தொடர்கள்

கனா மீது வருபவன் - 3

அய்யப்பன் மகாராஜன்

அப்பு தனது இடக்கையினை ஆட்டியபடியே வேகமாக ராசாவை நெருங்கினான். ராசா ஒரு துணுக்கிற்குக் கூட அஞ்சாது, இழவு வீட்டில் பொரிகடலை தின்றபடியிருக்கும் துயரம் படாத மனோபாவியாக அவனை வரவேற்றான். கூட்டமும் மெதுவாக நகர்ந்து அவர்களை அண்டியது.

‘’லே...வெப்புராளத்த ஏத்தாத.. என்னைப் பத்தி தெரியும்லலே.....?’’.

 அப்புக் கேட்க, ராசா இல்லையென்று தலையாட்டினான். –

 “நீ கோசலயக்கா மவந்தானே? ஒரே தெருவுல இருக்கோம்.. இருந்துமே  என்னயப்பத்தி தெரிலையாலே ஒனக்கு ? படங்காட்டாதலே மரியாதையா சொல்லு” என்று ராசாவை மிரட்டவும்,” யாரு படங்காட்டுதா? மொதல்ல நீ கதைய ஒழுங்கா சொல்லுலே...அது நடுக்காட்டு நீலி கெடையாது... நடுகாட்டு எசக்கி. அது தெரியுமா ஒனக்கு?”

 என்று ராசா சொல்ல, எரிச்சலடைந்த அப்பு மற்றவர்கள் முன் தனது அறியாமையை கிளறி விடுகிற அவனை சமாளிக்க விரும்பி,

“நீலியுங்காளியும் எல்லாம் ஒண்ணு தாமுலே இது தெரியாதா ஒனக்கு?”.

 ‘’எனக்குத் தெரிஞ்சனாலதான் சொல்லுதேன்..’’

 “ஒனக்கு ரெம்பத் தெரியுமோ ?. இது எம்பாபாட்டா கதலே..அவரு நீலிக்கேக் கஞ்சி ஊத்தினவரு...இது மாதிரி ஆள யாரும் கண்டுகேட்டிருக்க முடியாது ன்னா..? ...உங்க வீட்டுல ஆராவது உண்டுமாலே?”என்று அவனைத் தாக்கும் நோக்கில் சற்று குமைப்பதுபோல் கேட்டுவிட ராசா சற்று வீரியமாகி பொங்கிவிட்டான்.

 “என்னலே ஒடக்கி பாக்குதே.....வண்டிக்காரன் உம்பாட்டா..ன்னா... வண்டிக்காரனுக்கு எமன் ஏம்பாட்டாலே...மனசிலாக்கிக்கோ.. தூரப்போயி எங்கயாவது ஓட்டு ஒங்கதைய...” என்று ராசா துணிச்சலாக கூறவும்,

 ‘’என்னலே சொன்னே..? ஒம்பாட்டா எம்பாட்டாவுக்கே எமனா...? அப்பிடியா? அவ்வளவு பெரிய சட்டம்பியா? அஹாங்? யாருடே அந்த ஊச்சாளி ? பேரச்சொல்லு பாப்போம்?”

 “தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்ய போறே?”

 ‘’ஆங்? ஓட்டுசீட்டுக்கு பேரு சேக்கப் போறேன்! சொல்லாம்லே பாப்போம்.. வெகு ஏற்றமாக ராசாவின் சட்டையைப் பற்றப்போன அப்புவை ராசாவின் பதில் ஸ்தம்பிக்க வைத்தது.

 ‘’உதிரமாடன்.!

 ‘’ஆங்?’’

 சொடலமாடங் கோயிலுக்கு அடுத்தாப்புல மஞ்ஞண சாத்திக்கிட்டு ராக்கெட்டு மாதிரி நிப்பாரே...அந்த ஊச்சாளிதாம்லே நீ கேட்ட எம்பாட்டா.... போதுமா.’’

