தொடர்கள்

கனா மீது வருபவன் - 21

அய்யப்பன் மகாராஜன்

சிறுவர்கள் கோபம் குமுற நின்று கொண்டிருந்தார்கள். கீழே விழுந்தவனைத் அவர்கள் தூக்கிப்பார்த்த போது நெற்றியோரம் கிழிந்திருந்தது. ஆட்கள் கூடுமுன் ரவி அங்கிருந்து நகர்ந்தான். என்றாலும் அவனுக்கு போக்குகொள்ளவில்லை. அவமானம் விரிந்தபட்டையாய் முன்னே வந்து  நின்று அவனை வழிநடத்தியது. தெருவிற்கு வெளியே வந்து இருப்பிடம் நோக்கிச் செல்ல இருந்தவனை தடுத்து நிறுத்தியது. தெரு அடங்கட்டும் என பொறுக்க நினைத்தவன் மணிமேடை வரைப் போய்வரலாம் என்ற எண்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டு மேல்நோக்கி நடக்கத் துவங்கினான். வளரவிருந்த மீசையை வளர்ந்துவிட்டதாகக் கருதித் தடவிவிட்டுக் கொண்டு பெரிய மனிதத் தோரணையுடன் உறுமியபடிச் சென்றான். உள்ளூர சிக்கிக்கொண்ட தோல்வியின் வலி அவனை நிமிண்டிக்கொண்டேயிருந்தது.

மணிமேடை சந்திப்பின் இடதுபுறம் திரும்பி போஸ்ட்ஆஃபிஸ் தாண்டி தாடிக்கடையில் சாமியாரிடம் பீடிக் கேட்டு வாங்கினான். தாடி வெற்றிலை வாயை மூடிக்கொண்டு காசுக் கேட்க, ‘நாளைக்கு’ என்றான். தாடி வெடுக்கென பீடியைப் பிடுங்கி உள்ளேப் போட்டுவிட்டு புறங்கையால் ‘போ’வென உதறினார்.

ரவி போகாது கடைமுன்னே நின்றுகொண்டு அவரையே உற்றுப் பார்த்தான். தாடிச்சாமி தனது கைமுட்டியைச் சொரிந்து கொண்டு கயிற்றுக் கண்ணாடியின் வழியாக தான் நிறுத்தி வைத்திருந்த பழையப் புத்தகம் ஒன்றின் மீதி வரிகளிலிருந்து வாசிப்பைத் தொடர்ந்தார். அவன் யாசகமாக தனது கையை நீட்டினான். அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் மீண்டும் வாசிப்பிற்குத் தனது கவனத்தைத் திருப்பிக் கொண்டார். வாய் நிறைய அடங்கிக் கிடந்த வெற்றிலைக் குதப்பலுக்கு தகுந்தவாறு கன்னங்கள் புடைத்து அமுங்கிக் கொண்டிருந்தன.

ரவிக்கு நிற்க இயலவில்லை. நடைபாதை விளிம்பில் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக சாலை ஓரமாக வைக்கப்பட்டிருந்த உருளைக் கம்பியின் மீது ஏறி கடைக்கு எதிராக உட்கார்ந்து கொண்டான். தாடி தனது கண்ணாடியின் இடைவெளி வழியாக அவன் உட்கார்ந்திருப்பதை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டார்.

அவன் ஒரு நோட்டமாக அவரருகே இருந்த ஒழுக்கறைப் பெட்டியைக் கவனித்தான். நேரம் கடந்து சென்று கொண்டிருந்தது. காத்திருப்பின் வெறுமை அவனை எரிச்சல்படுத்தியது. அவன் மீண்டும் இறங்கி வந்து அவர் முன்னே நின்றான். அவர் தலையை வெளியே நீட்டிப் பார்த்தார். நீண்ட அவரது தலையைப் பார்த்து,  ‘’ ஒரே சமுட்டுதான் தாயிலி...வாயப் பொளந்திருவே..” என்று அவன் நினைத்துக்கொள்ள,  தாடி வெற்றிலை எச்சிலை வெளியேத் துப்பினார். வாயைத் துண்டால் துடைத்துக் கொண்டு, “ஏம்லே..முந்தி வாங்குனதுக்கலாம் எண்ணக் கணக்கு? ..பைசா எங்கே?” என்று கேட்டார்.

“அதெல்லாம் தந்துட்டம்லா” அவன் யோசிக்கக் கூட இல்லாமல் உடனே பொய் சொன்னான்.

தாடிக்குக் கோபம் வந்துவிட்டது.

“யார்ட்டக் குடுத்தே..ஒத்தப் பயிசா வரல..” என்றார்.

