ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் என்னை பேச அழைத்து இருந்தார்கள். "ஐந்து பெரிது, ஆறு சிறிது" என தலைப்புக் கொடுத்திருந்தேன்.கோவில் நிர்வாகம் நடத்திய நிகழ்ச்சி என்பதால் ,"சிவாய நம" என்ற ஐந்தெழுத்தையும் ,"நமோ நாராயணா" என்ற ஆறெழுத்தையும் ஒப்பிட்டு ,சைவ வைணவ பாகுபாட்டிற்குப் பால் வார்க்க போகிறேன் என்றே எல்லோரும் நினைத்திருந்தனர் .
ஐந்து பெரிது,ஆறு சிறிது என்பது கவிஞர் வைரமுத்துவின் ஒரு கவிதையின் தலைப்பு .ஆற றிவு உடைய மனிதனை விட, ஐந்தறிவு உடைய விலங்குகளே பெரியவை என்பது தான் அக்கவிதையின் உட்கரு.
யானை யானைப்பாகனுக்கும், குரங்கு குரங்காட்டிக்கும், பாம்பு பாம்பாட்டிக்கும் ,கழுதை சலவைத் தொழிலாளிக்கும், குதிரை ,ரேஸில் பணம் கட்டுபவனுக்கும், கிளி ஜோசியக்காரனுக்கும் சம்பாதித்ததுக் கொடுக்கையில், ஆறறிவு மனிதனின் வாழ்வாதாரத்தை ஐந்தறிவு விலங்கு மேம்படுத்துகையில் ..... ஐந்து பெரிது....ஆறு சிறிது என்பது சரிதான் .
காளி சிங்கத்தையும், ஐயப்பன் புலியையும், விநாயகர் பெருச்சாளியையும், முருகன் மயிலையும், சனி பகவான் காகத்தையும் என தெய்வங்களே விலங்குகளைத்தான் துணையாக கொண்டிருக்கிறார்கள்.
எஜமானர் வீட்டுக் குழந்தையைக் கடிக்க வந்த பாம்பைக் கடித்துக் கொன்ற கீரியைப் பற்றி சிலப்பதிகாரத்திலும், எஜமான் உயிரைக் காப்பாற்றி விட்டு இறந்து போன நாய் என பத்திரிக்கை செய்திகளிலும் படிக்கும் போது, அந்த விலங்குகள் விசுவாசத்தின் விளைநிலமாய் விஸ்வரூபம் எடுக்கின்றன.
செல்லப் பிராணிகளை வளர்க்கவும், செல்லப் பிராணிகளோடு வாழவும் வாய்ப்பற்ற வாழ்க்கை தான் எனக்கு. பிராணிகள் வளர்ப்பில் எனக்கு ஆர்வமும் இருந்தது இல்லை.
சிறு வயதில் எங்கள் தெருவுக்கு பூம்பூம் மாடும், யானையும் வரும் போது, வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பதோடுதான் விலங்குகளுடனான உறவு இருந்தது .எனக்கு யானையை விடவும் பூம்பூம் மாட்டைத் தான் மிகவும் பிடிக்கும். கழுத்திலும் கொம்புகளிலும் சலங்கைகள் கட்டப்பட்டு, ரோஸ் நிறத்தில் பொட்டு வைத்து, சரிகைத்துணியைப் போர்த்திக் கொண்டு, அசைந்து அசைந்து வரும் பூம்பூம் மாடுகளிடம் எனக்கு இருந்த ஈர்ப்பு, யானைகளிடம் இருந்தது இல்லை .எல்லோரும் யானைக்கு காசு கொடுத்து விட்டு ஆசிர்வாதம் வாங்குவார்கள். மனிதனின் மிகப்பெரிய சாதனையே உருவத்தில் பெரிய யானையை பிச்சையெடுக்க வைத்தது தான். யானைகளைப் பிடிக்காத குழந்தைகள் உண்டா ?ராஜூக்கு யானைகளைப் பிடிக்காது. அவன் படிப்பில் பின் தங்கிய மாணவன்.யானை சாணியை மிதித்தால் படிப்பு வரும் என, அவன் அம்மா, அவனை யானையின் பின்னாலேயே, யானை சாணி போடும் தருணத்தை எதிர்பார்த்த படி, இழுத்துக்கொண்டு அலைக்கழித்தார். எல்லோரும் யானையின் முன்னால் நடக்க, ராஜூ மட்டும் வலசை தப்பிய பறவையென ...பின்னால் நடந்து கொண்டிருந்தான். அந்த மாதம் ராஜூ எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று விட்டான். அந்த அற்புத்த்திற்குக் காரணம் ,யானை சாணியை மிதித்தது அல்ல.ஃபெயிலானால், நாள் முழுக்க நகர்ந்தாலும் தூரம் கடக்காத பெண்டுலம் போல், மீண்டும் யானையின் பின்னால் அலைந்து கொண்டிருக்க வேண்டுமே என்ற பயம் தான்.
