தொடர்கள்

சுவையான சமையல் குறிப்புகள்-2

செல்லம்மாள்

முருங்கை அடை :

எப்போதும் இட்லி தோசை என்று கொடுக்காமல் வித்தியாசமாகவும், அதே சமயம் சுவையாகவும் சத்தாகவும் செய்ய நினைப்பவர்களுக்கான உணவு வகை இது. இது குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய உணவுகளில் முக்கியமானது.

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – ¼ கப்
உளுத்தம்பருப்பு – ¼ கப்
பயத்தம்பருப்பு – ¼ கப்
துவரம்பருப்பு – ¼ கப்
பச்சரிசி – 1 கப்
பச்சைமிளகாய் - 2
காய்ந்தமிளகாய்  - 2
இஞ்சி – சிறிதளவு
முருங்கைக்கீரை – தேவையான அளவு

செய்முறை: அரிசி பருப்பு வகைகளை ஒன்றாகக் கலந்து ஊறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் போது இஞ்சி, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், உப்பு சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும்.

ஏன் புளிக்க வைக்கவேண்டும் என்று தெரியுமா?

புளிப்புக்குக் காரணமான ஈஸ்ட் மிக நல்லது. முடிவளர்தல், ஞாபக சக்தி ஆகியவற்றுக்கு உகந்தது. அதற்காக எலுமிச்சை போன்ற பழங்களில் இருக்கும் புளிப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதன் புளிப்புச்சுவை வேறு. இது நாமே உருவாக்குவது. அயோடின் குறைவாக இருப்பவர்கள் ஈஸ்ட் டேப்லட் எடுத்துக்கொள்வதைப் பார்த்திருப்பீர்கள்.

இதில் புரதச்சத்தும், கார்போஹைட்ரேட்டும் இருக்கிறது. காலையில் உணவில் எப்போதுமே புரதச்சத்து இருப்பது அவசியம். பருப்புவகைகளில் புரதச்சத்து இருக்கிறது. முருங்கை இலை சேர்ப்பதால் அதிக இரும்புச் சத்தும் கிடைக்கும்.

அடையை தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வார்த்ததும் அதன் மேலே முருங்கைக்கீரை தூவவும். முருங்கைக் கீரையை அடையின் மேலே தூவினால் போதும். மாவுடன் கலந்து ஊற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. முருங்கைக் கீரையை அதிகம் வேகவைக்கக் கூடாது.

ஒரு அடையில் முருங்கைக் கீரை, இன்னொரு அடையில் வாழைப்பூ, வெங்காயம், கொத்தமல்லி, தேங்காய் என ஒவ்வொரு அடையையும் ஒவ்வொருவிதமாக செய்து கொடுக்கலாம்.

இந்த அடையை காலையில் சாப்பிடக் கொடுத்தால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கும் அடிக்கடி பசிக்காது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த அடையை கொஞ்சம் கட்டியாக செய்து கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ் சேர்த்துக் கொடுக்கலாம். பச்சரிசிக்குப் பதில் புழுங்கலரிசியும் சேர்த்துக் கொள்ளலாம். புழுங்கலரிசி சேர்த்தால் அதிகநேரம் வேக வைக்கவேண்டும். 

தொகுப்பு: பொடிசி

(மெனு ராணி என்று அன்புடன் அழைக்கப்படும் செல்லம்மாள், தமிழகத்தின் பாரம்பரிய சமையல் உணவுகளின் நிபுணர். அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர். அவர் அந்திமழை வாசகர்களுக்கு வழங்கும் சுவையான சமையல் குறிப்புகள் வெள்ளி தோறும் வெளியாகும்.  சமைத்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு எழுதலாம்)