தொடர்கள்

கனா மீது வருபவன் - 5

அய்யப்பன் மகாராஜன்

மகேசன் யாரிடமும் பேசுவதில்லை. யார் என்னக் கேட்டாலும் பதில் சொல்லுவதுமில்லை. அதில் அவனுக்கு விருப்பம் இருந்ததுவுமில்லை. விளையாட்டு ஆரம்பிப்பது வரையில் ஆர்வத்துடன் நின்று  காத்திருப்பது அவன் வேலை. ஆரம்பித்த சூட்டில் வெளியேறி விடுவான். திறந்து கிடக்கும் எந்த வீட்டின் மல்லாந்தத் தரைகள் அவனுக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு  அழைக்கிறதோ அந்த வீட்டின் முன்பாகப போய் நின்று கொள்வான். கவிழ்ந்துக் கிடக்கும் கப்பலிடம் ஒரு  நாதியற்ற அமைதி காணக்கிடைக்குமே அப்படியே ஒரு பரந்த மவுனம் வெகுநேரம் அவனிடத்தில் நிலவும்.

இதுபோன்ற சமயங்களில் பவ்யமும் மோனமும் கலந்து அவன் நடந்து வருவதும், பார்வையில் வீடுபட்டதும் பொறுப்புடன் அசையாது அவன் நிலைகொண்டிருப்பதும் பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். வீட்டில் ஆள் அசைவு ஏதேனும் இருப்பது தென்பட்டுவிட்டால் சலனமின்றி சமரசமின்றி  நகர்ந்து விடுவான். ஆள் அரவம் இல்லாவிட்டால் தான் வீடு அவனுக்குச் சொந்தமாகும். இமைமூடாத அவனது கண்கள் முதலில் தரை வழியாக நகர்ந்து மூலைகளைத் தேடிச் செல்லும். தின்பதற்கு ஏதுவானது என்று அவன் கருதும் எதாவது ஒரு பொருள் பார்வையில் பட்டுவிட்டால் அதன்பிறகு அந்தப்பொருள் அந்த வீட்டிற்கு சொந்தமானது இல்லை. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு அவனைக் கண்டுபிடிப்பதும் அத்தனைக்கு  சுலபமுமில்லை.

இது போன்று அவன் காணாமல் போகிற சமயங்களில் ஏதாவது ஒரு வீட்டில் கலாசாலையில் கற்றிராத சொற்களுடன் ஒரு பெண்குரல் அவனை சபித்துக் கொண்டிருப்பது என்பது வெகு இயல்பான விஷயமாகி விட்டது.

சீதையிடம் புகார் அளித்து விடவும் முடியாது. எடுத்துச் சொல்வதை கேட்டுப் பழக்கமில்லை அவளுக்கு. தன் பிள்ளையின் வயிற்றின் புடைப்பின் அழகைப் பார்த்து எலும்பும் தோலுமாக பெற்றுப்போட்டவர்கள் வயிறு எரிகிறார்கள் என்று சீறுவாள். சீற்றத்தின் முன்னேபின்னே வரும் வார்த்தைகளில் அந்தரங்கங்களுக்குப் பஞ்சம் இருக்காது. அதேசமயம் பயல்களுக்கு அவனது பலூன் வடிவத்திலாலான வயிறு ரசனை மிகுந்த ஒன்றாகவே இருந்து வந்ததை சொல்லித்தான் ஆகவேண்டும்.  ஆளாளுக்குத் தடவிச் செல்வார்கள். சில வன்முறைப் பிரியர்கள் மட்டும் தடவுவதுடன் கட்டை விரலால் அழுத்தவும் செய்வார்கள். ஆனால் மகேசன் அவற்றிற்கு எதிர் வினையாற்றுவதில்லை. குத்த ஆசைப்படுபவர்களின் முகங்களையே கூர்ந்து கவனிப்பான். அப்போது அவனது பார்வையை தவிர்க்க இயலுபவர்கள் எளிதான வன்முறையாளர்களாக இருக்கமாட்டார்கள்.  

