ஒரு கணத்தில் ஸ்தம்பிக்கச் செய்யும் வெறுமை போலவும் மறுகணத்தில் வசமிழக்கச் செய்யும் அமைதி கொண்டதாகவும் காணப்பட்ட அந்தப் பகுதி ராசாவின் வருகையை ஏற்றுக் கொண்டது. சமதளத்தில் இறைந்துகிடந்த சருகுகள் சற்று முன்பு வரை நிகழ்த்தியிருந்த சருகோசைகளை நிறுத்தியிருந்தன. துயருற்ற மனதுடன் தனது கிடுகிடுப்பைத் தணிக்க வேண்டி காற்றிழுத்துச் செல்லும் மலர்போல அவன் தயக்கத்துடன் நகர்ந்தான். வெயில் காய்ந்து நோயுற்று சோம்பலாகிக் கிடந்தது. மாடனின் உருவத்திற்கு அருகில் மிகவும் சிறியதொரு பீடத்தில் இசக்கி துணையாக நின்றபடி வெயிலேந்திக் கொண்டிருந்தாள்.
ராசா செக்கடிமாடனுக்கு எதிராக வந்து நின்று கொண்டான். கோபம் அவனிடத்தில் வெறுப்பாக உருமாறியிருந்தது. அவரை முகத்திற்கு நேரே நின்று பார்த்தபோது வெறுப்பு மிகுந்த அவனது கேள்விகள் வார்த்தைகளைத் தேடி அலையத் துவங்கின.
‘நீ பாத்துட்டுத்தானே இருக்கே?
எல்லாத்தையும் பார்த்துட்டுத் தானே இருக்கே?
ஒரு கைவண்டி இழுக்கவனுக்க மவன் தானேன்னுதானே ஒவ்வொருத்தனும் என்னைய சண்டைக்கு இழுக்கானுங்க?
கேக்கதுக்கு ஆளில்லன்னு தானே மாதா கோயில் மண்ணுல பாவம்போல வெளையாடிட்டிருந்த என்வாயில மண்ண அடச்சு வச்சி சிரிச்சானுக?
அப்பங்காரனுக்கு பவுசு இருக்குங்கற திமிருலதானே ரோடுபோடதுக்கு தீயிலக் கொதிச்சிட்டு இருந்த கீலுடப்பா மேல ஒருத்தன் என்னையச் சவுட்டி தள்ளுனான்?
வெளையாட்டுல அவனுங்கத் தோத்துட்டு என்னைய அடிக்கணுமா?
இதுவரைக்கும் எத்தனபேரு எங்கப்பாவக் கிண்டல் பண்ணி என்னைய அடிச்சிருப்பானுவோனு ஒனக்குத் தெரியுமுல்லா ? போவவரத் தலையத் தட்டதுக்கு நா என்ன எரும மாடா?
நீதானே எங்கப்பாவக் கைவண்டி இழுக்குற வேலையக் குடுத்தது? அப்ப நீதான் கேக்கணும் இனிமே.
எம்மேல கையவச்சா ஒடனே அவனுக்கு கூலி குடுக்கணும்
இல்ல என்னைய கூலி குடுக்க வக்கணும்.
எனக்கு நீ தான் பலம் தரணும்’
இதோட கடைசி. இனிமே எவனாவது ஒடக்குனாம்னா அவன உடக்கூடாது ‘’ என்று பலவாறாக அவன் கேட்டுக் கொண்டும் வேண்டிக்கொண்டும் அழுதான்.
ஒரு அந்நிய வெயிலில் தான் குணமிழந்து அழுது பொசுங்குவதை மாடன் கண்டு கொள்ளாது விட்டுவிடுவாரோ என்ற தகிப்பில் அவர் முன்பாக மண்டியிட்டான். இரண்டு மூட்டுகளும் சேர்ந்து கொள்ள உடல் கால்களின் மீது அமர்ந்தது. பின்புற பாதங்கள் மடங்கிக் கொண்டதில் வலது கால் பெருவிரல் இடது கால் விரலை அழுத்த முதுகெலும்பின் முனையில் பிடித்த கிறுகிறுப்பின் சூடு கூரெனப் பிடித்துக் கொண்டு மண்டை வரையில் ஏறியது.
