தொடர்கள்

கனா மீது வருபவன் - 16

அய்யப்பன் மகாராஜன்

தனது ராலி லோடு சைக்கிளின் மீது கரிக்கட்டை மூட்டைகளை வைத்துக் கொண்டு சாலையேற்றத்தின் மேடுகளை நோக்கி மிதித்தபடி சென்ற போதெல்லாம் சிரமப்படாத தங்கையாவின் உடம்பிற்கு இன்று பாதி ஏற்றத்தின்போதே பங்கம் வந்து தொலைத்தது. உந்தி அழுத்திய மிதி சறுக்கியது. கால் தன் பிடிமானத்தை நழுவ விட தொடை கிடுகிடுத்தது. தங்கையா உடலின் பிழைக்கு அஞ்சி சைக்கிளை உடனே நிறுத்தி ஒரு காலை ஊன்றினார்.

ஆடாது அசையாது நின்று சில கணத்துளிகள் ஒய்வு கொடுத்து உடம்பை சோதித்துப் பார்த்தார். பிறகு சற்று மெதுவாக அசைத்தும் கவனித்தார். குழப்பம் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது தென்படாததால் இரட்டைமன சிந்தனையில் இருந்தவர் பாரத்தை முத்தாரம்மனின் தலையில் போட்டுவிட்டு மீண்டும் சைக்கிளை உந்தப் போனார். முதல்மிதிக்கு விட்டுக் கொடுத்த உடம்பு மறுமிதிக்கு குழப்பம் விளைவித்தது. அதுவரையிலும் இடுப்பில் எங்கோ மறைந்திருந்த வலி வாய்ப்புக் கிடைத்தது போல மேலும் கீழுமாய் பாகம் பிரித்துக் கொண்டு உடலெங்கும் ஊடுருவிப் பாய்ந்தது. கால் மீண்டும் பெடலை விட்டு வழுக்கிக் கீழ் நோக்கித் தொங்கியது.

கண் சட்டென மங்கியதையும் சேர்த்து, அபாயத்தினை அறை கூவும் மனதின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்த நினைக்காது சைக்கிளை விட்டுக் கீழே இறங்க முயற்சித்தார் தங்கையா. தொடைக்கு நடுவே பருத்திருந்த ஓதம் சீட்டின் முன்புறத்திற்கு இறங்கி சிக்கிக் கொண்டதைப் போல அழுத்தியது.

இறங்கும்போது வண்டி சரிந்து விட்டால் மூட்டைகளோடு விழுந்து மேற்கொண்டு ஏதாவது வில்லங்கம் நேர்ந்து விடுமோ என்ற பயம் வந்தது. முழு பலத்தையும் கூட்டி முதலில் பல்லை இறுகக் கடித்துக் கொண்டார். பிறகு ஒருகாலை ஊன்றிய வாக்கிலேயே சற்று நகர்ந்து சாலை ஓரத்திற்கு வந்தார். அருகில் நின்ற மின்கம்பத்தின் மீது வண்டியோடு சேர்த்துத் தானும் சாய்ந்து கொண்டார். சுவாசம் எங்கோ புறப்பட்டு எங்கோ சிக்கிக் கொண்டு எங்கோ விடுபட்டு வருவது போல வந்து சென்றது.

‘’ ஓய்..ஓம்பொண்டாட்டி தானே நா......

ஒம்மபொண்டாட்டி தானே வோய்.....

ஓய் கேக்கமுல்லா..ஒம்மப் பொண்டாட்டி தானே...

தாலி கெட்டுன பொண்டாட்டி தானே......

ஓய் ஒரு சீல வாங்கிக் கேட்டு எத்தர நாளாச்சி......

எத்தர நாளாச்சி வோய் ..?

ஒரு சீல..ஒரே ஒருச் சீல..?

கண்ணு வெளங்காம போன பாவின்னு தானே... ஒரு சீலைக்குக் கையேந்த வச்சிட்டீரு..

ஓய் நா ஒம்மப் பொண்டாட்டி தானே? சொல்லும் ஒய் நா ஒம்ம.......’’

தங்கையா தன் மனைவி செம்பிவளத்தாள் பார்வதி வெகு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சேலைக்கானத் தொகையை இந்த கரிமூட்டைகளைப் போடுவதின் மூலம் புரட்டிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார்.

