி.    

 (சாரு பதில்கள் பகுதி ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். வாசகர்கள் தங்கள்  கேள்விகளை q2charu@andhimazhai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்)