 இதனைக் கேட்டு சற்று நாடிதளந்தும் தான் போனான் அப்பு.

 இருவருமே ஒரே தெருவாசிகள் தான். தெருவின் மையத்தில் முத்தாரம்மைக் குடிகொண்டு அமர்ந்திருக்கிறாள்.அவளின் பாதுகாவலுக்கு தெருவின் முகப்பு தாண்டி வளவில் கட்டப்பட்ட காம்பவுண்டினுள் சுடலைமாடனும் இன்னபிற சாமிகளுமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். இதில் பங்கு கொள்ளாத உதிரமாடன் எனப்படும் செக்கடிமாடன் தாய்க்கு தனிக்காவல். மட்டுமின்றி அவரின் துணைக்கும்கூட பேச்சி முதற்கொண்டு இரு தெய்வங்கள் துணைக்காவல் என தொண்டு புரிகிறார்கள்.

எல்லாம் சரிதான்... இந்தக் கதையில் இந்தப் பயல் எங்கிருந்து வந்தான்? வகுப்பில் இந்த ராசாவை அடக்கிவைத்தால் தெருவில் நம்மைக்கண்டால் பம்முவான். வகுப்பறையில் மற்றவர்களும் பார்த்து பதமாக நடந்துகொள்வார்கள். அது நமது பவுசுக்கு நல்ல பலனளிக்கும் என்ற அப்புவின் எண்ணத்தில் உமிக்கரிக் கொட்டியது. கடைசியாக ராசாவின் முகத்தில் உண்டான எக்காளத்தில் துளியளவைக் கூட அப்புவினால் துரத்த முடியவில்லை.

‘’என்னா தெர்லயா? தெர்லேன்னா ஒங்க வீட்டுல போயிக் கேளு...இல்லன்னா தெருவுலப் போயி விசாரி...இல்ல கொட்டுமேளங்கூட்டி யார்மேலையாவது ஒங்க பாட்டாவ வரவச்சி கேளு அப்பத்தெரியும்......அதவுட்டுட்டு சும்மப் பறக்காதே ...’’

அப்புவின் கண்களுக்குள் நிழல்போல் விழுந்த பயத்தை நிரந்தரமாக்கிவிட்டு ராசா அங்கிருந்து அகன்றான். இந்த நிலையில் அப்புவைக் கண்ட மற்ற மாணவர்களின் நெஞ்சம் பூரிக்க வாயெல்லாம் பற்கள் விரிய, ‘’என்னத்தலே காட்டுதேன்.....சிரிக்கியோ?’’ அப்புவின் கீச்சு இரைச்சலில் அவர்கள் வாய் மூடிக்கொண்டுவிட்டார்கள். ஆனாலோ, வேலப்பனின் இயல்பான மறைக்க இயலாத சிரித்த முகத்தைக் கண்ட அப்பு அவன் பரிகசிக்கிறான் போல எனத் தவறாகப் புரிந்து கொண்டு விட, உடனே தனது இடக்கையால் ஓங்கி அவனை அறைந்தான். வேலப்பனின் உருண்ட வெள்ளைநாசி மேலேறி அரணை நிறத்தில் நசுங்கியது. அனைவரும் மிரண்டு போய் விட மாத்து வாங்கிய வேலப்பன் இடிந்து விட்டான். மாரியாத்தாளைத் திட்டியபடி அப்புவின் முகத்தைப் பார்த்த அவன் முதல்தடவையாக அதனை முற்றிலுமாக வெறுக்க விரும்பினான். ஒரு சிட்டுக் குருவியைப் போல வாயைக் குவித்துக் கொண்டு மூச்சுவிடவேத் திணறிய அவன் “என்ன ஏம்லே அடிச்சே?” என்று கலங்கியபடி குழறியக் கேள்விக்கு ”ஏங்கிட்ட எதுத்துப் பேசுனா ராசாவுக்கும் இதுதான்  கெடைக்குமுன்னு அந்தப் பயக்கிட்ட சொல்லிவையி. கத இதோட முடியலலே.... இன்னும் இருக்கு..பாத்துக்கோ..” என்று கூறிவிட்டு புறத்தேப் போனான்.

