ராசா அச்சத்துடன் ஆதுரம் தேடி கோசலையின் அருகில் சென்றான். கோசலை சட்டிபானை என அழைக்கப்படும் அப்புவின் அம்மா கமலத்திடம் பலவிதமான முகபாவங்களின் முறையீடுகளில் மும்முரமாக இருக்க ராசா வருவதைக் கண்டதும் வீட்டுக்குப் போகும்படி சைகையால் திருப்பி அனுப்பினாள்.
ராசா திரும்பினான். “அப்புக்க அம்மா” என்றான் வேலப்பனிடம். வேலப்பன் எட்டிப் பார்த்தான். “நாம்போயி சொல்லட்டா.... ஒம்மவன் தலை தெறிச்சி அலையுதான்...அவன வீட்டுல கெட்டிப் போடுன்னு...”
“பல்லப் பேத்துருவேன். பெரியவங்கள அப்படி சொல்லக்கூடாதுன்னு தெரியாதால்ல? காதுல விழுந்தா என்ன ஆவும் தெரியுமா?”
“தெரியும். காராடுற பூச்சிக் காடிப்பானையில விழும்”
“ஆங்?”
“அது அப்படித் தான். பாரு அவன மாதிரியே அவங்கம்மைக்கும் ஜ்ஜெண்டக்கை”
“லே! ஒனக்கு அய்யா புடிச்சாச்சின்னு நெனைக்கேன்!”
ராசா தெருவின் “அடி பம்ப்” அருகில் வந்தபோது எதிர்ப்புற சந்திலிருந்து குரல் கேட்டது.
“ராசா..இங்க வா மக்கா..” என்று இருளின் கோர்வையில் சுவர் மீது மறைந்து நின்ற தாஜூவின் முக்காடு வெளிச்சத்தின் சாய்வில் பெரிய நிழலாக கீழே விழுந்து கிடந்தது.
ராசா தாஜூ அருகில் வந்தான்.
“ஒன்னையத் தான் பாத்துக்கிட்டு நிக்கேன். எதுத்தக் கடையில ரெண்டு புரோட்டாவும் குருமாவும் வாங்கித் தாப்போ” என்றாள்.
ராசா வெளிச்சத்துக்கு வந்த அவளிடமிருந்து சில்லரையையும் குருமாவிற்கான டம்ளரையும் வாங்கிக் கொண்டான். வேலப்பனைக் கண்டதும் துணுக்குற்ற அவள் , “ஆனா ஒரு காரியம் பாத்துக்கோ.. இந்த முண்டக்கண்ணன் பயக் கையில மட்டும் குடுத்துராதே! குருமால கையப் போட்டு நக்கிருவான்” என்று ஒருவித அச்சத்தோடு கூறினாள். இருவரும் அங்கிருந்து நகர்ந்தபின்னும் இருளுக்குள் சாயும் வரை தாஜூவிடம் அந்த அச்சம் தொடர்ந்து இருந்தது.
ராசாவிற்கு தூக்கி வாரிப் போட்டது. வேலப்பனுடன் தெருவின் எதிர்ப்புறத்திலிருந்த பரோடாக்கடை நோக்கி நடந்தான்.
“அந்தக்கா ஒன்னைய நக்கினு சொல்லுதா. நீ ஒண்ணுமே சொல்லல?”
என்று ராசா கேட்க,
“அதுவா? எங்கிட்டயும் புரோட்டா வாங்கத் தருவால்லா ...எனக்கு இந்த குருமாவப் பாத்தா குறுகுறுன்னு வரும். டக்குனு வெரல விட்டு நக்கிருவேன். அதான் அப்படி சொல்லுதா”
“நீ நக்கினது அவளுக்கு எப்படிலே தெரியும்?”
“ஹி..ஹி..முந்தி அவ எங்கத் தெருவுல தானே இருந்தா..”
“ஒங்கிட்டப் போயி வாங்கிக் கேட்டாப்பாரு.....மாட்டிகிட்டேல்லா? எல்லாத்துலேயும் கை விட்டுருவியா?”