இந்த மகேசனுக்கு பாப்பத்தையின் வீட்டின் மூலை முடுக்குகள் அனைத்துமே அத்துப்படி. முக்கியமாக இவனைக் கண்டால் தான் பாப்பத்தைக்கு சாமிவரும். வார்த்தைகள் குழறும். சீதையை நினைத்து மனம் சொல்லொனாதத் துயரம் அடையும். அவனைத் திட்டவும் முடியாமல் விரட்டவும் முடியாமல் வார்த்தைகளை வைத்துக்கொண்டுத் திண்டாடும். அவதிப்படும். அவனது பார்வையைக் கண்டு  அதனை எதிர்கொள்ளத் தடுமாறும். அவனது பலூனை உடைக்க பெரும் வெறிகொள்ளும். பிறகு இயலாமையால் அடங்கிப் போய்க் கொஞ்சுவது போல பொய்யாக அவனை இழுத்துப் பிடித்துக் கொண்டுத் தெருவில் கொண்டுவிட முயலும். ஆனால் அவன் அசரமாட்டான். அவன் பெருஞ்சாமி. போகமாட்டான். மற்றவர் இழுப்புப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாதவனாய் மகேசன் பாப்பத்தையைப் பார்த்து கள்ளங்கபடமில்லாமல் சிரிப்பான். பாப்பத்தையின் இயலாமல் போன வெறிச்சோடிய சேட்டைகளை ரசித்தபடி பாசம் மேலிடக் காண்பான். சீதையின் திருக்குரல் நினைவுக்குள் ஊர்ந்ததும் பாப்பத்தையின் சாமி இறங்கிப் போய்விடும்.

வீட்டின் முன்புறத்தில் அடக்கமாயிருந்தத் தண்ணீர்த் தொட்டியில் கைகளை விட்டு அலம்பினான் ராசா. கோசலை சத்தம் போட்டாள்.

‘‘டப்பாவ எடுத்துக் கோரிக் கழுவாம்லே.. கைய முக்காதேனு எத்தர தடவச் சொன்னாலும் மண்டையில ஏறுதா பாரு..?”

ராசா அவள் முன்னால் வந்து சம்மணமிட்டான். அவன் சோற்றுத் தட்டினை நீக்கினாள். சோற்றில் கலந்திருந்த ஆவி அடங்கிவிட்டிருந்தது. நெத்திலிக் குழம்பில் ஊறியிருந்த கிழங்கு குழைந்த பருவத்தில் கிண்ணத்தில் நெருங்கி வந்தது. கிழங்கின் முகடுகளில் தொத்திக் கொண்டிருந்த நெத்திலிகளை ராசா வெறித்துப் பார்த்தான். வழக்கமற்ற அவனது அமைதியை ரசிக்காத கோசலை,

“என்னலே..மொதநாளே சடஞ்சிட்டே..?” என்று கேட்டாள்.

“ஒண்ணும் இல்ல...” அசுவாரசியமாக அவன் பதில் சொன்னான்.

“பொறவு ஏன் சொத்துக்க முன்னுக்க தவம் இருக்கே? திங்கலாம்லே?”

பசிக்கு இரையாக்க பிடிக்காமல் ராசா சோற்றினைக் கிளறினான்.

“ஏலே...என்னா கோழிக்கிண்டது மாதிரி கிண்டுகே..? வாரித் தின்னுலே.. ஊமப் பள்ளிக்கூடத்துல சேத்து வுட்டுட்டனோ? ..வாப் பேசமாட்டேங்குதே...”

“போம்மா நீ...” என்றவன் முடிந்தவரையில் முயற்சி செய்தும் சோறு இறங்கவில்லை. கோசலை தட்டத்தினை தன்னருகே இழுத்தாள். கிழங்கினை சோற்றோடு பிசைந்து கவளத்தின் மீது வறுத்தரைத்த நெத்திலியின் குழம்பினை ஊற்றிக் கொடுத்தாள். வயிற்றின் பசி வாய் வரை வந்தது.

“பள்ளிக்கூடத்துல சண்டை வருதும்மா...” ராசா சொல்லக் கேட்டதும் கோசலைக்கு அதிர்ச்சி கண்டது.

“என்னலே சொல்லுதே?” பள்ளிக்கூடமே இப்பத் தானே தொறந்திருக்கு.. யாருக்குலே?”

“இந்த அப்பு இருக்காம்லா?”

“எந்த அப்பு?”

“செல்லாச்சி களத்துல இருக்காம்லா?”

“யாரு?  சட்டிப் பானைக்க மவனா?”

“ஆங்! அவன்தான்.”

“அவனா? அந்தப் பய ஒனக்கு ஒரு கிளாஸ் மூத்தவம்லா?”

“அவன் இப்ப எங்கக் கிளாஸ்ல தான் தோத்துக் கெடக்கான். சும்மயே இருக்க மாட்டேங்கான். வம்புக்கு இழுக்கான்..”