எங்கள் தெருவில் திரிந்து கொண்டிருந்த கறுப்பு நிற நாய் ஒன்று ஆனந்த் அண்ணனுக்கு செல்லப் பிள்ளையானது. ஜிம்மி , பப்பி,டைகர் என வழக்கமாக நாய்களுக்கு வைக்கும் பெயர் போல் இல்லாமல், "ராஜா " என்று பெயர் வைத்தார். சமஸ்தானத்தை ஆள்பவருக்கு இருந்த பெயரை, சாக்கடையில் புரள்பவனுக்கு வைத்த புரட்சியாளர் ஆனந்த் அண்ணா. ஒரு நாள் நகராட்சி ஊழியர்கள் , நாய் வண்டியில் ராஜாவைப் பிடித்துக் கொண்டு போனார்கள். வண்டியின் பின்னாலேயே அழுது கொண்டு ஓடிய ஆனந்த் அண்ணா,சார்...சார்....என் ராஜாவைக் கொடுத்துடுங்க சார்...என அழுது கொண்டேயிருந்தார். பாலைவனத்தில் விதைத்த பயிராய் பலன் இல்லை. சினிமாவில் வருவது போல் ராஜா எப்படியாவது தப்பித்து வந்து விடும் என்று ஆனந்த் அண்ணா நம்பினார். ராஜா வரவே இல்லை.பல நாட்கள் தன் இயல்பைத் தொலைத்திருந்த ஆனந்த், மற்றொரு நாய்க்குட்டியிடம் தான் தன் புன்னகையை மீட்டெடுத்தார். விலங்குகளின் இடத்தை விலங்குகளால் தான் சமன் செய்ய முடிகிறது. ஐந்தை ஆறால் வெல்ல முடிவதில்லை.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வீட்டில் ஏழு நாய்கள் இருக்கின்றன.(எங்கள் வீட்டில் மனிதர்களே மூன்று பேர் தான் இருக்கிறோம்). இது நான் கடைசியாக அவர் வீட்டுக்குப் போன போது இருந்த எண்ணிக்கை .நேற்று முன்தினம் ஒரு புதுவரவு. சாலையில் அடிபட்டுக் கிடந்த அந்த உயிரை,(நாய்ன்னு சொன்னா அவருக்கு கெட்ட கோபம் வரும்.அவருக்கு நல்லா கோபம் வரும்.அது கெட்ட கோபமாக இருக்கும் ) அண்ணி வீட்டிற்கு எடுத்து வந்திருக்கிறார். எக்ஸ் ரே,ஸ்கேன் , ட்ரிப் என்று முதலுதவி சிகிச்சை முடிந்த பிறகு கண் விழித்திருக்கிறது.அண்ணி இரவெல்லாம் தூங்காமல் அதைக் காபந்து பண்ணிக் கொண்டிருக்கிறார். எந்த விசுவாமித்திரனாவது எனக்கு "நாயாக கடவது" என சாபம் கொடுத்தால், நேராக ஜேம்ஸ் அண்ணன் வீட்டிற்குப் போய் விடுவேன். அப்புறம் என்ன...ராஜ உபசாரம் தான்....
அங்கே இருக்கும் ஒவ்வொரு நாய்க் குட்டிக்கும் ஒரு முன் கதை சுருக்கம் உண்டு.
