தொடர்கள்

சுகுமாரனின்  வேழாம்பல் குறிப்புகள் 59

மோகன்லாலும் கமல்ஹாசனும்

சுகுமாரன்

இந்தத் தகவலில் உண்மை எத்தனை கைச்சரக்கு எத்தனை என்று தெரியாது. ஆனால் சுவாரசியமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருந்தது.சில நாட்களுக்கு முன்பு அணியணியாகக் கைது செய்யப்பட்ட நட்சத்திர சுவாமியார்களைப் பற்றிய தகவல்களில் ஒன்று அது.

வெவ்வேறு புகார்களின் பேரில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட வெவ்வேறு சாமியார்களும் மீண்டும் ஜாமீனில் வெளி வந்து தங்களது பழைய
கைங்கரியங்களை தொடங்கி விட்டார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டபோது ஆர்ப்பாட்டமாகத் தகவல்கள் கொடுத்த ஊடகங்கள் இப்போது மௌனமாகி விட்டன.
அப்போது ஆவேசமாகப் பேட்டியளித்த காவல்துறை அதிகார்கள் இப்போது கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 'பெரிய
இடத்துச் செல்வாக்கு சார், நாங்க என்ன பண்ண முடியும்?' என்று புலம்பவும் செய்கிறார்கள். எந்தப் பொதுமக்கள் கூட்டம் சாமியார்கள் கைது செய்யப்பட்டபோது கூடி நின்று வேடிக்கை பார்த்ததோ அதே கூட்டம் மறுபடியும் சாமியார்களின் நிழலைத் தேடிப் படையெடுக்கிறார்கள். மூச்சு முட்டுகிற நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஜனங்களுக்கு ஆறுதல் சொல்ல சாமியார்கள் வேண்டியிருக்கிறார்கள் போல.

திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலக் குடாவில் விஷ்ணுமாயா மடத்தை நடத்தி வரும் திவ்யா ஜோஷி என்ற சாமியாரிணிதான் மீண்டும் ஆன்மீகக் கடை திறந்தவர்களில் முதல்வர். ஒரு மாசக் காலமாக வெறிச்சோடிக்கிடந்த மடத்தில் இப்போது நல்ல கூட்டம் . துக்க நிவாரனத்துக்காகவும் பாவ பரிகாரத்துக்காகவும் பக்தர்கள் திரள ஆரம்பித்து விட்டார்கள். மற்ற இடங்களுக்கு மாறாக இங்கே அதிகாலையில்தான் கூட்டம். காரணம் திவ்யா ஜோஷி மாதா அதிகாலையில்தான் பக்தர்களுக்கு
தரிசனம் அளிப்பாராம். அதற்காக மடத்தின் வளாகத்தில் பெரிய மேடை. அதன் நாலு மூலைகளிலும் ஸ்பாட் லைட்டுகள். இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா?

மாதா தரிசனம் தருவது ஸ்நான கோலத்தில். கழுத்துக்குக்க் கீழிருந்து முழந்தாளை மறைக்கும் வரையிலான துண்டை அணிந்திருக்கும் மாதாவுக்கும் பக்தர்கள் குடம் குடமாக நீரூற்றி முழுக்காட்டுவதுதான் தரிசனம்.

மேற்படி தரிசனத்தைப் படமாகப் போட்டிருந்த திருச்சூர் மாலை நாளிதழின் ஆசிரியரின் வீட்டுக்கு ஆன்மீக மடத்திலிருந்து ஜீப்புப் பறந்தது. அன்று மாலை
பத்திரிகையாசிரியர் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஏஷியாநெட் பிளஸ் சானலில் ஒரு படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட காட்சிகள், செறிவான கதை என்று பார்த்துக்கொண்டிருந்த பிம்பங்கள் நம்பச் செய்தன. கூடவே இந்தப் படத்தை முன்பே பார்த்திருக்கிறோமே என்று சந்தேகமும் வந்தது. விளம்பர இடைவேளையின்போது பெயரைக் கண்டு பிடிக்க முடிந்தது. படம் - 'செப்பு'. இயக்குநர் பிரியதர்சன். நாயகன் மோகன்லால். படத்தை முதன்முறையாகப் பார்க்கிறேன் என்பதில் சந்தேகமில்லை.
கதையைக் கோடி காட்டினால் நீங்களும் இந்தப் படத்தைப் பார்க்காமல் பார்த்திருப்பதை உணர்வீர்கள்.

