தொடர்கள்

கனா மீது வருபவன் - 24

அய்யப்பன் மகாராஜன்

கேட்பாரும் இல்லை கேட்பதுவும் இல்லை என்கிற ரீதியில் சீரற்றதொரு நிலையில் இயங்கத் துவங்கியிருந்தான் ரவி. அவனிடம் அடிவாங்கிய சிறுவன் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு நாலுமுக்கு சந்திப்பில் ரவியிடம் நியாயம் கோரி வந்தான். ரவி மிட்டாய்க் கடைக்காரரின் பேக்கரி அடுப்பிற்கு விறகுக்காக இறக்கப்பட்ட புளியந்தடிகளுக்கிடையில் கிடந்த விளாறுகளால் வீக்கி எடுத்துவிட்டான். வீக்கமும் வலியுமாக  ரவியின் வயதையொத்தவர்களும் சற்று சிறியவர்கள் சிலருமாக அடுத்து என்ன செய்வது எனத் தங்களுக்குள் பலவிதமாகக் கலந்து அவ்வப்போது ஆலோசனைகளை நடத்தி வந்தார்கள். ரவி அடித்த அடிகளில் மண்டையில் வாங்கியவர்களுக்குக் முன்மண்டை பின்மண்டை என ஒருமண்டை கூடுதலாக முளைத்து விட்டிருந்ததும் இதற்கு மிகமுக்கிய காரணம். திட்டங்களில் மேலதிகமாக வேட்டு வைப்பது பற்றிய சிந்தைகளே ஓங்கியிருந்தன. கூட்டத்தில் ஒழுக்குக் குணம் கொண்ட சிலரும் பங்கு பெற்றிருந்தார்கள். அவர்களில் சிலர் அவ்வப்போது தகவல்களை ரவியிடத்திலும் ஒழுக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அனைத்தும் தெரிந்துகொண்டும் எள்ளளவு கூட ரவி அசரவில்லை. அவனுக்கு அச்சம் பற்றிய அறிதலே இல்லாமல் போயிருந்தது. அவனது கவனம் முழுக்க தன்னை ஒரு திரைப்படக் கதாநாயகனாக உருமாற்றிக் கொள்வதிலே தான் இப்போதுக் கூடிக் குவிந்திருந்தது. அதன் காரணம் யாருக்கும் தெரியவுமில்லை. கால் கரண்டைக்கு மேலேயே நின்றுவிடும் பேண்ட் ஒன்று காந்தாரியம்மன் தெருவின் கொடியில் காய்வதற்காகப் பறந்தது இவன் கையில் சிக்கிக் கொண்டது. அதனுள்ளே சட்டையை இன் செய்து கொண்டு ‘’சன்கூல்’’ பவுடரின் உபயத்துடன் மாலை வேளைகளில் தெருமுனையில் வாசனையடித்துக் கொண்டிருந்தான். போதாதக் குறைக்கு ஒரு கூலிங்க்ளாஸ் கருத்தக் கண்ணாடி வேறு. பார்த்தவர்கள் சட்டென்று சிரித்தபோதும் ‘ஆளு ஜம்முனு இருக்கியடே..கோளடிச்சிச்சோ..” என்றார்கள். மேலும் சிலர், “இது எங்கக் கொண்டு போய் விடப்போவுதோ..” என்று கூறி சலித்தும் கொண்டார்கள். ரவிக்கு இந்தக் கருத்துகளுக்கெல்லாம் பதில் சொல்ல பெரிய ஈடுபாடு தோன்றவில்லை.