“இல்லச் சாமி..இன்னொரு தாத்தா இருப்பாருள்லா..அவர்ட்டக் குடுத்தேன்” என்றான்.

“போல மூதேவி..ஏங்கிட்ட பலதடவ வாங்கிருக்க. நயா பைசா தந்தது கெடையாது..இதுக்கு மேல நீ பைசாவும் தராண்டாம்..ஒரு சாமானும் வாங்காண்டாம்..மொதல்ல இங்கேருந்து நீ போயிச்சேரு..” என்றார்.

அவன் நகரவில்லை. பீடி வாங்காமால் போகக்கூடாது என்று தீர்மானித்தே வந்திருந்தான்.

“சாமி...பழக்கொலையத் தூக்கித் தாரேளா? மேலக்கெட்டட்டா? ‘’என்று கேட்டான்

“நீ ஒண்ணும் புடுங்காண்டாம். ஓஞ்சோலியப் பாரு...போ” என்று துரத்தினார்.

அவன் திரும்பவும் போய் ரோட்டோர கம்பி மீது உட்கார்ந்து கொண்டான். தூக்கம் நெருக்கியதில் கொட்டாவி வந்து போனது.

அந்நேரம் பார்த்துக் கொள்ளைப் போதையில் மித மிஞ்சிய தள்ளாட்டத்துடன் நகரக்குடிகாரன் ஒருவன் கடைக்கு முன்னே வந்து நிற்க முயன்று தோற்றுக் கொண்டிருக்க, தாடி புத்தகத்தைக் கீழே வைத்தார். ரவி உபயோகத்துக்கு வரும் ஒரு இடைவெளிக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

தாடி அவனிடம் , “என்ன?” என்பது போல் தலையாட்டினார்.

“போஸ்டாபிஸ்ல பயிசாப் போடணும்”

என்றான் அவன்.

ரவி கவனத்திலிருந்தான்.

தாடிக்கு வெப்புராளம் வந்தது.

“காலைல வந்து போடு” என்றார் அடக்கிக் கொண்டு.  

“காலைல வேலைக்குப் போவாண்டாமா....” என்று நேந்திரன் பழக்குலையைப் பிடித்துக் கொண்டான். அது கூரையோடு சேர்ந்து ஆடியது. தாடி பெருங்கோபத்துடன் தனது கீரிக்குரலால்

 “ஏல..கைய எடு” என்று சத்தமிட்டார்.

பட்டென்று கையை எடுத்தவன் ”என்னாக் கோவப்படுதே....நா யாருன்னு தெரியும்லா....ஓட்டுப்புறத் தெருவுல....ஆங்.....பாத்துக்கோ..’’”என்று எதையோப் பேச வந்து அதனை மறந்து கடை முன்பிருந்த மிட்டாய் பாட்டில் மூடியைப் பிடித்து பாட்டிலைத் தூக்கினான். பாட்டில் விழுந்து விடும் அபாயத்திலிருந்தது.

“வசமா சிக்குனாரு தாடி..வாங்கிக் கெட்டும் ஓய்! பீடியாத் தர மாட்டேரு..இப்பப் பாருமே..”

ரவி முனகிக்கொண்டான்.

தாடி தன்னருகிலிருந்தப் பாக்கு வெட்டியை எடுத்தார்.

குடிகாரனின் மணிக்கட்டில் சரியாக ஒரு போடுபோட்டார். பாட்டில் அதற்கான இடத்தில் பொத்தென்று விழுந்தது.

குடிகாரன் என்ன நடந்தது என்று விளங்காமல் கண்களை அகல விரித்துப் பார்த்தான். போதை அவனை கடைக்குள் தள்ளியது. தாடி ரவியைப் பார்த்தார். ரவி கண்டுகொள்ளாமல் இருந்தான் அவரே அழைக்கட்டும் என்று.

வந்தவன் நிறையக் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்க வலுக்கட்டாயமாக முயற்சி செய்து கொண்டிருந்தான். அவனுடைய வேகத்திற்கு ஒத்துழைக்காத வார்த்தைகள் வாய்க்குள்ளேயேக் குழற அவன் வார்த்தைகளோடு போராட எச்சில் தாடியின் முகத்தில் தெரித்தது.