கோசலைக்கு முகம் முறுகியது. சோற்றைத் தின்ன வைத்தவாறு சிந்தித்தாள். “சனியனுவோ தெருவில தான் இப்படினா பள்ளிக்கூடத்துலயுமா..?. நாம  கஷ்டப்பட்டு நல்லபடியாப் புள்ளைய வளத்து பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வச்சம்னா..இந்த ரவுடிப்பயலுவளும் அங்க வந்து சேந்துட்டு உசுர வாங்குதுகளே...” அவள் பலவாறு யோசிக்க சிந்தனை நீண்டுகொண்டே போனது.

“லேய்...அவன் வம்புக்கு இழுத்தா இழுத்துட்டுப் போறான். என்னா? அதுக்காக நீயும் அவன் ஒத்தைக்கு நின்னு வெனைய இழுத்துட்டு வந்துராதே..அது ஒரு வெருவாக் கெட்ட மூதேவி.”

“நா இழுக்கலேங்கம்லா ! அவந்தாம்மா!”

கோசலைக்கு பயம் விரவிக் கொண்டு வர அவள் காட்டிக்கொள்ளாமல்,

“அதுவோ அப்படித் தாம்லே...அடங்காததுவோ..சட்டிப்பானைக்கிட்ட வாயக்குடுத்து மிஞ்ச முடியாது. பின்னே அவளப் போலத்தானே அவப் புள்ளயும் இருக்கும்? ஒண்ணா ரெண்டா? பெத்த ஆறும் அப்படித்தானே இருக்கு? அந்த அப்புப் பயல லேசா ஒரு தட்டு தட்டுனாலேப் போதும். அஞ்சு அண்ணம்மாரும் மல்லுக்கு வந்து நிப்பானுவோ. இடிதடியனுவோ! சட்டிப்பானைக்க மாப்பிளையும் லேசுப்பட்டவரு கெடயாது.

ஒனக்குத் தெரியுமா...நம்ம கெங்கநாதனுக்கு மவன்..அதான் அந்த சுப்பாத்தா மவன் அண்டிக்கண்ணன்குமாரு..அவன் ஒரு தடவை இந்த அப்புப்பயலுக்க பொறந்தலையத் தட்டிட்டானாம்..பெரிய சண்டை வந்துட்டு. அப்புப் பயலுக்க அப்பன் வந்துத் தூக்கித் தூர எறிங்கலேன்னாரு.... அஞ்சுப்பயக்களும் சேந்து ஒரு செக்கண்டுக்குள்ள கெங்கநாதனைத் தூக்கி எறிஞ்சிட்டானுவோ.. அவுரு எஸ்பி ஆபீசுக் காம்பவுண்டுக்குள்ளப் போயில்லா விழுந்தாரு. அதுக்கப் பொறவு கெங்கநாதன் உருப்படலியே..ஒத்தக் கால்லல்லா நடந்தாரு. நீ அந்தப் பயக்கூட பழக்கம் எதுவும் வச்சிக்கிடாத மக்கா.. பள்ளிக்கூடத்துக்குப் போறதும் தெரியாம வாறதும் தெரியாம இருந்துக்கோ. நமக்கெதுக்கு இந்த எழவுவோ..’

“நெறுத்தும்மா..நானா சண்டைக்குப் போறேன். என்னயக் குத்தம் சொல்லுதே...”

மகனை சமாதனப்படுத்த அவள் எடுத்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுத் தடுத்தான் ராசா.

“இல்லலே...அடிபிடி எதுவும் நடத்தித் தொலச்சிறாதியோ”

“எனக்குத் தெரியாது. அவன் என்னைய அடிச்சா நா சும்மருக்க மாட்டேன்”

“பின்னே என்னலே செய்வே?”

“நானும் அடிப்பேன்”

“என்னலே சொல்லுதே? சண்டைக்கு நீ போப்போறியா? அதுக்கா நா வளத்துதேன்? அதுக்கா பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வக்கேன்?

“அப்போ அவன் அடிச்சாம்னா நா பட்டுக்கிட்டு வரணுமா? என்னாலல்லாம் வாங்கிட்டு வரமுடியாது”

கோசலையின் காதுக்குள் சகல நாதமும் ஒன்றாகக் கேட்டது. இவனைக் கெஞ்சுவதா அதட்டுவதா எனத் தெரியாமல் அவள் குழம்பினாள்.

