"இது எங்களின் அடையாளத்திற்கான தலைவாசல் . உங்களின் அற்புதமான படைப்புகளின் முதல் வாசல். தமிழகத்தின் கிழக்கு வாசல். இந்த வாசல் வழியே புறப்படும் உற்சாகம். நம்பிக்கை துணிச்சல் என எல்லாமும் சேர்ந்து உங்கள் மனசை மலர்க்காடாக்கும்" எனும் உற்சாக பெருமிதத்தோடு வெளிவந்திருக்கும் இதழ் ,'கிழக்குவாசல்' .இவ்விதழின் ஆசிரியர் எழுத்தாளர் உத்தமசோழன். பட்டுக்கோட்டை ராஜா,பிச்சினிக்காடு இளங்கோ , மாலா உத்தண்ட ராமன், நெய்வேலி பாரதிக்குமார்,பா.உஷாராணி , மு.முருகேஷ் ,வானவன் ஆகியோர் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
முதல் இதழில் கதை, கட்டுரை ,நேர்காணல் , கவிதைகளுடன் மக்கள் பிரச்னைகளையும் சுமந்து வெளிவருகிறது 'கிழக்குவாசல்'. ஆன்மீகம் , விளையாட்டு , மறக்கமுடியாத மனிதர்கள் ,இலக்கிய வீதி, வைத்தியசாலை , உலகமெலாம் தமிழ் , பட்டணப்பிரவேசம் , ஜோதிடம் போன்ற பகுதிகளும் இவ்வாசலில் இடம்பெற்று பல்சுவை இதழாகப் பரிணமித்துள்ளது என்றாலும்,'வஞ்சிக்கப்படும் வாழ்வாதாரங்கள்' எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரை தமிழ்நாட்டில் காணப்படும் தீர்க்கமுடியாத பிரச்னையான நதிநீர்ப் பிரச்னை குறித்து அக்கறையுடன் பேசுகிறது.
'சர்ச்சைகளின் பேரரசி'எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ள நெய்வேலி பாரதிக்குமாரின் கட்டுரை ," நெல்சனை மணப்பது என்பது எமது மக்களின் போராட்டத்தை , அவர்களின் விடுதலையை மணப்பது" என்று 1958 ஜீன் 14 இல் நெல்சனைக் கைப்பிடித்த 'தேசத்தின் அன்னை' என்று தென்னாப்பிரிக்க மக்களால் அழைக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் மனைவி 'வின்னிமண்டேலா'பற்றிய முக்கியமான கட்டுரையாகும் . இவ்விதழில் சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பல்சுவை இதழ் என்பதால் இலக்கியம் தொடர்பான ஆக்கங்கள் குறைவாகவே உள்ளன. இக்குறை இனிவரும் இதழ்களில் சரிசெய்யப்படும் என நம்புவோம்.
ஆகஸ்டு 11, 2006