பொறுக்கமுடியாத அவஸ்தையில் தாடி மீண்டும் பாக்குவெட்டியினை எடுத்து இந்தத் தடவை அதனை கறாராக உபயோகித்துக்கொள்ள முடிவு செய்து நன்றாகப் பிடித்துக் கொண்டார். அதைக் கண்டதும் அவன் தனது பாக்கெட்டினை தேடிக் கண்டுபிடித்து சிரமப்பட்டு அதனுள்ளேக் கைவிட்டு இரண்டு ரூபாய் தாள் ஒன்றினை எடுத்து அவரிடம் நீட்டி சிகரெட் கேட்டான். தாடி, “ஒழிஞ்சாபோதும் சனியன்” என்று அதனை வாங்கி இரண்டு சிகரெட்களையும் மீதியையும் திருப்பிக் கொடுத்தார். அவன் சிகரெட்டுகளை வாங்கி அதில் ஒன்றை வெகுநேரமாகப் போராடிப் பற்றவைத்து அவரை நோக்கி ஊதிவிட்டு “..ன்னா ? ரெஜினி மாதிரி இருக்கா...?” என்றான்.

தாடிக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. வேறு என்னவெல்லாம் இவனோடு கடக்க  வேண்டியிருக்கிறதோ என நினைத்து அடக்க முயன்றார்.

“அப்போக் கமலு மாதிரி ஊதிக் காட்டட்டா?” அவன் பெருமை பொங்க அவரிடம் கேட்டான்.

ஒரு பீடிக்காகக் காத்திருந்த ரவிக்கு இந்த இடம் பிடிக்காத கட்டமாக இருக்க அவன் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கைகளின் பலத்தில் உடலை முன்னுக்குத் தள்ளி ஒரு எத்து விட்டான். குடிகாரன் என்னவென்று திரும்பிப் பார்பபதற்குள் கீழே விழுந்து சிக்கலானான். பிறகு எழுந்திருக்க பலமுறை முயன்றும் முடியாமல் அப்படியேப் படுத்துக் கொண்டு தாடியின் குடும்பத்தினரை வசைக்க முயன்று கொண்டிருக்க, ரவி அவனைப் பிடித்து இழுத்து போஸ்ட் ஆஃபிஸின் முன்புறம் இரும்புக் கதவருகே கிடத்தி

“போஸ்ட்டாபீசுல பணம் போடணும்னியே ...இதுதான் எடம். ஆத்தலாப் போய் போட்டுட்டு வா. ன்னா ?’’ என்றான். அவன் ‘’ சரி சார் ‘’ என்றான் வெகு மரியாதையாக.

ரவி முதலில் அவன் விழுந்த இடத்திற்குச் சென்று தரையில் தேடினான். பார்வையின் துழாவலில் அவன் தவறவிட்டிருந்த முழுசிகரெட்டும் பற்ற வைக்கப்பட்டிருந்த  இரண்டாவது சிகரெட்டும் கீழேக் கிடந்தன. அவன் முழு சிகரெட்டை எடுத்துக் கொண்டான். தாடிக்கடை முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிம்னி விளக்கில் ஒரு அட்டைத் துண்டினை நுழைத்து எரியவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தான். பிறகு புகையை இழுத்து நெஞ்சு பரந்து விரிய நிரப்பி விட்டு வெளியே ஊதினான்.

தாடி அவனைப் பார்த்தார். அவரிடம், “வள்ளமும் ஒருநாள் வண்டியில் கேறும் மனசிலாயோ ஆசானே” என்று புகையை இழுத்தபடிக் கூறினான். அவர் அவனைப்பார்த்து சிரித்துவிட்டு வெற்றிலை வாயை அண்ணாந்து வைத்துக் கொண்டு, “அல்லா மோனே...கேற்றும்...அத மனசிலாக்கிக்கோ” என்றார்.

பிறகு ஒருவித சைகையில் அவனை அருகே அழைத்தார். அவன் உடம்பை எச்சரிக்கையாக பின்புறம் சாய்த்தபடி  அவர் முன்னே சென்றான். அவர் எச்சிலை கடையோரமாக வெளியே துப்பிவிட்டு, “சம்பவம் ஒண்ணு தான். ஆனா பாத்தியா ? ஆளுக்கொரு விசுவாசம். நம்பிக்க. ஆளுக்கொரு விதி. மேல ஒரு அம்மாச்சன் இருக்காம்பாரு.... அவன் லேசுப்பட்டவன் இல்ல. கோளுமாறி. கேப்பாருப் பேச்சக் கேக்கமாட்டான். ஒத்தப் பேனாக் கொண்டாக்கும் எழுதுகான் எல்லாத்துக்கத் தலையிலேயும்....ஆங் அதாக்கும் விசுயம். அத நீ மனசிலாக்கிட்டுப் போ. போறபோக்கு நல்லப் போக்கா இருக்கட்டும்” என்றார்.