பொறுத்துக்கொள்ள இயலாயாத வலியினால் வேலப்பன் யாரிடம் அபயக்குரல் எழுப்பி நியாயம் கேட்பது  எனத்தெரியாது,

“பெலம் இருந்தா ராசாக்கிட்ட மோதவேண்டீது தானே. எங்கிட்ட ஏம் மோதுகான்... செத்தப் பய....” என்று அவன் போய்விட்ட தைரியத்தில் புலம்ப ,

அப்படியே ஒட்டுக்கேட்டது போல் போன வேகத்தில் திரும்பி வந்தான் அப்பு.

‘’எனக்கொண்ணும் பயங்கெடையாதுலே...ராசாவயும் சும்ம விட்ருவேன்னு நெனச்சியோ ? மாட்டேன்......இனிமே இருக்குப் பாரு. சோலியப் பெருக்குதேன் அவன ..”

என்று கோபமாகக் கூறவும், எஸ்.எல்.பி.யின் கோபுரமணி மதிய இடைவேளைக்காக பலமாக உழைத்துவிட்டு ஓய்ந்தது. காத்திருந்த  மாணவர்கள் முட்டிக்கொண்டு ஓடினார்கள். புதிய வகுப்பின் முதல் நாளென்பதால்  அவர்கள் மதிய உணவிற்கென்று எதுவும் கொண்டுவராமல் அனைவருமே வீட்டிற்குப் போய்வர நினைத்திருந்தார்கள். அப்புப் படிக்கிற ஆறாம் வகுப்பு ‘’பி’’ பிரிவில் இடைவேளைக்கு முந்தைய வகுப்புநேரத்தின் கணக்கு மற்றும் வரலாற்றுக்கான ஆசிரியர் ஜோசப் வராத உபயம் இப்போதைக்கு இரண்டு தலைகளை உருவாக்கியிருக்கிறது. இதன் விளைவாக வேலப்பன் இப்படி நினைத்தான்.’’ அஞ்சாப்பு வரைக்கும் மண்டிக்கண்ணன் பய என்னக் கொல்லக் கொண்டுபோனான் . பேதீலபோவான் அவங்கிட்டேருந்து தப்புனது புண்ணியம்னு நெனச்சு இங்கவந்தா, இங்க ஒரு கொள்ளைல போவாங்கிட்டெல்ல மாட்டிக்கிட்டோம்... நமக்குன்னு வந்து வாய்க்கானுவோ பாரு..எழவேடுத்துப் போவதுக்கு சே !.’’.

நினைக்கநினைக்கப் பெருகிவந்த வன்மத்தின் சூட்டினைச் சுமந்துக்கொண்டு, பள்ளிக்கூடத்தின் செந்நிற மைதானங்கள் ஒவ்வொன்றையாக காலால் அளைந்தபடி போய்க் கொண்டிருந்தான் அப்பு. எதிர்ப்புறத்தில் ஜெயக்குமாரி ஸ்டோர் இறக்கத்திற்கு அவன் வந்து சேரவும், காத்துக்கிடந்த டாமி ஓடிவந்து அவனது கால்களை மூக்கால் உரசிமோதி தவிப்பை வெளிப்படுத்தியது. கோபமிகுதியால் அவன் நாயினை விரட்டியடித்தான். ஒப்புக்குச்சப்பாக ஓடுவது போல் போக்குக் காட்டிய டாமி மீண்டும் வந்து நின்றுகொண்டு வாலை ஆட்டியது. அதன் திரும்புதலை உணர்ந்துகொள்ள விரும்பாத அப்பு இறக்கத்தில் இறங்கிச் சென்றுகொண்டேயிருக்க, அவன் கோபத்தினைக் கண்டுகொள்ள விரும்பாத டாமி அவனை விட்டு விலகுவதும் அவனை நெருங்கிவந்து மோதுவதுமாக சுற்றிச்சுற்றி வந்தது. ஒருசமயம் அதனால் கடும் வெறுப்படைந்த அப்பு குனிந்து ஒரு கூர்ந்தக் கருங்கல்லைக் கையில் எடுத்தான். அதனை கவனித்த டாமி கழுத்தை உள்ளிழுத்துக் கொண்டு முன்னங்கால்களை நீட்டி அசையாமல் ‘’எறிஞ்சுக்கோ’’ என்று கல்லெறியை ஏற்றுக்கொள்வது போல நின்று கொடுத்தது. அவன் கல்லினைத் தூர எறிந்தான். டாமி துள்ளியபடி அவன் கால்களை மோதி விளையாடிக் குதித்தது. வரப்போகும் வகுப்புகளில் தான் இனி ந டந்து கொள்ள வேண்டிய விதங்கள் பற்றிய பட்டியலினை மனதிற்குள் கொண்டுவர முயற்சித்தவாறு அப்பு நடந்தான்.