“ஒங்கிட்ட சொல்லதுக்கு என்னா? அடிக்கடி கோழிக்குஞ்சு நாடாருக்கக் கடையிலப் போயி ஊறுகா வாங்கிட்டு வரச் சொல்லுவா..”
“அது எங்க இருக்கு?”
“நம்பியிடத் தெருவுல..”
“நா கட்டபொம்மன் சந்தியிலேருந்து வரணும். சரி பாவம்னு போவேன்..ஒரு நாளு கோழிக்குஞ்சு தாத்தா ஊறுகா பரணியத் தொறந்தாரு பாரு..மாங்கா சாறு வாசத்துல நாக்குல தண்ணி வந்திட்டு..வாங்கிட்டு வந்தனா..அந்த நேரம் பாத்து கரண்டும் போயிருச்சு. நா நேரா தாஜூக்கா வீட்டுக்குப் போவாம எங்க வீட்டுக்குப் போயிட்டேன். வீட்டுல எங்கம்மயும் இல்லாத்த நேரம்..நா ஒடனே மாங்காவ மணத்திப் பாத்தேன் பாரு..? என்னைய அறியாம வெரலு உள்ள விழுந்திருச்சு. ஒரு தடவ தான் தெரியாம தொட்டு நக்கினேன். அது பாட்டுக்கு இழுத்து உட்டுருச்சு..சனியன் அப்பம் பாத்தா கரண்டு வரணும்? எதுத்தால பாக்கேன்..தாஜூக்கா நின்னு பாத்துட்டே இருக்கா..நல்லகாலம் யாருகிட்டயும் சொல்லல..”
“அதுக்குப் பொறவு?”
“அதுக்குப் பொறவு என்னா? நா இதுமாதிரி நக்கத விட்டுட்டேன்”
“நல்ல பழக்கம் இல்லே..ன்னா?”
“அது இல்லலே..கரண்டு வந்தா தெரிய எடத்துல வச்சி நக்கத விட்டுட்டேன்...”
“பேரு நாறுது. ஒனக்கு ஏம்ல இந்த எச்சிப் பழக்கம்?”
“தெரில...வாங்கப் போறது வரைக்கும் ஆசை வராதுல. வாங்கிட்டு நடந்து வருவமா..அப்பத் தான் மண்டைக்கு கிறுக்குப் பிடிச்சிரும். நானும் வேண்டாம்னு தான் சொல்லி பாப்பேன்..செத்த நாக்கு கேக்காது..ஒரு வேளை எங்கம்மையோ, எங்கப்பாவோ ஏதாவது வாங்கித் தந்திருந்தா இதுமாதிரி நக்கிருக்கமாட்டேன்னு நெனைக்கேன்”
“மத்தவங்களுக்கு தெரிஞ்சா அசிங்கமாயிராதா?”
“அசிங்கம்தாம்லே....என்னச் செய்ய? இப்ப தாஜூக்கா டக்குனு சொல்லும்போது அசிங்கமாத்தான் இருந்தது..ஆனா தாஜூக்காவுக்கு எத்தர தடவ புரோட்டா வாங்கிக் குடுத்துருப்பேன். ஒரு தடவையாவது நீ ரெண்டு வாங்கிக்கலேன்னு சொல்லிருப்பாளா?”
ராசாவுக்கு வேலப்பனின் முண்டக்கண் திரண்டது பார்க்க சங்கடமாக இருந்தது.
“நாமளும் ஒருநாளு புரோட்டா திம்போம்லே..ன்னா?”
வேலப்பன் சிரிப்பாணியுடன் கேட்கும்போது ராசாவுக்கும் ஆசை வந்தது.
ராசா பரோட்டா வாங்கவிருந்த நேரத்தில் வேலப்பன் ரோட்டோர திண்ணையின் கீழ் குவிந்திருந்த குப்பைகளைக் கண்டு புத்தகப்பையுடன் அதனை நோக்கிச் சென்றான்.