ஒரு கல்லூரி. அங்கே மோகன்லால் ஆசிரியர். கல்லூரியின் தாளாளரின் பையன் அடங்காப் பிடாரி. தானும் கெட்டு மற்ற மாணவர்களையும் கெடுப்பவன். கல்லூரி வளாகத்துக்குள்ளேயே கஞ்சாவும் பழுப்புச் சர்க்கரையும் நடமாட அவனே காரணம். ஆசிரியர் மோகன்லால் அவனை மாட்டிவிடப் பார்க்கிறார். முதல்வர் சோமன் ஆதாரமில்லாமல் பையன் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். இன்னொரு ஆசிரியரான நெடுமுடி வேணுவின் பெண் - அதே கல்லூரி மாணவி- தறுதலைப்
பையனால் இறந்து போகிறாள். வேணு பித்துப் பிடித்தவர் போலாகிறார். தறுதலையை கையும் களவுமாக மோகன்லால் சார் பிடிக்க பையன் கழிப்பிடக்
கண்ணாடியில் முட்டி மோதி முகத்தைப் பெயர்த்துக்கொண்டு லாலையே குற்றவாளியாக்குகிறான். படாத பாடு பட்டும் அரசியல்வாதியின் பிள்¨ளையைத் திருத்த முடியாமல் போகிறது. நன்றாகப் படிக்கிற ஒரு பிராமணப் பையனுக்கு அக்கறையாகப் பாடம் கற்றுக் கொடுக்கும் மோகன்லாலை அவமானப்படுத்தி அலைக்கழித்து கடைசியில் குத்திக் கொண்று விடுகிறான் . ஆனால் கொலைக்கு ஆதாரமில்லை. லால் சாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பிராமணப்
பையன் மிரண்டு வில்லனைக் கொன்று விடுகிறான்.கொல்லப்படுகிறான். நம்முடைய கல்லூரிகளில் அரசியல் தேவையா? என்ற இயக்குநரின் கேள்வியுடன் படம் முடிந்தது.

கேரளத்தில் கல்விக் கூட அரசியலுக்கு ஐம்பது வருட வரலாறாவது இருக்கும். ஒரு மாணவன் ஆறாவது வகுப்பு வந்து விட்டால் ஒன்று அவன் காங்கிரஸ் மாணவ அமைப்பான கே.எஸ்.யூ விலோ இடதுசாரி மாணவ அமைப்பான எஸ்.எ·ப்.ஐயிலோ உறுப்பினராகியிருப்பான். இப்போது இந்த இடத்துக்கு பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான பாரதீய வித்யார்த்தி பரிஷத் போட்டி போடுகிறது என்பது மட்டுமே புதுமை. பிரியதர்சனின் பி.ஜே.பி. ஆதரவு மனநிலை அல்லது இடது எதிர்ப்பு மனநிலை அப்பட்டமாகத் தெரிகிற படம் செப்பு என்று எனக்குத் தோன்றியது. சொல்லவந்தது அதுவல்ல.

இந்தக் கதைச் சுருக்கத்தை வைத்திக்கொண்டு பின்வருமாறு யோசித்துப் பார்த்தேன். மோகன்லாலுக்குப் பதில் கமலஹாசன். அடங்காப் பிடாரி மானவன் கணேஷ¤க்குப் பதிலாக கரண். நெடுமுடி வேணுவின் பாத்திரத்தில் நாகேஷ். லிசிக்குப் பதில் கௌதமி. மோகன்லாலின் கொலைச் சாவுக்குப் பதில் கமலஹாசனின் ரத்தப் புற்றுநோய். எல்லாற்றையும் வகுத்துப் பார்த்தால் வரும் ஈவு - 'நம்மவர்'.


இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் இரண்டு சேவைகளில் நிகழ் விருக்கும் விலைவாசி உயர்வைக் கவயுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது கேரளம்.
மின்சாரக் கட்டணமும் பேருந்துக் கட்டணமும்.

பருவ மழை பொய்த்ததால் மின்வெட்டு. கட்டண உயர்வு. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, தொடர்ச்சியான நஷ்டத்தால் பேருந்துக் கட்டண உயர்வு.

கடவுளின் சொந்தம் நாடு என்ற டாம்பீக வாசகம் கேரளத்தைப் பொருத்தவரை சரிதானோ? மனிதர்கள் வாழத் திணற வேண்டியிருக்கிறதே!

(இன்னும்...)

ஜூலை 12, 2008

அடுத்து>>>