ராசா கோவி போன்ற மாடனின் முகத்தினைக் கூர்ந்து நோக்கினான். அவரது முகம் சரம் போல பல்வேறு பிம்பங்களைத் தொடுத்துக் கொண்டே போனது. மஞ்சனையில் காய்ந்த பொருக்குகள் காரமுகம். பெரும் மழைக்காலத்தில் எத்தனை நனைந்தும் சீறியபடி காணும் ஈரமுகம், அடித்து வீசும் சூரக்காற்றின் அலைகளுக்குச் சிதறாத பார்வை கொண்ட தீர்க்கமுகம். இருபுறமும் கால்கள் தொங்க வெள்ளைக் குதிரையின் மீதமர்ந்து மலையேறிவரும் மீசை முறுக்கிய வீரமுகம். தன்னை ஏமாற்றியதாகக் கோபம் கொண்டு செட்டியின் செக்கினுள் கிடந்த எள்ளினை வாரி களத்திலிறைத்து நின்ற ஆங்காரமுகம், அழிவு செய்தோருக்கு மருந்துக்கும், மந்திரத்துக்கும் கட்டுப்படாத நோயினை வாரியிறைத்து விட்டு பிணியால் துவளும் தேகத்தினைக் கொண்டு இறைஞ்சும் அவர்கள் வீட்டின் சுற்றுக்கட்டுத் தூணில் ஒற்றைச் சம்மணத்துடன் சாய்ந்து நோக்கும் தலைப்பாகைமுகம். தன் தாயின் உத்தரவிற்கு கட்டுப்படுவதாக உறுதியளித்து மக்களைக் காக்கும் சம்மதமாக சுடலையுடன் சேர்ந்து அம்மன் முன் பூவைக்கும் தணிந்த முகம். சுடலையுடன் கூட்டுப் போட்டுக் கொண்டு நடுசாமத்தில் கம்பந்தடியுடன் ஊர்வலம் வரும் காவல்முகம். போக்கிடமற்று அபயக்குரல் எழுப்பும் மக்களின் கனவுகளிலும் பாடல்களிலும் வந்து இடைச்சலங்கையுடன் பரவசமாடும் ஆராதனைமுகம். கொடுவாள் கொண்டு வஞ்சம் வரும் திசையிலிருந்து வரும் காற்றில் தனது பறந்து விரிந்து செல்லும் தலைமுடியினை வாரிக்கட்டி எதிர்கொண்டு நிற்கும் பாளையுறைத்த நெஞ்சுரம் கொண்ட சாய்ந்த கொண்டைமுகம்.
ராசாவின் கட்டுக்குள் அடங்காமல் வேறேதோ வினைகளுக்கு ஆட்பட்டிருந்தன அந்நேரத்தில் அவனது உடலும் மனமும். ஏதோ ஓர் பறவை சட்டென எழுப்பி விட்டுப் போன குரலின் அதிர்ச்சி அவன் மார்பின் மையத்தில் கங்கு போன்று ஒரு பொறியினை பற்றவைக்க அதன் வெம்மை உடல் முழுவதும் விரிந்து கொண்டு செல்வதையும் மனம் வெம்மையில் மிதந்து சுகம் கொண்டு அதன் மையத்தை நோக்கி சுருங்கி மறைவதையும் விளங்கவியலாத ராசா மயக்கம் தன்னை ஆழ்த்துவதாக உணர்ந்தான். விவரிக்கவியலாத நிலையில் இருந்த அவனை கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்து இதப்படுத்த அடங்கிக்கிடந்த ஆவேசம் பீறிட்டுக்கொண்டு அழுகையாக சிறகடித்தது. ஒரு கட்டத்தில் அவன் விம்மி அழுதான்.
ராசாவின் அழுகைக்கு மாடன் அசையவில்லை. அவனது கேள்விகளுக்கு யாதொரு பதிலையும் சொல்லவுமில்லை. எனினும் அவர் தனக்கு சாதகமான திசையைக் காட்டியதாக மனம் நிம்மதியினை பெற்றுக் கொண்டது.