கூட்டத்தில் முதலில் அடி வாங்கிய சிறுவனுக்காக பலர் வக்காலத்து வாங்கினார்கள். அவர்களின் முறையீடுகள் மிகவும் வலிமையாக இருந்தன. “அடிச்சி வீத்தணும்லே..” “கையத் தரிச்சிரணும்.....” “கொட்டைய வீக்கிரணும்லே..” என்று அடுக்கிக் கொண்டே போனார்கள். ஆனால் இவை வாயளவிற்கு வந்ததே தவிர செயலளவிற்குக் கூடவில்லை. ரவியை யார் அடிப்பது? எனவே பேச்சு மட்டுமே சுற்றிச் சுற்றி வந்தது. வேறு வழியில்லாமல் முதலில் அடிவாங்கியவனே கடைசியில் ஒரு முடிவெடுத்தான். அவனது அந்த முடிவிற்கு அனைவரும் கட்டுப்பட்டார்கள். ஒத்துழைக்கவும் சம்மதித்தார்கள். அதன்படி அவர்கள் தங்கள் நெற்றிகளில் பட்டையடித்துக் கொண்டார்கள். சிலர் மேளக்காரர்களாகத் தங்களை எண்ணிக் கொண்டு சத்தமிட ஒன்றிரண்டு பேர் தங்களை தோத்தாதிரியாக பாவித்துக் கொண்டார்கள்.

“டண்ட ணக்குண்ண...... டணக்கு ணக்குண்ண......., டண்ட ணக்குண்ண....... டணக்கு ணக்குண்ண” என்பத்து போல மேளச் சத்தங்கங்களை வாயால் வெளிப்படுத்திக் கொள்ள முதலில் அடிவாங்கிய சிறுவன் அனைவரிடமும் கைநீட்டினான். ஆளாளுக்கு ஒருபைசா, இரண்டுபைசா, மூன்றுபைசா, ஐந்துபைசா என இருந்ததைப் போட்டார்கள். அவன் சேகரித்ததைக் கொண்டு அரசமூட்டு முட்டைக்கடையிலிருந்து நாட்டுக்கோழி முட்டை ஒன்றையும் நாடார் கடையில் பேயம்பழம் இரண்டையும் மஞ்சள் கில்ட்தான் பத்திக்கூடு ஒன்றையும் வாங்கிக் கொண்டு வந்தான்.

அனைவரும் சுடலைக் கோயிலின் மதிலில் ஏறி உள்ளேக் குதித்தார்கள். தரையில் மண்ணைக் குவித்து வைத்து முதலில் அடிவாங்கியவன் மண்மீது முட்டையை வைத்தான். அடுத்து அதன் முன்னே வைத்த பழங்களின் மீது  கொளுத்திய ஊதுபத்தியினைக் குத்தி வைத்தான். சுடலையின் முகத்திலிருந்து மஞ்சனை வழித்து வரப்பட்டு முட்டையின் முகத்தில் சாத்தப்பட்டது. சிலருக்கு உண்மையாகவே உடல் கிடுகிடுத்தது. அடிவாங்கியவனின் கழுத்தில் சுடலை பீடத்தில் கிடந்த மாலை எடுத்துப் போடப்பட அவன் சாமி வந்து தங்கையாவைப்போல “ஓவ்..... ஓவ்” என்று கத்தினான். மற்றவர்கள் ரவியின் தொல்லைகளைப் பற்றி சாமியிடம் முறையிட்டார்கள். சாமி ஆடிமுடித்து விட்டு அவனைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினான்.  பிறகு பலி கொடுப்பதற்காக முட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பினான். வாத்தியக்காரர்களும், பக்தர்களும் சாமியைப் பின்தொடர்ந்து கோவில் சுவரேறி வெளியேக் குதித்தார்கள்.

பாப்பத்தைக் களத்திற்குள் நுழைந்த அவர்கள் வளர்ந்து கிடந்த செடிகொடிகளைத் தள்ளிவிட்டுக் கொண்டு செல்ல, தூரத்தில் எண்ணெய் செக்குக் கிடந்தது தெரிந்தது. அதைச் சுற்றிலும் கிடந்தப் பெரிய குழியினைக் கண்டதும் ஒருவன் “குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம்” என்றான்.  செக்கினை நெருங்க முடியாமல் வேலி தடுத்ததால் சாமியாடி மட்டும் சற்று முன்னே சென்று முட்டையை எடுத்து “ஓ...வ்” என்ற பெருஞ்சத்தத்துடன் செக்கினை நோக்கி எறிந்தான். முட்டை உடைந்து சிதறி வழிந்தது. “நரசப்பன் செத்தான்...’ என்றான் ஒருவன்.