அருணாசலம் கோபப்படுவான். அவனிடம் பற்று என்று கேட்டாலே அவன் பிறந்த தினத்திலிருந்து கடன்பட்ட கதைகளைத் தொகுத்துக் கூற ஆரம்பித்துவிடுவான் என்றாலும் பழியில்லை. இதைவிட்டால் இப்போதைக்கு ஏதும் புரட்டவும் முடியாது. நல்லபெருமாள் ஸ்டோரிலோ, சிங்கராய நாடாரிலோ போய்ப் பார்க்க வேண்டும்.

போன தீபாவளிக்கு மகளுக்கும் அவள் குடும்பத்தினருக்கும் செய்ய வேண்டியதை செய்து முடித்தபோது மிச்சம் எதுவும் தங்கவில்லை.

அதற்கு முன்பே இவள் கேட்டுக் கொண்டிருக்கிறாள் தான். யாரிடமும் கைநீட்டக் குறைச்சலாக இருந்ததால் அருணாசலத்திடம் வாங்கித் தான் மகளுக்கு செய்யவேண்டியதாக இருந்தது. அதற்கு அவன் குடும்பக் கதையினை மாதம் இரு தடவை வீதம் இதுவரையிலும் கேட்டாகிவிட்டது. இனி இப்போதும் கேட்கவேண்டும். பலதடவைத் தன்னை சுமந்தவளுக்காக இந்த மூட்டைகளைத் தானும் சுமக்கலாம்.

ஆனால் மூட்டைகளைத் தன்னால் இப்போது கொண்டு போய் சேர்த்துவிடமுடியுமா என்கிற பயம் வந்ததில் தான் சற்று நேரம் சாய்ந்த வாக்கிலேயே நின்றார்.

பாரம் உடம்பிலிருந்து சற்று இறங்கியதுபோலத் தோன்றவும் மின்கம்பத்தினைப் பற்றிக்கொண்டு மெதுவாக இறங்கினார். வண்டி கொஞ்சம் சரிந்தது என்றாலும் தானாகவே சமநிலையில் நின்று கொண்டது. வயிற்றின் பருமன் சற்று இளகித் தொண்டையை நோக்கிக் குவிந்து வர வாயைப் பிளந்து ஏப்பத்திற்கு வாய்ப்பளித்தார்.

“யப்பா.... கேஸு.....!”

இதுவரைத் தன்னை பாடாய்ப் படுத்தியது காற்று தான் என்ற நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டார். வேட்டியினை ஒருதரம் அவிழ்த்து உடுத்தப் போகையில் கீழ்ப்புறமாகக்  குனிந்துப் பார்த்தார். அசாதாரணமாக எதுவும் தோன்றவில்லை. மீண்டும் கலைத்து உடுத்தி மடித்துக் கட்டினார்.

இதுபோலவே ஒரு தடவை வேலை சமயத்தில் உடம்பு படுத்தியபோது தான் தன் தாயார் இறந்து போன செய்தி வந்ததும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வந்தது.

சைக்கிளை ஓட்ட முயற்சிப்பது அர்த்தமற்றது என்று நினைத்தவர் சைக்கிளை உருட்டத் துவங்கினார்.

செம்பிக்குளம் ஊரிலிருந்து கட்டிக் கொண்டு வந்த போது பார்வதியின் வரவு ஒரு கனவு போல இருந்தது. இப்போதும் கூட நினைத்துப் பார்க்க சுகமாகவே இருக்கிறது.

இதுபோலக் கூன் விழுந்து பார்வையற்றவளாக எல்லாரையும் துர்வாக்கியம் சொல்பவளாக அப்போது அவள் இல்லை.

எல்லோரிடமும் இசைவாக பழகும் தன்மை கொண்டவளாக இருந்தாலும் குறைவான சொற்களையே செலவழிக்கும் சொற்சிக்கனம் கொண்டவள். “அய்யா” என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை முன்னும் பின்னும் சேர்த்து தங்கையாவை அவள் அழைத்தது இல்லை. மகள் வளர்ந்து கட்டிக் கொடுக்கும் சமயம் வந்தபோது தன்கையாவின் இடத்தினை விற்க சம்மதிக்காமல் செம்பிக்குளத்தில் கிடந்த அவளது  சொந்த பூமியினை விற்றுக் கொடுத்ததாள். மகளுக்கு வீடு வைத்து சிறப்பு செய்ய அது மிகவும் சௌகரியமாக இருந்தது.

கார்த்திகை மாதக் கோயில் விசேஷங்களில் தோவாளைக்குச் சென்று பூக்களை அள்ளி வந்து கட்டிக்கொடுத்து தாயாரையும் மாடன்மார்களையும் அழகுபார்த்து மனந்தொழுவாள்.

ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவுமே இருக்கிறது. பார்வதியிடமிருந்து இவையெல்லாம் எங்கே போயின? அவள் பார்வை போனதும் , கூன் விழுந்ததும் மட்டுமா காரணங்கள்..? இல்லை. காரணம் எனக்குத் தெரியும். அதனை நினைத்துத் தன்னையும் மன வீழ்ச்சிக்கு பலி கொடுத்து விடக்கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டார்.

“ஓய் கோமரத்தாடி... “ என்று ஒரு குரல் கேட்டது. தங்கையா நின்று திரும்பிப் பார்த்தார். டீக்கடையைத் தொட்ட திருப்பத்திலிருந்த இறைச்சிக் கடையின் முன்பாக நின்று கொண்டு ரவி தான் கூப்பிட்டான். தங்கையா அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

“என்ன ஓய் தள்ளிட்டுப் போறீரு...? தளந்துட்டீரா.....? உக்கி உக்கி ஒட்டுவீரே ஓய்.. இப்ப முக்கு முக்குனு முக்குத்தீரு.....ஓதம் தொங்கிருச்சோ..?” என்றுக் கேட்டான்.

தனது ஓதத்தினைப் பற்றித் தெருவுக்கு அறிவித்த புண்ணியவான் இப்போது ஊருக்கும் தெரிவிக்கிறான் என்று நினைத்துக் கொண்டார்.

“எங்கூரு சாமியாடியாக்கும்..... ஆட ஆரம்பிச்சிட்டாருன்னு வச்சிக்கிடுங்கோ......பயக்களுக்கெல்லாம் ஒரேக் கும்மாளம் தான். ஓய் வண்டியிலேருந்துக் கைய வுட்டுட்டு ஒரு தடவ ஆடிக்காட்டுமாம்வே.. ஓ.......வ், வோ......வ், வோ.....வ் இப்படித்தானே? வாரும்..வாரும்..” என்றழைத்தான்.

இளவட்டங்கள் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு பெரியவர் நமுட்டாக சிரித்தார். உடன் வந்த சிறுவன் தங்கையாவைப் புதிராகப் பார்ப்பது போல் பார்த்தான். தங்கையாவின் புன்னகையில் கறுப்பு விழுந்தது.

“இவருக்கு பொண்டாட்டி ஒருத்தி இருக்கா...தெருவுக்குள்ள எவன் வந்தாலும், போனாலும் இருபத்திநாலு மணிக்கூரும் ஒரே அறுப்பு அறுப்பா....  வெளங்காத அறுப்பு.. ஆரம்பிச்சா நெறுத்தவே மாட்டா..தொண்டைக்கீறி...!

அவ மூஞ்சியப் பாத்துட்டு அவ எதுப்புக்கு வெளியப் போனோம்....அன்னைக்கு வெளங்காது..”

பலரும் பலவிதமான உவமை உதாரணங்கள் கூறி குமைத்துக் கொண்டிருக்க அதன் திரியைப் பற்ற வைத்த திருப்தியில் ரவி நின்று கொண்டிருந்தான். தங்கையா மெதுவாக அவ்விடத்தை விட்டகன்றார். உடலை விட மனம் பல தூரம் வேகமாக முன்னேறிச் செல்ல துடித்துக் கொண்டிருந்தது.

தங்கையாவுக்கு யோசிக்க நிறைய இருந்தன. அவர் ரவியின் தாய் வள்ளியைப் பற்றி யோசித்தார். “அம்பாள் விலாஸ்”  ஹோட்டலில் ஒருதடவை கரிமூட்டைகளைப் போட போன போது தான் அவர் அவளை சந்தித்தார். இரண்டு பிள்ளைகளுடனும், கணவன் அரிவாளால் வெட்டிய மூக்குடனும் வந்து நின்றாள். முகமறியாத அவளது கணவனுக்குப் பயந்தும், முன்பின் தகவல்கள் அற்ற ஒரு பெண்ணின் நம்பகத்தன்மை குறித்த ஐயத்தினாலும் யாரும் அவளுக்கு உதவி செய்யவில்லை. அடைத்துக் கிடந்தக் கடைகளின் திண்ணைகளில் பொதிந்துகொண்டுக் கிடந்த அவளின் கண்ணீரைக் கண்டு பலரிடம் நயந்து பேசி காய்கறி விற்கும் சந்திப்பில் நிலக்கடலை வறுத்து விற்பதற்கு ரோட்டோரோமாக இடம் வாங்கிக் கொடுத்தார்.