குப்பைகளைக் காலால் கிளறினான். பிறகு சட்டென குத்தவைத்து வசதியாக உட்கார்ந்து கொண்டான். நிறைய வெள்ளைத் தாள்கள், மை தீர்ந்து போன பேனாக்கள், குண்டூசிகள், கிளிப்புகள் என அலுவலகத்தில் ஒதுக்கப்பட்ட குப்பைகளாகக் கிடந்தன.
அவன் அதனை புதையல் கிளரும் ஆர்வத்துடன் தேடி மை தீர இருந்த சில ரீஃபிள்களை கண்டெடுத்தான்.
“என்னதுலே?”
“நெட்டுப்பென்னு”
“இத எதுக்கு குப்பையிலேருந்து எடுக்கே?”
“செலது எழுதும்லே...”
பேப்ப்பரில் எழுதினான். அது எழுதியது. ஆனால் மை தீரும் பருவத்தில் இருந்தது.
பிறகு இன்னொரு ரீஃபிளைத் தேடி எடுத்தான். அதில் நிறைய மை இருந்தது.
அதனை எழுதிப் பார்த்தான். அது எழுதவில்லை.
“எழுதாததுனால தூரப்போட்டுட்டாங்க.”என்றவன் அதன் முனையைக் கடித்து வெளியே எடுத்தான். பிறகு எழுதக் கூடிய தீர்ந்த ரிஃபிளின் முனையைக் கடித்திழுத்து அதற்கு பொருத்தி எழுதினான். அவன் முகம் மொத்தமும் அவன் கண் போல் விரிந்தது.
“ஒரு பென்னு கெடச்சாச்சு”என்றான்.
ராசா பரோட்டாவை தாஜூவிடம் கொடுப்பது வரையிலும் வேலப்பன் ரீஃபிள்கள் , குண்டூசிகளுடனேயே உறவாடிக் கொண்டு வந்தான்.
ராசா தாஜூவின் முக்காடிட்ட முகத்தினை பரோட்டா வாங்குகையில் விழுந்த வெளிச்சத்தில்கவனித்தான். இரவு நேரங்களில் வரும் ரோஸ்மில்க் ஐஸின் நிறத்தினை பூசி வைத்திருந்த முகமாக அவனுக்குப்பட்டது. அதன் மீது தெருவிளக்கின் வெளிச்சம்பட்டதும் மனதிற்குள் ஒரு குதூகலத்தினையும் அது உண்டாக்கியது.
“இந்தா மக்கா. நீயும் ரெண்டு வாங்கிக்கோ” என்று அவள் காசை நீட்டினாள்.
அவன் வேண்டாமென்று மறுத்தான்.
“அந்த முண்டக்கண்ணனுக்காவது குடு..” என்றாள்.
“வேண்டாம்க்கா” என்று மறுத்துவிட்டு திரும்பினான்.
வேலப்பன் கண் கலங்கி நின்றான்.
தனது புத்தகப் பையினால் ராசாவை ஓங்கி அடித்தான்.
“அவ தான் பைசா தந்தாள்லா..வாங்க வேண்டியது தானே? நீ என்ன பெரிய மொருதாலியா?” என சண்டைக்கு வந்தான்.
“லே...ஒரு உதவி செஞ்சுக் குடுத்தா கூலி வாங்கப்பிடாதுலே!”
“நாமளா கேட்டோம். ஒனக்கு வேண்டாம்னாலும் எனக்குத் தந்ததயாவது வாங்கியிருக்கலாம்லா..எரப்பாளி நாயே”
என்று கோபித்து விட்டுக் கிளம்பினான்.
ராசாவுக்கு அவனை சமாதானப்படுத்தவும் தெரியாமல் பின்தொடரவும் தெரியாமல் நின்று யோசித்தான். இவன் ஏன் வீட்டிற்கு போகாமல் இன்று இந்தப் பகுதியை சுற்றி வருகிறான் என்ற கேள்வியும் எழுந்தது. அவன் வேலப்பன் போவதையே பார்த்தான்.
