வாரி இறைக்கப்பட்ட நிலையில் வீட்டினுள்ளே பொருட்கள் ஒழுங்கற்று சிதறிக் கிடந்தன. ஒவ்வொரு பொருளும் கோபத்தின் ஒவ்வொரு முகத்தையும் வேகத்தையும் வெளிப்படுத்தியது. சாப்பாட்டு சம்படம் நெளிந்திருந்தது. உப்புப் பரணியின் ஆயுள் முடிந்து தூளாகிப் போய்விட்டிருந்தது. வெளியே சீரற்றுக் கிடந்த தம்ளர்களில் ஒன்று மடையின் தடுப்பாக மாட்டிக் கொண்டு தப்பிச்செல்ல யார்வீட்டின் கழிவுநீருக்காகவோக் காத்துக் கிடந்தது.
ஒரு பெரும்சண்டை நடந்ததற்கான அறிகுறிகளை உணர்த்தும் அந்த வீட்டின் உள்பகுதியில் கடுமையான மனக் கொதிப்பினால் பாதிக்கப்பட்டிருந்த அப்பு தன் சுவாசத்தினை இயல்பாக வெளிவிட முடியாது சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். உடம்பின் உள்ளஞ்சதைகள் உள்ளூர நடுக்கம் கொள்ளவைத்தன. பிசுபிசுத்த வியர்வைக் கைகளை நிக்கரில் துடைக்கக் கொண்டு போனதில் வலியெடுத்தன தோள்பட்டைகளின் பின்னல்கள். அவன் மெதுவாக உடலை அசைக்க முற்பட்டான். முன்புக்கு இப்போது தேகம் கொஞ்சம் ஒத்துழைப்பது போல் இருக்க இடக்கையை நீட்டி புத்தகப் பையினை இழுத்து எடுத்தான்.
‘’ காவக்காரப்பயலே..... நீ பள்ளிக்கூடத்துக்குப் போயி படிச்சிக் கிழிச்சதெல்லாம் போதும். போலே....’’
அப்பா அவனைக் காலால் எத்தினார். அப்பு மல்லாக்கப் போய் விழுந்தான். இடைநடையில் கதவு மீது சாய்ந்துக் கிடந்த கமலம் அதிர்ச்சியில் திரும்பி தான் பெற்ற வயிற்றினைப் பிடித்துக் கொண்டாள். அப்பா அச்சுதன் அவனதுப் பையினைத் தூக்கிக் குப்புறக் கவிழ்த்தார்.
‘’ அண்ணமாருவோலாம் படிச்சிக் கலக்டராயிட்டானுவோ....இனி இவுரு ஒருத்தரு தான் பாக்கினுப் படிக்க வச்சேன்...இவனும் உருப்படமாட்டாம் போலருக்கு...சொட்டுக் கஞ்சித்தண்ணி கூடக் குடுக்காதே புள்ளே...கொடலு அவிஞ்சி சாவட்டும்...’’
புத்தகங்களை இழந்தப் பையினை மட்டும் எடுத்துக் கொண்டு அவர் வெளியே இறங்க கமலம் அழுகையினூடே வழியை விட்டாள். அவர் போனதும் தான் முடக்கி வைத்திருந்த அழுகையோடு தன் புலம்பலை வெளிப்படுத்தத் துவங்கினாள்.
‘’எங்கப் போனாலும் சளத்த இழுத்துட்டு வந்து தொலச்சிருதானே.... நா என்ன செய்ய? வாணியமாருக்கக் குடியில நமக்கு என்ன பவுசு வேண்டிக் கெடக்குங்கேன்....? இடிவுழுந்தப் பவுசு ! கோசலைக்க மவங்கூட ஒனக்கு என்னலேக் கூட்டு? அவங்கூட எதுக்கு தகராறு...? அவனால ஏதாவது பிரச்சனைனா தடித்தடியா அண்ணமாரு இருக்கானுவல்லா அவனுவோக் கிட்ட வந்து சொல்லவேண்டியது தானே? அத விட்டுப் போட்டு அவனப் போயி அடிச்சிருக்க? இப்பப் பாத்தியா..? அவன் அம்மைக்கக் கூட எல்லாருமா சேந்து செல்லக்காக் கிட்ட எளக்கிக் குடுத்துட்டாளுவோ ? இப்ப சட்டுன்னு வீடு மாற முடியுமான்னு வந்து கேட்டுட்டுப் போறாளே ஒடனே வீட்டுக்கு நாம எங்கப் போறது? ஒருமாச வாடகத் தள்ளிக் குடுத்தாக் கூட ஒண்ணுஞ் சொல்லாம போயிருவா இன்னொருத்தின்னா சம்மதிப்பாளாலே?