‘’எங்க போயிரப்போறான்....ஒரே தெருவுதானே...தெருவ விட்டாப் பள்ளிக்கூடத்துக்கு வரணும்.. பள்ளிக்கூடம் விட்டா தெருவுக்கும் வந்து தானே ஆவணும். இவன செரி பண்ணி வக்கலேன்னா தோத்துக்கெடக்குற பயதானேனு எளக்காரம் வந்துரும்....பொறவு நம்மள மதிக்கமாட்டானுவோ..பாத்துக்கிடுதேன்...’’என்று நினைத்த அப்பு தான் எவ்வளவு படித்தும் மண்டைக்குள் படிப்பு ஏறாமல் ஆறாம் வகுப்பில் தோற்று விட்டதற்காக முதன் முறையாக வருத்தமடைந்தான். கவலை பாரமாக நெஞ்சை அடைத்ததில் மூச்சு வாங்கியது. இதுபோல் மூச்சு வாங்கும் தருணங்களில் கைகால்களுக்குள் உளைச்சல் உண்டாவதையும்  அவை தளர்ச்சியடைவதையும்  இப்போதும் உணர்ந்தான். தெருவிற்குள் நுழைந்ததும் டாமி அவனுக்கு முன்பாக வீட்டை நோக்கி வேகமாய் ஓடியது. தெருவின் முடிவில் அடைத்தபடி குடியிருக்கும் அம்மனை அவன் எதிர்கொள்ள நேரவும், பார்வை வழியே அறிமுகமற்றதொரு உஷ்ணம் ஏறுவதை அப்புவின் உடல் உணர்ந்தது.

அப்பு இடதுபுறம் திரும்பி சுடலைக் குடியிருக்கும் வளாகச் சுவற்றினை நோக்கினான். உட்புறம் வைராக்கியமாக நின்று கொண்டிருக்கும் சுடலை நினைவுக்கு வந்தார். அடுத்த வளாகத்தில் நிற்பது தான் செக்கடிமாடன்!.   ‘’ராசா சொன்ன மாதிரி ஒருவேள அவன் தாத்தாதான் செக்கடிமாடனா நிக்காரோ? நமக்குத்தான் தெரியாமப் போச்சோ ? இல்ல அப்படியிருக்கவே செய்யாது.. ராசாவுக்க தாத்தாவாவது சாமியாவது!. செரி அப்படின்னா அவன் அத சொல்லும்போது நா ஏன் பயந்தேன்? நாமளும் இந்தத் தெருவுல தானே குடியிருக்கோம்? ஆனாக் கோயில்ல சாமிக்கி கொடைகுடுக்கும்போது ராசாவ கூப்பிடுத மாதிரி நம்மளையும் ஏன் கூப்பிடதில்ல?  அவங்க வீட்டுக்கு கூட்டங்கூட்டமா கோயில் விசேசத்த சொல்லப் போவும்போது நம்ம வீட்டமட்டும் விட்டுட்டுப் போறாங்களே ஏன்? நம்மஅப்பா, நம்மஅம்மா, நம்ம அண்ணன்மார்கள ஏன் யாருமே கண்டுக்கறதே இல்ல?