“தொலச்சிருவேன்...மரியாதைக்கு போவணும,.வரணும். சண்டக் கிண்ட போட்டேனு தெரிஞ்சுது.. கால ஒடிச்சிருவேன். இனிமே அவன் ஏதாவது செஞ்சாம்னா எங்கிட்ட வந்துதான் சொல்லணும்..அத விட்டுக்கிட்டு நீ சட்டம்பித்தனம் ஏதும் காட்டக்கூடாது. அவன என்னச் செய்யனும்னு நா பாத்துக்கிடுவேன். ஒழுங்காப் படிக்க வழியப் பாரு..

அவள் வெற்றுச் சோற்று உருண்டையின் நடுவில் பெருவிரலை வைத்து அழுத்த அதில் குழி உண்டாகியது.அதன் நடுவில் தயிரை விட்டுக் கொடுத்தாள்.

அவன் சோற்றுருண்டையை வாயில் வைத்து நாவால் அழுத்தினான். தயிர் வாயினுள் சிதறியதில் அதன் தணுப்புப்பட்டு அடிநாக்கு சிலிர்த்தது. தொண்டையின் பக்கங்களில் புளிப்பு இறங்கிச் செல்ல எச்சில் பெருக்கெடுத்தது. அவன் கிளம்பினான். அவள் வாய் துடைத்து பவுடர் போட்டு அனுப்பி வைத்தாள். அவன் போன பின்னும் கூட வாசலிலியே நின்றாள். பிறகு வீட்டின் எதிரில் நின்ற காம்பவுண்டு சுவரைத் தாண்டி எட்டிப்பார்த்து சுடலையைக் கண்டாள்.

“சொடலமாடா எம்புள்ள எந்த வம்புதும்புக்கும் போவாத்தவன்..அவனுக்கு நல்ல புத்தியக் குடு. படிப்பக் குடு.. சண்ட எதுவும் வேண்டாம்.. அவங்கிட்ட வம்புக்கு வாரப் பயக்கள நீதான் பாத்துக்கிடணும்..” என்று வேண்டியதும் அச்சம் சற்று அடங்கியது.

ராசா நேராக செக்கடிமாடன் இருக்கும் பகுதி நோக்கிச் சென்றான். சுடலைக் கோயிலின் வாசல் வந்தது. தாண்டி மேலும் சென்றான். பாப்பத்தையின் வீட்டின் பின்புற வாசலும் பிச்சையின் கரிக்கடையும் வர அதையும் விலக்கிச் சென்றான். கடைசியாகக்  குண்டம்மைப் பாட்டியின் இடம் வந்தது. செப்பனிடப்படாமல் சிதிலமாகக் கிடந்த அந்தப்பகுதி முழுவதிலும்  பழமையின் நிறம் தோய்ந்து உறங்கிக் கிடந்தது. வலது புறத்தில் திடீரென முளைத்தது போன்று பிரிந்த ஒற்றையாள் நுழைவதான குறுகலான ஒரு சந்து ஏற்படுத்திய விலக்கவியலாத அச்சம் தனித்த நேரத்தில் ஆள் வருகை இல்லை என்பதனை உணர்த்தியது. அவன் மேலும் முன்னோக்கிச் சென்றான். பாம்பின் நகர்தலைப் போன்று தன் நடை பின்னிச் செல்வதையும் அதுவே அவனை வழி நடத்துவதையும் அவன் கவனித்தான். அந்நேரத்தில் ஒரு மரக்கிளை போன்று தோற்றம் தந்த ஒன்றினை தற்செயலாக அவன் அப்புறப்படுத்த முயற்சித்ததில் ஏற்பட்ட தவறில் மண்டை எதன் மீதோ மோதியது. தடுமாறி எழுந்து நின்ற அவன் பார்வையில் அந்தப்பகுதித் தான் கொண்டிருந்த வெளிச்சத்தினைப் பறிகொடுத்திருந்தது. உடைந்த ஓடுகளும் கற்களும் சவறுகளுமாக நிறைந்து வரவேற்றதன் பேரில் அவன் சென்ற குழிகள் நிறைந்தப் பாதை வனாந்தரத்தினை நினைவுப்படுத்த அவன் கடைசிப் பகுதிக்கு வந்தான். உடைந்த சில படிக்கட்டுகளின் சறுக்கல்களின் முடிவில் அவன் ஆர்வமுடனும் தீவிரத்துடனும் காண வந்த தன் தகப்பன் வழி தெய்வமான செக்கடிமாடன் என அழைக்கப்படும் உதிரமாடன் மேலார்ந்த உயரத்துடன் அச்சுறுத்தும் தோரணையில் மஞ்சணை கொண்ட முகமாக கிழக்குப் பார்த்து வானக் கூரையின் கீழே நின்று கொண்டிருந்தார்.

(கனா தொடரும்)