ஒருமுறை ஒரு பாடல் கம்போஸிங்கிற்காக, அவர் வீட்டிற்கு சென்றேன். கண்ணனின் அருள் கிடைக்கப் பெற்ற பாஞ்சாலியின் புடவையைப் போல் மிக நீண்டது அந்த தெரு.அத் தெருவிற்குள் நுழைந்ததில் இருந்து, ஒரு குட்டி நாய் ,என் காலை சுற்றி சுற்றி வந்தது .சீ.....போ.., ஏ....சொன்னா கேட்க மாட்ட .....,அடி வாங்க போற என நாயோடு சண்டை போட்டுக் கொண்டே வந்தேன். பின், எதிர் பட்டவர்களிடம் எல்லாம் இந்த நாயைக் கொஞ்சம் தொரத்துங்களேன் என கெஞ்சினேன். நிறைய பேர் எனக்கு உதவினர் .ஆனாலும் அந்த நாய்க்குட்டி என்னை தொடர்ந்து வந்தது.ஒருவர் சைக்கிளில் தூக்கிக்கொண்டு போய் பக்கத்து தெருவில் விட்டார் .சிறிது நேரத்திலேயே மீண்டு(ம்) வந்து விட்டது.ஜேம்ஸ் அண்ணன் வீட்டு கதவு எனக்காக திறந்ததும் , உள்ளே நுழைந்து கதவை தாழிட்டு,அந்த நாய்க்குட்டியை எட்டிப் பார்த்து, இப்ப எப்படி வருவன்னு பாக்குறேன் என எக்காளமிட்டேன்.
கம்போஸிங் இடையே ,தேனீர் அருந்துவதற்காக ,அந்த அறையை விட்டு வெளியே வந்தேன் .அண்ணி என்னை பின் தொடரந்த நாயை கொஞ்சி கொண்டிருந்தார். பாவம் ...ரொம்ப நேரமா நம்ம வீட்டு வாசலிலேயே நின்னுச்சு.உள்ள கூட்டிட்டு வந்துட்டேன் ....என்றபடி வகிர்ந்த வளர்பிறையைப் போல , பாதியாக உடைத்த பிஸ்கட் துண்டுகளை சாப்பிட வைத்துக் கொண்டிருந்தார். நியாயமாக பார்த்தால் ,என் காலையே சுற்றி சுற்றி வந்த அந்த நாய்க்குட்டியை நான்தான் தூக்கி கொஞ்சியிருக்க வேண்டும். இன்று அந்த நாய்க்குட்டி, அண்ணியின் செல்லப்பிள்ளை .சொகுசு படுக்கை வேறு .....அந்த நாய்க்குட்டியை தவிக்க விட்டு விட்டு , தாழ் போட்ட குற்ற உணர்வு. எனக்கு இன்றும் இருக்கிறது. இப்போது ஜேம்ஸ் அண்ணன் வீட்டிற்குப் போனால், என்னை வரவேற்பது அந்த சின்ன உயிர் தான். அவமானப்படுத்தியவள் முன்பே, தன் ,வெற்றியை அரங்கேற்றம் செய்த அந்த போராட்ட குணம் நான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
என் மாணவி லட்சுமியின் வீட்டிற்கு போயிருந்த போது, பக்கத்து ஊரில் கிடா வெட்டிற்கு என் மாணவி வீட்டில் வளர்த்த நான்கு ஆடுகளை வாங்கிக் கொண்டு போனார்கள்.வண்டியில் ஏற மறுத்து ம்மா ...ம்மா ...அழுத ஆடுகளிடம், இன்னிக்கு சாவுன்னு உங்க தலையில எழுதி இருக்கு.போங்க ...போங்க....என்றார் மாணவியின் அம்மா. சற்று முன்பு அந்த ஆடுகளுக்கு பாசத்தோடு தண்ணீர் காட்டியவரும் அவர் தான். ம்மே.....ம்மே .....என்று அவை கதறியது , என்னை காப்பாத்தேன் .....என உயிர் பிச்சைக் கேட்பதைப் போல இருந்தது. எல்லாவற்றையும் நான் சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தேன் . சில மணி நேரம் கழித்து ,ஒரு ஆடு மட்டும் தேவைக்கு அதிகமாக இருக்கிறது என திருப்பிக் கொண்டு வந்து விட்டார்கள் .தப்பி வந்த சந்தோஷத்தை விட ,சக ஆடுகள் வெட்டப்படுவதை பார்த்த பயம் தான் அதன் கண்களில் அதிகமாக இருந்தது . அன்று இரவு லட்சுமியின் அம்மா தண்ணீர் காட்டிய போது அந்த ஆடு குடிக்கவே இல்லை.. மறுநாள் , இன்னொருவர் வந்து அந்த ஆட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு போனார்.இந்த முறை அந்த ஆடு அழவே இல்லை. அழுதா மட்டும் விட்டுடுவீங்களாடா... என நினைத்ததோ .. ..என்னவோ.....வண்டியில் ஏறிய பின் எங்களை திரும்பி பார்க்கவே இல்லை. சக ஆடுகள் வெட்டப் பட்டதை பார்த்த பிறகும், பலி பீடத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறது என்றால் ,எந்த அளவிற்கு அதன் மனம் வெறுத்துப் போயிருக்க வேண்டும்.....? ஐந்தாம் அறிவு மனிதர்களுக்கு பாசத்தை மட்டுமே பந்தி வைக்கிறது .ஆறாம் அறிவோ.... மிக எளிதாக விலங்குகளை விலை பேசி விடுகிறது.