அவன் அலட்சியமாக அவரிடம் “ஆசானே...சின்னப் புள்ளையளுக்கும் வெளங்க மாதிரி பேசும்..கேட்டேரா? இது மாதிரி மண்டக் கொழப்பமாப் பேசிட்டிருந்தேரு.... பொறவு வெப்புராளத்துல வாற எவனாவது தட்டுவாக்குல சாச்சிரப் போறான்..பாத்துக்கிடுவும்” என்று கூறி சிரித்துவிட்டு கீழே எரிந்தபடிக் கிடந்த சிகரெட்டினை எடுத்து போஸ்ட்ஆஃபிஸ் முன் கிடந்தவன் வாயில் வைத்தான். முதலில் குழப்பமான அவன் சிகரெட்டைக் கண்டதும் அதனை சந்தோசமாக வாங்கிகொண்டு ஒரு வணக்கம் வைத்தான். ரவி நான்கு எட்டு வைத்துச் சென்றதும்

“பேப்பட்டிக்கு பொறந்த பய. மோளத்தெரியுமாலே ஒனக்கு?...என்னையயா சவுட்டிட்டுப் போறே? ஒங்காலுல பொளவதாமுல வரும்” என்று ஒருவழியாகப் பேசி சபித்தான்.

தாஜின் வாப்பா உதுமான் கையில் பொதியுடன் தெருவிற்குள் நுழைவதைக் கண்டாள் தாஜ். அவள் அருகே அவர் நெருங்கியதும் அவரோடு இணைந்து கொண்டாள். “மோ... ஒறங்கலையா?” என்றார் உதுமான்.

“ஏன் வாப்பா சண்ட போட்டிங்கோ ? உம்மா ஒரே அழுக” என்றாள்.

அவள் குரல் வருத்தத்தை அம்பலப்படுத்தியது.

“ஒங்க உம்மாக்குக் கொழுப்புட்டி. அதனால தான் அவ அழுகா..” என்று கூறியபடி அவளையும் அழைத்துக் கொண்டு முடுக்கிற்குள் நுழைந்தார்.

“உம்மா பாவம்லா வாப்பா......நீங்க பாட்டுக்கு அடிச்சிப் போட்டுட்டு போயிட்டீங்கோ. ரொம்ப வலிக்குதுன்னு சொல்லுதால்லா”

அவர் அவளைத் தட்டிக் கொடுத்தபடி இறுக்கம் குறையாது கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.

கடக்கப்போனபோது முன் அறையின் இடப்பக்கச் சுவற்றில் தாஜின் உம்மா ஆயிஷா பேகம் முக்காடுடன் சாய்ந்துக் கிடந்தாள். அவளது வெற்றிலைக் கல் விருதாகக் கிடந்தது. அவளைக் கண்டதும் வந்த ஆத்திரத்தில் வெற்றிலைக் கல் மீது ஓங்கி எத்தினார் உதுமான். உரல் நகர்ந்தது. கல் எகிறி பேகத்தின் கழுத்தைத் தாக்கியது. பேகம் சாடிக் கூட்டிக் கொண்டு எழுந்தாள். அவர் அவ்வறையின் கதவைச் சாத்தினார்.

தாஜின் நம்பிக்கை நாட்களில் ஒன்று அன்று சிதைந்தது. அன்று தாஜ் படுக்கைக்குப் போகுமுன் மீதமாகும் பழைய வெள்ளைத் தாள்களைக் கொண்டுதானே உருவாக்கிய நோட்டுப் புத்த்கத்தின் இரண்டாவது தாளில் எழுத உட்கார்ந்து வெகுநேரம் யோசித்தாள்.

தனது அறிவுக்கூர்மை கொண்டு நிறைய சிந்தித்தவள் வார்த்தைகளுக்குள் சிக்கிக் கொள்ள எழுத்து நழுவிக் கொண்டு போனது. முடிவில் தாளின்  மத்தியில் இவ்வாறு எழுதினாள்.

“அல்லாஹ்”

தொடர்ந்து எழுத நினைத்தவள் முடியாமல் போனாலும்கூட பிரபஞ்ச வெளியில் தனக்கு சௌகரியமான பிடிமானம் ஒன்றினைத் தான்  தொட்டுவிட நெருங்குவதாக பாவிக்க கண்ணீர் பெருகி வந்தது.

தாளில் விழாதவாறு விரல் கொண்டு அதனைத் தடுத்தாள். நக இடுக்கில் இறங்கி ஒழுகி மருதாணியின் புன்னகைப் புள்ளிகளின் நிறத்தில் மறைந்து கொண்டது அக்கண்ணீர்.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)