வலியின் உச்சம் அறிகிற வம்சம் என்பதால் இயல்பான பெண்ணினத்தின் துணிவு வள்ளியிடம் கூர்தீட்டிக் கொண்டது.

காய்கறி விற்பவர்கள் சந்தைக்குச் சென்று வர ஆகும் நேரத்தைக் குறைக்கத் தானேப் போய் காய்கறிகளை வாங்கி வந்து அவர்களிடம் சேர்த்தாள். கடைகள் நேரமாகவேத் திறக்கப்பட்டன. எல்லாவகைகளும் தட்டுப்பாடின்றிக் கிடைத்தன.

சந்தைக்குள் அவள் ஏற்படுத்திக் கொண்டப் பழக்கம் சந்திப்பில் விற்றக் காய்கறிகளின் குணத்திலும் விலையிலும் தெரிந்தது. வேறு சந்திப்புகளுக்கு செல்லும் மக்கள் ஒருநடை பார்த்து விட்டுப் போக வந்து பின் நிரந்தர வருகை தந்தார்கள். வியாபாரிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிப் போனாள் வள்ளி.

சந்தைக்கும் சந்திப்புக்குமாக மாறி மாறி அலைந்தாள். விசேஷ நாட்களில் பரபரப்பு கொண்டவளாக எல்லாருக்கும் உதவி செய்தாள். ஒருநாள் தங்கையாவிடம் கேட்டாள்.

“யண்ணே...கடலை வித்து எனக்கென்ணன்னே கெடைக்குது? கூட கொஞ்சம் எடமும் கெடச்சா நானும் காய்கறி வித்துப் பொழச்சிக் கிடுவண்ணே”

‘’ அதுக்கு எடம் கெடக்க வேண்டாமா? சம்மதிக்கமாட்டாவோ...’’

‘’ எடம் இருக்குண்ணே..நம்ம பொன்னாக்கா மவன் மெட்ராஸ்லேலா இருக்கான் ..அவங்கூட அவளும் போப்போராளாம்...அவ எடத்த வாங்கித் தாண்ணே ...’’

தங்கையா உதவ தான் மறுநாள் கடலை விற்ற இடமும்  பொன்னா காய்கறி விற்ற இடமும் அவள் கைக்கு வந்தது. அதன்மூலம் வந்த சிக்கல்களை பலவகைகளில் எதிர்கொண்டாள். வாடகைக்கு வீடு பிடித்தாள். ஒத்திக்கு மாறினாள். நல்லதொரு நாளில் சொல்லாமல் கொள்ளாமல் போய் சேர்ந்தாள். இளையப் பிள்ளை மதன் நன்றாகப் படித்து வங்கி வேலைக்குப் போக மூத்தவன் ரவி காய்கறி சந்திப்பில் கிடைத்த பழக்க தோஷங்களின் மூலம் கீழிறங்கிப் போனான். காசுக் கிடைப்பது வரை வேலை. கிடைத்ததும் குடிப்பதே வேலை . இரவுகளில் தாய்ப் படுத்துக் கிடந்த அதேத் திண்ணைகளில் உறங்கினான். பகலில் பணம் உள்ளவர்களுக்கு உடைவாளாய் முனை மழுங்கிக் கிடந்தான்.

தங்கையாவுக்கு பார்வதிக்கு மிகவும் பிடித்த சிவப்பு நிற சேலைக் கிடைக்கவில்லை. சிவப்புமாதிரி என்று நினைத்துக் கொண்டு ரோஸ் நிறத்தில் எடுத்துக் கொண்டார். மணிமேடையை விட்டுக் கீழே வரும்போதுதான் எதிரில் வந்த சீதை குறுக்கே வந்து சொன்னாள் ‘’ எங்கப் போனியோ ..பாட்டிக்கி பேச்சும் மூச்சும் இல்ல..வெருசுலப் போயிப் பாருங்கோ.....’’

தங்கையாவுக்கு இடுப்பிலிருந்து வலி மீண்டும் புறப்பட்டது. பல்வேறு எண்ணங்களுக்கு மத்தியில் சைக்கிளை உருட்டினார்.

‘’ சொடல மாடா...செக்கடி மாடா...’’ அகக்குரலில் கூப்பிட்டார்.

கண் லேசாகக் கலங்கியதில் மங்கலாக கூன் விழாத பார்வதி தெரிந்தாள்.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)