கேரளாவின் திருச்சூரில் உள்ள வடக்கத்தி நாதர் கோவில் மிக பிரபலம். திருவிழாவிற்கு முன் நடைபெறும் கொடியேற்றத்தின் போது , யானை கொடிக்கம்பத்தை குழியில் நடுவதற்காக ,வந்தது . ஆனால் கொடியை குழியில் நடாமல், பின் வாங்கியது.இதென்ன அபசகுணம் என்று எல்லோரும் வருத்தப் பட்டார்கள் .பாகன் யானையை சாட்டையால் அடிக்கிறார் .என்ன திமிர் உனக்கு...நல்ல நேரம் முடிவதற்குள் கொடியை நட வேண்டும்... போ...சீக்கிரம் என்று அடிக்கிறார். அங்குசத்தால் குத்துகிறார். ஒரு கட்டத்தில் யானை வலி தாங்காமல் அப்படியே அமர்ந்து விட்டது.யானையிலிருந்து இறங்கிய பாகன் இன்னும் வேகமாக, யானையை கொடியை குழியில் நட சொல்லி வற்புறுத்துகிறார்.யானை அசையவே இல்லை.எதேச்சையாக குழியைப் பார்த்த பாகனுக்கு அதிர்ச்சி .அந்த குழிக்குள் சின்னஞ்சிறு பூனைக்குட்டி ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. கொடியை நட்டால், பூனைக் குட்டி இறந்து விடும் என்பதாலேயே, யானை கொடியை நடாமல்,எல்லா அடிகளையும் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறது. யானைக்கும்,பூனைக்கும் உருவத்தில் எவ்வளவு வித்தியாசம்? ஆனாலும் எல்லா அடியையும் வாங்கிக்கொண்டு, தன்னை விட எளிய உயிரான , பூனையைக் காக்க நினைத்த யானையின் மிருகாபிமானம் போல் நமக்கும் இருந்தால் , நாட்டில் வன்முறை யும், தீவிரவாதமும் காணாமல் போனவர் பட்டியலில் தான் இருக்கும்.
சேமிப்பை......சுறுசுறுப்பை ........ஒற்றுமையை ....அன்பை....விசுவாசத்தை ....தன்மானத்தை .....நேயத்தை .... விலங்குகள் நமக்கு போதித்துக் கொண்டேயிருக்கின்றன .இப்போது சொல்லுங்கள் ..... ஐந்து பெரிது....ஆறு சிறிது என்பது சரிதானே ?
(இத்தொடரை எழுதும் சுமதிஸ்ரீ, ஒரு சொற்பொழிவாளர், கவிஞர். புதன்கிழமை தோறும் இந்த தொடர் வெளியாகும் )
கடந்த மாதத்தில் ஒரு நாள்.. - நெஞ்சம் மறப்பதில்லை-1
கடக்க முடியாத ஞாயிற்றுக்கிழமைகள்! - நெஞ்சம் மறப்பதில்லை-2
அன்பிற் சிறந்த தவமில்லை! - நெஞ்சம் மறப்பதில்லை-3
ஹேப்பி பர்த்டே டூ யூ ! - நெஞ்சம் மறப்பதில்லை-4
அயல்நாட்டு அகதிகள்! - நெஞ்சம் மறப்பதில்லை- 5
கண்டேன் கடவுளை - நெஞ்சம் மறப்பதில்லை- 6
பரிசளிப்போம்! - நெஞ்சம் மறப்பதில்லை- 7
English Summary
ஐந்து பெரிது, ஆறு சிறிது