திரும்பி வரும் வழியில் குதூகலமாக அனைவரும் “டண்ட ணக்குண்ண...... டணக்கு ணக்குண்ண...., டண்ட ணக்குண்ண டணக்கு ணக்குண்ண...“ என்று மீண்டும் சத்தமிட்டபடியே வர எதிரில் வந்த ஊர் முக்கியஸ்தரான தலைமையாசிரியர் ரத்தக் கொதிப்பு எகிற நின்றார். அவரைக் கண்டதும் அவர்கள் தெரித்து ஓட முயல அவர் சாமியாடியை மட்டும் எட்டிப் பிடித்துக் கொண்டார்.

“சாமியா ஆடுதே...? பூட்டிக் கெடக்க கோயிலுக்குள்ள மதிலெட்டிச் சாடுனதும் இல்லாம சொடலக்கெ  ஆரத்தையும் மஞ்ஞணையையும் எடுத்துப் போட்டுக்கிடுவியா...? இரி, இப்பம் ஒங்கொழுப்ப அடக்க ஒங்கொப்பங் கொம்மைக்கு சாமி வரவக்கிதேன்..’’ என்று கேட்டு காதைப் பிடித்து விடாதுத் திருக ஆரம்பித்தார். அவனுக்கு வலி சுண்டியிழுத்தது. மற்றவர்கள் உடனே ஓடிப்போய் நின்று கொண்டு  “டண்ட ணக்குண்ண..... டணக்கு ணக்குண்ண..., டண்ட ணக்குண்ண..... டணக்கு ணக்குண்ண....” என்றார்கள். அவருக்குக் கோபம் பிய்த்துக் கொண்டு வந்தது. “மடக்”கென்று  சாமியாடியின் மண்டையில் தொடர்ச்சியாகக் குட்டினார். “கரிகாரரு மட்டும் சாமியாடுதாருல்லா..நாங்க ஆடுனா என்னவாம் ? என்றான் அவன்.

அவருக்கு ஒருமாதிரி ஆத்திரமும் வெறுப்பாகவும் வந்தது. காதைப்பிடித்து மேலும் திருக அவன் “ஆ...” வென்று கதறினான். மற்றவர்கள்  “டண்ட ணக்குண்ண” என்று மேலும் சத்தமிட, “கெட்ட வார்த்தயால சொல்லுதியோ.. இன்னைக்கி இதுக்கொரு முடிவுக் கெட்டுதேன்...” என்று  காதைத் திருகியபடியே தன்னுடன் அவனை இழுத்துச் சென்றார்.

ஒளிந்து விளையாடியது வீதிக்கு வந்தது. பட்டை மாலை மஞ்சணையுடன் காது வலிக்க தலையைச் சரித்தபடியே “சார்..சார்..இனிமே  வெளயாட மாட்டேன் சார்..கோயிலுக்குள்ள வரமாட்டேன் சார்...விட்டுருங்க சார்..வலிக்கிசார்....” என்று கெஞ்சியபடியே ராவிக்கொண்டு சென்றான் அவன். ஊரார் வேடிக்கைப் பார்த்தனர். விவரம் புரியாத சிறுவர்கள், “நாம இவர எங்கலேக் கெட்டவார்த்த சொன்னோம்..?” என்றுக் கேட்க வயதில் மூத்தவன் ஒருவன் காதில் கிசுகிசுத்தான். உடனே அவர்கள் மீண்டும் பெருஞ்சத்தத்துடன் ‘’டண்ட ணக்குண்ண.., டண்ட ணக்குண்ண” என்று சத்தமிட்டார்கள். தலைமையாசிரியர் ஆத்திரத்தை மாட்டியவனின் தலையில் காட்டினார். வீங்கிய பின்மண்டை மேலும் தரித்தது. “ரவிக்கு அய்யா புடிச்சின்னு நெனச்சோம் இப்ப இவனுக்குல்லா அய்யா புடிச்சிட்டு..” என்று அவர்கள் கவலைப்பட்டார்கள்.