....என் விதிய சொல்லணும்...எந்தாயி தவப்பன் தந்த சொத்த அனுபவிக்க வழியுண்டா..? சொந்த பூமின்னு காலு வக்கப் போனா கூடப்பொறந்த சகோதரியாக்கும்னு கூடப் பாக்காம அவரு தலைய எடுக்க ஒம்மாமமாரு வெட்டியாத்தியோட வந்து நிக்கத நீ பாத்திருக்கியா? குண்டி வக்க நமக்கு ஒரு எடம் உண்டுமா? எப்படியாவது நாளக் கடத்திரலாம்னு பாத்தா இப்போ ஒன் எழவுக்கு நிக்க வேண்டியதாருக்கு .....’’ கமலம் தன் பாட்டில் புலம்பிக்கொண்டிருக்க களத்திலிருந்து ராணி வந்தாள்.
‘’அண்ணாச்சி போயிட்டாரா....என்னக்காக் காலையிலேயே ...?’’
‘’சொல்லி என்னச் செய்ய ? இவன் நிக்க நெலையப் பாத்து செல்லக்கா வந்து வீடு மாற முடியுமான்னு கேட்டுட்டுப் போறா...புள்ளையோ சண்ட. அத அதோடப் பேசித் தீத்துக்கிடலாம்லா ...அத உட்டுட்டு இப்படிப் போயி பராதி சொல்லிருக்கா கோசல ..இப்போ எல்லாத்தையும் வாரிக்கட்டிக்கிட்டு எங்கப் போவோம் சொல்லு ராணி... ‘’
குமுறிக்கொண்டு வந்தது ராசாமீது கோபம். ஒருக் குத்துக் குடுத்தது பத்தவில்லை போலும் என்று உசுப்பி விட்டது அப்புவின் மனது.
‘’ தாயிலி வீட்டுல எளக்கிக் குடுத்துட்டானே...’’ முனங்கிக் கொண்டு சுவரில் சாய்ந்து கொள்ள முயன்று உடலை சமாளிக்க முடியாமல், நேரப் போக்கில் தரையில் நகர்ந்துப் படுத்துக் கொண்டான்.
‘’ வேலக்கிப் போகலையாக்கா ?’’
‘’ எழவுல்லா உழுந்திருக்கு எப்படிப் போவ? ‘’
‘’ இப்ப எழவு எங்க உழுந்துது...? ’’
‘’ பாரேன்....எங்க வீட்டுல..? ’’
‘’ இது எல்லா வீட்டுலையும் நடக்கது தானே...? நீ நல்லாத்தானே இருக்கே... பொறவு என்னா ’’
‘’ செத்தாத்தான் உயிரு போவும்னு இல்ல....என்னய மாதிரி பொணமும் உயிரு வாழும்...’’ என்றுத் தலையில் கைவைத்து அழ ராணி வெளியில் கிடந்தவற்றை ஒன்றுகூட்டி வீட்டினுள் போட்டாள். கமலத்தின் தொடர்ந்த அழுகையைப் பார்க்க ராணிக்கு சங்கடமாக வந்தது. சற்று எரிச்சலுடன் அவள் அப்புவைப் பார்த்து,
‘’ யாம்லே ஒங்கம்மைய இந்தப் பாடுபடுத்துதே....ஒன்னால இன்னைக்கு அவளுக்க ஒருநாளத்த சோலிப் போச்சா....? ‘’ என்று கேட்டாள். அப்புவின் கோபாவேசம் அவள் மீதுத் திரும்பியது .
‘’ ஒனக்கு ஒண்ணும் நட்டம் இல்லேல்லா...ஒஞ்சோலியப் பாத்துட்டுப் போ....? என்றான்.