ஆனால் சாலையில் நேராகச் சென்ற வேலப்பன் சற்று தூரத்திலேயே சாலையிலிருந்து விலகி குமாரின் அரிசிக்கடைப் பக்கமாக ஒதுங்கினான்.
கடையின் விளக்கு வெளிச்சம் நன்றாக விழுந்த திண்ணையில் உட்கார்ந்து கொண்டு புத்தகப் பையினை ஒதுக்கி வைத்தான். ராசாவுக்கு அவனது செய்கை புதிராக இருந்தது. அறிந்து கொள்ளும் ஆவலில் ராசாவும் கடை நோக்கி நகர்ந்தான். வேலப்பன் தீர்ந்துபோன ஒரு ரீஃபிலினை எடுத்து அதன் முனையை திண்ணையின் மீது பதமாக உரசிக் கொண்டிருந்தான்.
“என்னலே செய்யே?”
என்று ராசா கேட்கவும் எதையும் கண்டு கொள்ளாத ஆராய்ச்சியாளன் போல மேலும் உரசினான். அவன் பார்வை மிகவும் கூர்மையாக ரீஃபில் உரசும் தரை மீது இருந்தது. எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு கணத்தில் சட்டென உரசுவதை நிறுத்தினான்.
மிகவும் உற்சாகமாக தனது ஆள்காட்டி விரலினால் தரையை ஒற்றி உள்ளங்கையில் வைத்து தடவினான்.
“என்னதுலே?”
“பாரு குண்டு”
“குண்டா..?” என்று ராசா அவன் உள்ளங்கையினைப் பார்க்க ஒரு உலோக உருண்டை நம்ப முடியாத மிகச்சிறிய அளவில் இருந்தது.
ஒவ்வொரு நெட்டுப் பென்னுலயும் ஒரு குண்டு இருக்கும்”
“இது எதுக்கு?”
“எதுக்கா? இந்தச் சின்ன குண்டுகள வச்சித்தான் சைக்கிள்ல இருக்க பால் குண்டுகள செய்வாங்க. அந்த பால் குண்டுகள வச்சித்தான் அணுகுண்டு செய்வாங்க”
“கூறு கெட்ட பயலே. எவம்லே சொன்னான்?”
என்று ராசா அவன் தலையைத் தட்ட,
“விடுலே..ஒங்க தாத்தா செக்கடி மாடன்னு சொன்னா நா நம்பணும். அப்புக்க தாத்தா எசக்கிக்கு சுண்ணாம்பு குடுத்தாருன்னு சொன்னா அதையும் நான் நம்பணும்..ஆனா அணுகுண்டு எப்படி செய்யதுனு நாஞ்சொன்னா மட்டும் நம்ப மாட்டீயோ? பீக்கிரி பயலே..போலே..போலே..”
என்று கூறிவிட்டு அவன் அங்கிருந்து கிளம்பினான். ராசா தெருவுக்குத் திரும்பி வந்தான்.
அப்போது வேலப்பனிடம் பேசிக்கொண்டிருக்கும் அவன் வருவதை எதிர்பார்த்தவாறு அப்பு தெருமுனையில் நின்று கொண்டிருந்தான்.
ராசா தெருவை நெருங்கியதும் அப்பு அவனருகே வந்து,
“என் டாமிய எங்கலே?”
என்று கேட்டான்.
“எங்கிட்ட கேட்டா? எனக்கெங்கேத் தெரியும்?”
ராசா பதிலுக்கு சொல்ல,
“ஒனக்குத் தெரியாதா.......?”
என்றுகோபமாகஓங்கிஅவன்முகத்தில்தன்இடதுகையால்அறைந்துவிட்டுஇருளில்மறைந்தான். ராசாஎதிர்பாராதுஅடிபட்டஅதிர்ச்சிநிலையில்நிலைகுலைந்துபோய்நின்றான்