கொட்டுவாத்தியச் சத்தத்தோட கார்த்திகை மாசத்துச் சிறப்பு நடக்கும் நாளாவட்டும், இல்லேனாப் பொங்கலன்னக்கி சாயந்திரமா கோவில்லயும் பொங்கல விட்டு சாமியக் கும்பிடுத நேரமாவட்டும், அதுவும் இல்லேனா   கும்பாபிஷேகம் வாறகாலத்துல   ஒடம்பு மேல லைட்டு வெளிச்சம் தெறிக்கதுக்கு நடுவுல ஓடிப்பிடிச்சி வெளையாடும்போதோ, இல்ல வில்லுப்பாட்டு கச்சேரி எல்லாம்  நடக்கும்போதோ... இந்தத் தெருக்கார பயக்க அவுனுவோக் கூட்டத்துல நம்மளயும் சந்தோசமா கூடச் சேத்துக்கிட்டதே இல்லியே? ராசாவுக்க சொந்தக்காரங்க எல்லாருமா கோவில் காம்பவுண்டுக்குள்ள கூட்டமா  நிக்கும்போது நாமளும் போய் நின்னா வாய் பாக்கதுபோல  தனியாக நிக்கது மாதிரி தோணுதே... ஏன்?

அப்ப யாருதான் நம்மள மாதிரியாப் பட்டவங்கள  காம்பவுண்டுக்க வெளியே நிக்க சொல்லது ? இந்த சாமி எதுவுமே நம்ம சாமிங்க இல்லையா? நமக்குன்னு வேற தனியா சாமிகளே இல்லையா? அப்படி இல்லைனா நம்ம  வீட்டுல உள்ளவங்க மத்தநாள்ல வெளிய போவும்போதும் வரும்போதும் இந்த சாமிகள ஏன் கும்புடுதாவோ? நெனவு தெரிஞ்சதுலேருந்தே இதுநம்மசாமி இதுநம்மக்கோயிலுன்னு நம்மள யாரும் எங்கயும் கூட்டிக்கிட்டு போனதுங்கூட இல்லையே ! விட்டா நாராஜாகோவில், குமாரக்கோவில் எப்பவாவது கன்னியாரி..... போறவழியில சுசீந்தரம் இவ்ளோ தானே?  அதுவும் எல்லாருமேப் போறக் கோவிலுதானே? ஏன் நமக்குன்னு ஒரு சொந்த சாமி இல்லை?..

எங்கிருந்தோப் புறப்பட்டு ஒன்றுக்குப் பின் ஒன்றென ஒட்டிக்கொண்டு தொடந்த பெருங்கேள்விகளுக்கு நடுவே நடந்து வந்த அப்பு ராசாவின் வீட்டைத் தாண்டப் போகையில் அதன் முகப்பினைப் பார்த்தான். மிதமிஞ்சிய வெறுப்பு மண்டையை அழுத்தியது. சட்டென அவன் தனது பல்லிடுக்குகள் வழியாக வீட்டின் முன்புறம் ஓடிய மடையினைப்பார்த்துக் காறி எச்சில் துப்பி விட்டு நிமிர அதிர்ந்து போனான். எதிரில் சடம்பை மடையில் கொட்டியச் சுளவும் கையுமாக ராசாவின் அம்மா கோசலை அவனைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். மண்டை அழுத்தத்தின் கனம் தாங்காத கண்கள் இருட்டை உணர்த்த அவன் அங்கிருந்து வேகமாக அகன்றான்.  அதேசமயம் பெருஞ்சண்டைக்கு ஏதுவாக உருவாகி வந்த பகையினை  தக்க வைத்துக்கொள்ள மனமும்  உள்ளுக்குள் தீர்மானித்தது.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத் தொடர்இது.