‘’ பாத்தியா...பாத்தியா ...என்னாப் பேச்சுப் பேசுதாம்னு....ஒரு மரியாதி இருக்கா....இதுல நா அடுத்தவோள கொற சொல்லி என்ன புரோஜனம் ...சனியன் செத்தும் தொலைய மாட்டேங்குது....’’ கமலம் கடுந்துயரத்தொடு அழ அப்புத் திரும்பிக் கொண்டான்.
ராணி ஓடைக்கரைக்குப் போவதாகச் சொல்லி கமலத்தினை உடன் அழைத்துச் சென்றாள்
அசத்தியத் தூக்கத்தின் மத்தியிலும் அவர்கள் போவதை உணர்ந்த அப்பு எழுந்து கொண்டான். தலையில் கையை விட்டு முடியைக் கோதி விட்டுக் கண்ணாடியைப் பார்த்தான். கலைத்து விடப்பட்டதில் சுருள் கொண்ட தலைமுடி மேலும் சுருண்டு கொண்டது. முடியின் மீது பெருமை கொண்ட அவன் அதனை நினைத்துக் கொள்ள விரும்பியும் வலியினால் தோற்றான்.
வெளியே இறங்கிய அவன் முகம் கழுவுவதற்காகத் தொட்டியினிடம் சென்றான். தூரில் கிடந்தது தண்ணீர். ராணி வீட்டு தொட்டியினை நினைவில் கொண்டு களத்திற்குப் போனான்.. தொட்டியினருகே செல்ல வேண்டியவன் ராணியின் வீட்டுக் கதவுத் திறந்துக் கிடக்க ஏதோ ஒரு கணக்கில் அவள் வீட்டின் முன்பாகப் போய் நின்றான். முகம் கழுவ மனம் வரவில்லை. ஒரு குறுகுறுப்பின் தன்மையோடு வீட்டினுள்ளே எட்டிப் பார்த்தான். மிக சுத்தமாகவும் ஒழுங்கின் தன்மையோடும் காணப்பட்டது வீடு. பொருட்கள் ஒருவித பாந்தத்தோடும் பராமரிப்போடும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது அவனை அங்கிருந்து அன்னியப்படுத்தியது போல இருந்தது.. அலையடிப்பது போலவும் ஆரவாரம் போலவும் மனதிற்குள் உருவான தூண்டுதலில் அவன் உள்ளே நுழைந்தான்.
முன்புற இடுக்கில் திறந்து கிடந்த சாக்கு மூட்டைக்குள் மரப்பொடி நிறைந்து இருந்தது. அதனைத் தவிர்த்து விட்டு உள்முகமாகப் பார்த்துக் கொண்டே வந்தான். பாத்திர அடுக்கின் மேலேப் பச்சை மிளகாயும் அதனுடன் ரூபாய்த்தாள்கள் சிலவும் கொஞ்சம் சில்லறைகளும் இருப்பதைக் கண்டான். எதிரே அடுப்பின் குறைந்தத் தீயில் உலைக் கொதித்துக் கொண்டிருந்தது. வெறுப்பும் கசப்பின்முகமாகவும் அதனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த அவன் சளசளவென அரவம் கேட்டதும் அவசரமாக முன்புறம் வந்தான். இடுக்கில் தெரிந்த சாக்கினுள்ளேக் கையை விட்டு கைநிறைய மரப்பொடியை அள்ளிக் கொண்டு உள்ளே போனான். உலையைக் குறையாக மூடியிருந்தத் தட்டத்தினை நகர்த்தி மரப்பொடியை உள்ளேப் போட்டுவிட்டு வேகமாக வெளியேறினான்.
நோக்கமற்ற நடையோடு திரிந்தவன் பேருந்து நிலையத்தின் கடைகளைத் தொட்டவாறு ஒரு சுற்று அடித்துவிட்டு வழக்கமாக விளையாடும் பழையப் பள்ளிக் கூடத்தின் பின்புறமிருந்த கோயில் வளாகத்தின் உள்ளே குதிக்க மதில் ஏறினான். விடுமுறைக் காலங்களில் சிறுவர்களாய் நிறைந்துக் கிடக்கும் வளாகம் ஆள் அரவமின்றி படுவெறுமையாகக் கிடந்தது, அதன் வெறுமைக்குள் போகப் பிடிக்காமல் ஆதி திராவிடர் நல விடுதியின் மைதானப் பகுதிக்குள் வந்தான். இந்த வருடமும் துவக்கத்திலேயே பள்ளிக்குச் செல்ல முடியாமல் போனது தோல்வி பயத்தினை அளித்தது. எந்தக் கவலையுமின்றி வெள்ளரிமாமரத்தின் மீது அணில் ஏறிச் சென்றது பார்க்கப் பொறாமையாக இருந்தது. இந்த அணில் எங்கிருந்து வருகிறது......ராணியக்கா வீட்டிலிருந்து வந்திருக்குமா...இந்நேரம் அங்கு என்ன நடந்திருக்கும்....? பலவித யோசனைகள் அங்கிருக்கப் பிடிக்காமல் அவனைத் துரத்தியது.