வேலப்பனின் நிலைமை தான் மிகவும் சிக்கலுக்கு உரியதாகிவிட்டது. குழப்பத்திலும் பயத்திலும் அவன் வகையாக சிக்கிக் கொடான். ஏற்கனவே மாரியாத்தாளுக்கு அஞ்சி நடுங்கிய அவன் பத்தாத குறைக்கு இப்போது நடுக்காட்டு நீலியோ இசக்கியோ என்று தலையிலடித்துக் கொண்டான். இதிலும் ஏதோ குறை இருந்திருக்கும் போல. ராசா வேறு புதிதாக செக்கடிமாடனையும் தன் பங்கிற்கு லிஸ்ட்டில் சேர்த்துவிட்டான். பொதுவாக சுடலைமாடனின் உருவத்துக்கே கதிகலங்கும் வேலப்பனுக்கு இந்த உதிரமாடன் என்ற பெயர் கூம்பையையே கலக்கியது. மட்டுமல்ல இந்த செக்கடிமாடன் எனப்படும் உதிரமாடன் வகையறா அவன் அறிந்திராத ஒன்றாகவே இருந்தது. இப்போது அவன் பிரச்சனை இத்தனை சாமிகளை நாம் எப்படி சமாளிப்பது? பரிதவிப்பான நிலையில் வேலப்பன் தனது கவலைகளை சுமந்து கொண்டே சென்று கொண்டிருந்தான். மணிமேடை நெருங்க வந்ததும் அவன் தன் கவலைகளை கேள்விகளாக மாற்றத்துவங்கினான்.
“எல்லாச் சாமிகளும் சண்டக்கார சாமிகளாகவே இருக்குதே..ஏன்? எல்லா நேரமும் பயங்காட்டிக்கிட்டே இருக்குதே அது என்னத்துக்கு? ஏதாவது ஒரு சாமியாவது ‘லே மக்கா..வேலப்பா நீ ஒண்ணும் கவலைப்படாண்டாம். ஒனக்கு நா இருக்கேன்னு சொல்ல மாட்டுங்கே ஏன்? இது பெரிய சளந்தான். இப்ப என்னச்செய்ய? எல்லாத்தையும் விட்டுகிட்டு பேசாம நாகராஜாவ நம்பலாமுன்னா அங்கயும் ஒரு இடைஞ்சல் குறுக்காலல்லாக் கெடக்கு?
பனிரெண்டு வயசுக்குள்ள சர்ப்ப தோஷமோ என்னவோ ஒண்ணு நம்மள வந்து பிடிக்கப் போவுதுன்னு அம்மாசிமட ஜோசியக்காரு சொன்னாருன்னு அம்ம வேற அடிக்கடி சொல்லுதா. நாகாராஜன்னா என்னது பாம்புல்லா..இந்த நேரத்துல நாம அவரைத் தேடித் போனோமுன்னா..தானாப் போயி பாம்பு வாயில தலையைக் குடுத்த மாதிரில்லா..? என்ன எழவுடே? சலதோசந்தான் பிடிக்கும்!? பாம்பு தோஷமுமா பிடிக்கும்?. பாம்பு தோசம்னா பாம்பத்தானே பிடிக்கணும்? அத விட்டுகிட்டு நம்மள எதுக்கு வந்து பிடிச்சித் தொலைக்கணும்? பாடாப்படுத்தணும்? . ஒரு மண்ணும் வெளங்கல. என்னால புக்குப்பையையே தூக்க முடியல...பாம்பு தோஷத்தையும் சேத்து எப்படித்தான் தூக்கிகிட்டு அலையப் போறனோ?’’ என்று திரும்பியவன் கண்களில் போஸ்டாஃபிஸ் வளாகத்தின் உள்ளேயிருந்து வெளியே பரவி நிற்கும் நாவல் மரம் உதிர்த்தப் பழங்கள் பட்டன. மற்றைய நாட்களில் எல்லாம் விழுந்து பொறுக்கும் வேலப்பன் தன் அதீத நொம்பரத்தில் பழங்களை அலட்சியபடுத்தி விட்டுச் சென்றான். பிறகு ராமேஸ்வரம் செல்லும் பஸ் போல அவன் கேள்விகள் அவனைத் தொடர்ந்தன.
‘’ நாம நாராஜாவயே போய்ப் பாத்து விழுந்து கும்புட்டா என்னா?
எல்லா வழிகளில் யோசித்துப் பார்த்தாலும் அது நல்ல யோசனையாகப் பட்டது.
‘’போற வழியில் இடது பக்கம் சறுவிப் பாத்துருவோமா? வெளிய வாசல்ல நின்னே ஒரு சலாம் வச்சிரலாம்!