ரவி மிகவும் ஸ்டைலாக மாறி விட்டிருந்தான். மாலை நேரங்களில் திண்ணைகளை அபகரித்துக் கொண்டு தன்னுடன் ஒத்துவருவோர்களை வலியப் பிடித்து அமர்த்தி வைத்தான்.. சிலபேர் அவனைக் கண்டதும் தூரத்திலிருந்தே அவன் இருப்பிடத்தை ஓடிக்கடந்தார்கள். சிலரை அவன் பிடித்து வைத்துக் கொண்டான். அதில் நன்றாகப் படிக்குமொருவனுக்கு இரண்டுபக்கமும் “நிப்பு’ வைத்தப் பேனாவை பரிசளித்தான்.

“ஒரு லெட்டரு எழுதித் தருவியாலே?”

“என்ன லெட்டரு?”

“நாஞ் சொல்லத எழுதணும்”

“செரி..அப்ப இங்க் பாட்டில் ஒண்ணும் வாங்கித் தருவியா?”

“செரி” என்றான் ரவி.

எழுதியக் கடிதத்தினை வேறு சிலரிடமும் படிக்கக் குடுத்து சோதித்துப் பார்த்து உறுதியும் செய்து கொண்டான். “வெனை யாரை இழுக்குது?” என்று அறிந்து கொள்ள அவர்கள் துடியாய் தவித்தார்கள். கடிதத்தின் மேலே பெயரிடப்படாத இடத்தில் மட்டும் தானே உருட்டி உருட்டி தாஜ் என்ற பெயரினை ரவி எழுதினான். உலகத்திலேயே அற்புதமான ஒரு பொருளைத் தான் வைத்துக் கொண்டிருப்பதாகக் கருதி அதனை மடக்கி வைத்துக் கொண்ட தனது சட்டைப் பாக்கெட்டினை அடிக்கடித் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டான். தனியாக தாஜ் வரும் அம்முகூர்த்த வேலைக்கான வாய்ப்பினை எதிர்பார்த்து விதவிதமான நடைகளை நடந்து பார்த்தவாறே தெருவும் திண்ணையுமாக இருந்தான் ரவி

.

முதன்முதலாக சட்டையை இன் பண்ணி கண்ணாடி மாட்டிக் கொண்டதை வரலாற்றுத் தரவாக பதிவு செய்து கொள்ளும் பொருட்டு ‘’ஸ்டார் ஸ்டூடியோ’’விற்கு சென்று பலவிதமான போஸில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டான்.

“ஏம்லே திடிருன்னு..? ஒன்னைய போலிஸ்காரந்தானே போட்டோ எடுப்பான்? நீயே எதுக்கு எடுக்கே..?”

“வெளையாடாதண்ணே..சினிமால நடிக்கப்போறம்லா?”

“என்னலே சொல்லுதே..? நீ நடிக்கப்போறியா..?”

“பின்னே? என்னைய என்ன நெனச்சே? என்னைய விட்டுப்பாரு..தரைலல்லாம் விழுந்து.... மண்ணுல உருண்டு சூப்பரா நடிப்பம்ணே..நெனச்ச நேரத்துல நல்லா அழுவேன் தெரியுமா..?”

ஸ்டூடியோக்காரனுக்கு அழுகை வந்தது. தெருக்களில் போடுவதற்காக 16mm படங்களை ஒப்பந்தம் செய்வதற்காக அடிக்கடி ஏவிஎம் ஸ்டூடியோ வரும்போது வாய்ப்பிற்காக வாசலில் நின்றுக் கெஞ்சும் உருவங்களை நினைத்துப் பார்த்தான்.

“ஒனக்கு சினிமாவப் பத்தி முன்னப் பின்ன ஏதும் தெரியுமாலே.?”

“அதுலாம் நடிச்சித் தெரிஞ்சிக்கிடலாம். ஒருபடம் ஓடிச்சின்னு வையி..பொறவு லெச்சம் லெச்சமா சம்பாதிச்சிரலாம் கேட்டியா..” என்றான்.

“வெளங்குன மாதிரி தான். சவம் விதி யார விட்டுது..?” என்று கடைக்காரன் படம் எடுத்துக் கொடுத்தான். இரண்டு நாட்கள் காலம் முடிந்து படம் வாங்க வந்தவன் தன புகைப்படங்களைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிவிட்டான்.

“என்னத்த இது?