தெருவுக்குள் நுழைந்த நேரம் இடதுபுறத்திலிருந்த வீட்டிலிருந்து செம்பிவளத்தாப்பாட்டி கூனிய உடம்புடன் கம்பை ஊன்றிக் கொண்டு வெளியே வந்து அவனைப் பார்த்துக் அடித்தொண்டைக் கீறலாகக் கத்தினாள்.
‘’ யே....நாசமாப் போவானே........
யே.....கரிமுடிஞ்சி போவானே.......
யே.....பாடையிலப் போவானே...
யே.....கொள்ளியத்துப் போவானே....
அவள் தலையிலடித்துக் கொண்டு தொடர்ந்துக் கத்தவும் அப்புவிற்குக் கிலியாகி விட்டது. அவளுக்கு முந்தைய வீட்டின் நடையில் உட்கார்ந்திருந்த பச்சை செம்பிவளத்தாக்கிழவியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பலமாக சிரித்துக் கொண்டிருந்தார். கிழவி இதுபோல அடிக்கடி கண்டபடி திட்டுவதை அப்பு அறிந்திருந்த போதிலும் தன்னைப் பார்த்து அவள் ஏசியது அவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
கிழவி மேலும் மேலும் வசை பாட பச்சை குலுங்கிக் குலுங்கி சிரித்தார். அது போன்றே அவரது வயிறும் குலுங்கி சிரித்தது. மூக்கில் நுழைத்திருந்த பட்டணம்பொடி கருநிறமாய் வடிவது கூட தெரியாமல் சிரித்தார்.
அவன் அங்கிருந்து வேகமாய் நகர்ந்து நின்றான். கிழவியைக் கூர்ந்து பார்த்தான், அவள் விழிகள் ஒளியற்றுக் காணப்பட்டன. இப்போதும் அவள் திட்டிக் கொண்டே இருக்கிறாள் தன் கையிலிருந்த கம்பினைத் தரையில் தட்டியபடியும் நீட்டியபடியும்.
பச்சை சைகையால் தரையைச் சுட்டிக் காட்டினார். அவன் குனிந்துப் பார்த்தான். பிறகு புரியாமல் அவரைப் பார்த்தான். இப்போது அவர் தெளிவாக ஒருக் கல்லை எடுத்து அவள் மீது எறியும்படி சைகை செய்தார். அவன் குனிந்தான் கல் ஒன்று சிறியதாக இருந்தாலும் வாக்காகக் கிடந்தது. அதனை எடுத்துக் கொண்டான்.
‘’ வெளங்குவியா...?
....யாலே நீ வெளங்குவியா ? ...
....யாலே நீ வெளங்குவியான்னு கேக்கேன் ?...
....எப்படி வெளங்குவே ?...
....வெளங்கமாட்டேல்லா ...
....வெளங்காமல்லா போவே....
.....குடியத்துப் போற நீ எப்படி வெளங்குவே...?
அப்பு கோபத்தினை அடக்க முடியாமல் நின்றான். பச்சை கண்ணசைத்தார். அப்பு இடதுக் கையால் கிழவியின் தலையைக் குறி வைத்தான். வலி உடம்பை இழுத்துப் பிடித்தது. பல்லைக் கடித்துக் கொண்டான். கவணையை விடுப்பது போல் கையை இழுத்து கல்லை எறிந்தான். கல் மண்டையில் பட்டுத் தெறித்தது. கிழவியின் கீறல் சத்தம் நின்றது. பச்சை கைதட்டி சிரித்தார்.
(கனா தொடரும்)
(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கி வரும் இவர் தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)