அப்படீன்னா தேர் மூடு வழியாத் தான் போவணும். தேர்மூடு என்றதும் வேலப்பனுக்குள் புதியதாக வேறு ஒரு குழப்பம் வந்து சேர்ந்தது. தேர்மூட்டுல தேர்மூட்டுஇசக்கின்னு ஒருத்தி இருக்காளே அவள என்னச் செய்யது? இவளக் கும்புடாம கோயிலுக்கு போயிட்டு வரக்கூடாதும்பாங்களே..? இவ ஆளு எப்படினும் தெரியலியே? நடுக்காட்டு இசக்கிக்கு சொந்தமா இருந்தான்னா...? அடேய் சண்டாளா...நடுக்காட்டுகாரிக்கு சுண்ணாம்பக் குடுத்துட்டு வண்டிக்காரன் தப்பிச்ச காரியத்த நீயும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு மறச்சுட்டியானு நம்மள புடிச்சிக்கிட்டான்னா?
இந்த அப்புவுக்கும் ராசாவுக்கும் அவங்க அப்பமாரு சப்போர்ட்டு இருக்குது...நம்ம அப்பரு ஆண்டுக்கு ஒருக்க ஆவணிக்கு ஒருக்க வந்து தலைய காட்டுவாரு..வந்தாலும் அவருக்கு அம்மக் கூட சண்டைப் போடதுக்கே நேரம் சரியாப் போவும். இதுல நம்மள எங்கக் கொண்டு போயி கரை சேத்து விடுவாரு? ‘’
வேலப்பன் நேராகவே அரசமூட்டினை நோக்கி நடந்தான் தனது புத்தகப்பையினை தூக்கித் தோளில் போட்டவாறு. அப்போது எங்கிருந்தோ கேட்ட உடுக்கையொலி வேலப்பனின் காதினை வந்து அசைத்தது.
“வாராரய்யா ..வாராரு..
சொடலமாடன் வாராரு..’
வேலப்பன் விக்கித்து நின்றுவிட்டான். மிகவும் கூர்ந்து கேட்டான். உடம்பு தூக்கிப் போட்டதில் புத்தகப்பை நழுவி கீழிறங்கியது. அரசமூட்டு நாடார்கடையில் இருந்து புறப்பட்டு வருகிறது இந்த வில்லுப்பாட்டு. தொடர்ந்து வந்த வில்லின் ஒலியும் குடத்தின் சத்தமும் சாமியாடிச் செல்பவர்களை ஞாபகபடுத்தியது. கடை தாண்டிச் சென்றாலும் கொஞ்ச தூரத்திற்குப் பின் தொடர்ந்தே வரும் இந்த குடமும் வில்லும் பாட்டும். அவன் தன்னால் முடியாது என்று தலையாட்டிக் கொண்டான். பையினைத் தூக்கியவன் வேறுவழியாக அரச மூட்டினைச் சுற்றிக் கொண்டு யார் அழைத்தாலும் காது கேளாது சென்றான். கீழத் தெரு வந்ததும் தான் தன் வேகத்தை சற்றுக் குறைத்தான். அப்போது தான் நேராக ஒரு துர்க்கையின் கோயில் முன்பாக அபாயகரமாக வந்து சேர்ந்திருப்பதைக் கண்டான். கோயிலைக் கடப்பதை யோசித்தவனாக அவன் நிற்கவும், அப்போது தூரத்தில் நாடார் கடையில் சுடலைமாடனின் வில்லுப்பாட்டின் சத்தத்தினை அவர் கூட்டி வைக்க அதன் வேகதாளம் அவனை நிற்கவிடாமல் துரத்தவும் செய்தது. வசமிழந்த ஒரு கணத்தில் தன்னை மீறிய வேகத்தில் அவன் சாலையினைக் கடந்து போக முயல, அதே நேரம் ராமேஸ்வரம் செல்லும் திருவள்ளுவர் தான் தாமதித்த நேரத்தினை சமமாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் வேகமாக வந்தார். கடக்க இருக்கும் நேரம் இன்னும் மீதமிருக்க வேலப்பனின் வேகம் கூடியது என்றாலும் பஸ் அவனை நெருங்கி விட்டிருந்தது.
(கனா தொடரும்)
(அய்யப்பன்மகாராஜன்நாகர்கோவிலைச்சேர்ந்தவர். இப்போதுசென்னையில்வசிக்கிறார். திரைத்துறையில்தீவிரமாகஇயங்கிவரும்இவர் தன்இளமைக்காலநினைவுகளில்இருந்துமீட்டுஎழுதும்கதைத்தொடர்இது.