‘’ஒம்போட்டோ’’

‘’ஏம்மூஞ்சி இப்பிடியா இருக்கும்..?’’

‘’வேற எப்பிடி இருக்கும்?’’

‘’ரெஜினி மாதிரி இருக்கும் தெரியுமா?. நாந்தான் கண்ணாடில பாக்கம்லா...! நா காமிக்கு நடிகர்னு நெனச்சிட்டியா? ஓங்கேமரால ஏதோ மிஸ்டேக்கு... என்னைய ரெஜினி மாதிரி எடுத்துத்தா... ஒன்னைய மாதிரி கோணமூஞ்சியா எடுத்துத் தராதே,கேட்டியா......வேற எடு” என்று கூறிவிட்டான். கடைக்காரன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவன் சமாதானம் அடையவில்லை.

“எவன் எவன் தலையிலலாமோ இடி விழுது..... ஒரு தடவ இவன் தலையில விழாதா?“ என்று ஸ்டூடியோக்காரன் புலம்பும் அளவுக்கு அழ வைத்துவிட்டான் ரவி. வெறுப்பில் ஸ்டூடியோக்காரன் போட்டுக் கொடுத்ததில் விறகுக்கடைகாரர் ஓடி வந்து ரவியைப் பிடித்துக் கொண்டார். அவர் தன் கண்வலிக்காக போட்டுக் கொண்டு மேஜை மீது வைத்திருந்த கறுப்புக் கண்ணாடியைத் தான் ரவி அடித்துக் கொண்டு வந்திருந்தான்.

“போலீஸ்ல புடிச்சுக் குடுத்துருவம்ல..”

“யான் ஒய்? யான்? கருப்புக் கலருல கண்ணாடி இருந்தா அது எல்லாமே ஒமக்குள்ளது தானா? இது நா வேங்குனது!”

“ஓ......? கண்ணாடிக்க காது ஓரத்துல மஞ்சயத் தடவி கலர மாத்தி வச்சிருக்கேன் பாருல..”

ரவி மாட்டிக் கொண்டு விட்டதாக ஸ்டூடியோக்காரன் எண்ணினான். ஆனால் “கொஞ்சம் வாங்கண்ணாச்சி...” என்று ரவி விறகுக்கடைக்காரரை தனியே அழைத்துச் சென்று, “தரலேனா என்ன செய்வீரு?” என்று கேட்டான்.

“போலீஸ்காரன் இடி தெரியும்லா? வாங்கிருக்கேல்லா..இனியும் வேணுமா?” என்று கேட்டார் அவர். உடனே ரவி, “அங்கப் பாரும்..எம்ஜியார் கட்சி கொடிக்கம்பு நிக்கிதா ? அதப் புடுங்கிட்டு வந்து ஒம்ம கசண்டி மண்டைல தான் நான் நட்டு வைப்பேன். நீரு தான் தூக்கிக்கிட்டுத் திருவீரு பாக்கேரா..?” என்று கேட்டான்.

விறகு கடைக்காரர் ஸ்டூடியோக்காரன் எவ்வளவோ அழைத்தும் நிற்காமல் விறுவிறுவென்று போய்விட்டார்.

ரவி தன்னைப் பின் தொடருவதை தாஜ் ஊகித்து அறிந்து கொண்டான். பள்ளிவிட்டு வரும்போது ஒருநாள் அவளது கூடையில் போட்டுவிட்டு “படிச்சிப் பாத்துட்டு பதில் சொல்லு... ஐ லவ் யூ” என்று கூறியபடியே ரஜினி போல வேகமாக நடந்து சென்றான் ரவி. போகும்போது அவனது பின்புறம் ரஜினி போலல்லாமல் வேறுவிதமாக ஆடியது.

அன்று இரவில் பதட்டத்திற்கு நடுவில் யாருக்கும் தெரியாமல் தாஜ் கடிதத்தினைப் பிரித்துப் பார்த்தாள். முதல் தடவை அவளுக்கு எதுவும் புரியாமல் இருந்தது. இரண்டாவது தடவைப் படித்துப் புரிந்த போது அவளுக்குக் கடும் அதிர்ச்சியாக இருந்தது.

(கனா தொடரும்)